(தொடர்) பிணியின்மை செல்வம் – 2

மில்லத் அகமது

சங்க காலப் புலவர்கள் அரசர்களையும், புரவலர்களையும் வாழ்த்தும்போதும், ஒருவரை ஒருவர் நலம் விசாரிக்கும்போதும் “நும்மரும்பிணி தீர்க” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவது ஒரு வழக்கமாகும். அஃதாவது ‘உமது தீராத நோய்கள் குணமாகட்டும்’ என்று வாழ்த்திவிட்டுதான் பேச ஆரம்பிப்பார்கள். சங்க இலக்கியங்களில் கூறப்படும் 99 வகை மலர்களில் ‘சிறுபீளைப் பூவும்’ ஒன்று. இந்த மலர், சித்த மருத்துவத்தில் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கும், சிறுநீர் அடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் போன்ற சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அழகியல் சார்ந்து சொல்லாமல் மருத்துவப் பயன்களைக் குறிப்பிட்டும் சொல்கிறது.

சிறுநீரகங்கள் அவரை விதை வடிவத்தில் முதுகுப்பகுதியில், முதுகெலும்பின் இருபுறமும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 150 கிராம் எடை கொண்டது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் பத்து லட்சம் நெப்ரான்கள் உள்ளன. இவைதான் இரத்தத்தை வடிகட்டும் முக்கிய வேலை செய்கின்றன.

சிறுநீரகங்கள் நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலிலுள்ள இரத்தம் எனும் ஜீவநதியைத் தூய்மைப்படுத்தும் சீரிய பணியைச் செவ்வனே செய்யும் தூய்மை பணியாளர்கள்தான் இந்தச்  சிறுநீரகங்கள். இதன் செயல்பாடு மிக நுட்பமானது; ஒரு கவிஞனின் கற்பனை போன்றது. உடலில் பாயும் இரத்தம் ஒவ்வொரு கணமும் உடலின் செல்களுக்கு உணவளித்து, அதன் கழிவுகளைத் தன்னோடு சேர்த்தே சுமந்து செல்கிறது. இக்கழிவுகள் உடலினுள்ளேயே தங்கினால், உடலெனும் கோட்டை நச்சுப் புகையால் சூழப்பட்டு, நலன் குன்றும். இந்த நச்சுப் புகையை நீக்கும் மாபெரும் பணியைச் சிறுநீரகம் செய்கிறது.

சிறுநீரகம், ஒரு கலைநயமிக்க வடிகட்டி போன்றது. ஒவ்வொரு நிமிடமும், உடலிலுள்ள இரத்தம் அனைத்தும் இந்தச் சிறுநீரகத்தின் நுண்ணியக் குழாய்களுக்குள் நுழைகிறது. அங்கே, இரத்தத்திலுள்ள அதிகப்படியான நீர், உப்பு, யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவுப் பொருட்கள் பிரிக்கப்படுகின்றன. ஆனால், உடலுக்கு அவசியமான புரதங்கள், சர்க்கரை, உயிர்ச்சத்துக்கள் போன்ற அமுதங்கள் சற்றேனும் இழக்கப்படாமல், மீண்டும் இரத்தத்திலேயே கலக்கச் செய்யப்படுகின்றன. ஒரு தேர்ந்த சிற்பி, தேவையற்ற பகுதியைச் செதுக்கி, அழகிய வடிவத்தை உருவாக்குவது போல, சிறுநீரகம் நச்சுக்களைப் பிரித்து, தூய இரத்தத்தை மீண்டும் உடலுக்குள் அனுப்புகிறது.

சிறுநீரகத்தின் பணி வெறும் கழிவு நீக்கம் மட்டுமல்ல. உடலிலுள்ள நீரின் அளவைச் சீராகப் பேணுவதும் இதன் முக்கியப் பணி. நாம் நீர் அருந்தும்போது, உடலுக்குத் தேவையான அளவு நீரை வைத்துக்கொண்டு, மிகுதியான நீரைச் சிறுநீராக வெளியேற்றுகிறது. இதனால், உடலின் உள் சமநிலையும், இரத்த அழுத்தமும் சீராகப் பராமரிக்கப்படுகின்றன. இஃது, ஒரு குளத்தின் மதகு போல், நீரின் அளவைச் சீராகக் கட்டுப்படுத்தி, வெள்ளமும் வறட்சியும் வராமல் காக்கிறது.

நமது இரு சிறுநீரகங்களும் சேர்ந்து, ஒரு நாளைக்குச் சுமார் 180 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன! அஃதாவது, ஒவ்வொரு மணிநேரமும் உடல் முழுவதும் உள்ள இரத்தம் சுமார் 12 முறை சிறுநீரகங்கள் வழியாகப் பாய்ந்து சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால், இதில் வெறும் 1-2 லிட்டர் மட்டுமே சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள அமுதம் மீண்டும் உடல் நலன் காக்க இரத்தத்திலேயே கலக்கப்படுகிறது. இஃது ஒரு பெரிய நீச்சல் குளத்தின் நீரை ஒரு சிறிய குழாய் மூலம் வடிகட்டுவதற்குச் சமம்!

நீங்கள் காலையில் அருந்தும் காபி, உடனடியாகச் சிறுநீர் கழிக்கத் தூண்டுகிறதா? இதற்குக் காரணம் சிறுநீரகம்தான்! காபியில் உள்ள கஃபின் (caffeine), சிறுநீரகங்களின் வடிகட்டும் வேகத்தை அதிகரித்து, சிறுநீரை வேகமாக வெளியேற்றத் தூண்டுகிறது.

ஒருவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருந்தாலும், அவர்களால் முழு ஆரோக்கியத்துடன் சாதாரணமாக வாழ முடியும். பல சமயங்களில், மற்ற சிறுநீரகம் கூடுதல் பணியைச் செய்யத் தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொள்கிறது. சிறுநீரகம் தானம் செய்பவர்கள் அல்லது பிறப்பிலேயே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்தவர்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

மேலும், சிறுநீரகங்கள் உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி செய்ய உதவுகின்றன. நம்முடைய சிறுநீரகங்கள் நன்றாகச் செயல்படாதபோது, நச்சுப் பொருட்களும், அதிகளவு கழிவுகளும் நம் உடலிலிருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்தால், டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

சிறுநீரகக் கல்:

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மிகவும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். சிறுநீரில் பல்வேறு வேதிப் பொருட்கள் கரைந்த நிலையில் இருக்கும். சில சமயங்களில், இந்த வேதிப் பொருட்களின் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்றவை) செறிவு அதிகமாகும்போது, அல்லது சிறுநீரில் அவற்றைக் கரைத்து வைக்கும் இயற்கைப் பொருட்கள் குறைவாக இருக்கும்போது, அவை படிகங்களாக உருவெடுக்கின்றன. இக்கற்கள் சிறிய மணல் துகள்கள் போல இருக்கலாம், அல்லது ஒரு கோலிக் குண்டு அளவுக்குப் பெரிதாகவும் வளரலாம்.

இக்கற்கள் சிறுநீரகத்தில் இருக்கும் வரை பலருக்கும் எந்த அறிகுறியும் தெரிவதில்லை. ஆனால், அவை சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்க்குழாய் வழியாகக் கீழிறங்கும் போதுதான் பெரும் வலி உண்டாகும். அடிவயிறு, இடுப்பு, விலாப்பகுதி என வலி பின்னிப் பிணையும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் தோன்றலாம். போதிய நீர் அருந்தாமை, அதிக உப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவு, சில மருந்துகள், பரம்பரை (மரபணு வாய்ப்பு) போன்றவை கற்கள் உருவாகக் காரணங்களாக அமைகின்றன.

சிறுநீரகக் கற்களுக்கான சிகிச்சை, கல்லின் அளவு, வகை, இருப்பிடம், அஃது ஏற்படுத்தும் வலி மற்றும் அடைப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். பொதுவாக அதிக நீர் அருந்துவதன் மூலமும், வலி நிவாரணிகள் மற்றும் சிறுநீர்க்குழாயைத் தளர்த்தும் மருந்துகள்  மூலமும் 5 மிமீ வரை உள்ள சிறிய கற்கள் தானாகவே வெளியேறிவிடும். 2 செமீ நீளமுள்ள கற்களுக்கு அறுவை சிகிச்சை அல்லாத அதிர்ச்சி அலைகள் (Shock Waves) மூலம் கற்களைச் சிறிய துண்டுகளாக உடைத்து, பின்னர்ச் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும்.

சிறுநீர்க்குழல் உள்நோக்கல் (Ureteroscopy – URS) ஒரு சிறிய, நெகிழ்வான குழாய் சிறுநீர்ப்பை வழியாகச் சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீரகம் வரை செலுத்தப்படும். கல் கண்டறியப்பட்டதும், ஒரு லேசர்  கருவியைப் பயன்படுத்திக் கற்களைச் சிறிய துண்டுகளாக உடைத்து, ஒரு சிறிய கூடை போன்ற கருவி மூலம் அந்தச் சிறிய துண்டுகள்  வெளியே எடுக்கப்படும்.

சிறுநீரகப் பாதையில் துளையிட்டு கல் எடுக்கும் சிகிச்சை (Percutaneous Nephrolithotomy – PCNL)- இஃது ஒரு சிறிய அறுவை சிகிச்சை முறையாகும். முதுகில் ஒரு சிறிய கீறல் (சுமார் 1 செமீ) ஏற்படுத்தி, அதன் வழியாக ஒரு குழாய் சிறுநீரகத்தினுள் செலுத்தப்பட்டு, கல்லைக் கண்டுபிடித்து, லேசர் அல்லது பிற கருவிகள் மூலம் உடைத்து வெளியே எடுக்கப்படும். இது 2 செமீ-க்கும் மேல் உள்ள பெரிய கற்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை.

றந்த அறுவை சிகிச்சை (Open Surgery) – இது பெரிய கீறல் மூலம் சிறுநீரகத்தையோ, சிறுநீர்க்குழாயையோ திறந்து கல்லை அகற்றும் முறையாகும். தற்போது இது மிக அரிதாகவே செய்யப்படுகிறது. மற்ற சிகிச்சை முறைகள் வெற்றியடையாதபோது அல்லது கல் மிக மிகப்  பெரிதாக இருக்கும்போது மட்டுமே இது பரிசீலிக்கப்படும்.

அமைதியான ஆபத்து:

சிறுநீரகக் கோளாறுகளில் மிகவும் தீவிரமானது, சிறுநீரகச் செயலிழப்பு (Kidney Failure) ஆகும். இது, சிறுநீரகங்கள் தங்கள் இரத்தத் தூய்மைப்படுத்தும் பணியைச் சரிவரச் செய்ய இயலாத நிலையைக் குறிக்கிறது.

நாள்பட்ட சிறுநீரகப் பிணி (Chronic Kidney Disease – CKD): சிறுநீரகங்கள் பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகளாகப் படிப்படியாகத் தங்கள் செயல்பாட்டை இழக்கும் நிலையாகும். இஃது ஒரு மௌனமான கொலையாளி போன்றது. ஆரம்ப நிலைகளில் பெரும்பாலும் அறிகுறிகள் ஏதும் இருக்காது. நோயின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்கவே அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும். பொதுவாக 4ஆம் நிலை அடையும்போது அறிகுறிகள் தென்படும். 5ஆம் நிலை கடைசிக் கட்டமாகும். இது சிறுநீரகச் செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது.  நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள், தொடர்ச்சியான சிறுநீர்ப்பாதைத் தொற்றுகள், சில அழற்சி நோய்கள், மரபணுக் கோளாறுகள் மற்றும் சில வலி நிவாரணிகளின் அதிகப் பயன்பாடு, சிறுநீரகத்தில் உள்ள நுண்ணிய வடிகட்டிகள் வீக்கமடைதல் போன்றவையும் சிறுநீரகச் செயலிழப்புக்குக் காரணமாகும்.

தீவிர சிறுநீரகக் காயம்/செயலிழப்பு (Acute Kidney Injury – AKI): இது, சிறுநீரகங்கள் திடீரென, குறுகிய காலத்திற்குள் (சில மணிநேரங்கள் அல்லது நாட்கள்) தங்கள் செயல்பாட்டை இழக்கும் நிலையாகும். இது நாள்பட்ட சிறுநீரக நோய் போலப் படிப்படியாக வருவதில்லை. ஆனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், உயிருக்கு ஆபத்தாகலாம். சிறுநீரகங்களுக்குப் போதுமான இரத்தம் செல்லாதது, சில மருந்துகள் (குறிப்பாகச் சில வலி நிவாரணிகள்) சிறுநீரகங்களை  நேரடியாகச் சேதம் விளைவிப்பது, சிறுநீர்ப்பை கட்டிகள் போன்றவற்றால் சிறுநீரின் ஓட்டம் தடைபடுவது போன்ற காரணங்களால் ஏற்படலாம். இதிலிருந்து முழுமையாகவோ, ஓரளவோ மீண்டு வரலாம். இல்லையேல், இது நாள்பட்ட சிறுநீரக நோயாக மாற வாய்ப்பிருக்கிறது.

ஆரம்ப நிலைகளில், நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்புக்கு வெளிப்படையான அறிகுறிகள் இருக்காது. ஆனால் நோய் முற்றிய நிலையில், உடலில் கழிவுகள் தேங்குவதால், சோர்வு, பசியின்மை, வாயில் அம்மோனியா நாற்றம், குமட்டல், கால் வீக்கம், அரிப்பு, இரவில் அதிகச் சிறுநீர் கழித்தல், தசைப் பிடிப்புகள் போன்ற பல அறிகுறிகள் தோன்றும். இந்நிலை தீவிரமடைந்தால், டயாலிசிஸ் (Dialysis) அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney Transplant) தேவைப்படும்.

(தொடரும்)