சிங்கைச் சிறகுகள் – சதீஷ் முத்துகோபால்

(கட்டுரை) சிங்கைச் சிறகுகள்

சதீஷ் முத்துகோபால்

பறவைகளுக்கு உணவளித்தால் 10000 வெள்ளி வரை அபராதம் என்ற அறிவிப்புகளை ஆங்காங்கே சிங்கப்பூரில் பார்க்க முடிகிறது. இந்த அறிவிப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படுவது போல தெரிகிறது. பறவைகளுக்கு உணவளிப்பது அவ்வளவு பெரிய குற்றமா எனத் தோன்றலாம். அவையும் இந்த பூமியில் ஒரு அங்கம்தானே. அவை உணவுக்கு என்ன செய்யும்? அவற்றுக்கு கொடுப்பதால் நமக்கு என்ன குறைந்துவிடப் போகிறது? எனப் பல்வேறு கேள்விகள் பலருக்கும் எழலாம்.

காட்டுயிர்களுக்கு ஏன் இரை தரக்கூடாது என்பதை புரிந்துகொள்வது மிகவும் அவசியம். நான் சிங்கப்பூர் வந்த புதிதில் பூமலை தாவரவியல் பூங்காவிற்கு சென்றேன். அங்கே ஏராளமான குரங்குகள் (Long-tailed Macaque) குப்பைத் தொட்டியில் இருந்து உணவை எடுத்துக் கொண்டிருந்தன. சிலர் தங்கள் கையில் வைத்திருந்த பானங்களை கொடுத்தார்கள். இது சரிதானா?

உங்களிடம் தேவைக்கு அதிகமாகவே உணவும், நொறுக்குத் தீனியும் இருந்தால் என்ன செய்வீர்கள்? பசியோடு காத்திருக்கும் குரங்குகளுக்கு உங்கள் உணவைக் கொடுத்து மகிழ்வீர்களா? அப்படியானால் நீங்கள்தான் அந்தக் குரங்குகளுக்கு முதல் எதிரி என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மனிதர்களிடம் உணவைப் பெறுவதனால் காட்டுயிர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. நம்முடைய குடியிருப்புகளை சுற்றி இருக்கும் பறவைகளுக்கு உணவளிப்பதாலும் இந்த பிரச்சனைகள் தீவிரமடைகின்றன.

மனிதர்களால் சமைக்கப்பட்ட உணவுகளும், நொறுக்குத் தீனிகளும் இயற்கையிலிருந்து பெற முடியாதவை. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையிலிருந்து தனக்குத் தேவையான இரையைப் பெற்ற இவற்றின் செரிமான உறுப்புகளால் இந்த உணவை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் விளைவாக நோய்தாக்குதலுக்கு அவை உள்ளாகின்றன. நம்முடைய உணவில் சேர்க்கப்படும் உப்பும், அவற்றின் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்துகிறது. இரை தேடி அலையும் ஆற்றலையும், அதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய அறிவையும் அவை இழக்க நேர்கின்றன. இவ்வாறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் சில காட்டுயிர்கள் மற்ற உயிரினங்களுக்கும் நோய்களை கடத்துகின்றன. இது மனிதர்களுக்கும் ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது.

மனிதர்கள் கொடுக்கும் உணவுகளால் கவரப்படும் இந்த காட்டுயிர்கள், பல நேரங்களில் சாலைகளில் காத்திருக்கின்றன. குறிப்பாக சாலைகளில் இந்த காட்டுயிர்கள் விபத்தில் சிக்கி மாண்டு போகின்றன. காட்டுயிர் தானாக காடுகளில் இரை தேடும் வரை எந்த சிக்கலும் இல்லை. அவை அவ்வாறு இரை தேடுவதன் மூலம் காட்டை வளம் பெறச் செய்கின்றன. பறவைகளும் தாவர உண்ணிகளும், காய்களையும் பழங்களையும்  உண்டு எச்சத்தின் மூலமாக விதைப்பரவல் செய்யவேண்டியவை. அந்த விதைகளுக்கு கூடுதல் முளைப்புத் திறனும் உண்டு. காடு முழுக்க அலைந்து திரியும் இந்த உயிரினங்களால் காட்டின் பல்வேறு இடங்களும் வளம் பெருகி, இயற்கை சமநிலை பாதுகாக்கப்படும். குரங்குகள் மரங்களின் உச்சியின் அமர்ந்து காய்களை உண்ணும்போது, தவறி விழும் காய்களை மான்கள் உண்கின்றன. இருவாச்சியின் எச்சத்தில் உருவாகும் அத்தி மரம், அணில்களுக்கு வாழிடம் ஆகிறது. யானையின் சாணத்தில் உப்பை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்தச் சேர்க்கை மூலம் மலை உச்சியில் இருக்கும் ஒரு மரத்தின் பூக்களை கனியாக்குகிறது. இன்னும் நாம் அறியாத, ஆயிரம் ஆயிரம் இயற்கை சுழற்சியினை, பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டையும், சோளக்கருதையும் வாங்கி உணவாகக் கொடுத்து ஜீவகாருண்யம் என்ற பெயரால் காட்டை நாசம் செய்வது எப்படி சரியாக இருக்கும் ?

காட்டுயிர் பேணலையும், ஜீவகாருண்யத்தையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதை திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களின் எழுத்துகளை வாசித்தால் புரியும். கடந்த ஆண்டு எழுத்தாளர்கள் விழாவிற்கு அவர் அழைக்கப்பட்டிருந்த போது அவரிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிறப்பான விளக்கமும் அளித்தார்.

சிங்கப்பூரில் எந்த பறவைகள் அதிகம் மனிதர்களிடம் உணவை நாடுகின்றன என்று பார்த்தேன். Javan Myna எனப்படும் நாகணவாய், மாடப்புறா (Rock Pigeon), மற்றும் காகம் ஆகியவையே முக்கியமான பறவை இனங்களாக இருக்கின்றன. இதில் இந்த நாகணவாய் பறவையை சிங்கப்பூரில் யாரும் பார்க்காதிருக்க வாய்ப்பே இல்லை. மனிதர்களிடம் நெருங்கிவர இந்தப் பறவை சிறிதும் தயங்குவதில்லை. உணவுக் கூடங்களில் மேஜை மீது சிந்தியிருக்கும் உணவுகளை எடுக்க மிக அருகில் வரும். சில நேரங்களில் துணிந்து வீடுகளுக்குள்ளும் வரும். குப்பைகளை அள்ளிச் செல்லும் கனரக வாகனங்களை இவை துரத்திச் செல்வதைக் காணலாம். இப்படி தனக்கு வாய்க்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு வாழப் பழகிக் கொண்டவை இந்தப் பறவைகள்.

இப்படிப் பெருகும் ஒரு சில பறவைகள் மற்ற பறவையினங்களுக்கு ஆபத்தாகவும் அமையலாம். சூழல் சமநிலையை இழக்க நேரிடலாம். தங்கள் உள்ளுணர்வு காரணமாக மனிதர்களை நாடாத பறவையினங்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? பெரும்பாலான பறவையினங்கள் தங்களுக்குத் தேவையான உணவை இயற்கையிலிருந்தே பெற விரும்பும். பறவைகளுக்கு இரை கொடுத்து பழக்கும் மனிதர்களின் செயலால் வேறு எந்தெந்த உரியிரினங்கள் பாதிக்கப்படும் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது. எனவே நாம் செய்ய வேண்டியது ஒட்டுமொத்த இயற்கையையும் பாதுகாப்பதே. காட்டுயிர்களுக்கு உணவு கொடுக்காமல் இருப்பதே காடுகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

காட்டுயிர்களுக்கு இரை தரக்கூடாது என்றால் பறவைகளை வீட்டில் வைத்து வளர்க்கலாமா என்ற கேள்வி எழலாம். பறவைகளை கூண்டில் வைத்து வளர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தான் பறவைகளை நன்கு கவனித்துக் கொள்வதாகவும், அவற்றுக்கு தேவையான உணவைத் தருவதாகவும், அவை வெளியில் சென்றால் உயிரிழந்துவிடும் என்றும் என்னுடன் சில வாதிடுவார்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதன் உருவாகுவதற்கு முன்பாகவே, அவை இந்த பூமியில் தகவமைத்து வாழப் பழகிவிட்டன. உண்மையில் நாம் அவற்றை காக்க விரும்பினால் அவற்றின் வாழிடத்தை அல்லவா காக்கவேண்டும் ?

மேலும், பறவைகள் வானத்தில் பறந்து சுற்றித் திரிபவை. நம்மால் இரை கொடுக்க முடியும். வானத்தை எப்படிக் கொடுக்க முடியும்? அதன் எண்ணங்களை எப்படி நிறைவேற்ற முடியும்? பறவைகளை கூண்டில் வளர்ப்பது பறவைகளின் மகிழ்ச்சிக்காகவா, நம்முடைய மகிழ்ச்சிக்காகவா என்பது குறித்து மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும். கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு வசனம் பேசுவார். “பறவையின் குணம் பறப்பது தான். அதை பறக்கவிடு. வாழ்வா சாவா என்பதை அதுவே முடிவு செய்யட்டும்” என்பார். அது தானே சரி.

உலகெங்கும் தங்கள் நாட்டை சாராத பறவைகளை வேறு நாடுகளில் இருந்து வரவழைத்து கூண்டில் வளர்ப்பது பொழுதுபோக்காக பரவி வருகிறது. இது ஒரு வளர்ந்துவரும் வணிகம். இது சிங்கப்பூரிலும் உண்டு. ஆனால், இதில் ஒரு வருத்தமளிக்கும் செய்தி, சிங்கப்பூரில் கடைகளில் விற்கப்படும் பறவையினங்கள், சிங்கப்பூரின் சூழலை அடிப்படையாகக் கொண்ட, இங்கே வாழ தகவமைத்துக் கொண்ட, பறவையினங்களாவும் இருப்பதுதான். மணிப்புறாவும், சோலைப்பாடியையும் கூண்டில் இருப்பதை எப்படி ரசிக்க முடியும்? இந்த இரண்டு பறவை இனங்களையும் தமிழ்நாட்டிலும் பார்க்கலாம்.

சோலைப்பாடி, ஒரு அழகாக படும் பறவை. நல்ல மரங்கள் அடர்ந்த சோலைகளில் பார்க்க முடியும். இந்தப் பறவையை பூலா உபின் தீவில் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் நண்பர்களோடு மலேசியாவில் பன்ட்டி பறவைகள் சரணாலயத்திற்கு சென்றிருந்த போது, இதன் பாடலை நாங்கள் நீண்ட நேரம் கேட்டு ரசித்தோம். எங்கள் கண் முன்னால் 15 அடி தூரத்தில் ஒரு புதரில் கீழாக வந்து அமர்ந்த சோலைப்பாடி, பாடிக்கொண்டே இருந்தது. அதன் பாடல் காட்டின் அந்த பகுதியை நிறைத்திருந்தது. எங்கள் நினைவுகளில் என்றும் அதன் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த அனுபவங்களை கூண்டில் இருக்கும் ஒரு பறவையால் கொடுத்துவிட முடியுமா ?

பறவையினங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றுக்கு இரை தராமல், அதன் வாழிடச் சூழலை பாதுகாத்து, அதன் இடத்திலேயே அதை ரசிப்பது தான் நமக்கும் உற்சாகத்தை தரும். ஒரு மாலை நேர மழைக்குப் பிறகு உங்கள் அடுக்கங்களுக்கு அருகில் இருந்து எழும்பும் அந்த குயிலின் குரலை, ஒரு தேநீரோடு ரசித்துக் கேளுங்கள். உங்களுக்கும் சிறகு முளைக்கும்.