ஒன்றரை ஆண்டுகளாக வீடுகளுக்குள்ளேயே உறைந்திருக்கும் இந்நாட்கள் ஒரு வித நீண்ட பனிஉறக்கமாகத் தோன்றுகிறது. எவ்வளவு இருண்டதாக, நீண்டதாக, உறைந்ததாக இக்காலம் தோன்றினாலும் ஒளி வரும், பனியுருகும், இந்நிலம் மலரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது மானுடம்.
நோய்த்தொற்று உலகளாவப் பரவத் தொடங்கி, நாடுகள் கதவடைத்து முதல் சில வாரங்கள் இன்னும் ஓரிரு மாதங்கள்தானே இந்த முடக்கம் என்ற சமாதானத்தில் கழிந்தது. மாதங்கள் நான்கைந்து கடந்தபோது, சென்ற காலப் பயணங்களின் நினைவுகளில் ஆழ்ந்தபடி, ஒவ்வொரு பயணமாக, அதன் ஒவ்வொரு தினமாக மீள மனதில் ஓட்டியபடி நகர்ந்தன நாட்கள்.
அது மேலும் தீவிரமாகப் பயணத்துக்கான ஏக்கத்தை அதிகரித்தபோது பயண இலக்கியங்கள் வாசிப்பு, மற்றும் பயண ஆவணப் படங்கள் என நாட்கள் நகர்ந்தன. ஒரு வருடத்தைத் தாண்டியபோது பயணத்திட்டங்களைத் தீட்டிக் கொண்டு நாட்கள் கழிகிறது. செல்ல வேண்டிய இடங்கள், அதற்கான வாசிப்பு என ஆர்வம் மேலிட, கனவுகள் விரிந்தன. காத்திருக்கின்றன.