(தொடர்) சேஞ்ச் அலி – தொடர் 2

0
826

காலக்கணக்கு

ஷாநவாஸ்

சிங்கப்பூரின் நாணய வரலாறு மிகவும் பிரத்யேகமாகவும் கவர்ச்சிகரமாகவும் இருந்து வந்திருப்பது உலக நாணயமாற்று வணிகத்தின் பார்வையில் சிறப்பான ஒன்றாகும். 1800களில் முறையான சட்டப்பூர்வமான நாணயம் புழக்கத்தில் இருப்பதற்கு முன்பு ஸ்பேனிஷ் டாலர்கள், இந்திய ரூபாய்கள் மற்றும் சீன நாணயங்கள் பரிவர்த்தனையில் பயன்படுத்தப்பட்டன. 1826இல் சிங்கப்பூர், ஜலசந்தி குடியிருப்புகளின் ஒரு பகுதியாக மாறியபின் ஆங்கிலேயர்களால் 1900களில் “ஸ்ட்ரெய்ட்ஸ் டாலர்” அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டாலர்கள் பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்புடன் இணைவு பெற்றதனால் சிங்கப்பூர் மற்றும் மலாக்காவில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது சிங்கப்பூரை ஜப்பான் ஆக்கிரமித்து தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தியபின் ஜப்பானிய “யென்” நாணயத்தை அறிமுகப்படுத்தினர்.

இந்த நாணயம் மிக அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இதனால் அதிக பண வீக்கம் மற்றும் மதிப்பு இழப்பை சந்தித்து. போருக்கு பிறகு ஆங்கிலேயர்கள் மீண்டும் தங்கள் ஆளுகைக்கு வந்த பின்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டாலரை அறிமுகப்படுத்தினர். அதன் பின்னர் 1953இல் மலேயா டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மலேயா, சிங்கப்பூர் இரண்டு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டது. 1965ல் சிங்கப்பூர் முழு சுதந்திரம் பெற்று தனி நாடாக உருவாகிய பின் 1967இல் சிங்கப்பூர் டாலர் (SGD) அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த சிங்கப்பூர் டாலர் பல்வேறு மாற்றங்களை சந்தித்து 1990களில் பாலிமர் நோட்டுகளாக அறிமுகமானது. இவ்வகை நோட்டுகள் சிங்கப்பூரின் அதிக நீடித்த புழக்கத்திற்கும் பாதுகாப்பான வழிகளிலும் மாற்றம் கண்டது. இன்றுவரை சிங்கப்பூரின் நாணயம் வலுவான பொருளாதாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிலையானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூரின் வர்த்தக வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்புமிகு நாணய பரிமாற்றத்திற்கும் துணை நிற்கிறது.

அமெரிக்க நாணயத்தின் மதிப்புமிகு பரிமாற்றம் சிங்கப்பூரின் வர்த்தக வளர்ச்சியோடு தொடர்பு கொண்டிருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்காவிற்கும் சிங்கப்பூருக்கும் நேர வித்தியாசம் 12 மணி நேரமாகும். சிங்கப்பூரில் திங்கள் கிழமை காலை 9 மணி என்றால் நியூயார்க்கில் அது ஞாயிறு இரவு 9 மணி ஆகும். ஹாங்காங் மற்றும் டோக்கியோ நேரங்களும் கிட்டத்தட்ட ஒரே கால நேர அட்டவணையில் வருகின்றன. நியூயார்க்கை பொறுத்தவரை பங்குசந்தைப் பரிவர்த்தனைகளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மூடிவிட்டால் மீண்டும் திங்கள் கிழமை 9 மணிக்குதான் திறப்பார்கள். நியூயார்க் நகரம் ஞாயிறு இரவுகளில் உறங்கிக்கொண்டிருக்கும்போது சிங்கப்பூர் ஒரு தூங்கா நகரமாக மாறி சந்தையை திறந்து சுறுசுறப்பாக வணிகத்தை ஆரம்பித்திருக்கும். இந்த காலநேர வித்தியாசத்தை சிங்கப்பூர் தனது வர்த்தக வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுத்திக்கொண்டது. 

பொதுவாக உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் நாட்டுக்கு நாடு மாறுபடும். சில நாடுகளில் வர்த்தகத்தின்போது உணவு இடைவேளை போன்ற இடைநிறுத்தங்கள் உண்டு. சில நாடுகளில் வர்த்தகம் சீக்கிரம் தொடங்கி சீக்கிரமாகவே முடிந்துவிடும். ஜெர்மனி நாட்டில் ஃபிராங்க்பர்ட் நகரப் பங்குச்சந்தை வர்த்தகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கும். ஆனால் இந்த வர்த்தகப் பணி நேரங்களில் எவ்வித இடைவேளையுமின்றி தொடர்ச்சியான சிறப்பாக செயல்படும் சந்தையாக சிங்கப்பூர் தொடர்ந்து இயங்கி வருகிறது.

‘ஆசிய டாலர்’ நாணயமாற்றுத் தொழிலில் இருந்த பலருக்கும் ‘ஆசிய டாலர்’ பற்றி அவ்வளவாக முழுதும் தெரியாது. சிங்கப்பூரில் சேமிக்கப்படும் அமெரிக்க டாலர்களே ‘ஆசிய டாலர்’ எனப்படும். அமெரிக்க டாலரை சிங்கப்பூரில் ஏன் சேமிக்க வேண்டும்? சிங்கப்பூரில் சேமித்தால் அமெரிக்க அரசின் சட்டதிட்டங்கள் அதனை கட்டுப்படுத்தாது. மேலும் அமெரிக்க வங்கிகளில் தரப்படும் வட்டியை விட சிங்கப்பூர் வங்கிகள் அதிக வட்டியை வழங்கின. அயல்நாடுகளில் சேமிப்பு செய்வதை அமெரிக்க அரசும் தடை செய்யமுடியாது. அடுத்து ஆசியாவின் வர்த்தக வளர்ச்சி அந்நிய முதலீடுகளுக்கு அதிக லாபத்தைத் தந்து கொண்டிருந்தன. அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்து கிடைக்கும் லாபத்தை விட பன்மடங்கு லாப விகிதங்கள் இந்த வகை முதலீட்டிற்கு கிடைத்தன. அமெரிக்கப் பணம் அமெரிக்காவை விட்டு வெளியே போய்விடாதா என்று நாம் நினைக்கலாம். ஆனால் பணம் என்பது ஒரு நதியை போல அதன் மதிப்பு எப்போதும் சுழற்சியில் இருக்க வேண்டும். அது நடந்து கொண்டே இருந்தால்தான் பெருகும். அமெரிக்க பணம் அயல்நாட்டில் முதலீடு செய்யப்படுவதால் அதன் மதிப்பு வெகுவாக உயரும். அமெரிக்க டாலர் உலகின் வலிமை மிகுந்த நாணய ஆயுதமாக மாறும். 1960களில் உலகம் மற்ற நாடுகளை விட, குறிப்பாக இந்தியா நடந்து கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் சிங்கப்பூர் நடைபோட்டது. அந்நிய நாடுகளின் முதலீடுகளை பல நாடுகள் தடுத்துக் கொண்டிருந்த நிலையில் சிங்கப்பூர் அந்நிய முதலீடுகளை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.

நவீன தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதிலும் அதற்கான புத்தாக்க (innovation) முயற்சிகளில் இன்றும் சிங்கப்பூர் முதலிடத்தை வகித்து வருகிறது. இன்றைய காலகட்டத்திலும் மின் இயந்திரங்கள் கணினிகள், எலக்ட்ரானிக் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதியில் சிங்கப்பூர் முதலிடத்தை வகித்து வருகிறது. ‘உலகமயமாக்கம்’ என்ற நவீன கருத்தியலைp பற்றி 2000க்கு பின்னர் பல நாடுகள் சர்ச்சை செய்து கொண்டிருந்தன. ஆனால் சிங்கப்பூரோ 1970, 1980களிலேயே அவைகளை பற்றி சிந்தித்துச் செயல்படத் தொடங்கிவிட்டது. 1965இல் சிங்கப்பூரின் ஒரு வெள்ளிக்கு இந்திய ரூபாயின் தோராய மதிப்பு 3 ரூபாய் வரை இருந்தது.

இந்த காலக்கட்டத்தில் சிங்கப்பூர் டாலர் பிரிட்டிஷ் ஸ்டெர்லிங்குடன் இணைக்கப்பட்டிருந்தது. மலேசிய ரிங்கிட்டும். சிங்கப்பூர் டாலரும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவில்லை. இதற்கு பல வியூகங்களும் காரணங்களும் இருக்கின்றன. இரண்டு நாடுகளுமே தனித்த பொருளாதாரக் கொள்கைகள், இலக்குகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டிருந்ததும், நாணயங்களைப் பொருத்துவது சிங்கப்பூர் மலேசியாவின் பணவியல் கொள்கையை சுதந்திரமாக நிர்வகிக்கும் திறனைக் கட்டுப்படுத்தும் என்பதே காரணமாக இருக்கலாம். இரு நாடுகளும் வெவ்வேறு பொருளாதார கட்டமைப்புகள், வளர்ச்சி விகிதங்கள் மற்றும் பணவீக்க நிலைகளைக் கொண்டிருப்பதும் காரணமாகக் கொள்ளலாம். ஆனால் மலேசிய ரிங்கிட் முன்பு 2005வரை அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு மலேசியா தன்னிச்சையாக சர்வதேச  வர்த்தகத்தில் போட்டித்தன்மையை பேணுவதற்கு இணைப்பைத் துண்டித்தது. ஆனாலும் மலேசியா ரிங்கிட் பலவீனமாகும்போது சிங்கப்பூர் வெள்ளி மதிப்பு அதிகமாகிறது என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில்  அது சிங்கப்பூருக்குப் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:

மலேசியா ரிங்கிட் பலவீனமடைந்தால், மலேசிய உற்பத்திகள் சிங்கப்பூருக்குப் போட்டியாக கையளிக்கப்படும். அது சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடும். ஏனெனில் இரு நாடுகளின் பொருளாதாரங்கள் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைந்துள்ளன. மலேசியா செல்லும் சிங்கப்பூர் பயணிகள் ரிங்கிட் பலவீனமடைந்தால், அவர்கள் அங்கு செலவிடும் பணம் குறைவாக இருக்கும். இது சுற்றுலாத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.

சிங்கப்பூர் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணம் சிங்கப்பூர் துறைமுகம். சிங்கப்பூருக்குள் நுழையும் கப்பல்களின் எண்ணிக்கை சராசரியாக, ஒவ்வொரு நாளும்  சுமார் 1,000 முதல் 1,200 கப்பல்கள். இதில் கொள்கலன் கப்பல்கள், மொத்த கேரியர்கள், டேங்கர்கள் சிங்கப்பூர் உலகின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும். இது கடல்சார் வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக செயல்படுகிறது.