ஆசியாவிலேயே நீளமான ‘யாங்சி’ ஆற்றங்கரையோரம் உள்ள புராதன நீர் நகரங்களில் ‘வூசென்’ (Wuzhen) மிகவும் அழகான ஓர் கனவு நகரம். நீரில் மிதக்கும் இந்நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட பழங்காலக் கட்டடங்கள் கண்களைக் கொள்ளை கொள்ளும் கால்வாய்களின் மீது அமைந்துள்ளன. ‘ஷாங்காய்’(Shanghai), ‘சுஷோ’(Suzhou), ‘ஹாங்ஷோ’(Hangzhou) ஆகிய நகரங்களை இணைக்கும் ‘தங்க முக்கோணத்தின்’ நடுவில் வூசென் அமைந்துள்ளது. இதனைக் ‘கிழக்கு வெனிஸ்’ என்றும் குறிப்பிடுவார்கள்.
புகைப்படக் கலையில் ஆர்வமுள்ள எங்களுடைய நண்பர் பிரனேஷ், சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் நகருக்குக் குடிபெயர்ந்த புதிதில் வூசென் நகரத்தை, தன்னுடைய தொழில்முறைக் காமெராவில் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தார். அந்தப் படங்களின் அழகில் கவரப்பட்டு ஷாங்காய் சென்றால், இவ்விடத்தை முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். நண்பரின் மனைவி லாவண்யாவும் தங்களுடைய வீட்டிற்கு வரும்படி அன்புடன் அழைத்தபடி இருந்தார். பலமுறை முயற்சித்தும் ஷாங்காய் செல்ல அமையாத வாய்ப்பு 2019 டிசம்பர் மாதத்தில் எதேச்சையாக அமைந்தது.
விமான நிலையத்திலிருந்து நாங்களாகவே டாக்சி பிடித்து, அவர்களுடைய இல்லம் சென்று சேர்ந்தோம். நண்பரின் ஐந்தடுக்கு வீட்டில் குடும்பத்துடன் ஆறு நாட்கள் தங்கி, நகரைச் சுற்றிப் பார்த்தோம். சீனா ஒரு தனி உலகமாகத் தெரிந்தது. அங்கே ‘Google Maps’, ‘WhatsApp’ போல நமக்குப் பழக்கமான செயலிகளைப் பாவிக்க இயலாது. அவற்றிற்குப் பதிலாக, சீனாவில் மட்டுமே பயன்படுத்தப்படும் பிரத்யேக செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். சிங்கப்பூரைப் போலவே அங்கேயும் வீட்டின் அருகிலேயே பெருவிரைவு ரயில் நிலையம் உள்ளதால், நாங்களாகவே நகரில் உள்ள இடங்களுக்குச் ரயிலில் செல்ல முடிந்தது. ஆனால், வூசென் தொலைவில் இருப்பதால், இரு குடும்பமும் ஒன்றாக வாடகைக் காரில் பயணம் செல்ல முடிவு செய்தோம்.