(கட்டுரை) இசையின் சொந்தம் சந்தம்

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழில் இசைத் தமிழ் சிறப்பிற்கு உரியது. தமிழிசை தொன்மை வாய்ந்தது. தமிழே ஓர் இசை மொழி தான். அ ஆ என்று குறில் நெடிலை உச்சரிக்கும் போது கூட ஓர் இசை வெளிப்படுவதை அறிவோம். “ஏழு ஸ்சுரங்களுக்குள் எத்தனை பாடல்” என்று கவியரசர் கண்ணதாசன் எழுதியதைப் போல ” இசை என்பது ஓர் ஏமாற்று வேலை” என்று சொல்லுவார் இசைஞானி இளையராஜா. ஒரு நல்ல பாடல் என்பது ஒரு சிறந்த சந்தம் ஆகும். திரை இசையில் இதை இருசீர் சந்தம் முச்சீர் சந்தம் நாச்சீர் சந்தம் என்றெல்லாம் வரையறை செய்யலாம்.

 இருசீர் சந்தம்

சின்னசின்ன ஆசை

சிறகடிக்க ஆசை

முத்துமுத்து ஆசை

முடிந்துவைத்த ஆசை

வெண்ணிலவு தொட்டு

முத்தமிட ஆசை

என்னைஇந்த பூமி

சுற்றிவர ஆசை

என்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு வரியிலும் இரண்டு சீர்கள். முதல் சீர் காய்ச்சீராகவும் இரண்டாவது சீர் மாச்சீராகவும் அமையப்பெற்றது இந்தப் பாடல். சின்னச் சின்ன என்பது கூவிளங்காய் ஆசை என்பது தேமா. இப்படி இந்தப் பாடலில் பல்லவி முதல் சரணம் வரை (எடுப்பு முதல் முடிப்பு வரை) அத்தனை வரிகளிலும் ஒரு காய் ஒரு மா என்றே மெட்டு அமைத்திருப்பார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த மெட்டு புதிய மெட்டு; ஆனால் இந்தச் சந்தம் புதிது அல்ல. இங்கே இசைஞானி அவர்களின் கூற்று உண்மையாகிறது. கருப்பு வெள்ளை காலத்தில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்தப் பாடல் இதே சந்தத்தில் அமைந்திருக்கும்.

வீடுவரை உறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசிவரை யாரோ

தொட்டிலுக்கு அன்னை

கட்டிலுக்குக் கன்னி

பட்டினிக்குத் தீனி

கெட்ட பின்பு ஞானி

இந்தப் பாடலின் தாள கட்டும் சின்ன சின்ன ஆசை பாடலின் அமைப்பும் ஒரே மாதிரி இருப்பதனால் இந்தப் பாடலை அந்த மெட்டிலும் அந்தப் பாடலை இந்த மெட்டிலும் பாட முடியும். மேற்கண்ட இந்த இரண்டு பாடல்களிலும் சற்று மாறுபட்ட இன்னொரு பாடலையும் சொல்ல விரும்புகிறேன்.

அழகு சிரிக்கின்றது

ஆசை துடிக்கின்றது

பழக நினைக்கின்றது

பக்கம் வருகின்றது

வண்டு வருகின்றது

மலரில அமர்கின்றது

உண்டு சுவைக்கின்றது

உறங்கி விழிக்கின்றது

கவியரசு கண்ணதாசன் இயற்றிய இந்தப் பாடலின் அமைப்பு முதல் சீர் மாச்சீராகவும் இரண்டாவது சீர் கனிச்சிராகவும் அமையப் பெற்றுள்ளது.

வீடு  வரைஉறவு

வீதி வரைமனைவி

காடு வரைபிள்ளை

கடைசி வரையாரோ

வீடுவரை என்பதை வீடு வரை என்று பிரித்துப் பாடினால் அழகு சிரிக்கின்றது பாடல் போலப் பாடி விடலாம்.

அழகு சிரிக்கின்றது என்று இருப்பதை அழகு சிரிக்கிறது என்று கூட அமைந்திருக்கலாம். ஆனால் சிரிக்கின்றது என்று கனிச் சீரில் வரும்போது அந்தப் பாடலின் அழகு கூடுகின்றது. பொதுவாக கனிச்சீரில் அமைந்த பாடல்கள் மிகவும் இனிமையாக, சிறப்புக்குரியதாக இருக்கும்.

‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடலில் முதல் சீர் கனிச்சீர். ‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் இப்பாடலிலும், ‘சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புதுமணியும்’ என்ற திரு.கங்கை அமரன் அவர்கள் எழுதிய இந்தப் பாடலிலும் முதல் மூன்று சீர்கள் கனிச்சீர்களாக அமைந்திருக்கும். இதுவே இப்பாடல்களின் சிறப்பும். கங்கை அமரனுக்கும் பாவேந்தர் பாரதிதாசனுக்கும் முன்னோடியாகக் கம்பனும் இதே மெட்டில் பாடல் தந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெய்யோன் ஒளி தன்மேனியின்

விரிசோதியின் மறைய

பொய்யோ எனும் இடையாளொடும்

இளையானொடும் போனான்

மையோ, மர கதமோ,மறி

கடலோ, மழை முகிலோ

ஐயோ இவன் வடிவென்பதோர்

அழியா அழகுடையான்

என்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் ராமனின் அழகை வர்ணித்த இந்தப் பாடல் தான் அது.

முச்சீர் சந்தம்

அம்மா இங்கே வா வா

ஆசை முத்தம் தா தா

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

குழந்தைகளுக்காக பாடப்பட்ட இந்தப் பாடலின் அமைப்பு ஒவ்வொரு வரியிலும் மூன்று சீர்கள். எல்லாச் சீர்களும் மாச் சீர்கள். இது ஒரு வகை முச்சீர் சந்தம். இரண்டு வரிகளையும் சேர்த்து ஓர் அடியாகக் கணக்கிட்டால் இதுவே அறுசீர் விருத்தமும் ஆகும். மா+மா+மா என்பது இதன் வாய்ப்பாடு.

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டுனு விக்கசொல்லிக்

காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்

என்ற இந்த நாட்டுப்புறப் பாடலும் முச்சீர் சந்தத்தில் அமைந்ததுதான். இந்தப் பாடலில் ஒவ்வொரு சீர்களும் வெவ்வேறு அசை வடிவங்களைக்  கொண்டுள்ளது. இப் பாடலில் மா விளம் காய் கனி என்று சீர்கள் பரவி வந்துள்ளன.

நீலக் கடலின் ஓரத்தில்

நீங்கா இன்ப காவியமாம்

காலத் திரையில் எழில்பொங்கும்

கனக கருணை ஓவியமாம்

அன்னை வேளாங்கண்ணி என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் முச்சீர் சந்ததிற்குச் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு. இந்தப் பாடலில் முதல் இரண்டு சீர்கள் மாச்சீராகவும் மூன்றாவது சீர் மட்டும் காய்ச்சீராகவும் அமைந்துள்ளது. முதல் இரண்டு வரிகளை ஓர் அடியாக கணக்கில் கொண்டால் மா+மா+காய் என்ற வாய்ப்பாட்டில் அமையப்பெற்ற அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல் ஆகும். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் காலத்தில் பெரும்பாலான திரைப்பாடல்கள் அறுசீர் மற்றும் எண் சீர் விருத்தப் பாடல்களாகவே அமைந்து இருந்தன என்றால் அது மிகையாகாது.

இதே வரிசையில் அமைந்த சில பாடல்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒருதாய் மக்கள் நாமென்போம்

ஒன்றே எங்கள் குலம் என்போம்

இப்பாடல் மேற்கண்ட பாடலின் அதே வடிவில் அமைந்தது.

தொந்திக் கணபதி வா வா வா.

வந்தே ஒரு வரம் தாதாதா

என்ற இந்தப் பாடலில் மா +விளம் +காய் என்ற வகையில் வரிகள் அமைந்திருக்கும். ஆயினும் இது அறுசீர் ஆசிரிய விருத்தமே.

உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்ந்தன எனக்காக – அன்னை

மடியை விரித்தால் எனக்காக

மலர்கள் மலர்ந்தன பணியாலே – என்

மனதும் குளிர்ந்தது நிலவாலே

பொழுதும் விடிந்தது கதிராலே – சுகம்

பொங்கி எழுந்தது நினைவாலே

நிலவே என்னிடம் நெருங்காதே – நீ

நினைக்கும் இடத்தில் நானில்லை

மலரே என்னிடம் மயங்காதே – நீ

மயங்கும் வகையில் நானில்லை

கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய மேற்கண்ட இந்த மூன்று பாடல்களில் அன்னை, என், சுகம், நீ என்கிற தனிச் சொற்களை நீக்கிவிட்டால் மா+ மா/விளம்+காய் என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர் ஆசிரிய விருத்தத்தையே காணலாம்.

அன்று வந்ததும் இதே நிலா

இன்று வந்ததும் அதே நிலா

என்றும் உள்ளது ஒரே நிலா

இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

இந்தப் பாடலும் மேற்கண்ட அறுசீர் ஆசிரிய விருத்த அமைப்பில் அமைந்த திரையிசைப் பாடலே ஆகும். மேற்கண்ட எல்லாப் பாடல்களையும் (அதாவது முச்சீர் சந்தத்தில் அமைந்த) ஏதேனும் ஒரு பாடலின் மெட்டில் பாடிப் பார்க்க முடியும்.

இந்த அமைப்புகளில் சேராத மேலும் சில முச்சீர் சந்தத்தில் அமைந்த பாடல்களைக் காணலாம்.

மகமாயி சமயபுரத் தாயே – உன்

மகளெனக்கு எல்லாமும் நீயே

என்ற பக்திப் பாடலும்

வண்டிக்காரன் சொந்தஊரு மதுர

சண்டித்தனம் செய்யலாமா குதிர

என்ற திரைப்படப் பாடலும் ஒரே மாதிரி அமைந்துள்ள முச்சீர் சந்தம். மேலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ

இளையவளா? மூத்தவளா? வெண்ணிலாவே

என்ற இந்தப் பாடல் முச்சீர் சந்தத்தில் அமைந்த பாடல். ஆனால் மேற்கண்ட அத்தனை பாடல்களிலும் இருந்து வேறுபடுகிறது. இந்தப் பாடலில் காய்+ காய் + காய் என்ற வாய்ப்பாட்டில் சீர்கள் அமைந்ததோடு ஒவ்வொரு அடியிலும் ஒரு தனிச்சொல் வந்து சிறப்புச் சேர்க்கிறது.

நான்கு சீர் சந்தம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

என்ற கனியன் பூங்குன்றன் எழுதிய சங்க இலக்கியப் பாடல் ஒரு நான்கு சீர் சந்தத்தில் அமைந்த பாடல். இதே சந்தத்தில்,

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்

நெறஞ்ச மௌனம் நீபாடும் கீதம்

பௌர்ணமி இரவு பனிவிழும் காடு

ஒத்தையடிப் பாதை உன்கூட பொடி நட

என்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் அமைந்திருக்கிறது.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்ப தில்லை

வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

என்ற கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்த இரண்டு பாடல்களும் காய்+ காய்+ காய்+ மா என்ற வாய்ப்பாட்டில் அமையப்பெற்ற எண் சீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள் ஆகும். இதுபோல் மேலும் சில பாடல்கள் கவியரசு அவர்களால் திரை இசையில் பாடப்பட்டுள்ளன.

நதி எங்கே போகிறது கடலைத் தேடி

நாள் எங்கே போகிறது இரவைத் தேடி

நிலவெங்கே போகிறது மலரைத் தேடி

நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

என்ற இந்தப் பாடலும்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

இந்த இரண்டு பாடல்களும் காய் +காய் மா+மா என்ற வாய்ப்பாட்டில் அமைந்த எண்சீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள் ஆகும்.

கண்ணுக்கு மை அழகு கவிதைக்குப் பொய்அழகு

கன்னத்தில் குழிஅழகு கார்கூந்தல் பெண்ணழகு

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

ஏ புள்ள கருப்பாயி உள்ளவந்து படு தாயி

ஆடிமாசம் கொல்லுதடி அம்மிக்கல்லும் ஆடுதடி

எள்ளுவய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலாலா உன் சிரிப்பு கொல்லுதய்யா

அச்சொடிந்த ராட்டினம் போல சுத்துதய்யா

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்

நான் இருந்து வாடுகின்றேன் நாவரண்டு பாடுகின்றேன்

ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை

சேந்துச்சோ சேரலியோ செவத்தமச்சான் நெத்தியிலே

கண்ணெதிரே தோன்றினாள் கனி முகத்தைக் காட்டினாள்

நேர்வழியில் மாற்றினாள் நேற்றுவரை ஏமாற்றினாள்

போன்ற திரை இசை பாடல்களும்

ராசாத்தி உன்னை எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்

ராப்பகலா கண்விழிச்சேன் ராணி உன்ன கை புடிச்சேன்

சீரகம் பாத்தி கட்டி செடிக்கு செடி குஞ்சம் கட்டி

அத்த பெத்த மல்லிகைப்பூ என் ஆசைக்கேத்த முல்லைப்பூ

மாம்பழக் கன்னத்துல (மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா)

நான் மாறி மாறி முத்தம் தாரேன் (மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா)

(சீரகம் பாத்தி கட்டி பாடலில் சின்னப்பொண்ணு ரதமே அன்ன பொண்ணு நடையே என்பதும் அத்த பெத்த மல்லிகை பூ பாடலில் மல்லம்மா செல்லம்மா பொன்னம்மா என்பதும் இசைக்காக கோர்க்கப்பட்டது)

மேற்கண்ட அனைத்துப் பாடல்களும் நான்கு சீர் சந்தத்தில் அமைந்த பாடல்கள் ஆகும். ஏறத்தாழ அத்தனை பாடல்களும் ஒரே மெட்டுக்குள் அடங்கும் என்பதும் உண்மை. வேண்டுமானால் ஏதேனும் ஒரு பாடல் மெட்டில் மற்ற பாடல்களைப் பாடிப் பார்த்துப் பழகிக் கொள்ளுங்கள். மேலே கண்ட அனைத்துப் பாடல்களும் “கலிப்பா” என்ற வடிவத்தில் அமைந்த பாடல்கள் ஆகும். தமிழ் இலக்கியத்தில் கலிப்பா என்ற பாடல் வடிவம் எளிதில் பாடக்கூடிய ஒரு பா வடிவம் ஆகும். இதனால் தான் நம் முன்னோர்கள் பெரும்பாலும் பாடிய நாட்டுப்புறப் பாடல்கள் அனைத்தும் இப் பா வடிவத்தை ஒத்தே அமைந்திருக்கின்றன என்பது சான்று.

வானத்தில மீன் இருக்க மதுரையில நான் இருக்க

சேலத்துல நீ இருக்க சேர்வது எக்காலம்

வெள்ளிப் புடி அருவா வெடலப்புள்ள கையருவா

சொல்லி அடிச்சருவா சுழட்டுதடி நெற்கதிரை

காட்டோரம் கொட்டாயாம் கவுண்டன்மக குப்பையாம்

குப்பாயி படும் பாட்டைக்  கொட்டாயி சொல்லுமுங்க

சோளச்சோறு திண்ண மாட்டேன் சொன்னபடி கேட்க மாட்டேன்

கிழட்டுப் புருஷனுக்குக் கீழிருந்து வாழ மாட்டேன்

என்றெல்லாம் பல நாட்டுப்புறப் பாடல்கள் இதே கலிப்பா வடிவத்தில் அமைந்திருக்கின்றன என்பது வியப்புக்குரிய ஒன்று.

இதில் ராசாத்தி உன்னை எண்ணி என்ற பாடலிலும் காட்டோரம் கொட்டாயாம் என்ற பாடலிலும் அந்தாதி வடிவத்தைக் காண முடியும் இதன்வழி நம் முன்னோர்கள் இலக்கிய இலக்கணத்தில் தோய்ந்த அறிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. (கொட்டாயி என்றால் கொட்டகை என்று பொருள்).

ஆறு சீர் சந்தம்

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது – இந்த

மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது.

இந்திர லோகத்துச் சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ

மோகினி போல்வந்து காளைஎன் உயிரினைப் பருகியும் சென்றாளோ

போன்ற திரை இசை பாடல்களை அறுசீர் சந்தப் பாடல்கள் என்று வகைப்படுத்தலாம்.

மேற்கண்ட வகையில் ஒரு கவிஞன் தன் பாடலை எழுதி வைத்தால் எந்த ஒரு  இசையமைப்பாளரும் அதற்கு இசை சேர்த்து அழகிய பாடலாக உருவாக்க முடியும். இந்த கட்டுரையை வாசித்தபிறகு ஒரு கவிஞன் பாடலாசிரியர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று நம்புகிறேன்.

கி.கோவிந்தராசு