(தொடர்) ஆழ்நெடு நீர் – 7

0
784

மாமா அமர்ந்திருந்த அதே இடத்தில் முற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு பலகை வீடு இருந்திருக்கிறது. அதன் அஸ்திவாரம் மட்டும் எஞ்சியிருக்க, மாமாவின் கண்களிலிருந்து அந்த வீட்டின் அழிவைக் கண்டேன்.  

பௌர்ணமியின் வெளிச்சத்தில் சேற்றில் ஊறிய கால்கள் சுருங்கியிருப்பதைச் சிகாமணியின் இரண்டாவது மகள் கண்டாள். இன்னும் தூத்தலில் நனைந்தால் மறுநாள் காய்ச்சலுடன்தான் மரம் வெட்டச் செல்லவேண்டுமென்றிருந்தது அவளுக்கு. குளித்துவிட்டு விறகடுப்பில் கால்களையும் கைகளையும் நீட்டிக் காட்டலாமென தாய் தந்தையருடன் அந்தப் பலகை வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

காலி பச்சைப் புட்டிகளின் வாய்களை கயிற்றில் கட்டி தோளில் தொங்கவிட்டப்படி சிகாமணி முன்னால் நடந்தார். அவருக்குப் பின்னால் நடந்த அவரது மனைவி கண்ணம்மா கத்தியை சேலையில் முடித்து இடுப்பில் சொருகியிருந்தார். இரண்டாவது மகளும் அம்மாவைப் போலவே கத்தியை இடுப்பில் சொருகி கூடவே நடந்தார். 

இவர்கள் வந்துக்கொண்டிருக்கும்போதே ரொஸும் அவளது அக்கா தங்கைகளுடன் பெட்டி படுக்கைகளுடன் மேட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். ரொஸின் அம்மா கண்ணம்மாவிடம் கூறினார். 

“கண்ணா, தந்தி ஒன்று வந்திருக்கிறது. பத்து மணிக்கு கோத்தா திங்கி பி.யு.பி-விலிருந்து மடை திறக்கப்போகிறார்களாம். இங்கிருந்து கிளம்பச் சொல்லித் தந்தி. சீனக்கோவிலிலிருந்து செய்தி வந்திருந்தது. இப்பவே மணி பத்தரை. எவ்வளவு சீக்கிரம் வெளியாக முடியுமோ கிளம்பிவிடுங்கள். எல்லாரும் போயாச்சு”.

இதைக் கேட்ட சிகாமணி உடனே வீட்டுக்குள் ஓடிச் சென்று உறங்கிக்கொண்டிருந்த தனது இரு மகன்களையும் எழுப்பினார். கண்களையும் திறக்காத சின்னவனைத் தோளில் சாய்த்துக்கொண்டு பெரியவனை வலது கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு கிளம்பினார். கண்ணம்மாவிடம் சீக்கிரம் சீக்கிரமென கர்ஜித்தார். 

கண்ணம்மாள் மூன்றாமவளிடம் உறங்கிக்கொண்டிருந்த பேரக்குழந்தையையும் கையில் எடுத்து, பாப்பாவை எழுப்பினாள். “சீக்கிரம் வா பாப்பா”

“எங்கம்மா?”

“வெள்ளம் வரதுக்குள்ள கிளம்பனும் பாப்பா”

“வா!” 

‘சிசுவை எப்படி இந்தத் தூத்தலில் கூட்டிட்டுப் போறது?’

ஒரு குடையை எடுத்துக் கொண்டு, குழந்தையை தோளிலிலும், பாப்பாவை வலது கையுடன் அழைத்து சென்ற கண்ணம்மா ஒரு முறை வீட்டை பார்த்தாள். 

‘நம்ஹேங்க் தோட்டத்திலிருந்து கிட்டத்தட்ட விரட்டி அடிக்கப்பட்டு, கல்யாணம் செய்து ஒரு குடும்பத்தையும் ஏற்படுத்தி இப்பொழுது வீடில்லாமல் நானும் அவரும் எங்கு சென்று நிற்பது? உறவென்று யார் வீடு உள்ளது? அப்படியே சென்றாலும் எத்தனை நாட்களுக்கு? உறவுகள் என்பவர்கள் அனைவரும் குடும்பங்களாகி விட்டனர். வெள்ளம் வந்து அடித்தால், வீட்டிலிருந்த்து எதுவும் எஞ்சாது. இத்தனை நாள் மரம் வெட்டி சேர்த்த எதுவும் பிள்ளைகளுக்குப் போய்ச் சேராது. நானும் அவரும் எதையும் அனுபவிக்கவில்லை… இந்தப் பிள்ளைகளை ஏன் வதைக்க வேண்டும்?‘

கண்ணம்மா மீண்டும் குழந்தையை மெத்தையில் போட்டுவிட்டு, அவர் சேர்த்துவைத்திருந்த சிறுநகை, துணிமணிகளை ஒரு தகரப் பெட்டியிலும், ஒரு துணி மூட்டையிலும் கட்டினார். தகரப் பெட்டியை மூத்தவளிடமும், துணி மூட்டையை சின்னவளிடமும் கொடுத்து கொண்டுவரச் சொன்னார். கண்ணம்மா ஒரு கையில் குடையையும் மறுகையில் பேரக்குழந்தையை தாங்கி வருவதற்குள்  தெப்ராவ் ஆற்றின் நீர் மட்டும் முழங்காலை எட்டியிருந்தது. 

கண்ணம்மா இரு பெண்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்குள் சில்லென்ற நீர் முழங்காலை தொட்டது. 

“கண்ணம்மா கண்ணம்மா” சிகாமணியின் சத்தம் மட்டுமே கேட்டதே தவிர்த்து இருட்டில் அவரை காணமுடியவில்லை கண்ணம்மாவால். 

முதலாமவள் இன்னும் வீட்டிலிருந்து நீருக்குள் இறங்கவில்லை. இரண்டாமவள் அம்மாவைப் பின் தொடர்ந்தே சென்றுவிட்டாள். 

கண்ணம்மாவால் இரு பெண் பிள்ளைகளைப் தன் பின்னே வருகின்றனவா என ஒரு இடத்தில் நின்று திரும்பி பார்க்க முடியவில்லை. ஒரு இடத்தில் நின்றால், வெள்ள நீர் ஆளை அசைத்தது. அதனோடு எதிர் திசையில் செல்ல அடிகளை எடுத்துவைத்தாள். 

அவள் சென்றடைய வேண்டியது இன்னும் இருபது அடிகள்தான். 

சிகாமணியின் இரண்டாவது மகள் வீட்டிலிருந்து நகராமல் இருந்ததால், நீந்தத் தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மூச்சுத்திணறி இறந்தாள். சிகாமணியின் மூன்றாவது மகளின் பிடி கண்ணம்மாவின் புடவையிலிருந்து தொலைந்தபோதே தனது மகள் தன்னிடம் திரும்பப்  போவதில்லை என கண்ணம்மா அறிந்திருந்தாள். அவளது ஒரே பிடிமானம் அவளது பேரக்குழந்தை.  

கரையருகே முட்டி மோதி வந்த கண்ணம்மா, வெள்ள நீர் கழுத்துவரை உயர்ந்ததால் கரைக்கு ஏற முடியாமல் போராடினார். அங்கிருந்த எவருமால் எதுவும் செய்ய இயலவில்லை. வெறும் பௌர்ணமி வெளிச்சத்தில் என்ன செய்வதென்று எவருக்கும் தெரியவில்லை. 

கண்ணம்மா முன்னதாகவே குடையை இழந்ததால், ஒரு கையால் குழந்தையை தலையின்மேல் தூக்கி, மற்ற கையால் பெரிய மரத்தின் வேர்களைப் பிடித்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் தன்னைத் தாங்கிக்கொண்டார். குழந்தை பனியால் மூச்சுத்திணறி, அதன் கத்தல்கள் கண்ணம்மாவின் மனதை நொறுக்கின. மீட்புக்குழுவுக்கு தகவல் சென்றிருந்தாலும், அவர்கள் வருவதற்கு முன்பே, குழந்தையின் சுவாசம் நின்றுவிட்டதை உணர்ந்த கண்ணம்மா, இருகைகளையும் மேலே தூக்கி பிரார்த்தனை செய்து, நீருக்குள் மூழ்கினார். இந்த துயரக் காட்சிக்கு சந்திரனும் ரோஸின் தந்தையும் அமைதியான சாட்சிகளாக இருந்தனர்.

மறுநாள், இரு மகள்களின் உடல்களும் கண்ணம்மாவின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டு, சீனக்கோவிலின் கீழ் உள்ள சைக்கிள் கடையில் தற்காலிகமாக வைக்கப்பட்டன. துரதிருஷ்டவசமாக, குழந்தையின் உடல் காணாமல் போயிருந்தது. இரு மகள்களும் நிர்வாணமாகவும், அவர்களின் தோல் நீல நிறத்தில், பயங்கரமான தோற்றத்துடன் காணப்பட்டனர். அவர்களின் உடல்கள் நீரால் வீங்கியிருந்ததால், துணி துண்டுகளால் மூடப்பட்டன. அவர்களின் முடிகள் சேற்றும் நதியின் அவசிஷ்டங்களும் சேர்ந்து சிக்கியிருந்தன. பின்னர், குடும்பத்தினர் உடல்களை எடுத்துச் சென்றனர். 

அன்றுமுதல், பௌர்ணமியின் வெளிச்சத்திற்கு சிகாமணி அச்சப்படத் தொடங்கினார். உண்மையை உரைக்கும் இவ்வெளிச்சம் தனக்குத் தேவையில்லை எனச் சொல்லிக்கொண்டார். எத்தனைக் கூடலையும் பிறப்பின் அஸ்திவாரத்தையும் அளித்த கருணையை அதே தீவிரத்துடன் திரும்பி வாங்கிக்கொண்ட பௌர்ணமியின் வெளிச்சத்தை சிகாமணி வெறுக்கத் தொடங்கினார். நிகழ்ந்தனவற்றை சிகாமணி தனக்குள் விழுங்க மறுத்துக் கொண்டார்.

(தொடரும்)

krishnanamaravathy21@gmail.com