அதிவேக ரயில் பிடிக்க
ஈசலென மோதிப் போகிறீர்கள்
‘வருத்தங்களும் மன்னியுங்களும்’
புறத்தே உருக்கொண்டு புறத்திலே
மரித்துவிழ!
மின்தூக்கியில் அருகாண்மை
துருத்தி வெளித்தள்ள முயலும் அமைதி
பயத்தின் விரல்கள் பதறிட
நாற்புறமும் சுவரைச் சுரண்டும் விழிகள்.
உணவு விடுதியில்
எதிர் ஆளாய் அமர நேரிட்டால்
மலரக் கூசி
கையடக்கத் தொலைபேசியில்
கதைக்கத் துவங்குகிறீர்கள்…
கரிசனத்தை இழந்து
வாழ்வில் அர்த்தமுள்ளதாய்
எதையெல்லாம் பெறுவீர்கள்
புன்னகைக்கும் முகம் பார்க்க ஏங்கும்
என்னை என்ன செய்ய
உத்தேசிக்கிறீர்கள்…