Food comes first, Then Morals – Berthold Brechet (1898-1947) ஒவ்வொரு நாளும் உணவுகளைப் பற்றிய தகவல்கள் நம்முன் வந்து குவிந்துகொண்டேயிருக்கின்றன. இதைச் சாப்பிடுங்கள், அதைச் சாப்பிடாதீர்கள் என்று முதல்நாள் சாப்பிடச் சொன்ன உணவுகளை மறுநாள் சாப்பிட வேண்டாம் என்கிறார்கள் சத்துணவு நிபுணர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும். ஒரே சுதியில் ஆகா ஓகோவென்று புகழப்பட்ட உணவுகள் மறுநாள் பட்டியலிலிருந்து ஏதோ ஒரு காரணத்துக்காக நீக்கப்படுகின்றன. சென்ற நூற்றாண்டில் ஆலிவ் எண்ணெய் அதிக கொழுப்பு உடையது என்றார்கள். இந்த நூற்றாண்டில் அதுமாதிரி எண்ணெய் உலகில் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். ஆப்பிள் சர்வரோக நிவாரணி என்று பெயர் பெற்றுவிட்டது. இப்போது அதன் தோலைச் சீவிவிட்டு சாப்பிடுங்கள் என்ற குரல்கள் எங்கும் ஒலித்தவண்ணம் உள்ளன. பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஆப்பிளின் பலன்கள் அற்றுப்போய்விட்டன என்கிறார்கள். பேரிச்சம் பழம் இரும்புச்சத்துதான். ஆனால், இனிப்பின் அளவு கணக்கிட முடியாமல் எகிறிவிடும் என்கிறார்கள். பாதாம் சாப்பிடலாம். ஆனால், Oxalates மிகுதியால்வரும் சிறுநீரகக்கல் பிரச்சினையை பாதாம் உண்டாக்குமோ என்று ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பெல்பெப்பர் சாப்பிட்டால் எந்த கேன்ஸரும் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அதற்கு முன்னால் அது பல் எனாமலைக் காலி பண்ணிவிடும் என்கிறார்கள்….