ஒரு வாசகர் – ஒரு புத்தகம் – ஒரு அனுபவம்
மோகனப்பிரியா
இப்போது நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
எழுத்து பிரசுரம் பதிப்பகத்தின் வழியே வெளியான சிறுகதைத் தொகுப்பு “திமிரி”. ஐ. கிருத்திகா எழுதிய சிறுகதைத் தொகுப்பு.
இந்தப் புத்தகம் உங்களுக்கு என்ன உணர்வை, என்ன எண்ணத்தைத் தருகிறது?
உணர்வெல்லாம் எப்படி சொல்றதுங்க. சில புத்தகங்கள் சில எழுத்தாளர்களின் எழுத்தை நினைவூட்டும். எனக்கு திமிரி அப்படி நினைவூட்டுச்சு. Feel good movie effect. அரூ இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். அது வெவ்வேறு கிரகங்களில் வாழும் உணர்வை கொடுக்குது.
திமிரி புத்தகத்தில் உங்களை அதிகம் கவர்ந்த வரி அல்லது பகுதி எது?
திமிரி கதைகளில் வரும் செடிகொடிகள், புழக்கடை மரங்கள், கிணறு, மழை இப்படி பசுமையான வர்ணனைகள். கதாப்பாத்திரங்களின் மிக மென்மையான எண்ணவோட்டம். நிலவை ஒரு இடத்தில் குழந்தைகள் தலையில் வைக்கும் “பௌ’ எனக்குறிப்பிடும் இடம் எனக்கு மிகப் பிடித்தமான இடமாக இருந்தது.
இந்தப் புத்தகத்தை மற்றவர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறீர்களா? ஏன்?
நிச்சயமாக பரிந்துரைக்கலாம். ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் வாசிக்கத் தகுந்த கதைகள். யாருக்கெல்லாம் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் கதைகள் பிடிக்குமோ, அவர்களுக்கு இந்தத் தொகுப்பின் பெண் மையக் கதைகள் கட்டாயம் பிடிக்கும்.
புத்தகங்கள் படிப்பதால் உங்களுக்குள் ஏற்பட்ட உளவியல் மேம்பாடுகள் யாவை?
புத்தகங்களை விட சிறந்த நண்பர் எவரும் இல்லை. சில நல்ல புத்தகங்கள் வாசிக்கையில் ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் நம் துயரைத் துடைத்துவிடும் ஆற்றல் கொண்டது. மகிழ்வின் துளிச்சுடரை நமக்கு ஈயவல்லது. மேலும், புத்தக வாசிப்பே இவ்வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுப்பதாய் இருக்கும். நம் வாழ்வைப் போல அல்லது அதற்கு முற்றிலும் வேறான பல கதாப்பாத்திரங்களின் வாழ்வை ஒரே நேரத்தில் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அறியும் பொழுது, மனம் அமையுறுவதையும் ஆறுதலடைவதையும் உணர முடிகிறது. கூடவே, இவ்வுலகில் இன்னும் பல்வேறு விதமான வாழ்க்கையை வாழ்பவர்களின் வாழ்வை நாமே வாழ்ந்தது போன்ற அறிவை / பட்டறிவை நாம் வாழாமலே கொடுப்பது புத்தக வாசிப்புத்தான்.


