இரு தெருக்களின் கதை | நகர்மயமாதலும் நீடிக்கும் நினைவுகளும் | முனைவர் அ.வீரமணி

ஒரு பழைய சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. பஃப்ளோ சாலையை ஒட்டியிருந்த ஒரு சந்தில் நானும் என் அக்காவும் விளையாடிக்கொண்டிருந்தோம். எங்கள் வீடு அங்குதான் இருந்தது. எனக்கு அப்போது சுமார் இரண்டு வயது இருக்கும். கணுக்கால், இடுப்பு, கழுத்து, மணிக்கட்டு, விரல்கள் என்று உடலெங்கும் நகைநட்டுகளோடு இருந்த நான் தங்கத்தின் மதிப்பு தெரியாமல் மோதிரம் ஒன்றைக் கழற்றி விளையாடினேன். அது சடக்கென உருண்டோடி தரையில் இருந்த ஒரு துளைக்குள் நுழைந்து மறைந்தது.
என் ஒன்பது வயது அக்கா அத்துளைக்குள் விரலை நுழைத்து மோதிரத்தை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றாள், ஆனால் பலிக்கவில்லை. இறுதியில் அக்கம்பக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பொற்கொல்லர் கடைகளில் இருந்தவர்களின் உதவியை நாடினாள். கொஞ்சநேரத்தில் பஃப்ளோ சாலையிலிருந்த மொத்த பொற்கொல்லர் சமூகமும் மோதிர மீட்புப் பணிக்காகத் திரண்டுவிட்டது. பஃப்ளோ சாலை மக்களிடையே 1940களிலிருந்த சமூக உணர்வை விளக்க என் தாய் இச்சம்பவத்தை விவரிப்பது வழக்கம்.
பல்லாண்டுகள் கழித்து, ஒரு பதின்ம வயதுப் பையனாக, பள்ளிக் கலாச்சார விழாவுக்காக மேடைப்பின்னணித் திரைச்சீலை சேகரிக்கச் சிங்கப்பூரில் சுற்றியலைந்த நான், நோரிஸ் சாலையிலிருந்த மூன்றுமாடிக் கட்டடம் ஒன்றின் நெட்டுக்குத்தான படிகளில் ஏறினேன். அக்கட்டடத்தின் மொட்டைமாடியில், தகரக் கூரை வேயப்பட்டிருந்த மரக்கொட்டிலில், இருந்த தமிழ்ச் சமூக அமைப்பொன்றின் தலைமையகம் என்னை வரவேற்றது.
புன்னகையுடன் அதிலிருந்து வெளிப்பட்ட ஒருவர் என்னை வரவேற்று அங்கு ஒரு மூலையிலிருந்த ஐந்து திரைச்சீலைகளை பள்ளிக்கு எடுத்துச்செல்லலாம் என்று என்னிடம் சொன்னார். அவர் என் அடையாள அட்டையைக் கேட்கவில்லை, பள்ளியின் பெயரைக் கேட்கவில்லை. இத்தனை நாட்களுக்குள் திருப்பிக் கொண்டுவரவேண்டும் என்று தேதிகூடக் குறிக்கவில்லை. என்னைப்பார்த்து, சமூகத்தின் இளையருக்காகவும் இளையர் மேம்பாட்டுக்காகவும் தன் அமைப்பு அனைத்தையும் கொடுக்கும் என்றார். அவர்தான் மா.சி. வீரப்பன் என்பது எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது.
இவ்வாறாக பஃப்ளோ சாலை, நோரிஸ் சாலை இவ்விரு சாலைகளும் எவ்வாறு என் சொந்த வாழ்க்கை அனுபவப் பின்புலத்தில் அமைந்துள்ளனவோ அதுபோலவே சிங்கப்பூரில் தமிழர்தம் சமூக, அடையாள உணர்வுகளை பொருள்பொதிந்த ஒன்றாக ஆக்கும் வகையிலும் அமைந்துள்ளன. கடந்த அறுபதாண்டுகளில் நகர மறுசீரமைப்பினாலும் இன்னபிற அரசாங்கக் கொள்கைகளினாலும் இவ்விரு சாலைகளும் மாற்றங்களை அடைந்துள்ளன.
மாற்றங்கள் மேம்பாட்டைக் கொண்டுவருகின்றன என்று நாம் இயல்பாக அனுமானித்துக் கொள்கிறோம். ஆயினும் நாகரிகம், முன்னேற்றம், நவீனம் இவற்றைக் குறித்த ஆய்வுகள் அண்மைக்காலத்தில் வேறுவிதமாகவும் பேசத் தொடங்கியுள்ளன. இடம் தனது தனித்தன்மைக்கு அழிவு வரும்போது அவ்வழிவையே குழப்பிவிடுகிறது. ஊடுருவ ஏதுவான இடத்தின் எல்லைகள் வரலாற்று அனுபவங்களை உள்வாங்க இடமளிக்கின்றன. தனிமனித நினைவுகளில் சில தருணங்களைத் தேவைக்கேற்ப மீட்டுக்கொள்ளும் வகையில் தக்கவைக்கின்றன.

This content is for paid members only.
Login Join Now