மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டில் பிரிந்தபோது, ஆங்கிலக் கல்வி கற்ற தமிழர்களுக்கும், தமிழை முதன்மையாகப் பயன்படுத்திய தமிழர்களுக்கும் இடையே காலனித்துவத் தாக்கத்தால் ஒரு பண்பாட்டு இடைவெளி உருவாகியிருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தமிழிலக்கியம் வளர்க்கும் பணி தமிழைப் பயன்படுத்திய தமிழர்களின் கைகளில் விடப்பட்டது. அத்தமிழரிடையே இலக்கியவாதியாக ஆவதென்பது உன்னதமான சாதனையாகக் கருதப்பட்டது. இந்த மனப்பாங்கு காலனியாதிக்கக் காலத்தின் இறுதியில் வேரூன்றி, பின்காலனித்துவக் காலத்தில் தமிழ்நாடு, மலாயா, சிங்கப்பூரில் நன்கு வளர்ந்திருந்தது.
பெரும்பான்மையான தமிழ் எழுத்தாளர்கள் கூலித் தமிழர்களாகவும் குறைந்த வருமானம் பெறுபவர்களாவும் இருந்தனர். இவர்கள் முறையான கல்வி அற்றவர்களாகவும், அன்றாட ஊதியம்பெறும் உடலுழைப்புத் தொழிலாளர், முடிதிருத்துவோர், சாலைப்பணியாளர், துறைமுகக் கூலி எனப் பலவிதமான வேலைகளைச் செய்தவர்களாகவும் இருந்தனர். சில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டனர், வேலை இல்லாமல் இருந்தவர்களும் இருந்தனர்.