இன்றைய உலகில் பெருமளவிலான தகவல்களைத் தொழில்நுட்பமும் ஊடகங்களும் அள்ளியள்ளித் தருகின்றன. ஆயினும் அவை பிள்ளைகளின் அறிவுத் திறனை வளர்க்கக் கூடியதாக இல்லை. ஏனெனில் அறிவுத் திறனை வளர்ப்பதற்கு தகவல்களைச் சேகரிப்பதைவிட வாசிப்புத் திறனை மேம்படுத்துவது அவசியம். ஆனால் புதிய ஊடகங்களின் அறிமுகம் வாசிக்கும் திறனை மட்டுப்படுத்திவிட்டது. உலகம் கணினி மயமாவதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது தீவிர வாசிப்பு குறைந்து வருகிறது என்று கூறலாம்.
‘பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்’ என்பது தமிழ்ப் பழமொழி. மனிதன் வாழ்நாள் நெடுகப் படிப்பதோடு, வாழ்வு முடிந்து இறுதிப்பயணம் மேற்கொள்கின்ற போதும் ஒரு நூலோடு செல்ல வேண்டும் என்று பொருள்படுகிறது. அத்தகைய வாசிப்புப் பழக்கமே கற்றலுக்கான அஸ்திவாரம்.
நம்மில் பலர் புத்தகங்களைப் படிப்பது கிடையாது. இப்போதைய தொழில்நுட்ப வசதிகளால் பலர் படிப்பதைவிட பார்ப்பதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள், கேலிச்சித்திரங்கள் மற்றும் வெளிப்புறத்தில் காணும் ஓவியங்கள், சமூக வலைத்தளங்களில் காணும் ஒளிக்காட்சிகள் போன்றவற்றைப் பார்ப்பதனால் மட்டுமே கற்றல் நிறைவேறிவிடுமா? கற்றல் என்றால் என்ன?
ஒன்றின் மீது மையம் கொள்ளும் அறிவின் முயற்சியே கற்றல். திருவள்ளுவர் கல்வி பற்றிப் பேசும் இடத்தில் படித்தல் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. படிக்கும்போது மனதில் படிவது பாடம் என்றாலும் அதனால் என்ன பாடம் கற்கிறோம் என்பதே முக்கியமானது.
ஆனால் கல்வி என்னும் சொல் “கல்லுதல்” என்கிற தோண்டுதல் பொருளைச் சுட்டுகிற சொல்லிலிருந்து பிறந்தது. கல் என்னும் திடப்பொருள் மண் அடியிலிருந்து ‘கல்வி’ எடுக்கப்பட்டதால் கல்லுக்கு அப்பெயர் வந்தது என்று வேர்ச்சொல் ஆய்வு நமக்கு விளக்குகிறது.