(கட்டுரை) மொழி வளர்ப்பேயன்றி வேறில்லை
கவிஞர் மகுடேசுவரன்
சிங்கப்பூரில் எனது முதல் அரங்கேற்றம் உமறுப் புலவர் அரங்கினில் தமிழ்மொழி விழாவினில் நிகழ்ந்தது. ஈராயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் தமிழ்மொழித் திங்கள் விழாவின் நிறைவுநாள் நிகழ்வு ‘கவிமாலை’ அமைப்பினரின் நிகழ்த்துதலுக்கானது. அவர்களின் விருந்தினராகச் சிறப்புரையாற்ற வந்திருந்தேன். அவ்வாண்டின் விழாவின் கருப்பொருள் ‘அழகு’ என்பதாக இருந்தது. அதற்கேற்ப ‘இலக்கணத்தின் பேரழகு’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் அருகிலாக நிகழ்ந்த அவ்வுரை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுத்தது. அரங்கத்தில் பேரமைதி தவழ அத்துணைக் கூர்மையாகக் கேட்டு மகிழ்ந்தனர். அந்நாளில்தான் தமிழ் இலக்கணம் குறித்தும் பொதுமேடையில் பொதுப்பொருளாக்கிப் பேசமுடியும் என்கின்ற நம்பிக்கையைப் பெற்றேன். இலக்கணப் பொருளை எடுத்துக்கொண்டு தமிழ்ப் பேச்சாளர்கள் எங்கும் பேசத் துணிவதில்லையே. அப்படியே துணிந்தாலும் அவர்கள் தெள்ளிய இலக்கண ஆராய்ச்சியறிவு நிரம்பப் பெற்றிருக்கவேண்டுமே. இம்முயற்சியில் ஈடுபடவேண்டிய தரப்பினரே எண்ணற்ற விடுபாடுகளால் ஒப்பேற்றல்களை மட்டுமே செய்யவேண்டிய நிலையிலுள்ளனர். அதனால் அப்பொருள் தொடப்படாமலேயே காய்ந்து கருகிக்கொண்டிருக்கிறது. இலக்கணம் என்பது வேறொன்றுமில்லை, நம் எவர்க்கும் தெரிந்த மொழியை அதன் உட்பொதிவுகளை எடுத்துக்காட்டி விளக்குவது. மருத்துவரைப் பார்க்கச் சென்றால் அவர் உடற்படங்களைக் காட்டி விளக்குவாரே, அதனை ஒத்தது. இத்தகைய உரைமுயற்சியில் இவ்வளவு பேரரங்கினைக் கைக்கொண்டு தமிழ்நாட்டில் நிகழ்த்தத் துணிந்திருப்பேனா, ஐயம்தான் !
தமிழ்நாட்டில் கலைக் கல்லூரிகள் சிலவற்றில் மொழியியல் சார்ந்தும் இலக்கணம் சார்ந்தும் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறேன். அவற்றில் தமிழ்த் துறைசார்ந்த மாணாக்கர்களும் பேராசிரியர்களுமே அமர்ந்திருப்பர். அவர்களிடையே நான் பேசுகின்ற பொருள் அவர்கட்கேயுரிய பாடப்பொருள். ஆனால், பெரும்பொதுத்திரளிடை எவ்வாறு பேசுவது என்பதில் எனக்குத் தெளிவு ஏற்பட்டிருக்கவில்லை. சிங்கப்பூர்க் கவிமாலை நிகழ்விற்குப் பின்னரே எனக்கு நம்பிக்கை வேர்கொண்டது. மொழிசார்ந்தும் தமிழ்நுட்பங்களைப் பற்றியும் எளிமையாகவும் களிநயத்தோடும் விளக்கினால் மக்கள் கூர்ந்து கேட்கிறார்கள். அவர்களுடைய அறிவுக்கு விருந்தாகும் செய்திகள் தொடர்ச்சியாய் வந்து விழ விழ தேன்பூமொய்த்த வண்டாகின்றனர். மக்கள் தமிழ்மொழியியல் செய்திகளை விரும்பிக் கேட்கிறார்கள், அதனைத் தருவதற்குரிய தகைமையினர்தான் முன்வரவில்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏன் அவற்றைப் பேசும் தலைமுறையினர் உருவாகவில்லை? ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்றாலே என்னவென்று தெரியாதவர்கள் இலக்கியவாதிகளாகப் புகழ்பெற்றுத் திகழ்கின்றனரே, யார் அதனைத் தெரிந்துகொண்டு ஒரு செய்தியைப் பேசத் துணிவார்?
சிங்கப்பூர்த் தமிழ் மக்களுக்கு மொழிதான் தலையாயது. அவர்களுடைய வாழ்க்கைக்குத் தமிழ் மொழியே வேர்ச்சொத்து. அதனைப் பழுதுறாமலும் பண்படுத்தியும் காக்கவேண்டிய உளமார்ந்த விருப்பம் அவர்களிடம் இருக்கின்றது. தமிழ் என்னும் பேராலமரத்தின் ஆயிரம் கிளைகளில் ஒரு கிளைதான் அதன் இலக்கியம் என்பது. இலக்கியக் கிளையில் சிறுகிளையென்று கொள்ளத்தக்க சிறு பிரிவுதான் தற்கால இலக்கியம் ஆகும். தற்கால இலக்கியச் சிறுகிளையில் இன்னும் சிறிதெனக் கொள்ளத்தக்க சிறுசுள்ளிதான் நவீன இலக்கியப் பகுதி. அந்தச் சிறுசுள்ளியே மொழியுருவம் என்றும் அதனைத் தவிர்த்து வேறொன்றையும் அறியோம் என்றும் ஓயாமல் பேசுகின்றவர்களை நாம் பார்த்து இரங்குகிறோம்.
எதனை முன்னிறுத்தித் தங்களை இயக்கவேண்டும் என்பதில் சிங்கப்பூர்த் தமிழர்கள் தெளிவாக இருக்கின்றனர். தமிழ்நாட்டைப் போன்று சிங்கையில் மொழிசார்ந்த உரையாடல்கட்கும், வலியுறுத்தல்கட்கும் அரசியல் நிறப்பூச்சு பூசுவது நடவாது. உண்மையான மொழிச்செயல் என்றால் சிங்கை மக்களிடையே முதல் இசைவு கிடைக்கும். மொழிக்கு எத்தனையோ முகங்கள் உள்ளன. இந்த முகம்தான் மொழிமுகம் என்று இலக்கியத்தையே காட்டிக்கொண்டிருக்கின்றனர் நம்மவர்கள். மொழிக்குரிய நூறு முகங்களில் ஒன்று இலக்கியம். மொழியின் பேரழகு எங்கெங்கோ பொதிந்து கிடக்கின்றது. அவற்றைக் காண்பதில் பேரார்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் சிங்கப்பூர்த் தமிழர்கள்.
எங்கள் மொழி எங்களோடு தளர்வுறாமல் எங்களுடைய அடுத்த தலைமுறையினர்க்கும் சென்று சேரவேண்டும்’ என்பதுதான் முதன்மை நோக்கம். அதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றில் அக்கறைகொண்டிருக்கின்றார்கள் சிங்கப்பூர் மக்கள். சிங்கையில் தமிழுக்கான இடம் உள்ளபடியே நாலாம் இடம். மொழிச்சிறுபான்மையினர் என்று தமிழ்மக்கள் அறியப்படக்கூடும். சிறுபான்மையின் பொருட்டு இங்கே தமிழ்மொழிக்கு ஊக்கங்கள்தாம் உள்ளனவே தவிர, எத்தகைய இடையூறுகளும் இல்லை. அதற்காக நாம் இந்நாட்டுத் தலைவர்களை வணங்குவோம். சிங்கப்பூர் என்னும் தேயம் உருவாவதற்கு எல்லாரோடும் கைக்கோத்து உழைத்த தமிழ்மக்கள் பெற்ற பேறு அது. அப்பேற்றின் பெருமையுணர்ந்து சிறிதும் தன்னலம் பாராது பயன்படுத்திக்கொண்டு மொழிக்கெனச் செயல்படுவதுதான் நாம் செய்யவேண்டியது. மொழிநலன் தாண்டிய எவ்வொரு செயலுக்கும் அங்கே இடமில்லை.
தமிழ் மொழிக்கு வேண்டிய நன்னலங்களைப் பேணுதற்கான மக்கள் இருக்கின்றனர். அந்நோக்கில் செயல்படுகின்ற ஒரு நாடு இருக்கின்றது. தமிழ் மக்களின் தொகையளவு ஒப்பீட்டளவில் சிறிதுதான் என்றாலும் அவர்கள் அனைவரும் மிகவளர்ந்த நாட்டின் குடிகள். அவர்களுடைய நோக்கும் செயலும் ஒன்றுபட்டிருக்கின்றன. இது மிகச்சிறந்த மொழிக் கொடுப்பனை. காலம் உயர்ந்த வாய்ப்புகளை நம்முன்னே வளர்த்துத் தந்திருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? சிங்கப்பூர் மக்களையும் நாட்டையும் கண்டும் உணர்ந்தும் நான் இத்தெளிவுக்குத்தான் வந்திருந்தேன்.


