(வாசிப்பு) மனங்களில் விதைக்கப்பட்ட கதைகள்
ஜீவன் பிரியா
விதைப்பாத்தி | கு.இலக்கியன்
கு.இலக்கியன் தஞ்சையில் 1984ல் பிறந்தவர்.விவசாயக் குடும்ப வாழ்வியல் சூழலில் வளர்ந்து, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்று தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளையும்,மூன்று சிறுகதை தொகுப்புகளையும் படைத்திருக்கிறார்.
விதைப்பாத்தி எனும் இத்தொகுப்பு, நாற்றாங்காலில் விதைக்கும் பயிர் போல, வாசகர்களின் மனதில் சிந்தனையையும் உணர்ச்சியையும் விதைக்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் பதினோரு வெவ்வேறு கதைகள் மனித உணர்வுகளின் ஆழத்தையும், சமூகத்தின் பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் மனித உறவுகள், சமூக அநீதிகள், மற்றும் தனிமனிதப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை. ஒவ்வொரு கதையும் ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது.
“முகங்கள்” என்ற கதை சந்தையில் கடைகளின் வாசலை துப்புரவு செய்யும் கடுகி என்னும் பெண்ணின் ஆதரவற்ற நிலையையும். “தீயெனச் சுடரும் பெண்மை” வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் நெருக்கடிகள் மற்றும் பாலியல் சீண்டல்கள் பற்றியும் “செம்மண் சாமி” கிராமப்புறத்தில் காதலுறும் பெண்ணின் ஆசை என்னென்ன காரணங்களால் நிராசையாகிறது என்பதைச் சொல்லும் உணர்ச்சிப் பூர்வமான கதையாகவும் இருக்கிறது.
“நெல்லும் மில்லும்”, “விதைப்பாத்தி”, “அடையாளம்” இம்மூன்று கதைகளும் விவசாயப் பின்னணியை கொண்டதாகவும் அதில் வரும் கதைமாந்தர்களின் தேவைகள் இவ்வர்று மாறுபடுகிறது என்பதனை எடுத்துக் காட்டுகிறது.
“குற்றத்தின் சாட்சிகள்” ஓர் கிராமத்தில் இருக்கக் கூடிய சாதிய பாகுபாடுகளை மறைமுகமாக சொல்லி நம்மையும் சாட்சிகளாக நிற்கச் செய்கிறது.
“ஞானப் பூமகள்” சிறார் உலகத்தையும் அவர்களுடைய மனங்களையும் இரு தோழிகளின் நட்பின் வழியாக காட்டுகிறது,
“மல்லிகை தெய்வம்” விவசாயக் கூலித் தொழிலாளியின் குடும்பச் சூழலையும் தாய்மையின் முக்கியத்துவம் பற்றியும் பேசக்கூடிய உருக்கமாகப் பேசும் கதையாகவும், அதனைத் தொடர்ந்து, “ரசகுண்டு”, “தூரும் வேரும்” வெவ்வேறு வகையான நகர்ப்புற அரசியலை விவரிக்கும் கதைகளாகவும் அமைந்திருக்கின்றன.
அனைத்துக் கதைகளின் கருப்பொருளாக நிலங்களும், அதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் உயிர்களும், அவர்களின் பாடுகளுமே இருக்கிறது.
கையாளப் பட்டிருக்கும் சொற்களனைத்தும் எளிமையாகவும், எளிதில் புரிந்துகொண்டு தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கின்றன. ஆசிரியர் தஞ்சையை பகுதியைச் சார்ந்தவராக இருப்பதாலோ என்னவோ அப்பகுதிக்கென இருக்கும் தனிப்பட்ட வட்டாரச் சொற்கள் கதைகளில் நிறைந்திருக்கின்றன.
கதைகளில் வரும் விவரணைகள் எல்லாம் அந்தந்த களத்தோடு பொருந்தும் வகையில் அமைந்திருப்பதும், கருத்துக்களை பூடகமாகச் சொல்லி சில கதைகளின் முடிவுகளை வசவர்களிடம் விட்டுவிட்டு சிந்திக்க வைத்திருப்பது சிறப்பு. கதைக் களங்களுக்கு ஏற்ற தலைப்புகளும், துவக்கங்களும், அதற்கேற்ப வரையப்பட்டிருக்கும் ஓவியங்களும் கச்சிதமாக இருக்கின்றன.
பதினோரு கதைகளில் என்னை பாதித்த இரு கதைகளில் இடம்பெற்ற வரிகள்:
மல்லிகை தெய்வம் – “வேருக்கு பலமாக பக்கவாட்டில் நட்டக்கொம்பு ஒருபோதும் வேராகிவிடாது போல, உறவுகள் உடனிருந்தும், அம்மா இல்லாததும் இருக்கத்தான் செய்தது. அவரவர் அம்மாக்களைப் போல அடுத்தவர்களின் அம்மாக்களால் ஒருபோதும் இருக்க முடிவதில்லை.”
குற்றத்தின் சாட்சிகள் – “பிரபஞ்சத்தின் அதிக அடர்த்தியான திரவம் ஒரு துளிக் கண்ணீர்தான். ஏனெனில் எந்த அறிவியலாலும் உருவாக்கிவிட முடியாதது. அது வாழ்வின் விசித்திரமான மகத்துவம். துயரின் உச்சத்தில் பிறப்பது மட்டுமல்ல, மகிழ்வின் உச்சத்தில் ஒரு சேர பிறக்கும் கண்ணீர் துளிகள்”
“விதைப்பாத்தி”யின் மிகப்பெரிய பலம், அதன் கதாபாத்திரங்களின் யதார்த்தமான சித்தரிப்பு மற்றும் ஆசிரியரின் மொழி நயம். ஒவ்வொரு கதையும் வாசகரை சிந்திக்க வைக்கிறது. ஆனால் சில கதைகள் முடிவில் திறந்த முடிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. மேலும் அனைத்துக் கதைகளிலும் இழப்பும் பாடுகளுமே இருப்பதால் சோக உணர்வே மேலெழுகிறது. இருப்பினும், இந்தப் புத்தகம் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைப்பதில் வெற்றி பெறுகிறது.
“விதைப்பாத்தி” ஒரு இலக்கிய பயணமாகும், இது வாசகர்களை உணர்வுகளின் ஆழமான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்தப் புத்தகம் இலக்கிய ஆர்வலர்களுக்கும், சமூகப் பிரச்சினைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கத்தக்கது. கு.இலக்கியன் இந்தத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். மேலும் அவரது பயணம் தொடரட்டும் என வாழ்த்துவோம்.


