மனதைத் தொட்ட ஒரு கவிதை – மதிக்குமார் தாயுமானவன்

மனதைத் தொட்ட ஒரு கவிதை

மதிக்குமார்

முதலில்

அண்ணன்கள் கைவிட்டார்கள்.

பிறகு

காதலிகள் கைவிட்டார்கள்.

முடிவில்

தம்பி தங்கைகள் கைவிட்டார்கள்.

இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

இன்னும் தொடர்ந்தது

கைவிடல் படலம்.

இறுதியாக அவனை

அவனே கைவிட்டான்.

அதற்குப் பிறகுதான்

நிகழ்ந்தது அற்புதம்.

  • கவிஞர் பிரான்சிஸ் கிருபா

ஏன்? எல்லா மனிதர்களும் தன்னை உணரும் தருணம் வரும். அந்தத் தருணத்தை கவிதையாக மலர்த்தியிருக்கிறார் கவிஞர்.

இந்தக் கவிதையைப் பிறருடன் பகிர்ந்ததுண்டா? நிறைய முறை நண்பர்களுடன். அதற்கு மேலாக எனக்கு நானே பகிர்ந்து கொள்வதுண்டு.

கவிதையின் எந்த வரி  உங்களுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது?  எதனால்? அவனை அவனே கைவிடல். இந்த வரிதான் கவிதையின் உச்சம். தன்னை அறியாது கைவிடல் சாத்தியமில்லை. தன்னை  அறிந்த பின் கைவிடல் உதாசினத்தோடு உடலையும் உணர்வையும் உதறுவது. இந்த நிலை துறவிகளுக்குக்கூட கிடைக்காத அற்புத வாய்ப்பு. கவிஞனுக்கு மட்டுமே சாத்தியமான கைகூடல்.

கவிதை வரிகளில் கையாளப்படுகின்ற மொழிநடை படிப்போர்க்கு எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

மொழிநடை என்பது கவிதைக்கான வாசல் மட்டுமே. மொழிகளைக் கடந்த ஒன்றுதான் கவிதைக்குள் இருக்கும் கவிதை. கதவுகள் இல்லாத வாசலை நுழைந்து பார்க்க  ஆர்வம் இருக்காது. இறுகத் தாழிடப்பட்ட கதவைத் திறக்கும் பொறுமையை காலம் அனுமதிக்காது. பாதி மூடியும் பாதி திறந்தும் உள்ள கதவுகளின் வழி வரும் வெயிலோ காற்றோ கவிதைக்கான இருப்பை அதுவே முடிவு செய்யும்.