இந்தியர்களின் கலாச்சார பலத்தினை வெளிக்காட்டும் பெரும் கண்காட்சி ஒன்றை ஆறுமாத காலம் நடத்திடும் திட்டத்தை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் 2005ம் ஆண்டு வாக்கில் முன்னெடுத்திருந்தது. “தென்கிழக்காசியவில் இந்தியக் கலாச்சாரங்களின் தாக்கம்” (Early Indian Influences in Southeast Asia) என்பதே அக்கண்காட்சியின் கருப்பொருள். “தென்கிழக்காசியாவில் 13ம் நூற்றாண்டுக்கு முன்னரான இந்திய கலாச்சாரத்தின் வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்டாடுவதே அந்தக் கண்காட்சியின் நோக்கம்” என்பதையும் நூலக வாரியம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில்தான் கண்காட்சிக்கான ஆய்வு மற்றும் வடிவமைப்புப் பணிகளுக்காகத் தேசிய நூலகத்தில் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
‘காலச்சக்கரா’வைப் பற்றிய நினைவுகள் வரும்போது, எனது வாழ்க்கையின் பெருமிதங்களில் ஒன்று சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் சிலகாலம் பணியாற்றும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியமைதான்” என்றும் சிறு கர்வத்துடன் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதும் உண்டு.