(வாசிப்பனுபவம்) நினவாலணையும் முகம்

0
718
பா. ரேவதி

ஒரு கவிதையை வாசிக்கும் போது அது நம் உள்ளத்தில் கிளர்த்துகிற எண்ணங்களை முழுவதுமாக வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. கவிஞர் போகன் சங்கரின் ஓரு கவிதை உண்டு.

நாதத்தை
எப்படி  விளக்குவது
அதில்
சேர்ந்து கொள்ளலாம்
விலகி கொள்ளலாம்
விளக்கு என்றால்?

கவிஞர் க.மோகனரங்கன் அவர்களின் ”நினைவாலணையும் முகம்” என்ற  கவிதைத் தொகுப்பைப் பற்றிய என் வாசிப்பனுபவத்தை எழுத அமர்ந்த பொழுது எனக்கு இப்படித்தான் தோன்றியது. என்ன எழுதுவது? அவரின்  கவிதைகள் அறிவுத்தளத்தை அடைவதற்கு முன் உணர்வைத் தொட்டுவிடுகின்றன. அத்தனை வாஞ்சை  அவரது எழுத்தில். அதில் தர்க்கம் இல்லை;  சாடல் இல்லை;  வலிய அரசியல் இல்லை;  வரலாறு இல்லை; அலங்கார வார்த்தைகள் இல்லை. அதில்  இருப்பதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் உடையக்கூடிய, சதா மருகிக்கொண்டேயிருக்கும் ஓரு மெல்லிய மனது  மட்டுமே.

முதல் கவிதையில் ஒரு சூக்கும சொல்லெடுத்து  துலக்கி அவர் ஏற்றி வைத்த தீபம், ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கும் வழித்துணையாய் வருகிறது. இப்படியொரு தொகுப்புக்கு அப்படியொரு வாழ்த்துப்பா அத்துணைப் பொருத்தம்.

புராதான நெடியடிக்கும் மொழிநடையில் நேர்த்தியான கவிதைகள். சில கவிதைகளை படித்தபோது எவ்வளவு பூஞ்சை மனம் கவிஞருக்கு என்று தோன்றியது. அழகழகான கவிதைகள். எளிய வார்த்தைகளில், நேரடியாகப் பேசும் மொழி. மனதுக்கு சட்டென நெருக்கமாகிவிடும் வரிகள்.

நிறைய காதல் கவிதைகள். இப்படி சரணாகதி அடையும் ஆணை விட்டு ஏனோ விலகிப் போகிறார்கள் அவரின் கவிதைப் பெண்டிர். அன்பை பொழிந்துவிட்டு அகல வேண்டியதின்  அவசியம் என்ன? அல்லது கசந்து போவதற்கு முன் , விலகி விட வேண்டுமென தவிப்பால்   கவிஞரே  வலிய ஏற்படுத்தும் பிரிவோ   நான் அறியேன்.

உபயோகமற்றுப் போகையில் 
அன்பும் மிகைதான்’
மூடி வைக்க மறந்து விட்ட
உயர்தர வாசனைத்  திரவியம்
ஒன்றினைப் போல,
துளியும் மீதமின்றி
உலர்ந்துபோய்விட வேண்டும்
இருந்த தடயமெதுமில்லாமல்.

மருந்து, பெறாத பேறு, ஒளிச்சேர்க்கை ஆகிய மூன்று கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ‘என்பிலது’ என்னும் கவிதையில், அன்பென்பது ஆயுளுக்கும் நீளும் மூச்சுகுழாய் அல்ல, கதவிடுக்கில் அசந்தர்ப்பமாக   மாட்டிக்கொண்டு அறுந்துவிடும் பல்லி வால்தான் என்று சொல்லுகையில் உறவு பிரிவு என எல்லாவற்றையும் பார்த்து தெளிந்த வாழ்வனுபவம் பேசுகிறதென்று தெரிந்தாலும்,   சே! இவ்வளவுதானா, இதற்குத்தானா இந்தப்பாடு?  என்று  சற்று வருத்தமாகத்தான் இருந்தது.

தேரான் தெளிவு, ஒரு அழகிய அசட்டுத்தனம். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே புரிகிறது இந்த பேதை மனதிற்கு.

நீரில் மூழ்கித்
தேடினால்
எவ்வளவு இரை
எங்கெல்லாம் கிடைக்கும்
இருந்தும்
இம்முட்டாள் மீன்கள்
ஏன்
எப்போதும்
தூண்டில் முள்ளில்
துவளும் புழுவினையே
நாடி வந்து கடிக்கின்றன?
புத்திசுவாதீனமுள்ள
ஒருவனைப் போலவே
நாளும் யோசித்து குழம்பியிருக்கிறேன்
அலைகழிக்கும் கேள்விகளுக்கும்
ஆறுதல் தரும் பதில்களுக்கும்
அப்பாற்பட்டதொரு
அமைதியும்
ஆழமும் கொண்ட
அச்சிறிய கரிய விழிகளை
நேரிட்டு பார்க்கும் மட்டும்.

என் துயரம் என் வினைப்பயன், நான் மட்டுமே தூக்கி சுமக்க வேண்டிய சிலுவை என எழுதுகையில்  யாரையும் புண்படுத்திவிடக்கூடாதென்ற கவனமும், அன்பும் தெரிகிறது . தன்னிரக்கம், சுயப்பச்சாதாபம் தெறிக்கும் கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு.

புன்னகையும் கண்ணீரும்
ஒட்டிப் பிறந்த இரட்டைகள்
ஒன்று மற்றதாக
கணப்பொழுதில்
பிறழ்ந்து விடுகிறது.

மூச்சறும் மட்டும்
முடிவற்றுத்தொடரும்
இவ் ஆட்டம்
முடிவுக்கும்
முந்தைய நொடி
வரைக்கும்
சலிப்பதில்லை

அழைப்பு கவிதை அப்படியொரு திறப்பை  அளித்தது. அழகு என்று நாம் நினைப்பதெல்லாம் கணநேரத்தில் மாறக்கூடும் தானே. இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதை அதுவே.

சிரமப்பட்டு 
சிகரத்தின் உச்சியைச்
சென்றடைந்ததும் 
பகிர்ந்து கொள்ள முடியாத
பரிசெனப் 
பள்ளத்தாக்கின்
முழு அழகும்
காணக் கிடைக்கிறது.
ஒரு கணம்தான்
அந் நிறைவும்
அதன் நெகிழ்வும் ,
அடுத்த நொடியினின்றும்
வாய்ப்பிளந்தவாறு
வாவெனக் கூவி
அழைக்கத் தொடங்குகிறது
அந்த
ஆழம்.

சர்க்கஸ்,  இயங்கு விதி, பவதுக்கம் ஆகியவை தத்துவம் பேசும் கவிதைகள்.  

மனித மனத்தின் விசித்திரங்கள் தான் எத்தனை, எத்தனை? பின் குஷன், நம்  மனதின் ஆழத்தில்  ஓளிந்திருக்கும் வன்முறை   அறியாமல் வெளிப்படும் தருணங்களை படம் பிடித்துக்காட்டுகிறது.  உபரி அன்பு,  வளர்ப்பு மிருகம் இரண்டும் சற்று அதிர்வேற்படுத்திய  மிக சிறந்த கவிதைகள். அன்பென்பது எப்பொழுதும், எல்லோருக்கும் வரமாய் இருப்பதில்லை.

துரத்தியும் போகாமல்
தூரத்தில் இருந்தவரை
ஏக்கத்துடன் நோக்கிடும்
அதன் கண்களை மாத்திரம்
ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிடலாகாது 
அச் சிறிய பிசகுதான்
அதன் பிறகு,
வாழ்வு நெடுகிலும்
போனால் போகிறதென்று
உங்களுக்கு ஈயப் பெறும்
ஒவ்வொரு துளி
அன்பிற்குப் பின்னாலும்
வெகுதொலைவு
மூச்சிரைக்க ஓடி
ஏமாந்து திரும்ப வருகிற
அசட்டு மிருகமாக
அடியோடு உங்களை மாற்றிவிடும்.

தீயுறை துக்கம் ஓரு சிறுகதையாக எழுதப்படவேண்டிய கவிதை என்றே தோன்றியது.  தொகுப்பில் கிட்டத்தட்ட எண்பதைந்து கவிதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தருவதாக அமைந்துள்ளன. நம் வீட்டிலேயே நாம் அவ்வளவாக அறிந்திராத இருட்டு மூலை ஒன்று இருக்கும். போலவே நமது உள்ளத்திலும் நாம் உற்று கவனித்திராத ஒரு மங்கலான இடம் இருக்கவே செய்யும். ஒரு நல்ல படைப்பு என்பது நாமறியாமலே நம்மில் உறைந்திருக்கும் அத்தகைய மறைவான பகுதியின் மீது ஒரு வெளிச்சத்தை படரச்செய்வதாக இருக்கும். இந்த தொகுப்பிலுள்ள கவிதைகள் பலவும் அவ்வாறாக நம் மருள் நீக்கும் மருந்தாக அமைந்திருப்பதோடு  நிறைவான வாசிப்பனுவத்தையும் நல்கின. கவிஞருக்கு வாழ்த்துகள்.