(கவிதை) திருமேனி
பிரபாதேவி
மாட்டுவண்டியில் அடுக்கிவைத்திருக்கும்
நெல்மூட்டைகளின்மேலே
கயிற்றை இழுத்துப்பிடித்துக்
கட்ட முற்படுகையில்
ஒற்றைக்காலை மடக்கித்தூக்கி
நிற்கிறான் அவன்.
இப்படித்தான் இருந்திருப்பான்
மருதநிலத்துத் தலைவன்
தமிழ்நிலத்து இந்திரன்.
நிலந்தொட்டு வாழ்பவனுக்கு
நெஞ்சுரங்கொண்டு நிமிர்பவனுக்குக்
காலடியில் அடங்கிடாதா உலகம் !
பொலிவுற்ற நெல்மணிகளாய்
திரட்சியாய்ச் செழித்து
விளைந்திருக்கிறது
காதல்.
கதிரறுத்துக் கதிரடித்து
மூட்டைகளில் அடைத்துக்கட்டி
வாகாய் அடுக்கிவைத்து
இருபுறமும் கயிற்றைமுறுக்கி
இழுத்துக்கட்டிட மூட்டைமேல்
ஒற்றைக்காலூன்றித்
திமிர்ந்தெழுந்து நிற்கிறது
காமம்.
செழித்திருக்கும் காதல்மேல்
தவமியற்றுகையில்தான்
மும்மேனி விளைச்சல்
காண்கிறது காமம்.


