சிறுகதையின் லட்சணங்களைப் பற்றிய ஒரு சொற்பொழிவு அன்று நடைபெற்றது. அடுத்த மாதம் கடைசி சனிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் ஓ ஹென்றியின் கதையொன்று வாசிக்கப்பட்டு எல்லோராலும் விமர்சிக்கப்பட்டது. மற்றொரு மாதம் சிதம்பரம் சுப்ரமணியம் எழுதிய ஒரு சிறந்த கதையைப் பற்றிய விமர்சனம் நடந்தது. நல்ல சிறுகதைக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள், இருக்கக் கூடாத விஷயங்கள் எவை எவை என்பதை ஒவ்வொருவரும் தாமாக உணரத் தொடங்கினார்கள்.
பிறகு, மலாயா எழுத்தாளர்களின் கதைகளையே விமர்சிப்பது என்று தீர்மானித்தோம். மறுபடியும் கூட்டத்துக்கு வருவதற்குமுன் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு சிறுகதையை எழுதியனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அவ்வண்ணமே பல கதைகள் வந்தன. அவற்றில் இரண்டைத் தேர்ந்தெடுத்து, கூட்டத்தில் வாசித்தோம். வந்திருந்த முப்பது எழுத்தாளர்களும் விமர்சனத்திலும் விவாதத்திலும் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வாக்கியமுமே அலசி ஆராயப்பட்டது. வேண்டாத வளர்த்தல்கள், மேலும் விரிவாக எழுதப்படவேண்டிய கட்டங்கள், பாத்திர சிருஷ்டியின் குறை நிறைகள், அர்த்தமற்ற அடுக்குச் சொற்கள், விஷயத்தின் கௌரவத்தைக் கெடுக்கும் பாஷை நடை, எழுத்துப் பிழைகள் முதலிய எத்தனையோ விஷயங்களை ஒவ்வொருவரும் தெள்ளத் தெளிவாகக் கண்டு கொள்ளத் தொடங்கினார்கள்.