உலக புத்தக தினம் – சிறப்புக் கட்டுரை அயல்பசியும் உறுபசியும் அ.ராமசாமி ஷா நவாஸைச் சிங்கப்பூரில் பார்ப்பேன் என்பது தெரியும். ஆனால், அவரது உணவுத்தோட்டத்திற்குப் போவேன்; அவரே சமைத்த கறிவகைகளை ஒரு வெட்டு வெட்டுவேன் என்றுநினைக்கவில்லை. கடலூரான் ஹாஜா மொய்தீன், ஜெயந்தி சங்கர் தொடர்பு வழியாகத் தொலைபேசியில் ஷாநவாஸ் பேசியபோது மதுரையில் ஒரு உணவுவிடுதியில் முட்டைப்பரோட்டாவும் செட்டிநாடு சிக்கனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அயல்நாட்டுத் தொலைபேசி எண்ணைப் பார்த்து எடுத்துப் பேசியபோது அவரது குரலில் ஒரு நெருக்கம் இருந்தது. உங்கள் பயணத்தில் சிங்கப்பூர் நூலக வாசகர் வட்டத்தில் பேச வேண்டும் என்பதை உறுதியாக்கிவிட்டு, எதுகுறித்துப் பேசலாம் என்பதைப் பின்னர் முடிவு செய்யலாம் என்று சொல்லியிருந்தார். ஷா நவாஸ் என்ற அந்தப் பெயரை மனுஷ்யபுத்திரன் தொடங்கிய உயிரோசையில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தபோது உடன் பயணியாக வாசித்திருக்கிறேன். தொடர்ந்து சாப்பாட்டுப் பண்பாட்டின் பலவிதப் பரிமாணங்களைச் சாப்பாட்டைவிடச் சுவையாக எழுதிக் கொண்டிருந்தார். அரசியல், இலக்கியக் கட்டுரைகள் சலிப்பூட்டும்போது அந்தக் கட்டுரைகளுக்குள் இருக்கும் தகவல்களை வாசித்துவிட்டுத் தனித்துவமான கட்டுரை வகைமை என நினைத்துக் கொள்வேன். அவரது கட்டுரைகளை உதிரி உதிரியாக வாசித்திருந்த என்னிடம் மூன்றாவது கை என்ற சிறுகதைத் தொகுதியையும், அயல்பசி என்ற கட்டுரைத் தொகுதியையும்கொடுத்தார். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பலரும் கொடுத்த நூல்களை வாசிக்கப் போதுமான நேரம் கிடைக்கவில்லை. இரண்டு நூல்களையும் இப்போதுதான் வாசித்து முடித்தேன். வழக்கம்போல உணவைப் பற்றிய பேச்சை ஒரு அறிவுத்துறைப் பேச்சாக மாற்றிக் கலக்கியிருக்கிறார்…