காட்சிகள் மாறிவிட்டன, மனநிலையும் மாறிவிட்டது

0
216

அறுபதுகளின் பிற்பகுதி வரையிலும் சீனப் புத்தாண்டு மிகவும் கோலாகலமாக, நீண்ட நாட்கள் கொண்டாடப்பட்டது. பகலும் இரவும் பட்டாசு சத்தம் தொடர்ந்து எழும். அதிலும் புத்தாண்டின் கடைசிநாள் உச்சத்தை எட்டும், தூங்குவதற்குச் சிரமமாக இருக்கும். சீன ஆசோ, அபே மார்கள் மரபான ஆடைகளை உடுத்திக்கொண்டு தம் கோவில்களுக்குச் செல்வதையும், உறவினர்களைப் பார்க்க வருவதையும் காணலாம்.

சந்தைகளோ கடைகளோ உணவகங்களோ ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு செயல்படாது. எனவே சிங்கப்பூரர்கள் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் முன்கூட்டியே வாங்கிச் சேகரித்துக்கொள்வர். காபிக்கடைகள் சீன முதலாளிகளுக்குச் சொந்தமானவை. இந்தியர், மலாய்க்காரர் சாப்பாட்டுக்கடைகள் காபிக்கடைகளில் ஒரு ஓரமாக இருந்தன என்பதால் அவர்களும் வேறு வழியின்றி ஒரு மாதத்திற்கு மூடிவிடுவர். மிதிவண்டியில் ரொட்டி, பிஸ்கட் விற்கும் பாயிடமிருந்து மட்டுமே சிலவற்றை வாங்கவியலும். சாப்பாட்டுத் திண்டாட்டம் பெரிதாக இருக்கும்.

முகமது முஸ்தபா

இப்போது எல்லாம் முற்றாக மாறிவிட்டன. சந்தைகள், கடைத்தொகுதிகள், உணவுக்கடைகள் சீனப்புத்தாண்டு தினங்களிலும் பெரிய மாற்றங்களின்றிச் செயல்படுகின்றன. சீனர்களில் பலரும் டாக்சி ஓட்டுவது உட்படப் பல்வேறு வேலைகளை நிறுத்தாது செய்கின்றனர். சீனப் புத்தாண்டு தினங்களை ஓய்வு, உறவாடல், கொண்டாட்ட தினங்களாகக் கருதிய மனநிலை மாறி அவற்றை வருமானம் அதிகம் ஈட்டக்கூடிய தினங்களாகப் பார்க்கும் மாற்றம் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது என்பது என் பார்வை.