பன்முகத் தன்மையில் பெருமை கொள்ளும் – கொண்டாடும் என்றேகூடச் சொல்லலாம், ஒரு தேசம் சிங்கப்பூர். அந்தப் பன்முகத் தன்மையை அதன் தமிழ் இலக்கியத்திலும் பார்க்கலாம். என்னுடைய நூலகத்தில் நாஸ்டால்ஜியாவோடு சிங்கப்பூரின் மாற்றத்தை அசைபோடும் கண்ணபிரானின் சிறுகதைத் தொகுப்பும், மேஜிக்கல் ரியலிசத்தை முயற்சித்துப் பார்க்கும் மாதங்கியின் சிறுகதைத் தொகுதியும் அடுத்தடுத்து அமர்ந்திருக்கின்றன. அங்கு இக்பாலும் லதாவும் உரையாடுகிறார்கள்,
ஜே.எம். சாலியும் ஜெயந்தி சங்கரும் சந்தித்துக் கொள்கிறார்கள், இளங்கண்ணனும் சூரியரத்னாவும் எதிரெதிரே நிற்கிறார்கள். சமகாலச் சமூகத்தை ஷாநவாசும், சரித்திரத்தை கோட்டி திருமுருகானந்தமும் பதிவு செய்கிறார்கள்.