பாரதி தன் 38ஆவது வயதில் மறைந்து (11.12.1882 – 11.09.1921) ஒரு நூற்றாண்டு ஓடிவிட்டது. இந்த நான்கு தலைமுறைக் காலத்தில் சாதரணமாகப் புலவர் என்று தொடங்கி கவி, புரட்சிக்கவி, தேசியக்கவி, மகாகவி என்று பாரதியின் இடம் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது. வள்ளுவர் ‘தெய்வப்’புலவர் ஆகியதுபோல பாரதியும் விரைவில் ‘தெய்வக்’கவி ஆகவும் கூடும்.
பாரதியைக் கடவுளாக அல்லாமல் ஓர் ஆசிரியர் நிலையில் வைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. ஏனெனில் ஓர் ஆசிரியரிடம் நாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் அதேநேரத்தில் அவரிடம் கேள்விகளைக் கேட்கிறோம், உரையாடுகிறோம். திருக்குறள் ஒரே பிரதிதான். ஆனால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் அதற்கு வெவ்வேறு உரைகளை எழுதியிருக்கின்றனர். அவ்வகையில் கடந்த ஈராயிரமாண்டுகளாக நாம் வள்ளுவருடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறோம். ஆகவேதான் திருக்குறள் இன்றும் புதிதாக இருக்கிறது. அப்படியான உரையாடும் இடத்தில்தான் நாம் பாரதியையும் வைக்க வேண்டும்.
அனுபவம். அதுவும் நமக்கு வேண்டும். அதேவேளையில், பாரதி மறைந்து நூற்றாண்டு கடந்திருந்தாலும் அவன் இன்றும் பொருத்தமான கவிஞனாக, சிந்தனையாளனாக நீடிக்கிறானா என்று அணுகி உரையாடியும் பார்க்க வேண்டும். அவ்வாறு அவனுடன் உரையாடியபோது புலப்பட்ட சில பார்வைகளை இக்கட்டுரையில் உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.