சிங்கப்பூர் ஒரு கலை இலக்கியப் பெட்டகம் – சிங்கை சுந்தர்

(கட்டுரை) சிங்கப்பூர் ஒரு கலை இலக்கியப் பெட்டகம்

சிங்கை சுந்தர்

ஆதி மனிதனின் உரையாடல் எப்படி இருந்திருக்கும்? மொழி என்னும் பெருங்கொடை அறியப்படாத காலத்தில் மனிதன் எவ்வாறு உரையாடியிருப்பான்? மனிதனுக்கு மொழி எத்தனை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது! அது எப்படி உருவாகி உருமாறி இன்று நம்மிடையே ஓர் இணைப்புப் பாலமாக இருக்கிறது? இப்படிப் பல கேள்விகள் எனக்குள்ளே எழும்.பல இரவுகள் இக்கேள்வி என்னைத் தூங்கவிடாமல்கூடச்  செய்திருக்கின்றது. அப்படி இன்னபிற கேள்விகளுடன் சிங்கப்பூர் வீதிகளில் சுற்றித் திரிந்த ஆரம்ப நாள்களில் என் தேடல்களுக்கு விடை சொன்னவை சிங்கப்பூர்த் தேசிய நூலகங்களே!

ஒரு நாட்டில் ஒரு நகரத்தில் தன் குடிகளுக்கு உணவு, உடை, உறையுள் என அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு நின்றுவிடாமல் தன் குடிகளின் அறிவுத் தேவைகளுக்கும் வழிவகை செய்யும் ஓர் அரசு நிர்வாகம் என்பது மேம்பட்ட நிர்வாகம் என்பேன். அப்படியான அரசு நிர்வாகம் சிங்கப்பூரர்களுக்கு வாய்த்திருப்பது அவர்களுக்குப் பெரும்பேறு!

2009 -2010இல் சிங்கப்பூரில் என் ஆரம்ப நாள்களில் வேலைநேரம் போக மீதி நேரங்களில் கவிதை எழுதும் நோக்கில் சிங்கப்பூரின் அழகை இரசிக்கவும் சிங்கப்பூர் மக்களின் அன்றாட நடைமுறைகளைக் கவனிப்பதற்காகவும் ஊர் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்படியான நாள்களில் எனக்கு இளைப்பாறல் கொடுக்கும் இடமாக ஜூராங் மேற்கு நூலகம்தான் பெரும்பாலும் இருந்துள்ளது.  அங்கே நான் பல்வேறு தலைப்புகளில் நூல்களை வாசித்துள்ளேன். சிங்கப்பூரின் தேசிய மொழிகள் அனைத்திலும் நூல்கள் வைக்கப்பட்டிருக்கும். உலக நாடுகளில் தமிழுக்குச் சிறப்பு செய்வதில் சிங்கப்பூருக்குத் தனி இடம் உண்டு!தமிழின் ஆரம்பகால நூல்கள் முதல் தற்காலக் கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகளைக்கூட அங்கே வாசிக்க முடியும். அப்படி நான் பல முன்னோடிகளின் நூல்கள், தற்கால கவிஞர்களின் கவிதைகள் எனப் பலவற்றையும் வாசித்து என் கவிதை இயற்றும் ஆற்றலை நான் வளர்த்துக் கொண்டேன். திரைப்படம்  தொடர்பான பல்வேறு நூல்களை அங்கு வாசித்துள்ளேன். உலகளவில் பிரபலமான திரைப்படங்களின் திரைமொழி மற்றும் திரைக்கதைகள் அங்கே நூல்களாக எனக்கு வாசிக்கக்  கிடைத்தன. அந்தவகையில் சிங்கப்பூர் எனக்கு மற்றுமோர் ஆசான்.

நூலகங்கள் தவிர்த்துத் தமிழுக்கு மகுடம் சேர்க்கும் இடமாக அமைவது ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் தமிழ் மொழிமாத விழா திரைத்துறை  ஆசையினால்  பாடல் எழுதும் முயற்சியில்  இருந்த காலகட்டத்தில் இப்படியான ஒரு விழாவில் பாடல் எழுதும் ஒரு நாள் பயிலரங்கில் கலந்து கொண்டு பாடல் எழுதிப் பழகியது எல்லாம் என் மனத்தில் நீங்காத நினைவுகளாக இன்றளவும் நிற்கின்றன.

அரசு முயற்சியில் நூலகங்கள், தமிழ் மொழிமாத நிகழ்வுகள் எனப் பல்வேறு முன்னெடுப்புகள் ஒருபுறம் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் அதேவேளையில் சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த பணியாளர்கள் பங்கேற்கும்பொருட்டு அரசு நிதியுதவியுடன் நடத்தப்பெறும் “Singapore Migrant Cultural Show” போன்ற நிகழ்வுகள் புதிய புதிய படைப்பாளர்களை அவர்களின் உயரிய இலட்சியங்களை எட்டுவதற்கு வழி செய்யும் தளமாகவும் விளங்குகின்றன.  அவ்வாறான மேடையிலும் நான் கவிதை வாசித்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த பேரானந்தம்.

என் பார்வையில் சிங்கப்பூர் உலகப்  பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்ட தொழில் வளர்ச்சி கொண்ட ஒரு நாடு மட்டுமன்று, அது உலகின் பல்வேறு இன, மொழி, பண்பாட்டினைப் போற்றிப் பாதுகாத்து அதனை அட்சரம் பிசகாமல் அடுத்த தலைமுறைகளின் கைகளில் கொண்டு சேர்க்கும் வரலாற்றுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.