நண்பர்களுடன் ஒரு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் தெற்கு எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்கள் பயணம் செய்தேன். தமிழின் வளமான சில நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளின் அருகில் இருந்துவிட்டு வந்தது போன்ற உணர்வை அளித்தது இந்தச் சிறு பயணம்.
குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி வழியாக, தோவாளை, திருப்பதிசாரம், தேரேகால் புதூர், நாகர்கோயில், பார்வதிபுரம், தக்கலை, பத்மநாபபுரம், திற்பரப்பு, திருவரம்பு, திருவட்டார், குலசேகரம், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, காளிகேசம், அழகியபாண்டியபுரம், தெரிசனம்கோப்பு, பூதப்பாண்டி என்று சுற்றி மீண்டும் ஆரல்வாய்மொழி வந்து சேர்ந்தோம்.
ஒரு சனிக்கிழமை காலையில் பனங்குடியைத் தாண்டி, கிழக்கில் ஓர் அழகிய வானவில் தரிசனத்துடன் எங்கள் பயணம் ஆரம்பித்தது. இடவப்பாதி மழை தொடங்கி ஆரல்வாய்மொழி முழுதும் இனிய சாரலோடு கூடிய காற்று வீசிக்கொண்டிருந்தது. வழி நெடுக காற்றாலைகள் சுற்றிக்கொண்டே இருந்தன.
தேரேகால் புதூர் ஊரைப் பார்த்ததும் நாஞ்சில் நாடனின் விரதம் சிறுகதை உடனே நினைவுக்கு வந்தது. தாழக்குடியும் வீரநாராயண மங்களமும் நடந்து செல்லும் தூரம் தான். அப்போதே வழியெங்கும் காணப்போகும் பழையாற்றுக்கும், கோதையாற்றுக்கும், பறளியாற்றுக்கும், இசக்கியம்மன்களுக்கும், முப்பிடாதிகளுக்கும் தயாராகிவிட்டேன். எழில் நிறைந்த நாகர்கோவில் தக்கலை சாலையிலும் நெடுமங்காடு வனச்சாலையிலும் தான் இரு நாட்களும் பயணம் செய்தோம்.
இரவு முழுக்க மாறி மாறி கார் ஓட்டி வந்தாலும் அனைவருக்குமே அந்த அழகான காலையில் உற்சாகம் மிகுந்திருந்தது. எங்கள் திட்டத்தின் படி நேரே திற்பரப்பு அருவிக்குத்தான் சென்றோம். அந்தப் பசுமையான வழிதோறும் தூறலும், மழையுமாகவே இருந்தது. திற்பரப்பு சென்றடைந்தபோது மிதமான வெயில் இருந்தது.