
கதவுடன்நடக்கும்ஒருமனிதன்
நகரத்துத் தெருவில்
ஒரு கதவைத் தூக்கியபடி
ஒரு மனிதன் நடந்து செல்கிறான்.
அந்தக் கதவுக்கான வீட்டைத் தேடியபடி.
அவன் ஒரு கனவு கண்டிருந்தான்.
அக்கதவின் வழியெ
அவன் மனைவி மக்களும் நண்பர்களும்
வருவதைப்போல.
ஆனால் அவன் இப்போது காண்பதோ..
முடிவடையாத அந்த வீட்டின் கதவின் வழியே செல்வது
பல மனிதர்களும், வாகனங்களும், மரங்களும்,
பறவைகளும், உலகிலுள்ள மற்ற எதுவும்.
அந்தக் கதவின் கனவோ
பூமியைப் பற்றியதாயில்லை.
அதன் வழியே
மேகங்களும், வானவில்களும், தேவர்களும்,
தேவகன்னிகைகளும், ஞானிகளும்
நுழைந்து செல்ல
சொர்கத்தின் வாயிலில்
தங்கமாய் தகதகத்து நிற்பதைப்போல.
ஆனால் கதவை எதிர்பார்த்து நிற்பவனோ
நரகத்தின் இடைத்தரகன்.
இப்போது அந்தக் கதவு வேண்டுவதெல்லாம்
‘நான் மீண்டும் என் மரமாக வேண்டும்;
இலைகள் நிறைந்து காற்றில் ஆடி நின்றபடி
தன்னைச் சுற்றி இருக்கும் கதியற்றோருக்குச்
சிறிது நிழல் தந்தால் போதும்’ என்பதே.
நகரத்துத் தெருவில்
ஒரு கதவைத் தூக்கியபடி
ஒரு மனிதன் நடந்து செல்கிறான்.
ஒரு நட்சத்திரம் அவனைத் தொடர்ந்து செல்கிறது.
ஒருவள்
பள்ளியின் முன்பு
பேருந்துக்காகக் காத்திருக்கும்
பெண்கள்
குடையிலும் பையிலும்
செருப்பிலும் சீருடையிலும்
எவ்வளவு முயன்றாலும் அடங்காமல்
தாவித் தெறிக்கும் உடம்பு
பேச்சிலும் பார்வையிலும்
நிலையிலும் நடையிலும்
எவ்வளவு முயன்றாலும் மறையாமல்
படபடத்துத் துடிக்கும் இதயம்
நிற்காமல் செல்லும்
பேருந்துகளின் பின்னே
ஓடி ஓடித் திரும்பும்
அச்சம் ததும்பும்
மைதீட்டப்பட்ட விழிகள்
இவர்களில் ஒருவர் ஒரு அதிகாரியாகலாம்
ஒருவர் வீட்டோடு மனைவியாகலாம்
மற்றொருவர் வழிமாறியும் போகலாம்
ஒருவள்
கைக்குழந்தையோடு
பேருந்தில் இருந்தபடி
இந்த வழியில் கடந்துபோகும்போது
தன் கணவனிடம்
‘இதுதான் நான் படித்த பள்ளி’
என்று காட்டலாம்
ஒருவள்
இப்போதும்
அதே இடத்தில்
பேருந்துக்காக
நின்றுகொண்டிருக்கலாம்


