சிங்கப்பூர் சொல் ஒளிர் ககனத்தில் காயும் நிலா – முனைவர் எச் முகம்மது சலீம்

(கட்டுரை) சிங்கப்பூர் சொல் ஒளிர் ககனத்தில் காயும் நிலா

முனைவர் எச் முகம்மது சலீம்

நவம்பர் 2ஆம் தேதி அங் மோ கியோ நூலகத்தில் அழகுநிலாவின் இரண்டு நூல்கள் வெளியீடு கண்டன. “சொல் ஒளிர் ககனம்” என்னும் அவரது 24 கட்டுரைகளின் தொகுப்பு ஓன்று. கவிதை, நாவல், சிறுகதை, பெண்ணெழுத்து, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் மற்றும் நாடகம் என்னும் தலைப்புக்களில் அவரது வாசிப்பு அனுபவங்களைப் பல்வேறு காலகட்டங்களில் அச்சு மற்றும் இணையவெளியில் அவர் பதிவுசெய்து வந்துள்ள எழுத்துக்களின் தொகுப்பு “சொல் ஒளிர் ககனம்”. தனது நெடிய வாசிப்புப் பயணத்தில் தான் என்னவாக மாறியிருக்கிறேன் என்பதைக் கண்டடைய இத்தொகுப்பு உதவுமெனத் தான் நம்புவதாக நூலின் முன்னுரையில் அழகுநிலா பதிவு செய்துள்ளார்.

அன்று வெளியீடு கண்ட இன்னொரு நூல் கொஞ்சம் வித்தியாசமான தலைப்பைத் தாங்கி வந்த  “மில்லேனியல் அவ்வை” என்னும் 40 குறுங்கதைகளின் தொகுப்பு. 2023இல் சிங்கப்பூருக்கு ஆசியப்  படைப்பிலக்கியத் திட்டத்தில் மூன்று மாதங்கள் வருகைதரு எழுத்தாளராக இங்கு வருகைதந்த டாக்டர்.சுனில் கிருஷ்ணன் நடத்திய குறுங்கதை எழுத்துப் பயிற்சிப்பட்டறையில் அழகுநிலா கலந்துகொண்டது இந்த குறுங்கதைத் தொகுப்பு அவரது எழுத்தில் வெளிவரக் காரணமானது என்கிறார்.

அழகுநிலா சிங்கப்பூர் தமிழிலக்கிய படைப்பு வெளியில் கவனம்பெறும் படைப்பாளராக ஒரு பதிற்றாண்டு காலமாகப்  பயணிப்பவர். புனைவு, அல்புனைவு, சிறார் இலக்கியம் போன்ற எழுத்து வடிவங்களில் சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் படக்கதை நூற்கள், சிறுவர் பாடநூல், சிறுவர் நாவல், மின்னூற்கள் என்று பல்வேறு தளங்களில் இவரது படைப்புக்கள் வந்துள்ளன. தகுதியும் தரமும் மிளிர உண்மையும் கற்பனையும் சந்திக்கும் இவரது எழுத்தை மெச்சி 2022 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் இலக்கிய பரிசு வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்.

சொல் ஒளிர் ககனம்

இத்தொகுப்பில் இடம்பெறும் 24 கட்டுரைகளும் கவிதை, நாவல், சிறுகதை, பெண்ணெழுத்து, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், நாடகம் என்னும் பிரிவுகளில் இணையதளப் பதிவுகளாகவும் இலக்கியக் கூடல்களில் இவர் நிகழ்த்திய உரைகளின் சுருக்கமாகவும் வெளிவந்தவை. கவிஞர்கள் இசை, இளங்கோ கிருஷ்ணன் ஆகியோரின் படைப்புக்கள் குறித்த இவரது பார்வை, ஜெயமோகனின் காடு, குமரித்துறைவி நாவல்கள், இமயத்தின் எங் கதே நாவல், சு.வேணுகோபாலின் பால்கனிகள் நாவல், ம.நவீனின் சிகண்டி நாவல், அ.பாண்டியனின் கரிப்புத் துளிகள் நாவல், கணேச குமாரனின் மெனிஞ்சியோமா நாவல் ஆகியன குறித்த இவரது கருத்தாடல் பதிவுகள் இவரது எளிமையான குறுகிய வாக்கியங்களும் குறைந்த சொற்களும் கொண்டு இந்த ஆக்கங்கள் குறித்த ஆழமான உணர்வலைகளை வாசக மனங்களில் எழச்செய்துள்ளார்.

யுவன் சந்திர சேகரின் சிறுகதைகள் குறித்த வித்தைக்காரக் கலைஞன் பதிவு, சாம் ராஜின் சிறுகதைகள் குறித்து மார்க்சின் இடதும் மாதொருபாகனின் இடதும் என்னும் தலைப்பில் ஜெயமோகனின் இணையவெளியில் வந்துள்ள இவரது பதிவு, நரனின்  சிறு கதைகள் பற்றிய பார்வை, பவா செல்லத்துரையின் சிறுகதைகளில் விரியும் அவரது உலகம் போல்வன அழகுநிலா இப்பகுதியில் அடுக்கிவைத்திருக்கும் பதிவுகள்.  அ.வெண்ணிலாவின் இந்திர நீலம் தொகுப்பு, கங்காபுரம் நாவல், அம்பையின் பயணம் சிறுகதைகள், ராமா சுரேஷின் அம்பரம் நாவல், சு.தமிழ்ச் செல்வியின் கண்ணகி நாவல் ஆகிய படைப்புக்கள் மூலம் பெண்ணெழுத்தின் பரிமாணங்களைப்  பேசுகிறார்.

இத்தொகுப்பின் இன்னொரு பகுதி சமகால மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்த இவரது பார்வையைப் பதிவு செய்கிறது. சீன எழுத்தாளர் யூ ஹுவாவின் ரத்தம் விற்பவனின் சரித்திரம், ரஷ்ய எழுத்தாளர் பாஸு அலீயெவாவ்வின் மண் கட்டியைகே காற்று அடித்துப் போகாது நாவல், விவேக் ஷான் பாக்கின் காச்சர் கோச்சர் நாவலைத் தழுவிய அரூப மணிகளும் அறுபடாதச் சரடும் ஆகிய படைப்புக்கள் மொழிபெயர்ப்பு என்னும் சாளரம் வழி நம்மை வந்துசேர்ந்திருக்கும் சுகந்தங்கள் போலப் பதிவு செய்துள்ளார். இவரது சொற்கள் அலங்காரமில்லாதவை. ஆயினும் அவற்றில் ஊடாடும் உணர்வுப் பதிவின் நிறை, எண்ணப் பிரதிபலிப்புகளை படம்பிடித்துக் காட்டும் துல்லியம் போன்றவற்றால் அவர் எடுத்துக்கொண்ட படைப்புக்களின் மேன்மை தூக்கி நிறுத்தப்படுகிறது.

சில கட்டுரைகள் குறித்தும் அழகுநிலா இத்தொகுப்பில் பதிவிட்டுள்ளார். அ.கா.பெருமாளின் இராமன் எத்தனை இராமனடி தொகுப்பு, நாஞ்சில் நாடனின் அம்பறாத் தூணி தொகுப்பு ஆகிய கட்டுரைகளில் எழுத்தின் கனபரிமாணங்களைக் கவனத்துடன் பதிவு செய்கிறார். தொகுப்பில் இறுதியாக இடம் பெறுவது நாடகங்கள்  குறித்த பதிவு. பி.கிருஷ்ணனின் நகைச்சுவை நாடகங்களைக் குறித்த பதிவு பல்வேறு கோணங்களில் அமையக் காண்கிறோம். 

மில்லேனியல் அவ்வை

40 குறுங்கதைகளைக்கொண்ட 115 பக்கங்கள் கொண்ட இந்தக் குறுநூல் அன்று வெளியீடு கண்ட அழகுநிலாவின் மற்றொரு படைப்பு. அனுபவங்களும் இவரது தனிப்பட்ட பார்வையும் இணைந்து உருவான இக்குறுங்கதைகள் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கைக் காட்சிகள், பன்மொழிச்  சொற்புழக்கம்,  ஆங்கில வார்த்தைகளின் இயல்பான கலவை போன்ற தன்மைகளால் ஒரு நவீனத்தனமுள்ள குறுங்கதைத்தொகுப்பாக அமைந்துள்ளது. இதில் பேசப்படும் குறுங்கதைகள் வழியாகத் தோன்றும் ஒரு குறுக்குவெட்டுக் காட்சி சிங்கப்பூர் போன்ற நகரங்களில் வாழும் மக்களின் அடையாளம்  சிக்கல் நிறைந்தது. அது ஒரு பன்மொழி , பல்வகைப் பண்பாட்டுத்தளங்களின் கலவையில் உருவாகும் நுட்பமான உருவம். அழகுநிலாவின் எழுத்தில் இதனை மெய்ம்மையாகப் பதிவு செய்கிறார். இக்குறுங்கதைகளில் உலவும் பாத்திரங்கள் தங்களைத் தமிழர், சிங்கப்பூரர், ஆசியர் ஆகிய அடையாளங்களில் தங்களை எங்கே நிற்கிறோம் என்று ஒரு வகை அடையாளத் தேடலில் இருக்கக் காணலாம். இந்த அடையாளத் தேடலின் பரிமாணம் குறித்த இவரது பார்வை அழகுநிலாவின் படைப்புக்களைப் பன்னாட்டுத் தரத்தில் கொண்டு சேர்க்கிறது.  

இத்தொகுப்பில் இடம்பெறும் கடைசிப் பத்து குறுங்கதைகளில் ஆழிக் குட்டி என்னும்  பாலகன் அன்றாடம் நிகழ்த்தும் குறும்புத் தோரணங்களும் அதனை ஒட்டுமொத்த குடும்பமும் ரசித்து ருசிக்கும் இயல்பான வாழ்க்கை அனுபவங்கள் பதிவிடப்படுகின்றன.

அழகுநிலாவின் இவ்விரு படைப்புக்களும் சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் புத்தாக்கம், புதுவடிவம் ஆகிவற்றின் மற்றொரு புதிய பாய்ச்சல் என்று குறிப்பிடலாம். அழகு நிலாவின் எழுத்தே அவரது குரல். உலகத்தரம் வாய்ந்த சிங்கப்பூர் போன்ற நகரங்களில் வாழும் தமிழ்க்  குடிகளின் உள்ளுணர்வுகளின்  உண்மையான பிரதிபலிப்பு இவரது எழுத்து.

mdsaleem@jamiyah.org.sg