வெளிநாட்டுப் பயணங்களுக்கான அழைப்புகளைப் பொதுவாகவே ஜே.கே. தவிர்த்துவிடுவார் என்பதை எஸ்.பொ. நன்கு அறிந்திருந்தார். அதனால் “எப்படியாவது ஜே.கே.யிடம் சம்மதம் பெற்றுத் தாடாப்பா…” என உரிமையுடன் எனக்குக் கட்டளையிட்டுவிட்டார். எதையாவது கேட்டு ஒருமுறை மறுத்தாரென்றால் ஜே.கே.யிடம் மீண்டும் அதேவிடயத்தை யாரும் கேட்க முடியாது. கடுப்பாகிவிடுவார். பின்பு எந்தக் கொம்பன் கேட்டாலும் இல்லை என்பதுதான் பதிலாக வரும்.
இதெல்லாம் தெரிந்து வைத்திருந்த நான், ஜே.கே.யின் குரல் குதூகலமாயிருந்த ஒரு கணத்தில் எஸ்.பொ.வின் வேண்டுகோளைத் தயங்கித் தயங்கி அவிழ்த்துவிட்டேன். “அப்டியா? எஸ்.பொ. கேட்டால் மறுப்பேது… சரின்னு சொல்லுங்க. நம்ம மலேசிய எழுத்தாளர்களின் புஸ்தகம்னு வேறு சொல்லுறீங்க… ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லுங்க… இன்ஷா அல்லாஹ்… நான் வருகிறேன்.” என்றவர், “நீங்களும் வந்துடுவீங்கதானே…” என்றார். “நான் வராமலா… நிச்சயம் வருகிறேன் ஐயா…” என்று சொல்லியும் விட்டேன். எஸ்.பொ. நிம்மதியானார். இதுதான் அந்த முன்கதை.