(தொடர்) உலக சினிமா

0
1519

நெப்போலியன்

எதிர்பாரா கதைக்கருக்களாலும், அசாத்தியக் கதைக் களங்களாலும், எளிய சொல்லல் முறையிலும், கையற்றக் காட்சிப்படுத்துதலிலும், நம்பகத்தன்மையின் உணர்த்து நெறியுடன் கையாளப்படும் திரைக்கதையிலும், கதாபாத்திரப் படைப்பொழுங்கிலும், சரிவரக் கலக்கும் தொழில் நுட்பக் கூட்டுச் சாற்றுடன் ஒரு நல்ல சினிமா உலகெங்கும் எங்கேனும் உருவாகிக் கொண்டேதான் இருக்கிறது

வழக்கமான திரைப்பட சரிகைகளிலிருந்தும், சராசரி சத்த ஓலங்களிலிருந்தும், அதீத ஜனரஞ்சக ரசனைத் தூண்டிக் காரணிகளிடமிருந்தும் தன்னை விலக்கிக்கொண்டு, தேசம்இனம்மொழி கடந்து உலக சினிமா சர்வதேச அரங்கில் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

நிறங்கள் எல்லைகள் கடந்து, நேர்த்தியான செல்லுலாய்ட் சித்திரமாய், உலக சினிமா ரசிகர்களின்  உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணமாய், தரமான திரைப்படங்கள் சினிமா தோன்றிய காலம் முதல் இன்றுவரை தனக்கென ஒரு தனித்துவமான ராஜபாட்டையை தன்னகத்தே வடிவமைத்தபடியே முன்னோக்கி, முன்மாதிரி மைல்கற்களாய் காலம் கடந்தும் ஒரு செய் நேர்த்தி தரவுக் குறிப்பென, திரைப்படைப்பாளர்களின்கலைஞர்களின்தொழில்நுட்பக் கலைஞர்களின்சினிமா ஆர்வலர்களின் வியப்புப் பெட்டகமாய் உலகெங்கும் பதிந்துள்ளனபுதுப்புது உருவாக்கமெனத் தொடர்ந்து உலகெங்கும் உதித்தவண்ணம் உள்ளன.

தி ரெட் பலூன் ( The Red Balloon பிரெஞ்சு மொழி )

ஒரு சிறுவனுக்கும் சிவப்பு பலூனுக்குமான அன்பின் நட்பின் சினேகப் பறத்தலே கதைக்களம். திரைப்படத்தின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களே சிவப்பு பலூனும் – சிறுவனும்தான். காலையில் பள்ளிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் சிறுவன் அருகே தந்திக்கம்பத்தில் கம்பிகளுக்கிடையே உயரத்தில் மாட்டிக்கொண்டு படபடத்துக் கொண்டிருக்கும் அந்தச் சிவப்புப் பலூனுக்கு உதவி செய்து விடுவித்து விடுகிறான். சுதந்திரமாய் பறக்கும் பலூன் பள்ளி செல்லும் சிறுவனைப் பின் தொடர்ந்தபடியே வருகிறது. முதலில் ஆச்சரியப்படும் சிறுவன் பிறகு பலூனுடன் நட்பாகி விடுகிறான். தினந்தோறும் பலூன் அவனை அன்போடு தொடர்கிறது.

பள்ளியின் வாசல் வரை வந்து வகுப்பறைக்கு வெளியே கண்ணாடி ஜன்னல் ஓரம் பாந்தமாய் அவனைப் பார்த்தபடி அசைகிறது. சிறுவனின் அடுக்குமாடி வீட்டுச் ஜன்னல்கள் வழியே அவனைத் தட்டுகிறது. சிறுவன் அவனது அம்மாவிற்குப் பயந்து அந்தப் பக்கம் போகச் சொல்லித் தள்ளுகிறான்.  பிறகு ஒளிந்து விளையாடும் குறும்பு பலூனைத் தேடுகிறான். இப்படியாய் சிறுவனுக்கும் பலூனிற்குமான எமோஷனல் காட்சிகள் படம் முழுவதும் ஆங்காங்கே நம்மை இரு சிறிய நண்பர்களின்  சிறு குறு விளையாட்டென திரைப்படத்தோடு ஆர்வமாய் உணர்வு இழையாய் ஒட்ட வைத்து விடுகிறது. சிறுவனோடு இணைபிரியா நட்பென அவனது அன்றாடம் முழுவதும், போக்கிலும் வரத்திலும் அவனின் அன்பு நண்பனென சிவப்பு பலூன் மகிழ்ச்சியாகப் பறந்து அசைகிறது. 

பலூன் கயிற்றைக் கையில் பிடித்தபடி பள்ளிக்கு ஓடும் சிறுவனின் லாங் ஷாட் காட்சிகள்… இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான பாரீஸ் நகரத் தெருக்களின் சாம்பல் பூத்த சாயைகளுடனான ஏரியல் மற்றும் மிட் ஷாட் காட்சிகள் – கட்டிடங்கள், மேல் கீழிறங்கிச் செல்லும் படிக்கட்டுகள், நடைமேடை நேர் வீதிகள் , குறுகலான சந்துகள் , பள்ளிகள், தேவாலயங்கள், ஆட்களை ஏற்றிச் செல்லும் சிறு பேருந்துகள், புகைபோக்கிகளுடனான தூர வீடுகள் என 1950களின் இறுதியில் போருக்குப் பின்னான பிரான்சு – பாரீஸ் நகரத்தெருக்களின் விசாலப் பதிவினை, சிவப்புப் பலூன் சிறுவன் வழி பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் எட்மண்ட்  சிசன் காட்சிப்படுத்தியுள்ள விதம் நேர்த்தியிலும் நேர்த்தி. கிட்டத்தட்ட வசனங்களே இல்லாத காட்சிகளால் நம் கவனத்தை ஈர்க்கக்கூடிய திரைப்படம் தி ரெட் பலூன். 

ஒரு காட்சியில் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்துவிடும் பலூனால் வகுப்பறையே கலாட்டாவும் அமளியுமாகிவிட கோபமாக ஆசிரியர் சிறுவனுக்குத் தண்டனை கொடுத்து ஒரு அறையில் பூட்டிவிட, கவலையுடன் பள்ளி விடும் வரை வெளியே காத்து நிற்கும் பலூன். பள்ளி முடிந்தும் ஆசிரியர் சிறுவனை அறைக்குள் பூட்டியதை மறந்தபடி அருகாமையிலிருக்கும் நண்பர் இடத்திற்குச் சென்று உரையாடிக்கொண்டிருப்பதை அறிந்து, பலூன் பின் தொடர்ந்து, அவர்களிருவரின் உரையாடல் முன்பு பதட்டமாய்ப் பறந்து அசைந்து ஆசிரியருக்கு மாணவன் அறைக்குள் பூட்டப்பட்டிருப்பதை ஞாபகப்படுத்தும் இடம் அருமை. ஆசிரியர் பதறியபடியே பலூனுடன் ஓடிவந்து சிறுவனின் அறைக்கதவைத் திறந்துவிடும் காட்சி நெகிழ்ச்சி. 

தி ரெட் பலூன் பிரெஞ்சு மொழித் திரைப்படத்தின் இயக்குனர் ஆல்பர்ட் லமொரிஸ் (1922-1970) பிரெஞ்சு திரைப்படத் தயாரிப்பாளர் & இயக்குனர். நிறைய குறும்படங்களும் விவரணப் படங்களும் தயாரித்து இயக்கியுள்ளார். யுத்தம் அரண் பாதுகாப்பு ஆபத்து போர்க்களம் அடிப்படையிலான போர்ட் கேம் விளையாட்டினை வடிவமைத்து கண்டுபிடித்தவர் (1957) 

சிவப்பு பலூன் திரைப்படத்தில் கதை நாயகனாக சிறுவனாக தனது மகன் பாஸ்கல் லமொரிஸைய் சிறப்பாக இயக்கி நடிக்க வைத்துள்ளார். படத்தின் ஒரு காட்சியில், சிறுவனுடன் வந்து கொண்டிருக்கும் சிவப்பு பலூன், எதிரே தெருவில் நீல நிறப் பலூனைச் சந்தோஷமாய் பிடித்தபடி வரும் அழகுச் சிறுமியின் பின்னால் திடீரென சேட்டையாய் சிறுவனை விட்டு ஓடிப் பின் திரும்பி வரும் ரகளையான காட்சி ஒன்று உண்டு. அதில் அந்தச் சிறுமியாக வருபவள் இயக்குனரின் மகள் சபைன். இயக்குனர் ஆல்பர்ட் லமொரிஸ், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் தொடங்கப்பட்ட மேம்பட்ட ஒளிப்பதிவிற்கான படிப்பு மற்றும் பிரெஞ்சு சினிமா பள்ளியின், முன்னாள் தணிக்கையாளர். உலகின் முக்கிய பல்வேறு திரைக்கலைஞர்களின் படைப்பாளர்களின் தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறந்த கற்றல் பயிற்சிக்கூடமாக இந்தப் பள்ளி இருந்துள்ளது.

தினமும் சிவப்புப் பலூனுடன் வீதிகளில் திரியும் சிறுவனைக் கடக்கும் மனிதர்கள், குதிரையில் அமர்ந்தபடி காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், முதுகில் புதுக்கண்ணாடியும் அதற்கான தோது உபகரணங்களையும் இடுப்பைச் சுற்றித் தொங்கவிட்டபடி  அந்நாளின் வருமானத்திற்காய் அலையும் உடைந்த  கண்ணாடிச் ஜன்னல்களைப் பழுதுபார்க்கும் தொழிலாளி, பாதிரிமார்கள், வாகனப் பயணிகள், மழை நேரங்களில்  தம்மை நோக்கி வந்து அண்டும்  சிறுவனின் கை  பலூனுக்கு குடை விரிக்கும் ஈர மனிதர்கள் என சிறுவன் – பலூன் வழி புறவய மனிதர்களின் அன்றாடங்களை இயக்குனர் எடுத்தியம்பியுள்ள காட்சிகள் அனைத்தும் அழகு. 1956இல் அனிமேஷன் சிஜே கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்ப வசதிகள் வெகுவாக இல்லாத காலத்தில், ஒரு சிவப்பு ஹீலியம் பலூனை இவ்வளவு உயிரோட்டமாகத் திரையில் கதையின் மற்றொரு நாயகனாக ஒவ்வொரு ப்ரேமிலும் காட்சிமையாக்கியிருக்கும் விதம் திறமையான உழைப்பு.   

ஒரு திரைப்படத்தின் உணர்வோட்டத்தை, சரியாக வேண்டிய இடத்தில் அமைதியும் தேவைப்படும் இடங்களில் உகந்த இசையும் மென்மேலும் மெருகேற்றிவிடும். 20ஆம் நூற்றாண்டின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான ஒலிவியர் மெசேயனின் மாணவரான மெளரைஸ் லி ரொக்ஸ்ன் பின்னணி இசை. பலூன் காற்றுடன் சம்பந்தப்பட்டதால், அதற்குப் பொருத்தமாகப் ப்ளோயிங் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் எனப்படும் காற்றிசைக் கருவிகளையும் (சாக்ஸபோன், டிரம்பட், கிளாரினெட், புல்லாங்குழல்) வேறு சில இடங்களில் கம்பி வாத்தியக் கருவிகளையும் (குறிப்பாக வயலின்கள்) மற்றும் சைலபோன் ஒலிகளோடு பயன்படுத்தப்பட்டுள்ள பின்னணி இசைக்கோர்வை மெருகு. கதையுணர்வும் தகுந்த இசைப்பின்னணிக் கோர்வையும் கலந்து திரைப்படக்காட்சிகளில் உசிதமான உணர்வை நமக்கு வழங்கி விடுகிறது.

படத்தின் இறுதிக்கட்டத்தில், சிவப்புப் பலூனை அடித்து உடைத்துவிடும் நோக்கத்துடன் பொறாமைகொண்ட குறும்பு அடிதடி சிறார் கூட்டத்தால் பலூனும் சிறுவனும் துரத்தப்படும் காட்சி. குறுகலான நீண்ட சந்துகளின் வழி சிறுவன் பாஸ்கல், பலூனை இறுகப் பற்றியபடி பதட்டமாய் ஓடுமிடம்; அகண்ட கற்தரைகளின் வழியே விரட்டும் எதிரிக்கும்பல்; அங்குமிங்குமாய் சிவப்புப்பலூனைக் காப்பாற்றும் பரிதவிப்புடன் சிறுவன் வழியறியாமல் தவிக்குமிடம்; கடைசியாய் சுற்றிவளைக்கும் கூட்டம்; பலூனைக் கவண் கல் / கவட்டை கல் அடித்து, கற்கள் எறிந்து உடைக்கும் இடம்; சிறுவனின் முகமெங்கும் இழப்பின் இருள்; கற்களால் காயப்பட்டு உடைந்து, காற்று வெளியாகி, சிவப்புப் பலூனின் ஜீவன் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரியும் இடம்; சிவப்புக் காகிதமெனத் தரையில் பலூன்; பிரிவின் வலியோடு பலூனைப் பார்க்கும் சிறுவனின் நிலைமை; கீழே விழுந்து கிடக்கும் பலூனைக் கால்களால் மிதித்துக் கிழித்துச் சிரித்தபடி எதிரிக்கூட்டம்; இறுதி மூச்சை விட்டு சிறுவனின் கண்ணெதிரே மடியும் சிவப்பு பலூன்.

அப்பொழுதுதான், அந்த அதிசயம் நிகழ்ந்தேறுகிறது. பாரீஸ் நகரத் தெருக்களில், வீடுகளின் முற்றங்களில், விளையாட்டுத் திடல்களில், சிறுவர் பூங்காக்களில், பலூன் விற்பவர்களிடத்தில், எங்கெங்கெல்லாம் யார் யாரிடமெல்லாம் பலூன்கள் உள்ளதோ, பலூனைப் பிடித்துள்ளனரோ, அவர்களிடமிருந்து சட் பட்டென விலகி ஒட்டுமொத்த வெவ்வேறு நிற வண்ண வண்ணப் பலூன்களெல்லாம் ஆகாயம் நோக்கி, கூட்டம் கூட்டமாய் சிவப்பு பலூன் ஜீவன் விட்ட இடம் நோக்கிப் பறக்க ஆரம்பிக்கின்றன…

படத்தொகுப்பாளர் ஃப்யரி கில்லட்டின் பாராட்டப்படவேண்டிய நுட்பமான கட் கட் கட். பலூன்கள் விருட்டெனக் கூட்டமாய் வெவ்வெறு திசைகளிலிருந்து ஓரிடம் நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும் கிளைமாக்ஸ் ஆச்சர்யம். சிறந்த திரைப்படத்திற்கான படத்தொகுப்பாளரின் பங்கு .

கவலையுடன் சிவப்புப் பலூனுடன் கவிழ்ந்து கிடக்கும் சிறுவன் பாஸ்கலை நோக்கி ஒட்டுமொத்தப் பலூன்களும் வந்தடைகின்றன. ஆச்சர்யத்தில் ஒவ்வொரு பலூன்களின் கயிற்றையெல்லாம் மொத்தமாய் தன் கைகளால் இறுகப் பற்றும் சிறுவன் பாஸ்கலை, அலேக்காய் அப்படியே தூக்கி வானத்தை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கின்றன மொத்த பலூன்களும். ஒரு குட்டித்தேவதையைப்போல் வண்ண வண்ணப் பலூன் சிறகுகளுடன்  உயரே உயரே நகரத்தின் உயரே மகிழ்ச்சியுடன் பறக்க ஆரம்பிக்கிறான்  சிறுவன் பாஸ்கல்.

34 நிமிடங்கள் ஓடக்கூடிய தி ரெட் பலூன் குறும்படம் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றதுடன், 1956ஆம் ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான கான்ஸ் திரைப்படவிழா – பொம் டோர் விருதினையும் வென்றது.

ரெட் பலூன் திரைப்படம் மேலோட்டமாய் பார்க்கையில் குழந்தைகளுக்கான ஒரு சிறந்த திரைப்படமாய் இருந்தாலும், அதன் ஆழம் – உருவகம் விரிக்கும் சேதி பெரிது ! இரண்டாம் உலகப்போரின் யுத்தப்பாடுகள், தெருக்களில் கட்டிடங்களில் படர்ந்திருக்கும் சோகம், பிரான்சு தேசக் கொடி நிறங்கள், சிவப்பு நிறப் பலூன் குறியீடு, சுதந்திரம், புத்துயிர்ப்பு, ஜீவன்-மரணம்-உயிர்த்தெழுதல், இழப்பிற்குப் பின்னான உயரம் என பல்வேறு விரிதல்களுடன் இந்தக் குறும்படம் பெரும்படமாய் நம்முன் வியாபித்து நிற்கின்றது.