சிங்கப்பூர் ஒரு வாசிப்பு நகரம் – ஆயிஷா இரா நடராசன், நேர்காணல்

0
515

(நேர்காணல்) சிங்கப்பூர் ஒரு வாசிப்பு நகரம்

ஆயிஷா இரா நடராசன் – நீதிப்பாண்டி

175 வது நூல் எனும் இந்த முக்கியமான தருணத்தை சிங்கப்பூரில் கொண்டாடுவதற்கான காரணம் என்ன?

இரண்டு சிறப்பான காரணங்களைச் சொல்லலாம். 175ஆவது நூல் அறிவியல் புனைகதை, அதுவும் ரோபோட்டுகள் குறித்த மூன்று குறுநாவல்களை தொகுத்த நூல். இன்று சர்வதேச அளவில் நாளைய அறிவியல் தொழில்நுட்பத்தை முதலில் அடையப்போகும் நாடாக நான் சிங்கப்பூரை பார்க்கிறேன். ஏற்கனவே அதற்கான அடையாளங்களை நீங்கள் உணர முடியும். அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் தொழில்நுட்பத்தின் அதி தீவிர வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு முதல் சுயமாக கற்று மனிதனுக்கு இணையாக தோழமை கொள்ளும் எந்திரங்கள் குறித்த விஷயத்தில் சிங்கப்பூர் முன்னணி ஆய்வு நாடாக உள்ளது. இந்த நூலை  அங்கே வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். மேலும், பொதுவாகவே குழந்தைகளை புத்தக வாசிப்பை நோக்கி அதிலும் குறிப்பாக தமிழ்ப் புத்தக வாசிப்பை நோக்கி எடுத்துச்செல்வதில் எங்கள் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டுகின்ற ஒரு இடமாக நாம் சிங்கப்பூர் தமிழர்களைப் பார்க்கிறோம். எனக்கு சிங்கப்பூர் வாழ்கின்ற சிறார் பலர் வாசகர்களாக உள்ளனர். தொடர்பிலும் உள்ளனர். நான் எதை  எழுதினாலும் உடனடியாக வாசித்துவிட்டு எதிர்வினை புரிகின்ற பால சிறார் வாசகத் தோழர்கள் அங்கு இருப்பதால், சொல்லாடும் முன்றில் அமைப்பு ஒரு வாய்ப்பை வழங்கியபொழுது அதைப் பயன்படுத்திக் கொண்டேன். இங்கு வந்து சிறார் வாசகர்களை சந்தித்தது என்னுடைய மிக மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.

“வள்ளுவா ரோபோட் யுத்தம்” – இந்த தலைப்பு எப்படி உருவானது இதன் பின்புற சிந்தனை என்ன?

இன்று ரோபோட்டுகள் பலவகையான நுண்ணிய பணிகளை மேற்கொள்ள மனிதனால் உருவாக்கப் பட்டுள்ளன. குறிப்பாக ஜெர்மனி ரிசோ வகை ரோபோட்டுகள், ஜப்பானின் அக்ஹீரா போன்றவை நாம் சற்றும் யோசிக்காத பணிகளை செய்கின்றன. குழந்தைகளுக்கு பாடம் நடத்துகின்ற ரோபோட்கள் வந்துவிட்டன. எனவே தத்துவார்த்த ரோபோட்டுகள் என்ற சிந்தனை என்னுடைய கதையை அமைத்துக்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமைந்தது. இன்று பெரிய அளவில் பேசப்படுகின்ற மனித இனத்தினுடைய தத்துவங்கள் கம்பூசியஸ் முதல் தெரிதா, பூக்கோ, ஸ்பினோஸா வரை யாவற்றின் சாரமும் எங்கள் திருக்குறளில் உள்ளது  என்பதற்கான இளம் வாசகர் முதல் முதியோர் வரை யாவருக்குமான ஒரு பிரம்மாண்ட பரிசோதனை உரையாடல்தான் அந்த நூல்.

இந்த நூலில் ரோபோட் யுத்தம் என்ற கருத்தை வள்ளுவர் போதனைகளுடன் இணைத்தது ஏன்? இதை வாசகர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்ல விரும்புகிறீர்கள்?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் சிந்தனையை தாங்கி நிற்கும் திருக்குறள் உலகின் பொது மறை என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. சாதி மத பேதமற்ற சங்க காலத்தின் ஒட்டுமொத்த அடையாளக் குரலாக நான் திருக்குறளை முன்மொழிவேன். தமிழர்களின் வீடுகளில் அவர்கள் எங்கே வசித்தாலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கேட்டுப்பாருங்கள்; ஒவ்வொரு தமிழனுக்கும் – அவர் எந்த பணி செய்பவராக வேண்டுமானாலும் இருக்கட்டும் – குறைந்த பட்சம் 10 குறள்களாவது  கண்டிப்பாக தெரிந்திருக்கும். அப்படி ஊனோடும் உயிரோடும் கலந்துவிட்ட ஒன்றாக இருக்கின்ற இந்த திருக்குறள் கடந்து வந்த பாதை மிக பிரம்மாண்ட போராட்டம். இதை அழிப்பதற்கான சக்திகள் ஒன்று இரண்டல்ல. கலாச்சார தத்துவார்த்த தமிழ் அடையாளமாக திருக்குறளை வருகின்ற சந்ததிக்கு முன் வைப்பதில் என்னுடைய நுண்ணிய அரசியல் அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்து இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சந்ததிக்கு திருக்குறளை எடுத்துச் செல்வதற்கு அறிவியலை, அறிவியல் தொழில்நுட்பத்தை நான் ஒரு வாகனமாக பயன்படுத்தி இருக்கிறேன். இந்த நாவலை வாசித்தவர்கள் நெக்குருகி நா தழுதழுக்க என்னோடு பேசியிருக்கிறார்கள். ‘புக்ஸ் பார் சில்ரன்’ எனும் குழந்தைகளுக்கான புத்தக வெளியிட்டு நிறுவனத்தின் மிக முக்கியமான வெளியீடாக இந்த புத்தகம் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நூல் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மனிதர்கள் எதிர்கொள்ளும் நெறி மதிப்புகள் தொடர்பான சிக்கல்களை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

இயந்திரமயமாதலின் உச்சகட்டம் மனிதன் இயந்திரங்களுக்கு அடிமையாவதுதான். இந்த நாவலில் ரோபோட்டுகள் உலகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள முயற்சி செய்யும்போது வள்ளுவா  ரோபோட் தன்னுடைய தத்துவார்த்த விவாதங்களின் மூலம் அதற்கு எப்படி எதிர்கொண்டு தடுக்கிறது என்கிற சிந்தனையின் போக்கில் மனிதனின் அடிப்படை வாதங்களை இந்த செயற்கை நுண்ணறிவு யுகம் மனிதனை மேலும் அடிமைப்படுத்திவிடக் கூடாது என்கிற பதட்டத்தோடு அந்த வாதங்களின் ஊடாக என் கருத்துக்களை நான் பதித்திருக்கிறேன். இந்த நூலில் நான் பேசி இருக்கின்ற அடிப்படை குழந்தைகள் உலகையும் சேர்த்துத்தான். விளையாட்டு அடிப்படையிலான குழந்தைகளின் வாழ்க்கையை நாம் கைபேசி அடிப்படையிலான வாழ்க்கையாக இன்று மாற்றி விட்டோம். இன்றைய செயற்கை நுண்ணறிவு குழந்தைகளின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிப்போய்விட்டது. இதை நாம் எப்படி பார்ப்பது என்பதை சிக்கல்கள் அவிழ்க்கப்படும்போது வலி தெரியாமல் பேசியிருக்கிறேன். நெறி மதிப்புகள் என்பவை மனித இனத்தின் அடையாள சக்தி எனபதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இவற்றை நுண்ணிய அரசியலோடு கலந்து. அறம்சார்ந்த வள்ளுவத்தின் வழியே நான் பேசியிருக்கிறேன்.

உங்கள் வாசகர்கள் இந்த நூலின் இருந்து எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மூன்று விஷயங்கள். ஒன்று, தமிழனின் சங்க கால மரபு சார்ந்த அடையாளங்களை இந்த உலகிற்கு தெரியப்படுத்துதல் மற்றும் அதனை தக்க வைத்தல். இரண்டாவது, அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு இவற்றை எப்படிப் பார்க்கவேண்டும் என்கிற சமூக, தனிமனித அக்கறையை குழந்தைகளுக்கு விதைத்தல். மூன்றாவது, எப்போதும் கருவிகளுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து குழந்தைகளை மீட்டல்.

நீங்கள் சிறார் இலக்கியத்துக்காக பல நூல்களை எழுதி இருக்கிறீர்கள். குழந்தைகளுக்கான அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த கதைகளை எழுத உங்களைத் தூண்டியது எது?

ஜெனரேஷன் ஆல்ஃபா என்றழைக்கப்படுகின்ற இன்றைய IPad சந்ததிக்காக நான் எழுதும்போது,  அவர்களிடம் அறிவியல் பேசுவது நமது கடமைகளில் ஒன்றாக மாறுகிறது. வருங்கால சந்ததி என்று நாம் அழைக்கின்ற 11 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்காக எழுதுகிறேன். இந்த சிறார் உலகம் நம்முடைய உடனடி எதிர்காலம். இவர்களை அறிவியல் மனப்பான்மை கொண்ட நவீன மாமனிதர்களாக மாற்றுகின்ற உத்திகளை என் கதைக்குள்ளே நான் விதைத்து வைக்கிறேன். எதையும் அறிவியல் சிந்தனையோடு அணுகுகின்ற மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சந்ததியாக இதனை உருவாக்க என் எழுத்துக்களை பயன்படுத்துவதுதான் என்னுடைய அணுகுமுறை. அதுமட்டுமல்ல ஒரு அறிவியல் புனைகதை எழுத்தாளராக நான் இப்படித்தான் செயல்பட முடியும். தமிழில் குழந்தைகளுக்கான அறிவியல் கதைகள் மிகக் குறைவு. ஆனால் அறிவியல் தமிழின் அடிப்படைகள் குழந்தைகளை சென்று அடையவேண்டும் என்றால் நாம் இப்படித்தான் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

உங்கள் எழுத்துக்களை வாசித்தவர்கள் சிறார் எழுத்தாளர்களாக உருவாகி இருக்கிறார்களா?

நான் மூன்று அல்லது நான்கு சந்ததிகளுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் எழுதுவதற்கு நுழைந்த அந்த 1980களின் இறுதியில் எனக்கு வாசகர்களாக இருந்த குழந்தைகள் இன்றைக்கு பெரியவர்கள் ஆகி பெரிய  பணிகளில் உள்ளனர். உங்கள் எழுத்துக்களை அறிவியலை வாசித்துதான் நான் விஞ்ஞானியானேன் என்று இந்தியாவினுடைய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகின்ற பரணி என்கின்ற ஒரு ஆண் விஞ்ஞானியும் செந்தமிழ் என்கிற ஒரு பெண் விஞ்ஞானியும் கடிதங்கள் எழுதியுள்ளனர். அதன் பிறகு அடுத்த சந்ததியிலிருந்து வந்தவர்களுக்கு நான் வேறு மாதிரியான வகையில் எழுத வேண்டியிருந்தது. மூன்று பாரா அறிவியல் என்று நான் அழைப்பேன். அந்த அறிவியல் குழந்தைகளை தமிழில் எழுதவும் அறிவியல் பாடங்களை தங்கள் தாய்மொழியில் புரிந்து கொள்ளவும் உதவுகின்ற ஒரு கால கட்டமாக இருந்தது. அந்த சந்ததி இப்போது கல்லூரி முடித்து தொழில்நுட்ப பணிகளில் உலகெங்கும் கோலோச்சுகிறது. பின்னர் என்னுடைய நூல்களில் QR Code தொழில்நுட்பமும் இணைந்து கொண்டது. உதாரணமாக ‘இங்கிலிஷ் தவளை’ என்கிற என்னுடைய புத்தகம். அதில் ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு QR Code  கொடுக்கப்பட்டிருக்கும். அதனை சொடுக்கினால் அந்த கதையை ஒரு குழந்தை வாசிப்பதை நீங்கள் கைபேசியில் கேட்கலாம். எனவே காலத்திற்கு ஏற்ப என் எழுத்துக்கள் என் வாசகர்களால்  மாற்றப்பட்டன. அச்சில் வெளிவந்த என் எழுத்துக்களுக்கு இணையாக இணையத்தில் இ-பப்ளிஷிங் செய்யப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகம். சமீபத்தில் தாகூர் உருவாக்கிய வங்காளத்தின் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் ஆயிஷாவின் வங்காள மொழியாக்க நூல் ஒரு கைபேசி செயலியாக குழந்தைகளுக்கு அனுப்பப்பட்டதை நான் வியப்போடு கவனித்தேன். இந்த எழுத்துக்களின் ஊடாக என்னை வாசித்து அதன் மூலம் எழுத்தாளரான ஒரு சந்ததி உண்டு அதற்கான முன்னுதாரணங்கள் சிங்கப்பூரிலேயே கூட இருக்கின்றன.

இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் புத்தக வாசிப்பில் ஆர்வம்கொள்ளச் செய்வது எப்படி சாத்தியமென்று நினைக்கிறீர்கள்?

நான் குழந்தைகளைக் குறை சொல்லமாட்டேன். உங்களுக்கு விமான சேவையும் நான்கு சக்கர மகிழுந்துகளும் வந்த பிறகும் மாட்டு வண்டிகளை ஓட்டுங்கள் என்று யாராவது சொன்னால் எப்படி நீங்கள் வியப்போடு சிரிப்பீர்கள். வகுப்பறைகளில் கூட மடிக்கணினிகள் வந்துவிட்டன. நம்முடைய வீட்டுப் பாடங்கள் எல்லாம் காகிதமற்ற முறை கல்வியை நோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் அச்சுப் புத்தகங்களை மட்டுமே ஒரு சந்ததி வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்னைப் பொறுத்தவரையில் மூட நம்பிக்கைகளில் ஒன்று. ஆனால் பெற்றோர்கள் வாசிக்காதபோது குழந்தைகள் வாசிக்கவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு? அதையும் நாம் சிந்திக்க வேண்டும். நாம் அவர்களுக்கான புத்தகங்களை அனைத்து வகையிலும் கொண்டு செல்கிறோம்.

சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட இந்த ரோபோட் யுத்தம் இந்த நூல் அடுத்த வாரம் குரல் ஒலி நூலாகவும் வெளி வர உள்ளது ஏற்கனவே டிஜிட்டல் புத்தகமாக கிடைக்கிறது. கிண்டில் உட்பட அனைத்து வகையான புத்தக செயலிகளை நோக்கி குழந்தைகளைக் கொண்டு செல்லவேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதேசமயத்தில் இப்படிப்பட்ட வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தமிழ் நாட்டில் லட்சக்கணக்கானவர்கள். இவர்களிடம் அச்சு நூல்களை எடுத்துச் செல்ல புத்தக கண்காட்சிகளை பயன்படுத்துகிறோம். தங்கள் நெஞ்சிலே புத்தகங்களை அணைத்துக்கொண்டு காகித வாசனையை மகிழ்ச்சியோடு முகர்ந்தபடி வாசிப்பின் வெற்றியை உணரவேண்டிய அவசியமிருப்பதால் அச்சு நூல்களை ஒருபோதும் கைவிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது உள்ள தமிழகத்தினுடைய அரசு புத்தக கண்காட்சிகளை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது. பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழர்கள் ஒன்றிணைந்து புத்தக வாசிப்பை நிகழ்த்துவதும் புத்தக விமர்சனங்களை கொண்டு செல்வதும் குழந்தைகளுக்கான வாசிப்பை திரும்பத் திரும்ப பல்வேறு முயற்சிகளின் மூலம் முன்னெடுப்பதும் பாராட்டத் தகுந்த அம்சங்களாக நான் பார்க்கிறேன்.

சிங்கப்பூர் குழந்தைகளுக்கு உங்கள் அறிவியல் சார்ந்த நூல்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளனவா?

ஏற்கனவே என்னுடைய நூல்கள் பலவற்றை சிங்கப்பூரின் குழந்தைகள் வாசித்து வருகிறார்கள். என்னுடைய நூல்களை முன்வைத்து ‘நானும் விஞ்ஞானிதான்’ என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டபோது தன்னுடைய வாசிப்பு அனுபவத்தின் அடிப்படைகளைக் கொண்டு அற்புதமான படைப்புகளை உருவாக்கித் தந்த குழந்தைகளை நான் சந்தித்தேன். என்னுடைய அறிவியல் நூல்களை வாசித்துவிட்டு ஐடியா அகிலனாக மாறிப் போனவர்களை, என்னுடைய டார்வின் ஸ்கூல் நூலுக்கு அழகான ஓவியங்கள் தீட்டி கொடுத்தவர்களை பரிசுகள் வழங்கி கௌரவித்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நான் சிலிர்த்துப்போனேன். இந்த அனுபவங்களின் ஊடாக சொல்லுகிறேன், அறிவியல் எழுத்துக்களை சிங்கப்பூர் குழந்தைகள் மிகவும் விரும்பி ஏற்று வாசிக்கிறார்கள்.

சிங்கப்பூர் வாசகர்கள் உங்களை எப்படி வரவேற்கிறார்கள்? உங்கள் நூல்கள் இங்கே படிக்கும் வாசகர்கள் உங்களை தொடர்பு கொள்வதுண்டா?

நான் ஏற்கனவே சொன்னது போல சிங்கப்பூர் ஒரு வாசிக்கும் நகரம். தமிழகத்திலிருந்து நான் எதை எழுதி வெளியிட்டாலும் உடனடியாக வாசித்து விட்டுக் கருத்து கூறுகின்ற தேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட தீவிர வாசகர்களை என்னால் சிங்கப்பூரில் காட்டமுடியும். ‘இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100’ என்கிற ஒரு தொடர் 100 நாட்களுக்கு தொடர்ந்து நான் இணையத்தில் எழுதியபோது, அதனை லட்சக்கணக்கான வாசகர்கள் கல்லூரி மாணவர்களுக்கு உலகெங்கிலும் பகிர்ந்தபோது சிங்கப்பூர் வாசகர்கள் இங்குள்ள இணைய வாசிப்பு அமைப்புகளில் அவற்றை எப்படியெல்லாம் பகிர்ந்தார்கள் என்பதைப் பார்த்து நான் வியந்து போனேன். என்னுடைய ‘ஆயிஷா’ குறுநாவலையும் அது சார்ந்த குறும்படத்தையும் ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் வாசகர்கள் தாங்கள் அனுபவித்தது மட்டுமின்றி தங்களை சார்ந்திருக்கும் தமிழ்ச் சமூகத்திற்கே அறிமுகப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.

சிங்கப்பூரில் புத்தக வாசிப்பினை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதன் பின்னணியில் மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு வரலாறு உள்ளது. ஹெட்விக் அன்வர்(Hedwig Anwar) அம்மையாரிடம் இருந்து அது தொடங்குகின்றது ஜப்பானிய ஆக்கிரமிப்பு ஆண்டுகளின்போது பிறந்து வளர்ந்து மலையா பல்கலை கழகத்தினுடைய முதல் மற்றும் ஒரே பெண் பட்டதாரியாக வெளிவந்து சிங்கப்பூரில் பல்வேறு நூலகங்களில் பணியாற்றி, சிங்கப்பூர் நூலகத் துறையின் தாய் என்கிற அந்தஸ்தை அடைந்தவர் அவர். தேசிய நூலகத்தில் 1965 முதல்1988 வரை நூல்களுடனேயே வாழ்ந்தவர். அவர் உருவாக்கிக் கொடுத்த பாதையில் இன்றைக்கு சிங்கப்பூர் வெற்றிகரமான ஒரு வாசிப்பு நகரமாக உயர்ந்து நிற்கிறது.

2004ஆம் ஆண்டு முதல் Kids Read என்கின்ற நாடு தழுவிய சிறார் வாசிப்பு இயக்கம் சிங்கப்பூரில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தாய்மொழி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரு குழந்தை வாசித்து வளரவேண்டும் என்கிற அந்த நுணுக்கமான சிந்தனையே நம்ம சிலிர்க்க வைக்கிறது. இது தவிர 2010 முதல் குழந்தை இலக்கியத்திற்கான ஆசிய அளவிலான கொண்டாட்டம் ஒன்றை புத்தக மன்றம் நடத்தி வருகிறது. ஆசியாவின் குழந்தைகளுக்கான வாசிப்பு எனபதில் இது மிக முக்கியமான முன்னெடுப்பு..2012இல் நான் அதில் கலந்து கொண்டேன். குழந்தைகளுக்காக தமிழில் எப்படி எழுதவேண்டும் என்பது குறித்து சிங்கப்பூர் சிறார் எழுத்தாளர்களுக்கு நான் அப்போது ஒரு பட்டறை நடத்தியிருக்கிறேன். அதன்மூலம் எழுத்தாளராகி பல நூல்களை எழுதிய எழுத்தாளர் தோழர்களை நான் சிங்கப்பூரில் கொண்டிருக்கிறேன்.

சிங்கப்பூர் குழந்தை நூல்களை பொறுத்தவரையில் இரு மொழி நூல்கள் (bilingual) மிக பிரசித்தி பெற்றவை. சிறார்களை வாசிக்க வைக்கப்பதற்கென்றே நூலகங்களில் ‘மோலி’ என்கிற நூலக வண்டி ஒன்றை அறிமுகப்படுத்தி இருப்பதும் சிங்கப்பூருக்கான பெருமைகளில் ஒன்று. 1970களில் தொடங்கிய ‘கேளீர்’ இரு மொழி புத்தகங்களும் ‘நூல் மான்ஸ்டர்’ போன்ற குழந்தைகளுக்கான தமிழ் நூல்களும் தொடர்ந்து வெளிவருவது உலகம் வியக்கும் விஷயம். தமிழ்ப் பள்ளிகள் என்றே தனியாக உருவாக்கப்பட்டு அங்கே வாசிப்பு முன்னெடுத்து செல்லப்படுவது இன்னொரு முக்கிய செய்தி. சமீபத்தில் உயிரியல் பூங்காவில் ஒவ்வொரு விலங்கிடமும் குழந்தைகளை நிறுத்தி அந்த விலங்கு தொடர்பான கதை சொல்லிகள் தமிழ்க் கதைகளை சொல்லியதை வாசித்து நான் வியந்திருக்கிறேன். ‘சொல்லில் உயர்ந்தது தமிழ் சொல்லே; அதைத் தொழுது படித்திடடி பாப்பா’ என்கிற நம் பாரதியின் அடிப்படைகளை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வதில் சிங்கப்பூர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்று கண்டிப்பாக நான் முன்மொழிவேன்.

சிங்கப்பூர் நூலகங்கள் தமிழ் இலக்கியத்தை பாதுகாக்கும் விதம் குறித்து உங்கள் கருத்து?

சமீபத்தில் வந்தபோது மூன்று சிங்கப்பூர் நூலகங்களுக்கு நான் சென்றேன். இந்த நூலகங்கள் அனைத்திலுமே தமிழ் நூல்கள் ஏராளமாகக் குவிக்கப்பட்டுள்ளன. ஒரு புத்தகம் தமிழகத்தில் வெளியிடப்படுகிறது என்றால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அது சிங்கப்பூர் வருகிறது என்று கேள்விப்பட்டேன். தமிழ் வாசகர்களைக் கொண்ட சிங்கப்பூர் நூலக புத்தகக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதை நான் அறிவேன். அதில் குழந்தைகளையும் சேர்க்கவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அவர்களுக்கான புத்தகங்களை அவர்களே தேர்வு செய்ய அவர்களுக்கு உரிமை தாருங்கள் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். ‘ஒலி’ எஃப்எம் வானொலி தொடர்ந்து தமிழ்ப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதை நிறுத்தாமல் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அறிவியல் மற்றும் கலை உலகங்களை இணைக்கும் உங்கள் எழுத்து பாணியை பற்றி சிறிது பகிர்ந்து கொள்ளுங்கள்.

அறிவியல் புனைகதை உலகம் விசித்திரமானது. நம் காலத்தினுடைய புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பங்கள் எப்படி மனித வாழ்வை மாற்றும் ஆற்றல் கொண்டவை என்பதை முன்கூட்டி சிந்தித்து அது வெளியிடுகிறது. அறிவியல் உண்மைகளைக் கொடுத்து அறிவியல் மனப்பான்மை கொண்டவர்களாக மனிதர்களை உருவாக்க அது உதவுகிறது. கலை வடிவம் பெற்ற அறிவியல் என்பது வாசிப்புக்கு எளியது. நாவல்கள், திரைப்படங்கள், ஓவியங்கள், ஏன் நாடகங்கள் மூலம் கூட சிக்கலான அறிவியலை அழகான கலை வடிவமாக மாற்றமுடியும். அப்படி மாற்றுகின்றபோது குழந்தைகளினுடைய உள்ளத்தில் நாம் படைப்பாளிகளையும் அறிவியல்வாதிகளையையும் இணைக்கும் ஒரு புதிய வகையான எழுச்சியைக் கொண்டு வருகிறோம். அறிவியல் புனை கதைவாதிகள் கலைக்கு எதிரானவர்கள் அல்ல. அதற்குத் துணையானவர்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.

ஒரு கதை மனதை எப்போதும் முன்னோக்கி சிந்திக்கத் தூண்டவேண்டும். விண்வெளிப் பயணம், செயற்கை நுண்ணறிவு, மரபணு தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் என்று இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்தையும் படைப்பாக மாற்றி குழந்தைகள் முன்னால் நாம் முன்வைத்து அவர்கள் தங்கள் சொந்த தீர்வுகளை வழங்குபவர்களாக, சுய சிந்தனை கொண்டவர்களாக அவர்களை மாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அறிவியல் புனை கதை குழந்தைகள் தனித்தனியே படிக்கிற இயற்பியல், வேதியியல், உயிரியல்,  சமூகவியல் ஆகியவற்றை ஒன்றிணைத்து கலை, இசை, படைப்பு என்று குழைத்து கொடுக்கின்றபோது அதிலேயே மனிதநேய முகம் நுழைந்துகொள்கிறது. இதுதான் என் எழுத்தின் ரகசியம்.

இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் முக்கியமான ஆலோசனை என்ன?

வாசியுங்கள். எழுத்தாளர் என்கிற தகுதியைப் பெறவேண்டும் என்றால் முதலில் ஒருவர் வாசிக்க வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

உங்கள் அடுத்த இலக்கு என்ன 200 ஆவது நூலுக்கான திட்டங்கள் ஏற்கனவே உள்ளதா?

என்னுடைய முதல் புத்தகத்தை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் மதிப்புக்குரிய அறிவியல் எழுத்தாளர் சுஜாதா வெளியிட்டார். ஐம்பதாவது புத்தகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட்டார். நூறாவது புத்தகத்தை மயிலாடுதுறையில் உள்ள ஏவீசி கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் மக்கள் விஞ்ஞானி ஐயப்பன் வெளியிட்டார். 150ஆவது புத்தகத்தை கடலூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய பிரம்மாண்ட விழாவில்  இறையன்பு வெளியிட்டார். 175ஆவது புத்தகத்தை சிங்கப்பூர் வாசகர்கள் முன்னிலையில் ‘சொல்லாடும் முன்றில்’ இலக்கிய அமைப்பின் சார்பாக நாடகவித்தகர் எழுத்தாளர் புகழேந்தி வெளியிட விஞ்ஞானி சவிதா ராமசாமி புத்தக அறிமுகம் செய்தார். இதில் எதையுமே நான் திட்டமிடவில்லை. என்னுடைய வாசகர்கள் என் எழுத்துக்களை பதப்படுத்தி செதுக்குகிறார்கள். பேனா அப்புசாமி, சிங்காரவேலர், சுஜாதா உட்பட தமிழ் அறிவியல் எழுத்துக்களில் எனக்கான முன்னோடிகள் எல்லாம் இலக்குகள் வைத்து இயங்கிவர்கள் அல்லர். ஒரே நோக்கம்தான்.. அடுத்த சந்ததிக்கும் சேர்த்து அறிவியலை தமிழை எடுத்துச் செல்லுதல்.

சிங்கப்பூர் வாசகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி சொல்லவேண்டும் எனில் அது என்னவாக இருக்கும்?

குழந்தைகளைக் கொண்டாடுவோம். வாசிப்பு எனும் சாகசப் பயணத்திற்குள் குழந்தைகளைக் கொண்டு செல்லுங்கள். பிறகு அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். உங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் சிறைப் படுத்தாதீர்கள். அவர்களின் எதிர்காலம் நோக்கிய பயணம் குறித்து நமக்கு இப்போது எதுவும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நமக்கு தெரியும். வாசிப்பே வெல்லும்.