சிகரி மார்க்கம்

முகம்மது ரியாஸ்

எங்கள் ஊரில் வள்ளத்தில் போகின்ற மீனவர்கள் சொல்வார்கள். கரையிலிருந்து ஐந்துபாக தூரத்தில் படகை நிறுத்தி சிறிய மீன்களுக்கு வலைபோட்டால் சில நேரங்களில் அதிசயமாக ஆவுளியா மீன்கள் அகப்படுமாம். எளிதில் அகப்படாத ஆவுளியா தங்கள் வலையில் மாட்டினால் ’ங்கொம்மா சுரக்கா’ என்று மீனவர்கள் தங்கள் தொடைகளைத் தட்டி ஆரவாரம் செய்வார்கள். மருந்துக்கு உதவும் ஆவுளியா மீனை அரசாங்கத்தின் கண்ணைக் கட்டி விற்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனாலும் ஆழ்கடல் வாசியான ஆவுளியா தானாகச் செத்து கரையொதுங்கும்போது ஆரவாரத்தைப் பார்க்கவேண்டும். சிறார் அந்த மீனை கரைமுழுதும் கொண்டாட்டமாக உருட்டிக்கொண்டே செல்வர். அந்த ஆவுளியாபோல நாங்கள் எட்டுபேர் அவர்களிடம் மாட்டிக்கொண்டோம்.

திருப்பிக் குத்தலாம் என்றால் அவனிடம்
 மூக்கு அவ்வளவு பெரிதாக இல்லை. 
இந்தோனேசியர்களுக்கே உரிய சிறிய மூக்கு

அவர்களின் முகத்தில் அப்படியொரு ஆரவாரம்! எங்களைப் பிடித்து கடற்கரையில் இழுத்துச் சென்றார்கள். ஒரு பயன்பாட்டில் இல்லாத பெரிய ‘கன்டைனரில்’ எங்களை அடைத்தார்கள். என் மூக்கில் அவர்களில் ஒருவன் வலுவாகக் குத்து விட்டிருந்தான். லேசாக ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. வலியால் துடித்தேன். மிரட்டுவதற்கும் விசாரிப்பதற்கும் தோதாக ஒரு பயத்தை எங்களிடையே உருவாக்கவே என்னை அவன் அடித்திருக்கவேண்டும்.

ரிடா எனக்குப் பின்புறமாக ஒளிந்துகொண்டிருந்தாள். “அவன் கிலா, பைத்தியக்காரன்! அவனோடு மல்லுக்கட்ட வேண்டாம்” என்பதுபோல சைகைசெய்துகொண்டிருந்தாள். அவன் ஏதாவது செய்துவிடுவானோ என்று அவளுக்கு பயம். அவள்பக்கம் அவன் நெருங்கி வந்தான். அவனைத் திருப்பிக் குத்தலாம் என்றால் அவனிடம் மூக்கு அவ்வளவு பெரிதாக இல்லை. இந்தோனேசியர்களுக்கே உரிய சிறிய மூக்கு. ரிடா என் கையைப் பிடித்தாள். நாங்கள் நம்பும் புதிய ஆரம்பத்தைக் குறித்த அவளது கவலை எனக்குப் புரிந்தது. எப்படியாவது அங்கிருந்து தப்பித்து கரீமுன் தீவுகளுக்குப் போய்விட்டால் நாங்கள் இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடங்கிவிடலாம்.

| 2 |

என்னையும் இதர ஆட்களையும் கன்டைனருக்குள் அழைத்துச் செல்லும்போது காய்கறிகள் கொள்முதலுக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. காய்களை அப்போதுதான் பறித்திருப்பார்கள்போல பச்சை வாசனை. தூரத்தில் அலைகள் இரைவது கேட்டது. நாங்கள் சட்டவிரோதமாகக் குடியேற முயன்றதால் எங்கள் பொருட்களைப் பறிமுதல் செய்வதாக அவர்கள் கூறினார்கள். எல்லோரையும் குத்துக்காலிட்டு அமரவைத்திருந்தார்கள். பழைய பொருட்கள், எரிபொருள் துடைக்கும் துணிகள், மீன் வலை, பெயிண்ட் டப்பாக்கள் குவிந்துகிடந்தன. ஒரு எலி பழைய பொருட்கள் மீதேறி தான் செல்லவேண்டிய வழியைத் தேடிக்கொண்டிருந்தது. வழமையான வழியைத் தவறவிட்டது போல ஒரு மூலையையே சுற்றிச்சுற்றி வந்தது.

தானொரு கடலோரப் பாதுகாப்பு அதிகாரி என்றும் எங்களுக்குக் குடியேற்ற விதிமுறைகளை அறிவுறுத்தவும், அந்நாட்டு விதிமுறைகளை மீறினால் என்னவாகும் என்பதை எச்சரிக்கவும் ஒரு தேவதூதனாக வந்திருக்கிறேன் என்றும், உண்மையைக்கூறி விசாரணைக்கு ஒத்துழைத்தால் வெளியே போய்விடலாம் என்றும் அதில் ஒருவன் சொன்னான்.

மிக நளினமாகத்தான் அவன் பேச்சு மலாயும் பஹாசா இந்தோனேசியாவுமாய் கலந்து இருந்தது. அவன் குடித்திருந்தான். பார்ப்பதற்கும் ஒரு குடிநுழைவு அதிகாரியைப் போலவோ ரோந்து செல்லும் கடலோரக் காவற்படை அதிகாரியைப் போலவோ எனக்குத் தோன்றவில்லை. பலநாட்கள் கடலிலேயே கிடக்கும் ஒரு கடலோடிக்குரிய தோரணை. அவன்மீது அவ்வளவு உப்பு பூத்திருந்தது. அருகில் வந்தால் ஏதோ எரிபொருளின் நாற்றம் எனக்குக் குடலைப் புரட்டிக்கொண்டு வந்தது. தன் பாக்கெட்டிலிருந்து பாக்கு போன்ற பொருளை எடுத்து வாயில்போட்டு மென்றுகொண்டிருந்தான்.

எல்லாம் செட்டிங்தான், எங்கு போவதென்றாலும் செட்டிங்தான்.
 பணத்தை அடித்தால் எந்தக் கதவுகளையும் திறந்துவிடும் 
பயண முகவர்கள் இருக்கிறார்கள்.

அவன் எங்களிடம் ஓர் அதிகாரியைப்போல் மிடுக்காக நடந்துகொள்ள முயன்றான். அவனுடன் விறைப்பாக முகத்தை வைத்துக்கொண்டிருந்த இரண்டுபேர் எங்களிடம் அக்கரைக்குச் செல்லும் முறையான ஆவணங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்கள் பைகளில் இருந்த கடவுச்சீட்டுகளை காண்பித்தனர். எல்லா ஆவணங்களையும் வரிசையாகச் சரிபார்த்தவன், சிறிய சவ்வுத்தாளில் சுற்றியிருந்த எனது ஆவணங்களைப் பார்த்ததும், என் பெயரைக் கூறி அழைத்தான். நான் கையைத் தூக்கினேன்.

“உன்னிடம் ஏன் மலேசியாவில் வேலை பார்க்கும் பெர்மிட் பேப்பர் இல்லை?”
 “….”

நான் ஜொகூருக்குப் புதியவன் இல்லை. நான் இருக்குமிடம் ஜோகூரிலிருந்து இருபது கிலோமீட்டருக்குள் இருக்கும் செம்பனைத் தோட்டம். ஆனால் என்னிடம் முறையான ஆவணங்கள் எப்போதுமே இருந்ததில்லை. எல்லாம் செட்டிங்தான், எங்கு போவதென்றாலும் செட்டிங்தான். பணத்தை அடித்தால் எந்தக் கதவுகளையும் திறந்துவிடும் பயண முகவர்கள் இருக்கிறார்கள். அப்படித்தான் இவ்வளவு காலமும் மலேசியாவில் ஓடியது.

| 3 |

கடவுச்சீட்டில் இருக்கும் என் புகைப்படத்தையும் என்னையும் பொருத்தி குனிந்தும் நிமிர்ந்தும் பலமுறை பார்த்தான். என் அருகில் இருந்த ரிடாவையும் பார்த்தான். பிறகு சிரித்தான். எங்கள் இருவரின் ஜோடிப்பொருத்தம் அப்படி. நானும் ரிடாவும் ஒன்றாக நடந்தால் எங்களை ‘ஹிதாம் புத்தி..’ என்பார்கள். பழைய படங்களில் வரும் கருப்பு வெள்ளைக் காட்சி. அவனுடைய சிகரெட் கரைந்து சாம்பலில் கொஞ்சம் கடவுச்சீட்டில் விழுந்தது. “ஓராங் கிளிங்” என்றான். நான் சும்மா இருந்தேன். மீண்டும் சிரித்தான். எனக்கு அது பெரிய அவமானமாகத் தெரியவில்லை.

 நான் வசித்த கம்பத்திலும் என்னைக் ’கிளிங்’ என்றுதான் அழைத்தார்கள். ரிடாவைத் திருமணம் செய்ய முறையான ஆவணங்களை வைத்து விண்ணப்பித்தபோதுகூட இந்தோனேசிய அரசாங்க அலுவலகத்தில் என்னை அப்படித்தான் அழைத்ததாக ரிடா என்னிடம் கூறினாள். நிறம், இனம், மொழி, வயது எல்லாம் குறுக்கே வந்ததில் திருமண முயற்சி தோல்வியடைந்தது. ‘கிளிங்’ என்று அவர்களுக்குப் பொருள்பட்ட என் கருப்பு தேகத்தை ரிடா ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. எங்களிடையே மலர்ந்த அளவற்ற நேசத்திற்கு நிறம் தேவைப்படவில்லை.

ரிடா ஜொகூருக்கு வேலைதேடி வந்தவள். ஒருநாள் என் கடைவாசலில் நின்றுகொண்டு ‘பிஞ்சாம் தோலாங்’ என்றாள். கள்ளத் தோணிகளில் பாத்தாமிலிருந்து கடல்கடந்து ஜொகூரில் தாரளமாக வந்திறங்கும் பெண்கள் இப்படித்தான் வேலை கேட்பார்கள். ரிடா வந்தபோது என் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவள் – அவளும் கள்ளத் தோணிதான் – ஊருக்குப் போயிருந்தாள். போனவள் திரும்பிவர கடல் மாதா அருள்புரியவில்லை என்கிறாள். அடுக்களையிலும், தேநீர் கலக்குமிடத்திலும், சாப்பாட்டு மேசையிலும் நானே வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கும் ஆள் தேவைதான்.

மீகோரிங் தட்டையைத் தட்டிவிட்டு, வேலைகேட்டு நின்றவளைப் பார்த்தேன். அதற்குள் ரிடா என் பதிலுக்குக் காத்திராமல் மேசையைத் துடைக்க ஆரம்பித்துவிட்டாள். கண்ணாடிக் கோப்பைகளை கழுவுமிடத்தில் கொட்டினாள். பசையை நார்களில் தேய்த்து கண்ணாடிக் குவளைகளில் இருந்த வடுக்களின் வட்டங்களைச் சரியாக நீக்கியெடுத்தாள். பிறகு அடுக்களையில் இருந்த கிண்ணங்களில் சோயா சாஸ், உப்பு, காரட், முட்டைக்கோஸ் துருவல்களைக் கோப்பைகளில் நிறைத்தாள். அவளின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு நேர்த்தி இருந்தது.

மீகோரிங் தட்டையைத் தட்டிவிட்டு, வேலைகேட்டு நின்றவளைப் பார்த்தேன். அதற்குள் ரிடா என் பதிலுக்குக் காத்திராமல் மேசையைத் துடைக்க ஆரம்பித்துவிட்டாள். கண்ணாடிக் கோப்பைகளை கழுவுமிடத்தில் கொட்டினாள். பசையை நார்களில் தேய்த்து கண்ணாடிக் குவளைகளில் இருந்த வடுக்களின் வட்டங்களைச் சரியாக நீக்கியெடுத்தாள். பிறகு அடுக்களையில் இருந்த கிண்ணங்களில் சோயா சாஸ், உப்பு, காரட், முட்டைக்கோஸ் துருவல்களைக் கோப்பைகளில் நிறைத்தாள். அவளின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு நேர்த்தி இருந்தது.

| 4 |

நேற்று இரவு கடையில் நிகழ்ந்த பிரச்சனைக்குப் பிறகு அங்கிருந்து தப்பித்து ரிடாவின் கம்பத்திற்குத் திரும்பிவிடுவதே நல்லது என்று இருவரும் நம்பினோம். எங்களுக்கு சிடீ நினைவுக்கு வந்தான். அவன் தென்சீனக் கடற்கரை ஓரமாக வாழும் பழங்குடி மீனவ இனத்தவன். பாரம்பரியமிக்க மீன்பிடிப் பகுதிகளில் பெரிய கப்பல்கள் அவர்களது மீன்வலையை கிழித்தெறிந்தபோது நிகழ்ந்த கலவரத்தில் முதன்முறையாக சிறைக்கு சென்றவன். பின்பு அவனது கம்பத்தில் இருந்து மீன்பிடித் தொழிலைவிட்டுவிட்டு துறைமுகத்திற்கு வேலைக்குப்போகும் எல்லாரையும்போல இருக்க அவனுக்கு பிடிக்கவில்லை.

இந்தோனேசியாவில் இருந்துகொண்டு கடல் பயணங்களை ஒழுங்குபடுத்தும் பயணமுகவர்கள் கள்ளத்தோணிப் பயணங்களுக்கு ஆளரவம் இல்லாத கடற்கரையைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். யாராலும் கண்டுபிடிக்கமுடியாத பதினேழு இடங்கள் மூவாருக்கும் மெர்சிங்குக்கும் இடையில் மலேசியாவில் இருப்பதாகவும் ஒருவழி அடைபட்டாலும் மறுவழி கைவசம் தன்னிடம் எப்போதும் இருக்கும் என்றும் சிடீ சொன்னான்.

முறையான அனுமதியின்றி மலேசியாவில் முடங்கிக் கிடக்கும் நாங்கள் இந்தோனேசியாவுக்குத் திரும்பிச்செல்வது என்றால் செட்டிங்தான் அடிக்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் குடிநுழைவு அதிகாரிகளால் எந்நேரமும் கைது செய்யப்படலாம். சிடீயை அவசரமாகத் தொடர்புகொண்டு கெஞ்சினோம். இன்று பாத்தாமிலிருந்து வரும் படகில் ஏறிக்கொள்ளலாம் என்று தகவல் சொன்னான்.

ஒரு பழைய பனியன் சட்டை, ஒரு பழைய ஜீன்ஸ், கறைபடிந்த ஓட்டைப் பற்கள் இவற்றை வைத்துக்கொண்டு இரண்டு பெரிய நாடுகளின் கடல்பரப்பில்அவன் நிகழ்த்தும் அதிசயம்! அவனிடம் அபயம் என்று நிற்கும் பெண்களிடம் எச்சிலொழுகப் பேசுபவனிடம் என்ன சவடால் இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுக் கடலுக்குள் படகோடு மூழ்கிவிடுவான். பின்பு நீருக்குள்ளிருந்து எழுவான் என்று கரீமுன் தீவுகளில் சிடீக்குச் செல்வாக்கு அதிகம்.

நள்ளிரவில் அதிவேக மோட்டார் பொருத்திய மீன்பிடிப் படகுகளில் தென்சீனக் கடலையொட்டிய கரைகளிலிருந்து பயணிகளையும் சாமான்களையும் ஏற்றுவான். அவனுக்கு உளவும் ஒத்தும் கடல் மாதாதான். அவன் காதுக்குத் தகவல்களை அவள் முடிச்சுப்போட்டு அனுப்புகிறாள். காற்றுக்கும் உளவுக்கும் ஏற்ப அவன் ஒவ்வொரு நிறுத்தத்திலும் கடலுக்குள் காத்திருப்பான். பெரிதாகக் கர்த்தரை வேண்டிக்கொள்வான்.

என் கருப்பு தேகத்தை ரிடா ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.
 எங்களிடையே மலர்ந்த அளவற்ற
 நேசத்திற்கு நிறம் தேவைப்படவில்லை.

படகைக் கிளப்பும்முன் கடல்நீருக்குமேல் காதை வைத்து எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொள்வான். பின் கடல் மாதாவுக்கு ஒரு சிறிய திருப்பலி. அதன்பிறகு எத்தனை சீற்றத்திற்கும் படகு நிற்காது. ஒரு மீன்பிடிப் படகுக்குரிய எல்லா அனுமதிகளையும் வைத்திருந்தான் என்றாலும் ஒரு கள்ளத்தோணிக்குரிய எல்லா லட்சணங்களும் அவன் படகுக்கு இருந்தன. கடல் ரோந்துப் படகுகளின் வேகத்தையும் இடைவெளிகளையும் கணித்து வைத்திருப்பான். அந்த இடைவெளிகளில் மிக லாவகமாக படகுகளைச் செலுத்தி அக்கரை சேர்ந்துவிடுவான்.

சிடீயின் கணிப்பு தவறவில்லை. நாங்கள் செல்லவேண்டிய படகு நேற்று அதிகாலை சரியாக மூன்று மணிக்கு கரீமுன் தீவுகளிலிருந்து ஜோகூர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. சிடீயின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு மணிக்கே தன்சோங் பியாய் கரைக்கு வந்திருந்தோம். ரிடா அவன் பகிர்ந்திருந்த ஜிபிஎஸ் புள்ளிகளை வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் எங்களைக் ‘கைதுசெய்ய’ கார் வந்தது. அந்த மஞ்சள் காரின் வெளிச்சத்தில் எங்களோடு பயணம் செய்யவிருந்த பெண்களில் இருவர் மலைக்குன்றுக்குப் பின்னால்சென்று எதையோ தங்களது ஆடைகளுக்குள் மறைத்துக்கொள்வது தெளிவாகத் தெரிந்தது.

| 5 |

அதிகாரியாக எங்களிடம் அறிமுகம் செய்துகொண்டிருந்தவன், நேரம் செல்லச்செல்லத் துன்புறுத்த ஆரம்பித்தான். மூக்கை மீண்டும் தடவிக்கொண்டேன். ஆவணங்களை கிழித்துவிட்டு எங்களைச் சிறையில் அடைத்துவிடுவதாக மிரட்டினான். எங்கள் எட்டுப்பேரில் ஐந்து பணிப்பெண்கள் இருந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். எல்லோருடைய வாயும் சிடீயின் பெயரைத்தான் உச்சரித்துக்கொண்டு இருந்தது. உண்மையான குடிநுழைவு அதிகாரிகளாக இருந்தால் இந்நேரம் சிறைக்குக் கொண்டு சென்றிருப்பார்கள். போதை ‘லொம்பாக்’ ஆக இருந்தால் இன்னும் சிக்கல். லொம்பாக் பத்து வெள்ளிக்குக்கூட கொலை செய்துவிடுவார்கள்.

ரிடா எங்கள் ஜோகூர் மலாய் கம்பத்தின் 24 மணிநேர உணவகத்தில் வேலைக்கு வந்தபிறகு, உணவகத்திற்கு வருபவர்கள், ‘உடா கவின்..’ என்று எங்கள் திருமணத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார்கள். எங்கள் இருவரிடையே தூரம் குறைந்து தோள்களின் நெருக்கம் அதிகரித்தபோது அக்கேள்வியும் அதிகரித்தது. கம்பத்தின் மாலிக்கும் அடிக்கடி ‘உடா கவின்..’ என்று கேட்க ஆரம்பித்தார். ஒரு முஸ்லிம் கம்பத்தில் மாலிக் ஆக இருப்பவரிடம்தான் பலசெய்திகளும் பிரச்சனைகளும் செல்லும். எங்கள் நெருக்கத்திற்கு திருமணம் என்ற வளையம் தேவைப்பட்டதை அவருடைய கேள்வி உணர்த்தியது. திருமணத்திற்கு முயன்றது அண்ணனுக்குத் தெரிந்துபோனது.

ஒரு பழைய பனியன் சட்டை, ஒரு பழைய ஜீன்ஸ், 
கறைபடிந்த ஓட்டைப் பற்கள் இவற்றை வைத்துக்கொண்டு
 இரண்டு பெரிய நாடுகளின் கடல்பரப்பில் அவன் நிகழ்த்தும் அதிசயம்!

பகல்நேரத்தில் வேலைக்கு வரும் அண்ணன் தகவலறிந்து வானத்திற்கும் பூமிக்குமாய் குதித்தார். “தோளுக்கு மேல் வளந்திருக்கும் இரண்டு பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஒரு விதவையையா நீ கல்யாணம் செய்யப் போகிறாய்? நீ இந்தியாவுக்குத் திரும்பப் போவதில்லையா? உம்மா உனக்குப் பார்த்துவைத்த பெண்ணை மணமுடிக்கப் போவதில்லையா?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

எதிர்த்து நான் எதையும் பேசவில்லை. ஊரில் உப்புசப்பில்லாமல் சலித்துக்கொண்டிருந்த வாழ்வை மாற்றி, அண்ணன்தான் இந்தக் கம்பத்திற்குக்கூட்டிக்கொண்டு வந்தவர். பரோட்டா வீசவும் மீ பொரித்துத் தட்டவும் கற்று தந்தார்.

அண்ணன் புகைபிடித்துக்கொண்டே இரவு முழுதும் அங்கும் இங்குமாக நடந்து சண்டைபிடித்தார். கோபத்தில் கடையில் இருந்த பாத்திரங்களையும் சரித்துப் போட்டார். ரிடா ஓர் ஓரமாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். எல்லாவற்றுக்கும் அவள்தான் காரணம் என்று அவள்மீது பாய்ந்தார். என் அமைதி அவரை சமன் குலைவு செய்தது. திரும்பத் திரும்ப எங்கள் இருவரையும் அடித்தார். கம்பத்தில் அனைவரும் எங்களை வேடிக்கை பார்த்தனர்.

அவள் கொண்டையைப் பிடித்து, ”இந்த வயசுலயும் ஒனக்கு சுகம் கேக்குதோ..” என்று அண்ணன் அடித்தபோது எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அவரை என் பலம் முழுதையும் சேர்த்துத் தள்ளிவிட்டு ஏறி மிதித்தேன். அதோடு அதிர்ச்சியில் அவர் அடங்கினார், குற்றவுணர்ச்சியில் நானும் அடங்கினேன். கலைந்த தலையைத் சரிசெய்துவிட்டு வெளியே போனார்.

அதன்பிறகும் அங்கிருப்பது சரியில்லை என்று நினைத்துத்தான் சிடீயை அழைத்துப் பயண ஏற்பாடு செய்தேன். ஆனால் அதற்குமுன் முறையான அனுமதி இல்லாத வெளிநாட்டு ஆட்களைப் பிடிக்கும் வேனுடன் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள் உணவகத்தை நோக்கி வருவது தெரிந்தது. நானும் ரிடாவும் போட்டது போட்டதுபோல போட்டுவிட்டு ஓடினோம். எவ்வளவு தூரம் ஓடினோம் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவள் நின்று, தரையில் சரிந்தாள். அரைமயக்கத்தில் கிடந்த ரிடாவை, தஞ்சோங் பியாய் கடற்கரைக்கு ஒரு டாக்சியில் தூக்கிப் போட்டுக்கொண்டு விரைந்தபோது,

“எனக்கு குடிநுழைவு அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்வது புதிதல்ல.. உனக்கு புதிது.. பெண் என்று சிலநேரம் கரிசனம் கொள்வார்கள். என்னைப்பற்றி கவலைப்படாதே. விட்டுவிட்டு ஓடு.. ஓடிவிடு..” என்றே வழியில் அரற்றினாள். நான், “விட்டுவிட்டு ஒடிவிடவா இவ்வளவு அன்பும் காதலும் உலகத்தில் இருக்கிறது?” என்று ஏதோ புலம்பினேன்.

| 6 |

கன்டைனரில் இருந்து எந்தக்குரல் எழுப்பினாலும் அது தண்ணீருக்குள் இருந்து எழும் குரல்போலவே இருந்தது. வெளிச்சம் சுள்ளென்று உரைத்தது. சூரியன் உச்சிக்கு வந்திருக்கவேண்டும். எல்லோருமாய்ச் சேர்ந்து மலேசிய வெள்ளி 5000 தந்தால் அனைவரையும் விடுவித்து விடுவதாக ‘அதிகாரி’யோடு நின்ற இருவரும் ஒத்திசைந்து கூறினார்கள். எங்கள் யாரிடமும் பணமில்லை. மொத்த செட்டிங்குக்கும் சிடீயிடம் இருவருக்கும் சேர்த்து என் கையிலிருந்த 3000 வெள்ளியையும் கொடுத்திருந்தேன். ஒருவேளை சிடீயின் பெயரைச் சொன்னால் விட்டுவிடுவார்கள் என்று எண்ணி அவன் பெயரை முனகினேன். பிறகு அங்கு பயணத்திற்கு வந்திருந்த அனைவரும் சிடீயின் பெயரையே மந்திரம்போல உச்சரித்தனர்.

எங்களை அடைத்து வைத்திருந்தவர்களிடம் அந்தப்பெயர் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. எங்கள் சாமான்களைத் துல்லியமாகக் கலைத்துப்பார்த்தார்கள். என் பையில் அழுக்குத்துணி மட்டுமே இருந்தது. பணிப்பெண்களின் பொதிகளிலோ வறுத்த கச்சான்களும், சம்பால் போத்தல்களும். ஆத்திரமாய்ப் போட்டு உடைத்தார்கள்.

“உங்களில் யாருக்கேனும் மலேசியாவில் உறவினர்கள் நண்பர்கள் யாரும் இருந்தால் நாங்கள் சொல்லுமிடத்தில் தலைக்கு 700 வெள்ளி தந்துவிடலாம்”என்ற இறுதிச் சலுகையைத் தந்துவிட்டு, கஞ்சாவை உருட்டிப் புகைக்க ஆரம்பித்தான் அவர்களில் ஒருவன். பிறரும் அவனைத் தொடர்ந்தனர். அவர்களின் மூக்கு வழியாக போதை ஏறிக்கொண்டிருந்தது. போதை ஏறிவிட்டால் அவர்களுக்குக் கண்மண் தெரியாது. எங்களுடன் இருந்த பெண்களில் ஒருத்தியை கன்டைனருக்கு வெளியே தூக்கிச் சென்றார்கள். அவளின் முனகல் கொடுஞ்சத்தமாக வெகுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. கைக்கடிகாரத்தைப் பிடுங்கினார்கள். பின்பு சராமாரியாக எங்களைச் சாட்டைக் கயிற்றால் அடிக்கத் தொடங்கிவிட்டனர். எலி பயந்து பழைய பொருட்களில் இருந்து கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கியது.

விருட்டென்று எழுந்த என்னை ரிடா கையைப் பிடித்து இழுத்து அமர்த்தினாள். “இவர்களுக்குத் தேவை பணம். அது இப்போது நம்மிடம் இல்லை. இன்னும் கொஞ்சநேரத்தில் நம்மைக் கொன்றாலும் கொன்றுவிடுவார்கள்” என்று அழுதாள். “என்னை விடு..” என்று எழுந்து, அவனிடம் சாட்டையைக் கொடுக்குமாறு கையை நீட்டினேன். அவனுக்கு ஏதோ வித்தியாசமாகப் பட்டிருக்கவேண்டும், தந்தான். எலி இப்பொது மேற்கு பக்கமாக ஓடியது. அந்த மூலையில் ஒரு சிறிய வெளிச்சம் இருந்தது. கூடுமான அளவு தன் உடம்பை கண்டைனரில் இருந்த சிறிய துவாரத்தில் உள்ளே செலுத்தியது.

“இப்படி அடித்தால் அவர்கள் தரமாட்டார்கள், இப்போது பார்” என்று முன்பு மலைக்குன்றில் பதுங்கிய இரண்டு பெண்களையும் நோக்கி நடந்தேன். ரிடா என்னைப் பிடித்து, “வேண்டாம் வேண்டாம்” என்று இழுத்தாள். நான் அவளை உதறித் தள்ளிவிட்டு வெறிவந்ததுபோல அந்தப் பெண்களை அடிக்க ஆரம்பித்தேன். வலிதாங்காமல் அழுதவர்கள் கொஞ்ச நேரத்திலேயே தம் ஆடைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகளைக் கீழே போட்டார்கள். கண்டைனர் கதவு எங்களுக்காகத் திறந்தது. ஆவுளியா மீன்களுக்கு அக்கரைசேரும் நம்பிக்கை மீண்டும் துளிர்விட்டது.