மறைந்த சுவடுகள் – கி.சுப்பிரமணியன்

✅  மறைந்த சுவடுகள்

கி.சுப்பிரமணியன்

கால மாற்றத்தாலும், நாட்டின் அதிவேக வளர்ச்சியாலும், சிங்கப்பூரின் பழைய கட்டிடங்கள், கடைகள் போன்றவை மறைந்து, புதியவை வான் நோக்கி உயர்ந்து நிற்பது, தவிர்க்கமுடியாத ஒன்றாயிற்று. ஆயினும் அந்த ஆரம்ப காலத்தை தாண்டிவந்த எனக்கு, அந்த பழைய சுவடுகள் மனக்கண்முன் அவ்வப்போது வந்துபோவதுண்டு. அதுவொரு சுகமான அனுபவம்!

அப்படி சிந்தனைக்குள் மிதந்துவரும் காட்சிகளில், தேக்கா பகுதியும் அடங்கும். இன்றைய ‘தேக்கா பிலேஸ்’ (Tekka Place) என்ற பெயரில் ஓங்கி நிற்கும் நவீன கட்டிடத்தை காணும்போது என் மனம் கிட்டத்தட்ட ஐம்பத்தைந்தாண்டுகள் பின்னோக்கி செல்லும்.

அப்பொழுது வெகுகாலமாக அதே இடத்தில் நிலைத்திருந்தது கண்டாங் கிருபாவ் ஈர சந்தை (Kandang Kerbau Market) கட்டிடமாகும். 1915இல் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, அழகிய வேலைப்பாட்டில் கட்டப்பட்ட, வலுவான கட்டிடம். 1971-ல், நான் சுற்று சூழல் அமைச்சில் பணிபுரிந்த காலம். அப்பொழுது அதன் தலைமை அலுவலகம் நியூட்டன் சாலையில் அமைந்திருந்தது. என்னை இந்த சந்தைக்கும், பீச் ரோடு சாலையில் அமைந்திருந்த கிளைட் டெரஸ் (Clyde Terrace) சந்தைக்கும் சுகாதார அதிகாரியாக நியமித்தனர். 

வேலை எளிதானதல்ல! காலை எட்டு மணிக்குள் தேக்கா, கண்டங் கிருபாவ் சந்தைக் கட்டிடத்திற்கு வந்துவிடுவேன். சந்தைக் கட்டிடத்தோடு இணைந்தே ஒரு சிறு அலுவலகமும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வந்து அமர்வது முதன் வேலை. அதன்பின், பக்கத்தில் சிராங்கூன் சாலையில் இருந்த மங்கலாம்பிகா உணவகத்திலிருந்து இட்லி மற்றும் காப்பி வாங்கிவரச் செய்து பசியாறுவது வழக்கம். ஒவ்வொரு சந்தைக்கும் ஒரு ஓவர்சியர் என்ற மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அவரே முழுநேரமும் சந்தையை கவனிக்கும் பொறுப்பில் இருப்பார். நாட்சம்பள வேலையாட்கள் மூன்று பேர் சந்தையைக் கூட்டி சுத்தமாக வைத்திருக்க பணியில் நியமிக்கப்பட்டிருப்பர். அவர்கள் இந்த மேற்பார்வையாளரின்கீழ் உழைப்பவர்கள்.

இந்த சந்தையிலும் அதே நிலைப்பாடுதான். சந்தைக்கு உள்ளே பலவித கடைகள் இருக்கும். காய்கறிகள், இறைச்சி, கோழி போன்றவை விற்கும் கடைகள் பல இருந்தன. கோழியின் கழுத்தை, வாங்குவோர் கண்முன் அறுத்து பெரிய டிரம் என்று அழைக்கப்படும் உலோக குண்டம் ஒன்றில் போட்டு மூடுவர் கோழி விற்கும் சீன கடைக்காரர்கள். உள்ளே அது துடித்து இறந்தபின், வெளியில் எடுத்து கொதிக்கும் நீரில் மூழ்கவைத்து, சிறகுகளை அகற்றி வாங்குவோர் தேவைக்கு ஏற்ப அங்கேயே வெட்டி விற்பர்.

பொதுவாக எல்லா கடை உரிமையாளர்க்கும் மாத வாடகை இருபத்தைந்து வெள்ளி வசூலித்தது அரசு. நிர்ணயிக்கப்பட்ட கடையின் எல்லையை தாண்டி, நடைபாதையை ஆக்கிரமித்து விற்போரையும், கடையை சுத்தமாக வைக்காதவரையும் தண்டிப்பது என் வேலையில் முக்கியமான ஒரு அம்சம். மீறுபவர்களுக்கு அபராத சீட்டெழுதி தரும்போது தகராறு ஏற்படுவதுமுண்டு. இதே வகை வேலையில் ஈடுபட்டிருந்த என் நண்பர் ஒருவர், கேலாங் சிராய் சந்தையில் அபராத சீட்டெழுதிக் கொடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு, அவர் தாக்கப்பட்டது இன்றும் நினைவில் உள்ளது.

மிக ஆபத்தான வேலை. பொதுவாக அக்காலத்தில் படிப்பாற்றல் குறைந்த, முரட்டு, சந்தை வியாபாரிகள் பலர் இருந்தனர். மீன் வியாபாரிகளில் பல சீனர்கள், எதிர்க்கட்சியான பாரிசான் சோஷியலிஸ்ட் (Barisan Socialist) கட்சியை சார்ந்தவர்கள். அவர்கள் தம் கடைகளின் ஓரமாக சிறிய கட்சிக்கொடியை கட்டி வைத்திருப்பர். இவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே பெரிய போராட்டம்.

இந்த நிலையிலும், காலையில் இங்கு வருவதற்கு சந்தையின் எதிர்ப்புறத்தில் இருந்த கண்டங் கிருபாவ் போலிஸ் நிலையத்தை தாண்டித்தான் வரவேண்டும். அது ஒரு நான்கு மாடி கட்டிடம் (தற்போது இருக்கும் புது தேக்கா செண்டரின் பக்கவாட்டில், ரொச்சோர் கால்வாய்க்கு அருகில் இருந்தது) அப்படி அந்த வழியாக சந்தை அலுவலகம் வருவதில் ஒரு சிக்கல் இருந்தது. ஏதேனும் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை மேலும் சில வழிப்போக்கர்களோடு வரிசையில் நிற்கவைத்து புகார் செய்தவரைக் கொண்டு அந்த அணிவகுப்பில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்ட சொல்லுவார்கள்.

ஆகவே இந்த அணிவகுப்புக்காக ஆள் சேர்க்க, போலீசார் காவல் நிலையத்தை விட்டு சிராங்கூன் சாலையில் நின்றபடி வழிப்போக்கர்களை நிறுத்தி காவல் நிலையத்திற்குள் வரச்செய்து அணிவகுப்பில் கலந்துகொள்ளச் சொல்லுவார்கள். இதை பொதுவாக யாரும் மறுப்பதில்லை. நான் இரண்டுமுறை இந்த அணிவகுப்பில் மாட்டிக்கொண்டதை தொடர்ந்து, சந்தைக்கட்டிடத்தின் பின்பக்க கிளைவ் சாலை (Clive Street) வழியாக வரத் தொடங்கினேன்.

முன்பு சொன்ன கிளைட் டெரஸ் (Clyde Terrace) சந்தைக்கும், இங்கிருந்து நடந்தே செல்வேன். இந்த சந்தை மற்ற சந்தையினும் சற்று மாறுபட்டது. இது முற்றிலும் இரும்பால் கட்டப்பட்டதென்பதால், இதை இரும்பு சந்தை என்ற பெயரில் பலரும் அழைப்பதுண்டு.  1870இல், ஆங்கிலேய ஆட்சியில் கட்டப்பட்ட இதன் பெயர் இந்தியாவில் 1860இல் ஏற்பட்ட இராணுவ புரட்சியில் முக்கய பங்காற்றிய சர் கொலின் கெம்பெல் பெரன் கிளைட் (Sir Colin Campbell Baron Clyde ) என்பவர் நினைவாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளித்தோற்றத்தில் காய்கறிகள், மீன் போன்றவற்றை பொதுமக்கள் வாங்கிச்செல்லும் தோற்றத்தைத் தந்த போதிலும் இது மெல்ல மெல்ல மொத்த வணிக சந்தையாக உருமாறியது. இதற்கு காரணம், இந்த சந்தை கடலோரமாக அமைந்ததே எனலாம். மீன் போன்றவற்றை இங்கே இறக்குமதி செய்து கொடுக்கப்பட்ட சிறிய ஆறு சதுரடி இடத்தில் மிக உயரமாக மீன் பெட்டிகளை தேக்கிவைத்து விரைவாக விநியோகம் செய்வர் கடை உரிமையாளர்கள். இவர்களுக்கும் மாதம் இருபத்தைந்து வெள்ளிதான் மாத வாடகை. இவர்களில் பலர் பெரிய பென்ஸ் கார் ஓட்டும் அளவிற்கு பணக்காரர்களாக இருந்தனர். சிலர் ஆளும் கட்சியில் முக்கிய தொகுதி உறுப்பினராகவும் இருந்தனர். அப்படி இருந்தும் இவர்களில் சிலர், என்னால் தண்டிக்கப்பட்டும் இருந்தனர்.

ஒருமுறை, முட்டைக்கோஸின் தோலுரிக்கப்பட்ட பகுதிகள், சிங்கப்பூர் ஆற்றில் நிறைய மிதப்பதாய் புகார் வந்தது. இந்த கோப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. நான் பலமுறை சந்தைக்குள் சென்று பார்த்தும் ஒன்றும் புலப்படவில்லை. வியாபாரிகள் ஒழுங்காக பெரிய கூடையில் வேண்டாத முட்டைக்கோஸ் பகுதிகளை சேமித்து பொதுவாக அமைக்கப்பட்ட பெரிய குப்பை தொட்டியில் கொட்டுவதாகத்தான் தெரிந்தது. ஆயினும் சந்தேகத்தின் பேரில் மேலும் சோதனையிட்டபோது சிலர் சந்தையின் உள்பகுதியில் அமைக்கப்பட்ட மிக குறுகலான வாய்க்காலின் மேல் மூடப்பட்ட மரப்பலகைகளை தூக்கிவிட்டு, அதற்குள், இந்த தேவையற்ற முட்டைகோஸ் பகுதிகளை கொட்டவும், அங்கு பாயும் கடல்நீர் மெல்ல அதை ஆற்றுப்பகுதிக்கு அடித்து செல்லப்படுவதையும் உணரமுடிந்தது. இதில் பத்து கடைக்காரர்களுக்கு அபராத சீட்டெழுதிக் கொடுத்துவிட்டு,  கோப்பில் நடவடிக்கையை பதிவு செய்து ஒருவாறாக பிரச்சனையை முடித்து வைத்தேன்.

இதுபோல் பல சிக்கல்களோடு உழைத்த காலம் அது. இன்று அரை நூற்றாண்டுக்குப், பின் எல்லா சுவடுகளும் மறைந்துவிட்டன. பழைய கண்டங் கிருபாவ் சந்தை 1982இல் உடைக்கப்பட்டு, இப்பொழுதுள்ள தேக்கா செண்டர்  உள்ளே அமைந்துள்ளது. கண்டங் கிருபாவ் காவல் நிலையமும் 1978இல் தகர்க்கப்பட்டது. பீச் ரோடு சாலையில் இருந்த கிளைட் டெரஸ் சந்தை 1983இல் உடைக்கப்பட்டு, அந்த இடத்தில் தி கேட்வே காம்பிலக்ஸ் (The Gateway Complex) என்ற உயர்மாடிக்கட்டிடம் தலைநிமிர்ந்து புதிய தோற்றம் காட்டி நிற்கிறது. இப்பொழுது நினைவில் மட்டுமே மறைந்த இடங்களின் சுவடுகள் வாழ்கின்றன!

ksrajaed@gmail.com