(தொடர்) பிணியின்மை செல்வம் – 4
மில்லத் அகமது
இதயப் பிணிக்கான காரணிகள்
புகை பிடித்தல், அதிகக் கொழுப்புள்ள உணவுகள், உயர் குருதி அழுத்தம், மன அழுத்தம், அளவுக்கு மீறி மது அருந்துதல், அளவுக்கு மீறிய உடல் எடை, உடலைச் சோம்பேறித்தனமாக வைத்திருத்தல், பரம்பரைக் காரணிகள்.
ஓர் இயந்திரம் இயங்குவதற்கு மின்சக்தி தேவைப்படுவது போலவே, இதயத்தின் இயக்கத்திற்கும் ஒருவித மின்னோட்டம் அவசியம். வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், அந்த மின்னோட்டத்தை இதயமே உற்பத்தி செய்து கொள்கிறது என்பதுதான். இந்த மின்னோட்டம் சீராகவும், குறித்த நேரப்படியும் இதயத் தசைகளுக்கு விநியோகிக்கப்படுவதால்தான், இதயம் `லப் டப், லப் டப்’ என இயல்பான லயத்துடன் துடிக்கிறது.
ஆனால், இதயத்தில் ஏற்படும் சில குறைபாடுகளால், இந்த மின்னோட்ட உற்பத்தியில் தடை ஏற்பட்டாலோ, அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆனாலோ, அல்லது அதன் விநியோகத்தில் தவறு நேர்ந்தாலோ, இதயத்துடிப்பில் மாற்றங்கள் உண்டாகும். இதயத்தின் துடிப்பை ஸ்டெதஸ்கோப் கொண்டு அறியலாம். ஆனால், அந்த மின்னோட்டத்தை அறிய இயலாது. இதைக் கண்டறிய உதவும் பரிசோதனையே ‘இ.சி.ஜி. (ECG)’ எனப்படும் இதய மின்னலை வரைவுப் பரிசோதனை ஆகும்.
கவனிக்காது விட்டால் உயிரைப் பறிக்கும் நோய்களில் இதய நோயும் ஒன்று. அதன் அறிகுறிகளையும் துன்பங்களையும் அலட்சியம் செய்யும்போது, அது மிகப்பெரிய பொருட் செலவையோ, உயிரையோ பறித்துவிடுகிறது. முறையான பரிசோதனையின் மூலம் இதய நோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம். இ.சி.ஜி. பரிசோதனையில், இதய அலைகள் சீராக இருந்தால் அதை இயல்பான இதயம் எனலாம். மாறாக, நோயின் தன்மைக்கேற்ப அலைகளில் மாற்றங்கள் தெரியும். இது மாரடைப்பை மட்டும் அல்லாமல், இதயத்துடிப்பின் எண்ணிக்கையையும் கண்டறியும். இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா, வேகமாக இருக்கிறதா, மின்னோட்டம் சரியாகக் கடத்தப்படுகிறதா, இதயத் தசைகள் மற்றும் அதன் அறைகளின் வீக்கம், தடிமன் போன்றவற்றை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதன் வாயிலாக, இதயத்துடிப்பு கோளாறுகளைச் சரி செய்ய முடியும்.
பொதுவாக, இதய அலைகள் முறையாக இருந்தாலும், ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை இ.சி.ஜி. பரிசோதனை செய்வதுண்டு. இந்த இரு முறைகளிலும் இயல்பான முடிவுகள் இருந்தால், அவருக்கு மாரடைப்பு இல்லை என உறுதியாகச் சொல்லலாம். ஒருவேளை, இரண்டாவது பரிசோதனையில் சிறிய மாற்றங்கள் தென்பட்டால், ட்ரெட்மில் (Treadmill) பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். மின்சக்தியில் இயங்கும் தளம் ஒன்றில், ஒருவரை நடக்க வைத்து, அந்தத் தளத்தின் வேகத்தைப் படிப்படியாக அதிகரிப்பார்கள். இதனால், அவரின் நடை வேகமும், இதயத்துடிப்பின் வேகமும் அதிகரிக்கும். அப்போது இதயத்தில் ஏற்படும் மாற்றங்களையும், துடிப்பு, குருதி அழுத்தம் ஆகியவற்றையும் இ.சி.ஜி. கருவி வரைபடமாகப் பதிவு செய்யும். இந்தப் பரிசோதனை, இதயம் அழுத்தத்தில் இருக்கும்போது எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டும்.
ஆஞ்சியோகிராபி
கடுமையான நெஞ்சு வலியும், மூச்சுத் திணறலும், இடது கை, தோள்பட்டை, கழுத்து, அல்லது தாடையில் ஏற்படும் வலியும், ஓய்வு நேரத்தில்கூட நெஞ்சுப் பகுதியில் தோன்றும் அசாதாரண வலியும், ஏற்கெனவே உள்ள வலி அதிகரிப்பதும் போன்றவை இதயத்தின் பிணியை உணர்த்தும் சில அறிகுறிகள். இத்தகைய சூழல்களில், ஆஞ்சியோகிராபி என்னும் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
உடலின் உறுப்புகளுக்குக் குருதியைக் கொண்டு செல்லும் நாளங்களின் வெளி மற்றும் உள் அமைப்புகளையும், குருதி ஓட்டத்தின் நிலையையும் துல்லியமாகக் கண்டறிய உதவும் ஒரு சிறப்பான மருத்துவப் பரிசோதனையே ‘ஆஞ்சியோகிராபி’ (Angiography) ஆகும். இந்தப் பரிசோதனையில் பெறப்படும் படங்களுக்கு ‘ஆஞ்சியோகிராம்’ (Angiogram) என்று பெயர்.
இப்பரிசோதனை, சி.டி. ஸ்கேன் போல, எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. எனினும், ஒரு சிறிய வேறுபாடு உண்டு. குருதிக் குழாய்களின் மீது நேரடியாக எக்ஸ் கதிர்களைச் செலுத்தினால், படம் தெளிவாகத் தெரியாது. எனவே, அயோடின் கலந்த ஒரு சாயத்தை அந்தக் குருதிக் குழாய்களுக்குள் செலுத்திய பிறகு, எக்ஸ் கதிர்களைப் பாய்ச்சும்போது, அதன் அனைத்து விவரங்களும் படமாகப் பதிவாகின்றன.
இப்பரிசோதனையின் மூலம், குருதி நாளங்களில் அடைப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா, அதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா, அல்லது அதன் ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றனவா போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். பொதுவாக, இந்தக் குருதி ஓட்டப் பரிசோதனை, கை அல்லது தொடைப் பகுதியில் உள்ள நரம்புகள் வழியாகச் செய்யப்படும். இதன் மூலம் இதயத்தின் குருதி ஓட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறியலாம்.
குருதிக் குழாய்கள் சுருங்கியிருந்தாலோ, கொழுப்பினால் அடைபட்டிருந்தாலோ, குருதியைக் கொண்டுசெல்ல இதயம் பெரிதும் சிரமப்படும். இந்த நிலையையே நாம் ‘மாரடைப்பு’ என்கிறோம். இதயத்திற்குக் குருதி வழங்கும் அடைபட்ட அல்லது சுருங்கிய குருதி நாளங்களைத் திறப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு மருத்துவச் செயல்முறையே ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) ஆகும். இதை, உயிரைக் காக்கும் பரிசோதனை என்றே சொல்லலாம்.
இந்தப் பரிசோதனையில், அடைபட்ட தமனியில் ஒரு சிறிய பலூன் செலுத்தப்பட்டு, குருதி அடைப்பை நீக்குவதற்காக ஊதப்படுகிறது. தமனி விரிவடைந்த பிறகு, அந்தப் பலூன் அகற்றப்பட்டுவிடும். பல சமயங்களில், தமனி மீண்டும் அடைபடாமல் இருக்க, அங்கு ஸ்டென்ட் என்னும் அடைப்பைத் தடுக்கும் கவசம் பொருத்தப்படுகிறது. இஃது அடைபட்ட அல்லது சுருங்கிய தமனியில் நிலைநிறுத்தப்படும் ஒரு சிறிய, வலை போன்ற குழாய். இது தமனியைத் திறந்த நிலையில் வைத்திருக்க உதவுவதால், குருதி தடையின்றிப் பாய்வதற்கு வழிவகைச் செய்கிறது. ஸ்டென்ட்கள் பொதுவாக உலோகம் அல்லது பாலிமர் போன்ற பொருட்களால் ஆனவை.
செயற்கை இதயமுடுக்கி (பேஸ்மேக்கர் – Pacemaker)
இதயத்திற்குத் தேவையான மின்னோட்டத்தைத் செயற்கையாகத் தூண்டி, அதன் துடிப்பைச் சீராக இயங்கச் செய்யும் கருவியே ‘செயற்கை இதயமுடுக்கி’ அல்லது ‘பேஸ்மேக்கர்’ ஆகும். இது ஒரு சிறிய தீப்பெட்டி அளவிலான உலோகக் கருவி. இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 30 முதல் 32 என்ற அளவில் மிகவும் குறைந்தவர்களுக்கு இது இன்றியமையாதது.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்வது போலவே, கை அல்லது கழுத்து எலும்புக்குப் பின் உள்ள நரம்பின் வழியாக ஒரு மெல்லிய குழாய் நுழைக்கப்பட்டு, அதன் மூலம் மின் இணைப்பு கம்பி ஒன்று இதயத்தின் மேலறைகளின் சுவரையோ அல்லது வலதுபுறக் கீழறையின் மூலையையோ தொடுமாறு பொருத்தப்படும். இந்தக் கம்பியின் வெளிமுனையானது, தீப்பெட்டி அளவிலான மின்கலத்துடன் (பேட்டரி) இணைக்கப்படும். இது ஆண்களுக்கு கழுத்து எலும்புக்குக் கீழ் தோலின் அடியிலும், பெண்களுக்கு மேல் வயிற்றில் தோலின் அடியிலும் பொருத்தப்படும். தேவையான நேரத்தில், இந்தச் செயற்கை இதயமுடுக்கி இதயத்திற்குத் தேவையான மின்சக்தியை வழங்கும். பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்த மின்கலத்தின் ஆயுள் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கும். எனினும், ஒருவரின் இதயத்தின் மின்னோட்டத் தேவை அதிகமாக இருந்தால், அதன் ஆயுள் குறையக்கூடும். ஆயுள் குறையும் போது, சிறிய அறுவை சிகிச்சை மூலம் பழைய மின்கலத்தை அகற்றி, புதியதை எளிதாகப் பொருத்திக்கொள்ளலாம். பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்களும் மற்றவர்களைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
ஆனால், ஒரு முக்கியமான எச்சரிக்கை: பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்கள், காந்த சக்தி உள்ள பொருட்களின் அருகில் ஒருபோதும் செல்லக்கூடாது. இந்தக் கருவியைக் கொண்டுள்ளவர்களுக்கு மருத்துவர் ஒரு சான்றிதழை வழங்குவார். பயணங்களின்போது, சோதனைக்குரிய மெட்டல் டிடெக்டர் கருவிகளிலிருந்து விலகிச் செல்ல இந்தச் சான்றிதழ் உதவியாக இருக்கும்.
இதயப் பைபாஸ் அறுவை சிகிச்சை
கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குருதி ஓட்டம் தடைபடும்போது, உடலின் வேறு சில பகுதிகளிலிருந்து (பெரும்பாலும் கால் அல்லது கையிலிருந்து) ஆரோக்கியமான குருதி நாளங்களையோ அல்லது செயற்கையான ஒட்டுதல்களையோ கொண்டு, இதயத் தசைகளுக்குக் குருதி பாய ஒரு புதிய பாதையை உருவாக்கும் அரிய மருத்துவச் செயல்முறையே இதயப் பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகும். இச்சிகிச்சை, இதயத்தின் இயக்கத்திற்குப் புதிய உயிரையும் ஆற்றலையும் தருகிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சை
நோய்வாய்ப்பட்டோ, சிதைவுற்றோ இருக்கும் ஒருவரின் இதயத்திற்குப் பதிலாக, உறுப்புத் தானம் செய்பவரின் ஆரோக்கியமான இதயத்தை மாற்றுவதற்காகச் செய்யப்படும் ஒரு மிகச் சிறந்த அறுவை சிகிச்சையே இதய மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.
உயிர் காக்கும் இந்தச் சிகிச்சை, பொதுவாக இறுதி நிலை இதயச் செயலிழப்புக்கு உள்ளானவர்களுக்கும், மற்ற மருத்துவச் சிகிச்சைகளால் குணப்படுத்த முடியாத கடுமையான இதய நோய்களால் அவதியுறுபவர்களுக்கும் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையின் முதன்மை நோக்கம், இதயத்தின் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுத்து, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், அவர்களின் ஆயுளை நீட்டிப்பதுமாகும்.
சிங்கப்பூரில் நோயின் தாக்கம்:
உலகெங்கிலும் நிகழும் மரணங்களுக்கு முதன்மை காரணமாகத் திகழ்வது இருதய நோய். ஆண்டுதோறும் 1.79 கோடி உயிர்களைப் பலி வாங்குகிறது. உலகளாவிய இறப்புகளில் 32 விழுக்காடாக உள்ளது. சிங்கப்பூரிலும் இருதய நோய் ஒரு தீவிரமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகும். நாட்டின் இறப்புகளுக்கான முக்கியக் காரணங்களில் இஃது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நாள்தோறும் சுமார் 22 பேர், இருதய நோய் அல்லது பக்கவாதம் காரணமாக உயிரிழக்கின்றனர். 2024 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மொத்த இறப்புகளில் 30.5% இருதய நோய்களால் ஏற்பட்டவை. அதாவது, சிங்கப்பூரில் நிகழும் மூன்று இறப்புகளில் ஒன்று, இதய நோய்கள் அல்லது பக்கவாதத்தால் ஏற்படுகிறது.
ஆண்டுதோறும் சுமார் 3,000 பேர் மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். இச்சம்பவங்கள் 70 முதல் 80 விழுக்காடு வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ நிகழ்கின்றன. இத்தகைய தருணங்களில், பாதிக்கப்பட்டவருக்கு மிக அருகில் இருப்பவர்கள் பெரும்பாலும் உறவினர்களாகவோ, அலுவலக நண்பர்களாகவோ, பொதுமக்களாகவோ இருப்பர். சம்பவ இடத்தில் இருப்பவர்கள் உடனடியாகச் சிபிஆர் எனப்படும் இதய நுரையீரல் சுவாசம் என்னும் அவசரகாலச் சிகிச்சையை அளித்தால், அந்த உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும்.
சிங்கப்பூரில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களோடு, இந்தியர்களும் மலாய்க்காரர்களும் சீனர்களுடன் ஒப்பிடும்போது இதய நோய்க்கு ஆட்படும் விகிதம் அதிகமாக உள்ளது. இந்த அபாயகரமான நிலையை உணர்ந்து, பல்வேறு நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
சிங்கப்பூர் இதய நல நிறுவனம் (Singapore Heart Foundation) இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சுகாதார மேம்பாட்டு வாரியம் (Health Promotion Board), ‘தேசிய காலடிச் சவால்’ (National Steps Challenge) மற்றும் ‘வாழ்நாள் முழுவதும் பரிசோதனை’ (Screen for Life) போன்ற திட்டங்கள் மூலம், சிங்கப்பூரர்கள் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கிறது. இவற்றுடன், ‘ஆரோக்கியமான சிங்கப்பூர்’ (Healthier SG) எனும் திட்டம், தனிநபர்கள் ஒரு குடும்ப மருத்துவருடன் இணைந்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் நோய்களைத் தவிர்த்து, நீண்ட ஆயுளைப் பெற வழிகாட்டுகிறது. இந்த முயற்சிகள் யாவும், சிங்கப்பூரர்களின் இதய நலனைப் பேணிக் காக்கும் அரும்பணிகளாகும்.
மேலும், அரசாங்கம் ஒவ்வொரு வீடமைப்புத் தொகுதியிலும், கடைத் தொகுதியிலும் AED எனப்படும் தானியங்கி வெளிப்புற அதிர்வுப்பெட்டியை நிறுவியுள்ளது. இது, திடீர் மாரடைப்பின்போது ஏற்படும் உயிருக்கு ஆபத்தான, ஒழுங்கற்ற இதயத் தாளங்களுக்குச் சிகிச்சை அளிக்க உதவுகிறது. இச்சாதனம், மார்பின் வழியாக இதயத்திற்கு மின் அதிர்ச்சியை வழங்கி, அதன் துடிப்பை மீண்டும் நிலைநிறுத்த உதவுகிறது. இந்த அரிய சாதனத்தைப் பயன்படுத்தும்போது, இருவர் உடனிருப்பது மிகவும் இன்றியமையாதது. ஒருவர் உடனடியாகச் சிபிஆர் செய்யத் தொடங்க வேண்டும். மற்றொருவர், உடனடியாக 995 என்ற எண்ணை அழைத்து, அவசர ஊர்தியை அழைக்க வேண்டும்.
இறுதியாக, நம் இதயம் மகிழும் வகையில், அதை அன்புடன் பேணிக் காப்போம் என இதயபூர்வமாகச் சபதம் செய்வோம்.


