ஆழ்நெடுநீர் (தொடர் 6)

0
728
பரிமித்தா

சீனக்கோவிலிருந்து வெளியேறி பத்து நிமிடத்தில் ஒரு மேம்பாலத்தை நானும் மாமாவும் தாண்டினோம். வலதில் புதிதாகக் கட்டிய மூன்று மாடி கடைத் தெரு. அதன் தொங்கலில் இருந்த ஒரு டயர் கடையின் சாலை சந்துக்குள் மாமா வாகனத்தை நுழைத்தார். தார்ச் சாலை மெல்ல அமிழ்ந்துகொண்டது. அந்த கட்டிடத்தின் பின்னால் ஒரு குப்பம் எங்கள் வரவுக்காக இன்னும் உயிருடன் காத்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

“இது தெப்ராவ் ஆறா மாமா” என்றேன்.

“அப்படிதான் இருக்கணும். இந்தப் பாலம் இப்ப கட்டினதா இருக்கும். முன்னாடி இந்த கடைங்கலாம் இல்ல” என்றார்.

ஆற்றுப் படுகையில் வெண்மணல்களின் திடல் விரிந்து கிடந்தது. அதன் முதல் பாகம் வாகன ஓட்டுநர்களின் பயிற்சி மையமாக இருந்தது. அதனை அடுத்து ஒரு நீண்ட புல்வெளி. மரங்களும் புதர்களும் மண்டி, படுகையின் நடுப்பகுதியை மறைத்திருந்தது. வாகனம் முன்னேறிச் செல்லக் கல்வீடுகள் தென்பட்டன. சீரில்லாமல் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன.

“ஏதாவது ஒரு வீட்டில் நிறுத்துங்கள் மாமா”

மூலையில் இருந்த இரண்டு மாடி வீட்டில் ஆள் நடமாட்டம் தெரிந்தது. அருகே சென்று பார்க்கும் போதுதான் அந்த வீடு முதலில் பலகையில் கட்டப்பட்டு அதனைச் சுற்றி கல்லெழுப்பி இருந்ததைக் கவனித்தேன். மேல் மாடியில் அறைகளில்லாத பலகையிலான சிறு மொட்டை மாடி. மாடியிலிருந்து ஆற்றைப் பார்க்கலாம். சென்று கதவைத் தட்டினேன்.

“ஆச்சி, யாரவது இருக்கிறீர்களா?” என்றேன்.

நான் வருவதை முன்பே கவனித்திருந்த ஒரு பெண், பாத்தேக் கைலியும் ஒரு சட்டையும் அணிந்தவர்,  கதவை மெல்லத் திறந்து புன்னகையுடன் மலாயில் என்ன வேண்டும் என்றாள்.

“இதே இடத்தில் ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு வெள்ளம் வந்ததே நினைவிருக்கா உங்களுக்கு? ஒரு தமிழ் குடும்பம் இங்க வாழ்ந்ததே.. உங்களுக்குத் தெரியுமா?”

அந்தப் பெண்ணுக்கு இருந்தால் ஒரு முப்பது வயதிருந்திருக்கும். அந்தப் பெண்ணிடம் என் கேள்விக்குப் பதில் இல்லை எனத் தெரிந்தும் அவரிடம் இக்கேள்வியைக் கேட்டேன்.

முறுவலித்துக் கொண்டே “எனக்குத் தெரியாது…..ஆனால் நீங்கள் ரோஸ் அக்காவிடம் கேட்கலாம்”

“ரோஸ் அக்காவா? அவர் எங்கு உள்ளார்?”

“நீங்கள் வந்த வழியில் ஒரு பலகை வீட்டைப் பார்க்கவில்லையா?, அதுதான் அவர் வீடு அவர் அங்குதான் இருப்பார்.”

“மிக்க நன்றி”

அந்தப் பெண்மணி முகம் மாறாமல், கதவின் பின்னால் சென்று வீட்டைப் பூட்டினார்.

அவரது தூய புன்னகையும், உடையும் அவரை நகர விழுமியங்களிருந்து அப்பாற்படுத்திக் காட்டியது. அவரைத் தேடிச் சென்ற என்னை அவர் ஓர் அபாயமாக கருதவில்லை. அவரிடம் எனக்கான பதில் இல்லை என அவரே அறிந்தும் ஏதோ ஓர் ஆவலில் எனக்கு முகமன் அளித்தார். ஒரு தருணம் ஒருவருக்கொருவர் புரியாத அன்பைப் பரிமாறிக்கொண்டோம்.

எனக்கு இந்த நிலத்தில் இருந்த மனிதர்களும் கட்டிடங்களும் புதியனவாக இருந்தன. அதிலும் பலகையின் எச்சமிருந்த அந்த வீட்டிலிருந்து கண்களை அகற்ற முடியவில்லை. எந்தத் துவாரத்தில் பலகை தென்படுகிறது எனத் தரையையே பார்த்துக்கொண்டிருக்க எதையோ மிதித்த அதிர்ச்சி.

இன்றைய Airpod போலச் சதுரமாகவும் இரு வர்ணங்களிலான பாம்பின் தோல் போல இருந்தது. பாலில் டிகாக்க்ஷனை ஆங்காங்கே ஊற்றி, பால் திட்டு திட்டாகப் பிரிந்தது போல். ஆனால், அது உடையவில்லை. அந்த சதுரம் மிகுந்த அருவருப்பை ஊட்டியது. கால்களை உதறிவிட்டேன். பல தலைமுறைகளைப் பார்த்த மரம் ஒன்று அந்த வீட்டின் எதிரில் மண்சாலையருகாகவும் ஆற்றுக்கு அருகாகவும் வளர்ந்திருந்தது.

மரத்தின் பக்கத்தில் வாகனத்தை நிறுத்தியிருந்த மாமாவிடம் ரோஸ் அக்காவைப் பற்றிச் சொல்லி அவரை பார்க்கச் செல்லலாம் என்றேன்.

மீண்டும் வந்தவழியே சென்றதில், முதல் வீட்டின் பின்னால் ஒரு பலகை வீடு இருந்தது. முதல் பார்வைக்கு எங்கள் இருவருக்குமே அப்படி ஒரு வீடிருப்பது தெரியவில்லை. இந்த வீடு ஆற்றுடன் மிக ஒட்டி இருந்தது. மூன்று அறைகள் இருக்கலாம். வீட்டின் முன்புறம் மலர்ச் செடிகள். வீட்டின் புழக்கடையில் ரம்புத்தான், சிக்கு, பலா, டுரியான் உட்பட பல்வேறு பழ மரங்கள் இருந்தன. அந்தப் பலகை வீடு உண்மையிலே ஒரு ஃபார்ம் ஹவுஸ் தான். 

“ரோஸ் அக்கா..”

ஒரு முதிய பெண்மணி பழைய கண்ணாடி ஜன்னலிருந்து என்னைப் பார்த்து, கதவருகே மீண்டும் வந்து பார்த்து, தலையில் துணியைச் சரி செய்து கொண்டார்.

“நாங்க மாசாய்ல இருந்து வந்திருக்கோம். உங்களுக்கு சிகாமணினு யாரையாவது தெரியுமா? தொங்கல்ல இருக்குற ஒரு பொண்ணுதான் உங்களல கேக்க சொன்னாங்க”

“ஓ. உள்ள வாங்க, இது யார் உன் வீட்டுக்காரரா?”

“ஐய்யோ இல்லை. இவர் என் அம்மாவோட தம்பி.”

“ஓ, சரி உள்ள வா.”

எனக்கு அவர் வீட்டினுள் செல்வதைவிட, வெளியில் இருந்த கல் மேசையில் அமரப் பிடித்திருந்தது. அங்கேயே அமர்ந்தேன். மாமா எதையோ சாதித்தவர்போல, மிகுந்த களிப்பு கொண்டதைக் கண்டேன். அவர் அங்கிருந்து வாகனத்தை எடுத்து எங்கேயோ சென்றுவிட்டார்.

“இவர் எங்கே போறார்?” என்றார் அந்தப் பெண்மணி.

“தெரியலையே” பதிலளித்தேன்.

“அந்த வீட்டில் இருப்பது என் கடைசி தங்கைதான். என் தந்தை வீட்டில் அவள் இருக்கிறாள். அவளுக்கு சிகாமணியைப் பற்றி அறிய வாய்ப்பில்லை. சிகாமணி, மனைவியின் மரணத்துக்குப் பின் பைத்தியமாகிவிட்டார் என்று சொல்வார்கள். எப்போதுமே போதைதான். எங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வருவார். சிகாமணி வந்துவிட்டார் என என் தாயார் சொன்னால் நானும் என் அக்கா தங்கையரும் கட்டிலின் அடியில் ஒளிந்துக் கொள்வோம்”

“ஏன்” என்று குறுக்கே கேட்டேன்.

அவர் வந்து எங்களைக் கட்டி அணைத்துக் கொண்டு “பாப்பா! பாப்பா” என அழுவார்.

“பாப்பாவா?”

“ஆமாம். சிகாமணியின் மூன்றாவது மகள். பெயர் நினைவில்லை ஆனால், அனைவரும் பாப்பா என்றுதான் அழைப்போம். அவளுடன் மரணித்தது ஐவர் தானே?”

“ஆமா ஐந்து பேர். சிகாமணி மனைவி, அவுங்க இரண்டாவது மகள், பாப்பா, ஒரு பையன், ஒரு பேரக்குழந்தை”

“ஆம், பேரக்குழந்தை அந்த கைக்குழந்தை ஒன்று”

“பாப்பாவும் நானும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம்; விளையாடுவோம். கிட்டத்தட்ட ஒரே வயதுதான். வீட்டில் திருமணம், விருந்தென்றால் பாப்பா எங்கள் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவாள். அழகு. ஹித்தாம் மானிஸ் என்பார்களே, உனக்குத் தெரியுமா? அப்படி ஒருத்தி. எங்களுடன் அனைத்து வேலைகளையும் செய்வாள், மலாயில் நன்றாகப் பேசுவாள், எங்கள் சமையலை விரும்பி சாப்பிடுவாள், சமைப்பாள்”

“ஆச்சி பாப்பாவுக்கு அப்ப என்ன வயசிருக்கும்”

“என் அக்காவுக்கே அப்போது பதினைந்துதான், அப்படியென்றால் பாப்பாவுக்கு ஒரு பன்னிரண்டு இருக்கும்”

கனவில் வந்த சிறுமியை நினைத்துக் கொண்டேன்.

“கேக்குறேனு தப்பா எடுத்துக்காதிங்க, இங்கே ஒரு தமிழ் குடும்பம் இருந்திருக்கு. நீங்க இத்தனை மலாய் குடும்பம் இருந்திருக்கிறீங்க, அப்படி வெள்ளம் இந்த குடும்பத்த மட்டும் அழிச்சிட்டுப் போயிருக்கு. யாருமே அவுங்களுக்கு செய்தி சொல்லலையா?”

“இல்லை. நீ அப்படிக் கேட்க முடியாது. அபோதெல்லாம் இன்றுபோல் அல்ல. செய்தி என்றால் டெலிகிராம் செய்ய வேண்டும். செய்தி வந்தது. நவம்பர் மாத மழைக்கு கோத்தா திங்கியின் அணையில் மழைநீர் தேக்கமாகி வருகிறதென்றும், நிரம்பிவிடுமென்றும், இதற்கு மேல் அணையைத் திறந்து விடவில்லையெனில் அணை உடைந்துவிடுமென்றும் பி.பி.யு-விடமிருந்து தந்தி வந்தது. அப்படித் தந்தி வரவில்லையெனில் சிகாமணியும் அவரது இரண்டு ஆண் பிள்ளைகள் எப்படித் தப்பித்தனர்?”

“நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, இரண்டு பையனைய் காப்பாற்றி என்ன ஆச்சு? அவர் கடைசி காலத்தை அம்மா சொல்லிருக்காங்க எங்கிட்ட”. அம்மா என்னிடம் கூறியயதை நான் அவரிடம் சொன்னேன்.

“சரி, இருக்கட்டும். அவரது மூத்த பெண், அந்த கைக்குழந்தையின் அம்மா அப்பொழுதே கல்யாணமாகி இருந்தாரே? அவர் தந்தையைப் பார்த்துக்கொள்ளவில்லையா?”

“சிகாமணிதான் தன்னுடைய அக்காவை பிரியவேயில்லை. செத்த பிற்பாடும் அவுங்க அக்காவுக்குப் பக்கத்திலே புதைக்க சொல்லிவிட்டார்”

“சரி அப்பறம் உங்களுக்கு அந்த வெள்ளம் வந்த இரவு பத்தி வேற எதுவும் தெரியுமா?”

“என் தந்தையார் சொல்லித்தான் தெரியும். நீ என் தங்கை வீட்டிலிருந்து வந்தாய் அல்லவா? அதுதான் எங்கள் பூர்வீக வீடு. அன்றிரவு என் தந்தை எங்கள் அனைவரையும் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு வீட்டுக்குள் அவர் மாட்டிக்கொண்டார். சில நொடிகளில் தண்ணீர் ஏறிவிட்டது. அவரால் வெளியேற முடியவில்லை. அதனால் மாடியில் இருந்திருக்கிறார். சிகாமணியின் மனைவி பெயர் ரதி என நினைக்கிறேன். ரதி ஆச்சி என்று அழைப்போம். ரதி ஆச்சி, ஒரு கையில் பேரக்குழந்தையுடனும் மறுகையில் குடையுடனும், பிள்ளைகளின் கையில் பெட்டி படுக்கையுடன் வந்ததும், பிள்ளைகளை ஆற்றில் அடித்துவிட்டுப் போனதும், ஓர் இரவு முழுக்க ரதி ஆச்சி மரத்தைக் கட்டி அணைத்து குழந்தையைக் காப்பாற்ற நினைத்ததும், சிகாமணி கையறு நிலையுடன் இருந்ததையும், இந்த மொத்தத்தையும் அப்பா மாடியில் பார்த்ததையும் சொல்லியிருந்தார். தண்ணீர் ஏறிய வேகத்தில் குறைய அப்பா விடிந்ததும் கீழே வந்துவிட்டார். அப்பாவுக்கு ஒன்றும் ஆகவில்லைதான். ஆனால் அதன் பிறகு எவரிடமும் பேசுவதை நிறுத்திக் கொண்டார். அதி அவசியமென்றல் மட்டும் பேசுவார்”

“நீங்க இறப்புக்கு போனிங்களா?”

“இல்லை. போகக்கூடாதென அப்பா கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அவர்களின் உடல் சீனக்கோவில் அருகில் கிடைத்ததாகப் பேசிக்கொண்டார்கள். ஒரே ஒருமுறை மட்டும், பாப்பாவை அந்த மரத்திடம் பார்த்தேன். சிகப்பு வர்ண கவுனில் கண்ணுக்குத் தெரிந்தாள். எனக்கு உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது. நான் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன், ‘நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன், தயவு செய்து இங்கிருந்து போய்விடு பாப்பா.’ அதன் பிறகு நான் பாப்பாவை எங்கும் பார்த்ததில்லை. எனக்கு அவள் முகம் மறந்துவிட்டது.”

“சிகாமணி எங்கே வீடு கட்டிருந்தாரென்று தெரியுமா?”

“நீ வரும்போது ஒரு டயர் கடையைப் பார்த்தாயா?”

“ஆமா”

“அதன் பின்னால் ஒரு செம்பாக்கா மரம் இருக்கும். அங்குதான்”.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு. அந்த இடம் நோக்கி நடந்து சென்றேன். மாமா எனக்கு முன்னால் அங்கிருந்தார்.

“அத்ரி!”

“மாமா?”

“இங்கப்பாரு. அடிதளம்” என்று மண்டியிருந்த புல்வெளியுள் நுழைந்து இரண்டு முறை காலால் மித்த்தார். நங்கு நங்கென்று சத்தம் வந்தது.

“நான் கண்டுபிடிச்சிட்டேன் இதுதான் அவுங்க இருந்த இடம். இந்த புல்லப்பாரு, இன்றைக்கு மாசத்துக்கு அடிக்கிற காத்துல சிங்கப்பூரப் பார்த்து நிக்கிது. ஆத்து நீர் இந்த வழியா வந்துதான் கடல்ல கலந்துருக்கனும்” என்றவர் மெல்ல அந்த அடித்தளத்தில் அமர்ந்து கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

அவருக்கு முன்னால், ஒரு பால் நிற செம்பாக்கா மலர் மரத்திலிருந்து விழுந்தது.

(தொடரும்)

krishnanamaravathy21@gmail.com