சிங்கப்பூரின் திரை முகங்கள் 01 – நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன்

(கட்டுரை) சிங்கப்பூரின் திரை முகங்கள் 01

சந்தோஷ் நம்பிராஜன்

நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன்

நான் சிங்கப்பூர் வந்தபோது சிங்கப்பூர் சினிமா பற்றிய தேடலில் ‘எல்லோ பேர்ட்’ (Yellow Bird) என்ற திரைப்படம் கேன்ஸ் (Cannes) சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது என்ற செய்தி கண்ணில்பட்டது. ஒரு தமிழ்ப் படம், அதுவும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது என்பது ஒரு மகத்தான சாதனை.  அந்தப் படத்தைக் காண மிகுந்த ஆவலுடன் இருந்தேன். அப்போது அதனுடைய முதல் போஸ்டர் கண்ணில் பட்டது. அதில் நமது தமிழ் நிலத்தின் நிறமான கருப்பு வண்ணத்தில் இருந்த கதாநாயகனின் கண்களில் ஒரு தீர்க்கமான ஒளி வீசியது. அவர்தான் நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன்.

பிரான்ஸ் நாடு கலைகளின் தலைநகரம். அனைத்து விதமான கலைகளுக்கும் அங்கே தினந்தோறும் விழாக்கள் எடுக்கப்படுகின்றன. கலையையும் கலைஞர்களையும் உலக அளவில் போற்றக்கூடிய ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு தமிழ்ப் படம் திரையிடப்படுவது என்பது தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு மரியாதை, ஒரு மகுடம்.

‘எல்லோ பேர்ட்’ நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வந்தபோது, நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் நடிப்பைக் கண்டு வியந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். கதாபாத்திரத்தின் உணர்வுகளைக் கண்களின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு நடிகருக்கு  முக்கியமானதொரு கலை.  சிவாஜி கணேசன், கமல் போன்றவர்கள் இதில் மிகப்பெரிய ஆளுமைகள்.

வசனங்களைப் பேசுபவர்கள் நடிகர் அல்ல. வசனங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய உணர்வுகளையும், மௌனத்தையும், அந்தச் சூழ்நிலையையும் கண்களில் கொண்டு வருபவர்கள்தான் மிக அற்புதமான நடிகர்கள். அந்த வரிசையில் நிச்சயம் நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன் அவர்களைச் சொல்லலாம்.

2008ஆம் ஆண்டு, மலையாள சினிமாவில் மோகன்லால் அவர்கள் நடிப்பில் உருவான ‘madambi’ என்ற திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பாலக்காடு அருகில் உள்ள ஒத்தப்பாலம் என்ற ஊரில் நான் பணிபுரிந்தேன். ஒரே நாளில் ஒரு நகைச்சுவைக் காட்சி, ஒரு காதல் காட்சி, ஒரு துரோகக் காட்சி, ஒரு அழுகைக் காட்சி என்று நான்கு காட்சிகளைப் படமாக்கினோம். கூடுவிட்டுக் கூடு பாய்வதுபோல, கண் சிமிட்டும் நொடிகளில் உணர்வுகளை மாற்றிய மாயக்காரர் மோகன்லால் அவர்களின் நடிப்பை நேரடியாகக் கண்களில் பார்த்தபோதுதான் எதற்காக இவரை இந்தியா முழுவதும் அல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அந்தப் படத்தில் நான் ஒரு 15 நாட்கள்தான் வேலை செய்தேன். அந்த 15 நாட்களும் கே.பி.ஏ.சி. லலிதா, சுராஜ் வெஞ்சாரமூடு, மோகன்லால் போன்ற மாமேதைகளின் நடிப்பை மிக அருகில் இருந்து பார்த்தேன். இன்று உலகம் முழுவதும் மலையாள சினிமாவுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறதென்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களும், அந்த எழுத்துக்களை உள்வாங்கிக் கொண்டு மிக அழகாக வெளிப்படுத்திய உலகத் தரமான நடிகர்களும்தான்.

2018ஆம் ஆண்டு, எங்கள் இயக்குநர் செழியன் அண்ணன் அவர்கள் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது ‘Yellow Bird’ இயக்குநர் ராஜகோபால் அவர்கள், செழியன் அண்ணன் அவர்களைச் சந்திக்க விரும்பினார். மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் ‘To Let’ படம் பற்றிப் பேசியது அப்போது இணையத்தில் பெரிதும் பேசப்பட்டது.

இயக்குநர் ராஜகோபால், “என் படத்தில் நடிக்கிறாயா?” என்று கேட்டார். மகிழ்வாக இருந்தது. ஆனால், “நான் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். என்னுடைய ஆஸ்தான நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன் நான் என்ன சொன்னாலும் செய்வார்” என்று பாராட்டிப் பேசினார்.

ஒரு சினிமா நடிகனுக்குக் கதாபாத்திரமும், இயக்குநரும் அமைய வேண்டும். நல்ல எழுத்துதான் அதற்கு அஸ்திவாரம். சிவகுமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு ‘Yellow Bird’ அமைந்தது. மீண்டும் மீண்டும் அமைய வேண்டும்.

ஒரு நடிகன் பல கதாபாத்திரங்களில் வாழ ஆசைப்படுவான். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறினால் நினைவுகளாகும். நல்ல வாழ்வு என்பது நல்ல நினைவுகளின் தொகுப்புகள்.

அதேபோல, 2021ஆம் ஆண்டு பாண்டித்துரை அவர்களுடன் இணைந்து எழுத்தாளர் ரெ.விஜயலட்சுமி அவர்களுடன் சேர்ந்து ஒரு குறும்படம் உருவாக்கினோம். அது மிகச் சிக்கலான ஒரு கதை. முழுக்க முழுக்க ஒரே ஒரு நடிகரை மட்டும் வைத்துத்தான் அதைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்றபோது ‘இது சாத்தியமாவது மிகவும் கடினம்; இதனைச் சாத்தியமாக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பிரமாதமான நடிகர் வேண்டும்’ என்று பாண்டித்துரையிடம் நான் சொன்னேன். அப்போதுதான் அவர் சிவகுமார் பாலகிருஷ்ணன் அவர்களைக் கேட்கலாம் என்றார். நேரடிப் பழக்கம் இல்லை. படப்பிடிப்பில்தான் சந்தித்து கொண்டோம். அந்தப் படப்பிடிப்பில் நாங்கள் ஐந்து பேர்தான் இருந்தோம்: என்னுடன் ஒளிப்பதிவாளர் நட்சத்திரம் பிரேம்குமார், பாண்டித்துரை, இயக்குநர் ரே. விஜலட்சுமி அவர்கள் மற்றும் நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன். அதில் நாங்கள் செயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்தாமல், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மட்டுமே பயன்படுத்தி, கருப்பு வெள்ளையில் அந்தக் குறும்படத்தை உருவாக்கினோம். அந்தக் குறும்படத்தின் பெயர் ‘அது’ .

இரவு 7 மணிக்கு ஆரம்பித்த படப்பிடிப்பு சரியாக 11 மணிக்கு நிறைவடைந்தது. பத்து நிமிடம் இருக்கக்கூடிய அந்தப் குறும்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய நாங்கள் எடுத்துக்கொண்டது நான்கு மணி நேரம் மட்டுமே. இவ்வளவு விரைவாக முடிய முக்கியமான காரணம், நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள்தான். எல்லாமே ‘சிங்கிள் டேக்’ (Single Take) என்பார்கள். ஒரே ஷாட்டில் ஓகே. திருத்தம் சொல்வதற்குக் கூட அங்கே ஒன்றுமே இல்லை. ஏனென்றால், அவ்வளவு சிறப்பாக மிக அற்புதமாக நடித்தார்.

நல்ல நடிகர்களுடன் பணியாற்ற மிகச் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், மற்ற அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களும் விரும்புவார்கள். அதற்கு மிக முக்கியமான காரணம், எங்களுடைய உழைப்பானது மிகச் சிறப்பாக, நடிகர்கள் நடித்தால்தான் வெற்றிபெறும். நடிகர்கள் சிறப்பாக நடித்தால்தான் இசையமைப்பாளர் இசையை அந்த உணர்வை மேலும் தூக்கிக் கொடுக்கும். அந்தப் படம் வெற்றி பெறுவதற்குக் மிக முக்கியமான காரணம் இயக்குநர் மட்டுமல்ல; இயக்குநரின் கருவியான நடிகரும்தான். அப்பேற்பட்ட நடிகர் சிவகுமார் பாலகிருஷ்ணன் உடன் இணைந்து மீண்டும் வேலை செய்வதற்கு மிகுந்த ஆவலுடன் உள்ளேன். அவர் போன்ற ஒரு உலகத் தரமான தமிழ நடிகர் சிங்கப்பூரில் இருப்பதால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதுவே இந்தியாவில் இருந்தால், நிச்சயமாக ஒரு தேசிய விருதை அவர் வசமாக்கி இருப்பார். இந்தியா முழுக்கத் தெரிந்த ஒரு நடிகராக வலம் வந்திருப்பார்.