ஆய்வுப் புத்தாக்கமும் சேவைச் சித்தாந்தமும்

0
421

சாதனைப் பேராசிரியர் தமீம் தீன் நேர்காணல்

பேராசிரியர் தமீம் தீன் சிங்கப்பூர்
தேசியப் பல்கலைக்கழக மருத்துவக்
கல்லூரியின்உடற்கூறியல் (Anatomy)
துறையில்பேராசிரியராகவும் சிங்கப்பூர்
நரம்பறிவியல் கழகத்தின் தலைவராகவும்
 பணியாற்றி வருகிறார்.உலகின் அதிகம்
மேற்கோள் காட்டப்பட்ட (2021)
அறிவியலாளர்களுள் ஒருவர். உடற்கூறியல்
துறையின் தலைவராகவும் மருத்துவக்
கல்லூரியின் துணைத்தலைவராகவும் பணியாற்றியவர். சிங்கப்பூர் தேசியப்
பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை (NUS-TLS) ஆலோசனைக்குழுத் தலைவராகவும் செயலாற்றுகிறார்.

உங்களுடைய குடும்பப் பின்னணி, இளமைக்காலம், மருத்துவத் துறையில் நுழையத்தூண்டிய ஆர்வம் இவற்றைப்பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

நான் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை பூர்வீகமாகக் கொண்டவன். எனக்கு சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டுமென்பது இலட்சியம். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாததால், என்னால் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடியவில்லை. உயிரியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன். ஆய்வியல் நிறைஞருக்கான (MPhil) ஆராய்ச்சிப் படிப்பின்போதுதான் ஆராய்ச்சியில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது எனக்கே புரிந்தது. சிறப்பாகவும் தேர்ச்சிபெற முடிந்தது.

புரிகிற மாதிரி சிறிது நகைச்சுவை கலந்து இயல்பாக நான் விளக்கிய விதம் அவர்களுக்குப் பிடித்தது. அப்போதுதான் எனக்குள் இருந்த ஆசிரியரை நான் கண்டுகொண்டேன்.

பிறகு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் படிப்புப் படிக்க முடிவுசெய்து அதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக இருந்தேன். அப்போது சிங்கப்பூர்ப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி அவ்வளவு பிரபலமாகவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என விண்ணப்பங்கள் போட்டுக் கொண்டிருந்தேன். எனது அக்கா குடும்பம் சிங்கப்பூரில் இருந்ததால் அவர்களைப் பார்க்க வந்திருந்தபோது, மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் சாமுவேல் டே (Prof Samuel Tay) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் செய்த அதே ஆராய்ச்சியை இங்கு கல்லூரியில் செய்து கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள அழைத்தார். அந்த அழைப்பைத் தட்ட முடியாமல் 1991இல் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து எனது மேற்படிப்பைச் சிங்கப்பூர் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலேயே முடித்தேன்.

 அதீத தன்னம்பிக்கை மருத்துவத்துறையில் ஆபத்தானது. ஆகவே அதைச் சற்று மட்டுப்படுத்தவும் அவர்களை ஊன்றிக்கவனிக்கச் செய்யவும் மேலும் அதிகச்சவாலான கேள்விகளைக் கேட்போம்.

பின்னர் கனடாவின் மனிடோபாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி முனைவராக எனக்கு இடம் கிடைத்தது. அதுமுடிந்து அங்கேயே சிலகாலம் பணியாற்றியபின் எனக்கு சிங்கப்பூரிலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. தேசியப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 1999இல் துணைப் பேராசிரியராக உடற்கூறியல் துறையில் சேர்ந்தேன். சிங்கப்பூர்தான் எனக்குப் படிப்பும், வாய்ப்புகளும், வேலையும், ஊக்கமும், பதவியுயர்வுகளும் அளித்தது. தற்போது பேராசிரியராகப் பணிபுரிகிறேன். சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யும் போது அது வேலையாக இராது என்றொரு கூற்று உண்டு. ஒரு பேராசிரியராகக் கற்பிப்பதில் அப்படி உணர்கிறீர்களா? பாடம் நடத்துவது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றா?

நான் ஆரம்பத்திலிருந்தே ஆராய்ச்சிகள் செய்யும் அறிவியலாளராகத்தான் உருவானேன். ஆசிரியராவது எனது நோக்கமாக இல்லை. ஆராய்ச்சிகளைக் கல்லூரி மாணவர்களுக்கு விளக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் புரிகிற மாதிரி சிறிது நகைச்சுவை கலந்து இயல்பாக நான் விளக்கிய விதம் அவர்களுக்குப் பிடித்தது. அப்போதுதான் எனக்குள் இருந்த ஆசிரியரை நான் கண்டுகொண்டேன். பிறகு பாடம் நடத்தும் கல்வியாளராக நான் மாறிக்கொண்டேன்.

தொடக்கத்தில் எனக்கு ஆராய்ச்சிகளில் அதிக நேரமும், வகுப்புகளில் சொற்ப நேரமுமாகத்தான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்களுடன் இணைந்து பணியாற்றும் தருணங்கள் எனக்குப் பிடித்திருந்தன. மாணவர்களுக்கும் என்னுடைய வகுப்புகள் பிடித்திருந்தன. அவர்கள் என் பாடம் நடத்தும் முறையைப் பற்றி நல்லவிதமாகக் கருத்துகளை அளித்திருந்தார்கள். அதனால், நான் வகுப்பு நடத்துவதில் அதிக நேரம் செலவிட ஆரம்பித்தேன்.

மாணவர்களில் இரண்டு வகை உண்டு; ஒரு பிரிவினர் சாதாரணமாகப் படிப்பவர்கள். இவர்களே எண்ணிக்கையில் பெரும்பகுதி. வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கேட்டபிறகு, புத்தகத்தையும் படித்துவிட்டு மேலும் சந்தேகங்கள் இருந்தால் பிறகு வந்து கேட்பார்கள். சிறுபான்மையினரான இன்னொரு பிரிவினர் உண்டு, அவர்கள் அறிவுஜீவிகள். முன்கூட்டியே பாடத்தைப் பற்றி பல புத்தகங்களில் படித்துவிட்டுத்தான் வகுப்புக்கே வருவார்கள். அவர்களுக்குத் தெரியாததை பேராசிரியர் சொல்லவேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அப்படியேதும் இல்லையென்றால் வகுப்பு ஒரே ‘போரிங்’ என்று போய்விடுவார்கள். வகுப்பு நடத்தும்போது இந்த இரண்டு பிரிவினரையும் திருப்திப்படுத்தவேண்டும். அதனால் அடிப்படைகள்வரை விளக்கமாகவும் சொல்லி, வேறுபுத்தகங்களில் அவர்கள் படித்திராத சில விஷயங்களையும் சொல்லும்போது, இருதரப்பையும் ஓரளவுக்குத் திருப்திப்படுத்தலாம்.

அறிவிஜீவிப் பிரிவினர் வகுப்புகளில் கேள்விகளில் சவாலை எதிர்பார்ப்பார்கள். அவர்களிடம் சவாலான கேள்விகளைக் குறி வைத்துக் கேட்கும்போது அவர்கள் அதற்கான விடைகளைத் தேடிப்பிடித்துப் பதிலளிப்பார்கள். சமயங்களில் அதீத தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். அது மருத்துவத்துறையில் ஆபத்தானது. ஆகவே அதைச் சற்று மட்டுப்படுத்தவும் அவர்களை ஊன்றிக்கவனிக்கச் செய்யவும் மேலும் அதிகச்சவாலான கேள்விகளைக் கேட்போம்

உடற்கூறியல் அருங்கற்சியகம்
தனது மாணவர்களுடன் பேராசியர் தமீம் தீன்

பொதுவாக மருத்துவக் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஒரே பாடத்தை இரண்டுமணி நேரத்துக்கு நடத்துவதாக இருக்கும். பேராசிரியர் மாணவர் இருவருக்குமே அது சற்று சிரமமானதுதான். நான் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, நடத்தும் பாடம் சம்பந்தமாக வாழ்வில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அதனுடன் இணைத்துச் சொல்வேன். பாடத்திலிருந்தும் விலகாமல், அதேசமயம் நடைமுறை எடுத்துக்காட்டுகளை விளக்கும்போது அவர்களுக்கும் களைப்பு தட்டாது. ஒன்று நான் சொல்வேன், அல்லது அவர்களை யாராவது சொல்லச் சொல்வேன்.

உலகின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட இரண்டு விழுக்காட்டு அறிவியலாளர்களுள் நீங்களும் ஒருவர். மருத்துவ ஆராய்ச்சிகளைப் பதிப்பிப்பது மிகவும் கடினமானது என்று கேள்விப்பட்டுள்ளோம். உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?

ஆராய்ச்சி செய்வதில் எனக்கு ஈடுபாடு அதிகம் என்பது ஒரு காரணம். மேலும், பயிலும்போதே ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும், பேராசிரியர் ஜேஜி ஹாரோவர் (Prof JG Harrower) ஆரம்பித்து வைத்த வழக்கம், தேசியப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் நடைமுறையில் உள்ளது. துணைப் பேராசிரியராக 1999இல் இக்கல்லூரியில் சேர்ந்த காலத்தில் இருந்தே நான் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதை எனது பணியுடன் சேர்த்தே செய்து கொண்டிருந்தேன்.

மைக்ரோக்ளியல் ஆராய்ச்சியில் சரியான முடிவுகளை அடையும்போது, முதுமை நோய் எனப்படும் மறதி நோய்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

என்னுடைய தலைமையின்கீழ் ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்படும் தொகையில் ஆராய்ச்சிகளை நடத்தி முடிக்கவேண்டும். ஆராய்ச்சிகளுக்கென முழுநேர ஆய்வாளர்களை அமர்த்தாமல் முனைவர்பட்ட மாணவர்களிடம் கொடுக்கும்போது அவர்கள் மிகுந்த ஊக்கமுடன் வேலை செய்கிறார்கள். அதேசமயம் அவர்களின் ஆய்வறிக்கையும் தயாராகிவிடுகிறது. அவர்களின் ஆய்வுகள் ஆய்விதழ்களில் வெளிவர ஒரு வழிகாட்டுநராக எனது பங்கும் கணிசமானது. இதைக் கூட்டு ஆய்வுத்தாள் (collaboration paper) என்போம். அந்த வகையில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்ததில் என் பெயரும் உண்டு.

அறுவைப்பிரிப்புப் பயிற்சி (surgical dissection course) எனப் புதிதாக ஒரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்போது வெளிநாடுகளிலிருந்தும் அப்பயிற்சியில் பயில வருகிறார்கள்.

இதுவரை 125 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறேன். பொதுவாக எல்லா ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பதிப்பிப்பதில்லை என்பது உண்மைதான். அதற்கென சில சல்லடைகள் வைத்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் தாண்டிப் பதிப்புக் கண்டவைதான் அந்த 125 ஆராய்ச்சிக் கட்டுரைகளும். மொத்தம் 228 கட்டுரைகளைப் பல்வேறு நாடுகளில் மருத்துவ மாநாடுகளில் படைத்திருக்கிறேன். அதுபோக இதுவரை 23 ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்தியிருக்கிறேன்.

‘கூகுள் ஸ்காலர்’ தரக்குறியீட்டு வரிசை (h-index) எனக்குத் தற்போது 46ஆக உள்ளது. ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கையுடன், அக்கட்டுரைகள் எத்தனை ஆராய்ச்சிகளில் மேற்கோள் காட்டப்படுகின்றன என்பதைவைத்து இத்தரக்குறியீடு தீர்மானிக்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை வருடா வருடம் கூடிக்கொண்டே வருகிறது.

நீங்கள் மருத்துவ ஆராய்ச்சியில் இரு பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அறிகிறோம். அதை எங்களுக்காக எளிமையாக விளக்கிச் சொல்ல முடியுமா?

நான் அடிப்படையில் ஒரு மூலக்கூறு உயிரியலாளர் (molecular biologist). பின்னாளில் நரம்பறிவியல் (neuroscience) துறையில் ஆர்வம் காட்டினேன். இப்போது நான் என்னை ஒரு நரம்பறிவியலாளர் (neuroscientist) என்றே சொல்லிக்கொள்வேன்.

எனது முதலாவது ஆராய்ச்சி சர்க்கரை நோய்க்குள்ளாகும் கருவுற்ற பெண்களின் கருவிலிருக்கும் சிசுவின் மூளைவளர்ச்சி பற்றியது. அதாவது, சில பெண்களுக்குக் கருத்தரிக்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும். அது கருவின் மூளை நியூரான்களில் பாதிப்புண்டாக்குவதால், பிறப்புக் குறைபாடுகள் ஏற்படலாம். அது ஏன், அதற்கான காரணிகள் என்னென்ன என்று ஆராய்கிறேன். இதைப்பற்றிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன, நானும் வெளியிட்டிருக்கிறேன். ஆனாலும் கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்பது போன்று இந்தப் புதிர் இன்னமும் முழுமையாக அவிழவில்லை. இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

இன்னொரு ஆராய்ச்சியும் மூளையைப் பற்றியதே. அதாவது மூளை என்றாலே நியூரான்கள் மட்டும்தான் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், நியூரான்களுக்கு உதவ நிறைய துணைச்செல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மைக்ரோக்ளியல் (Microglial) செல். இதன் முக்கிய வேலை, சுத்தம் செய்வது. அதாவது, நுண்ணுயிரிகள், ஏனைய கிருமிகள், செத்துப்போன செல்கள் இவற்றையெல்லாம் தின்று சுத்தம் செய்வது. சுத்தம் செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தால், இந்த மைக்ரோக்ளியல் செல்கள் தானகவே பெருகிக்கொள்ளும். கிட்டத்தட்ட இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் போன்ற செயல்பாடு கொண்டவை.

மைக்ரோக்ளியல் செல்களுக்கு இந்தச் சுத்திகரிப்புப்பணி மட்டுமே உண்டு என மருத்துவ உலகம் நம்பிவந்தது. அண்மைய ஆராய்ச்சிகளில் அது நியூரான் செல் சோர்வடையும்போது அதனை மறுபடியும் பழைய நிலைக்குக் கொணரும் வேலையையும் செய்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. நியூரான் செல்கள் செயலிழந்தால் மறதிநோய், பார்க்கின்ஸன் போன்ற குறைபாடுகள் ஏற்படும். அவற்றைத் தடுக்க, இந்த மைக்ரோக்ளியல் செல்களைக் கூடுதலாகத் தூண்டும்போது, எந்த அளவிற்கு நியூரானின் செயல்பாடுகளை மீட்டுக் கொடுக்கிறது என்பதுதான் இப்போதைய ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சியில் சரியான முடிவுகளை அடையும்போது, முதுமை நோய் எனப்படும் மறதி நோய்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

மேலும், பக்கவாதம் மூலமாக மூளைக்கு ஏற்படும் பாதிப்பில் நியூரான் செல்கள் மற்றும் மைக்ரோக்ளியல் செல்கள் ஆகியவை பக்கவாத பாதிப்பால் செத்துப்போன செல்களை அகற்றுவது மட்டுமல்லாமல், மீண்டும் நியூரான் செல்களை உருவாக்குவது எவ்வாறு என்பதைப் பற்றிய ஆராய்ச்சிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரில் உலகளாவிய நரம்பறிவியல் அறிவியல் குழும மாநாடுகளை ஆண்டுதோறும் துறைசார் வல்லுநர்களைக்கொண்டு நடத்தி வருகிறீர்கள். அதற்கு என்ன தேவை? நீங்கள் அதில் ஈடுபட்டது ஏன்?

சிங்கப்பூரிலிருக்கும் நரம்பறிவியலாளர்களின் சந்திப்பு அது. இச்சந்திப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்க உலகளவில் அழைப்பு விடுப்போம். பல நாடுகளிலிருந்தும் குறைந்தது 300 பேர் வருவார்கள். இது லாப நோக்கமற்ற மாநாடு, அதனால், ஆண்டுதோறும் நடத்த நினைத்தாலும் நடத்த முடிவதில்லை. மாநாட்டில் படைக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை மாநாட்டு மலரில் வெளியிடுவோம். அது ஒரு ஆவணமாக இருக்கும். மற்றபடி, இந்த வட்டாரத்தில் உள்ள மருத்துவர்கள் ஒன்றுகூடுவதற்கு இது நல்ல வாய்ப்பாகவும் இருப்பதால், மிகுந்த வரவேற்புள்ளது. நரம்பறிவியலாளார் குழுமத்தின் தலைவர் என்கிற முறையில் இப்படி ஒரு மாநாட்டைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.

நரம்பறிவியலாளர் மாநாட்டில் சிங்கப்பூரின் நரம்பறிவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதளிப்பது, அண்மைய சாதனையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பது, பெண் மருத்துவர்களுக்கென விருது எனப் பல வகையிலும் உள்ளுர் விழா இது. பெருந்தொற்றுக் காலத்தில் மெய்நிகர் மாநாடாகவும் நடைபெற்றது. அனைவரும் நேரில் கலந்துகொள்ள ஒரு மாநாட்டை விரைவில் கூட்டவேண்டும்.

நூறாண்டுகால வரலாறுள்ள தேசியப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில், அதன் தொடக்கத்திலேயே உருவாக்கப்பட்ட உடற்கூறியல் துறைத்தலைவராகப் பொறுப்பேற்ற இரண்டாவது தமிழர் நீங்கள். அதுபற்றிச் சில விவரங்களை அளிக்க இயலுமா?

ஒரு தனித்துறையாக 1922 முதல் இருந்து வரும் உடற்கூறியல் துறையில், இரண்டு தமிழர்கள் துறைத்தலைவராக இருந்திருக்கிறார்கள்.

உடற்கூறியல் துறையைக் கடக்காமல் யாரும் மருத்துவராகியிருக்க முடியாது. அனைத்து மருத்துவர்களும் உடற்கூறியல் துறையின் முன்னாள் மாணவர்களே
உடற்கூறியல் துறை நூற்றாண்டு விழா
அனாடமி 100 நூற்றாண்டு விழா இதழ்

ஆக நீண்டகாலம் பணியாற்றிய (1962 முதல் 1979 வரை) துறைத்தலைவர் பேராசிரியர் கனகசுந்தரம் அவர்கள். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். அவர் காலத்தில்தான் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர் மந்தமாக இருந்த துறையின் வளர்ச்சி பல முக்கியமான மாற்றங்களைக் கண்டது. சிங்கப்பூர் தனி நாடானபோது, சிங்கப்பூரின் அன்றைய ஒரே மருத்துவக் கல்லூரியாக, அவருக்குத் துறையை மேம்படுத்தும் ஆர்வம் இருந்தது. அதற்கான போதிய ஆதரவும் கிடைத்ததால் அது சாத்தியமானது. நான் 1999இல் பணிக்குச் சேர்ந்து எனது குறிப்பிடத்தக்க முயற்சிகளால் பணிசார்ந்த உயரத்தை எட்டி, 2016இல் உடற்கூறியல் துறையின் தலைவரானேன். அதற்குப் பின்னர், 2016 முதல் 2022 வரை துறைத்தலைவராகப் பதவி வகித்தேன். முதலாமவர் இலங்கையிலிருந்து வந்தாரென்றால், நான் தமிழ்நாட்டிலிருந்து வந்தேன். துறைத்தலைவராக இருந்த காலத்தில் நூற்றாண்டுவிழாக் கொண்டாடும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்

துறைசார்ந்து நீங்கள் சாதிக்க விழைந்தவை, சாதித்த தருணங்களைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பேராசிரியர் கனகசுந்தரம் பதவியேற்ற காலத்தில் சிங்கப்பூர் கிட்டத்தட்ட மறுநிர்மாணம் செய்யப்படும் கட்டத்தில் இருந்தது. அதனால் அவருடைய பங்களிப்பு மிக முக்கியமாக அமைந்தது. அவர் இந்தத் துறையை பழைய நடைமுறைகளிலிருந்து மாற்றி ஒரு தரமான கல்விக்கூடமாக்க மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார். அவருக்குப்பின் வந்தவர்களும் அவர் உருவாக்கியதைத் தக்கவைக்கவும் மேம்படுத்தவும் பாடுபட்டார்கள்.

நான் துறைத்தலைவராக இருந்தபோது துறையின் கல்விப்புல மதிப்பை (academic reputation) உலகத்தரத்துக்குக் கொண்டுவருவது, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காலத்திற்கு ஏற்றவகையிலும் மாணவர்கள் விரும்புகிற விதத்திலும் பாடம் சொல்லிக்கொடுப்பதை மாற்றி அமைப்பது, அனைத்துலக ஆராய்ச்சியாளர்களை இங்கே பணியாற்ற ஈர்ப்பது என எனக்கு வேறுவிதமான சவால்கள் இருந்தன. அதாவது பேராசிரியர் கனகசுந்தரம் உருவாக்கி வைத்ததை மேற்கொண்டு மெருகூட்டி உலகத்தரத்துக்குக் கொண்டுசெல்வது. தொடர்முயற்சிகளால் நான் துறைத்தலைவராக இருந்த காலத்தில் கல்விப்புல மதிப்பில் உலகளவில் 14ஆவது இடத்துக்கு உடற்கூறியல் துறை மேலே வந்தது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக மருத்துவ கல்லூரி திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரியுடன் சேர்ந்து நடத்திய மருத்துவ ஆராய்ச்சி மாநாடு

அறுவைப்பிரிப்புப் பயிற்சி (surgical dissection course) எனப் புதிதாக ஒரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். அறுவை சிகிச்சை பற்றிக் கல்லூரியில் நேரடிப் பயிற்சி பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களின் அன்றாடப் பணிகளில் அறுவைச் சிகிச்சை இருந்திருக்காது. ஆகவே அதைப்பற்றிய செயலனுபவம் இருக்காது. மேலும் பலருக்கு இப்போதைய நவீன அறுவை சிகிச்சைக் கருவிகளில் பயிற்சி தேவைப்படலாம். இவர்களுக்கெல்லாம் செயலனுபவம் தரும்வகையில் அமைவதுதான் அந்த வகுப்பின் நோக்கம். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்போது வெளிநாடுகளிலிருந்தும் அப்பயிற்சியில் பயில வருகிறார்கள்.

பாரம்பரிய முறைகள் நிஜ மனித உடலை வைத்து கற்பிப்பதையே முக்கியமா கருதுகிறோம். களத்தில் செயல்பாடும் உணர்வைப் பராமரிப்பு முறையே தரும்.

இந்த வட்டாரத்தில் மருத்துவ உடற்கூறியலில் ஒரு முன்மாதிரித் துறையாக உருவாக்க வேண்டுமென்று ஒரு நீண்டகாலத் திட்டத்தோடு செயல் திட்டம் ஒன்றை உருவாக்கினேன். மருத்துவ உடற்கூறியல் சிறப்புக்கற்றல் மையமாக (Centre of Excellence) ஆசியாவில் இந்தத் துறை பெயர் வாங்கவேண்டும் என்பது என் கனவு. அதற்கான அடித்தளமாக iCALC (integrated Clinical Anatomy Learning Centre) என்பதை உருவாக்கியிருக்கிறேன். எனக்குப்பின் வருபவர்கள் அதை மேலும் விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்துவார்கள்

உங்கள் தலைமைத்துவத்தில், கடந்த ஆண்டு (2022) நூற்றாண்டு கண்ட, உடற்கூறியல் துறைக்காக விழா எடுக்கப்பட்டு நூற்றாண்டு விழாமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. முன்னாள் மாணவர்களான இன்றைய மருத்துவத்துறை விற்பன்னர்கள் அந்த இதழைக் கொண்டாடினார்கள் என்று அறிகிறோம். அவ்விதழின் சிறப்பம்சம் என்ன?

சிங்கப்பூரில் 1905இல் முதன் முதலாக மருத்துவத்துறை (Faculty of Medicine) ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சொற்ப மாணவர்களே இருந்தனர். உள்ளூரில் பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர்களே ஆசிரியர்களாகவும் பணியாற்றினர். பிறகு 1922இல் உடற்கூறியல் துறை ஒரு தனித்துறையாக ஆரம்பிக்கப்பட்டது. துறைத்தலைவராகப் பதவியேற்ற பேராசிரியர் ஜேஜி ஹாரோவர் 1935ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். ஆசியர்களின் மண்டையோடுகளின் அளவில் வேறுபாடு பற்றி ஆராய்ச்சியும் செய்து கொண்டிருந்தார். அப்போது மருத்துவப் படிப்பு என்பது வெறும் படிப்போடு நின்று விடாமல் ஆராய்ச்சியும் படிப்பின் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. அது இன்றளவும் தேசியப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் தொடர்கிறது.

ஜேஜி ஹாரோவரின் ஆராய்ச்சி 1922லேயே அப்போதைய மருத்துவ இதழொன்றில் கல்லூரியின் பெயர் போட்டு பதிப்பிக்கப்பட்டது. அனேகமாக சிங்கப்பூரிலிருந்து பதிப்பிக்கப்பட்ட முதல் உடற்கூறியல்துறை ஆராய்ச்சிக் கட்டுரை அதுவாகத்தான் இருக்கும். மருத்துவக் கல்லூரிப் படிப்பில் உடற்கூறியல் துறை அனைத்து வகை மருத்துவச் சிறப்புப் படிப்புகளுக்கும் ஆரம்பப் பாடமாகும். அரிச்சுவடி மாதிரி, அனைவரும் கற்றாக வேண்டும்.

மருத்துவக் கல்லூரியில் படித்த சிங்கப்பூர் மருத்துவர்கள் அனைவரும் இன்றளவும் உடற்கூறியல் துறையின் பேராசிரியர்களை நினைவுகூர்கிறார்கள். முதலாமாண்டிலேயே கடந்து போய்விட்டாலும், ஐந்தாவது வருட முடிவில் வெளிச்செல்லும் நேர்முகத்தில் (exit interview) மறக்காமல் தமது உடற்கூறியல் பேராசிரியர்களையும் அவர்கள் அளித்த அடிப்படை மருத்துவக் கல்வியையும் வழிகாட்டுதலையும் நன்றியுடன் குறிப்பிடுவதிலிருந்து இத்துறை எத்தகைய தாக்கங்களை அவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

உடற்கூறியல்துறை நூற்றாண்டு விழா நடத்தி முன்னாள், இந்நாள் கல்வியாளர்களைக் கௌரவிக்க முடிவு செய்தோம். விழா மலருக்காக அரியபல தகவல்களையும் புகைப்படங்களையும் தேடித்தொகுத்து “அனாடமி 100” என்று பெயரிட்டு அந்த இதழை வெளியிட்டோம். விழாவுக்கு வந்த முன்னாள் மாணவர்கள் தத்தம் கல்லூரித் தோழர்களிடம் அந்த இதழைக் காட்டித் தம் கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.

மின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் உடற்கூறியல் வகுப்பு

இதழைப் பற்றிக் கேட்டறிந்த பல முன்னாள் மாணவர்கள் – இந்நாள் மருத்துவ நிபுணர்கள் – எங்களைத் தொடர்புகொண்டு விழாமலரைப் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். முதலாம் ஆண்டில் வரும் உடற்கூறியல் துறையைக் கடக்காமல் யாரும் மருத்துவராகியிருக்க முடியாது. எதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், அனைத்து மருத்துவர்களும் உடற்கூறியல் துறையின் முன்னாள் மாணவர்களே. அரிய தகவல்களும் பழைய நினைவுகளும் ஒருங்கே இணைந்ததால் இதழ் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் துறைத்தலைவராக இருந்த காலத்தில் சில குறிப்பிடத்தக்கப் புதுமைகளை அறிமுகப்படுத்தியதாக உங்களின் முன்னாள் மாணவர்கள் கூறுகிறார்கள். அவை என்னென்ன?

உலகெங்கும் உடற்கூறியல் துறையில் வகுப்புகள் இரண்டு வகையாக நடத்தப்படுகின்றன. இந்தத் துறைக்கெனப் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படும் வகுப்பு முறை ஒன்று. மற்றது நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்வது. இரண்டையும் சற்று விளக்கிச் சொல்கிறேன். பாரம்பரிய முறையில், ஒரு பதப்படுத்தப்பட்ட மனித உடலை மேசையில் வைத்து, உடலைக் கூறுபோட்டுப் பேராசிரியர் விளக்கம் சொல்வதைச் சுற்றிலும் உயரப் படிகளில் அமர்ந்தவாறு மாணவர்கள் கற்பது. இதற்கு ஆய்வுக்கென தானமாகக் கிடைக்கும் மனித உடலைப் பயன்படுத்துவார்கள். இதைச் சில திரைப்படங்களில்கூடப் பலரும் பார்த்திருக்கலாம்.

தானமாகக் கிடைக்கும் மனித உடல்கள் அரிதாகிப் போனதால், ‘பிளாஸ்டிக்’கினால் செய்யப்பட்ட மனித உடல் மாதிரிகளைக் கொண்டு இவ்வகுப்புகள் நடைபெறுகின்றன. ஜெர்மனியில் ஒரு உடற்கூறியல் பேராசிரியர், ‘பிளாஸ்டினேட்டட்’ (plastinated) மனித உடல் மாதிரிகளை அறிமுகப்படுத்தினார். அதாவது மனித உடலுக்குள் பிளாஸ்டிக்கை உட்செலுத்தி அவற்றைக் கெட்டுப் போகாமலும் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளும்படியும் செய்வது. இது மிகப்பெரிய செலவினம். ஆனாலும் இன்று மேலைநாடுகளில் பல பல்கலைக்கழகங்கள் பிளாஸ்டினேடட் மனிதவுடல் மாதிரிகளைப் பயன்படுத்துகின்றன.

உயிரியல் தொழில்நுட்ப (biotechnology) ஆய்வில் இன்று சிங்கப்பூருக்கென உலகளவில் ஓர் இடம் இருப்பதற்கு முக்கியக் காரணம் சிறந்த திறனுள்ள ஆராய்ச்சி மாணவர்களைத் தேடித்தேடிக் கொண்டுவந்து சேர்த்ததுதான்.

பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவின் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘ஹோலோலென்ஸ்’ (HoloLens) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெய்நிகர் வழியில் பாடம் நடத்தினர். இது ஒவ்வொரு மாணவரும் அருகிலிருந்து முப்பரிமாண முறையில் மனித உடற்கூறு பற்றித் தெளிவாகவும் தீர்க்கமாகவும் அறிய வழிவகுத்தது.

உடற்கூறியல் வகுப்பு

நாங்கள் பாரம்பரிய முறை, நவீனத் தொழில்நுட்பம் இரண்டையும் கலந்து பாடத்திட்டத்தை வகுத்திருக்கிறோம். பாரம்பரிய முறையில் நிஜ மனித உடலை வைத்துக் கற்பிப்பதையே இன்னமும் முக்கியமாகக் கருதுகிறோம். களத்தில் செயல்படும் உணர்வைப் பாரம்பரிய முறையே தரும். அதே சமயம் மெய்நிகர் உடற்கூறியல் அருங்காட்சியகம் ஒன்றும் உருவாக்கியுள்ளோம். அதன்வழியே பாரம்பரியமான முறையில் கற்றதைப் பலமுறைத் திரும்பத்திரும்ப மெய்நிகர் வழியில் பயிற்சி பெறலாம். இதற்கென ஒரு செல்பேசிச் செயலியும் உருவாக்கியுள்ளோம். இதனால் மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் ஐயமறக் கற்றுக்கொள்ள முடியும்.

இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறோம். பள்ளி மாணவர்களிடையே மருத்துவப் படிப்பைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம். அவர்களுக்குள் சிறந்த மருத்துவ நிபுணர்கள் ஒளிந்திருக்கக்கூடும். அவர்களையெல்லாம் இனம்கண்டு ஊக்கமளிக்க இவ்வாய்ப்பு பயன்படும் என்பது எங்களது எண்ணம். இந்த மெய்நிகர் உடற்கூறியல் அருங்காட்சியகம், செல்பேசிச் செயலி, இதர மின்னிலக்க முயற்சிகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் நான் துறைத்தலைவரான பிறகு எடுத்து நிறைவேற்றிய சில முயற்சிகள்.

இந்தியாவிலிருந்து சிறந்த மாணவர்களை அடையாளம்கண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்புக்காக அழைத்துவரும் பணியைப் பல்லாண்டுகளாகச் செய்து வருகிறீர்கள். அதைப்பற்றி விவரிக்க இயலுமா?

நான் பட்டமேற்கல்வித் திட்டத்தின் (graduate programme) தலைவராகவும் பதவி வகித்தேன். அதில் உலகெங்குமிருந்து சிறந்த ஆராய்ச்சி மாணவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வருவது ஒரு சவால்.

மிகுந்த அறிவும் தகுதியும் வாய்ந்தவர்கள் எத்தனை பேர் எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள், எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்பதெல்லாம் ஒரு கல்வி நிறுவனத்தின் உலகத்தரத்திற்கான அளவுகோல்கள். நாங்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் போய்த் தேடினாலும், சீனாவிலிருந்தும் இந்தியாவிருந்தும் தலைசிறந்த மாணவர்களை இங்கே கொண்டுவருவதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.

பெயர்பெற்ற பல்கலைக்கழங்களுக்கு மட்டும்தான் பொதுவாக முக்கியத்துவம் கொடுப்போம். அமெரிக்கா, துருக்கி, கொரியா, மலேசியா என்று நேரடியாகவே போய் சிறந்த மாணவகளைக் கண்டுபேசி அவர்களை அழைத்துவரப் பெருமுயற்சி செய்தோம். உயிரியல் தொழில்நுட்ப (biotechnology) ஆய்வில் இன்று சிங்கப்பூருக்கென உலகளவில் ஓர் இடம் இருப்பதற்கு முக்கியக் காரணம் சிறந்த திறனுள்ள ஆராய்ச்சி மாணவர்களைத் தேடித்தேடிக் கொண்டுவந்து சேர்த்ததுதான். சிங்கப்பூர்ப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்வதற்குத் தகுதிவாய்ந்த மாணவர்கள் இணையம்வழி நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். அதையும் நாங்கள் மிகக்கவனமாகப் பரிசீலிப்போம்.

இந்தியாவிலிருக்கும் தலை சிறந்த அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் நாங்கள் நேரடியாகச் சென்று நேர்முகம் காண்போம். தமிழ்நாட்டில் மெட்ராஸ் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ், அதுபோக வேலூர் சிஎம்சி, அப்புறம் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவை பெரும்பாலும் எங்கள் தேர்வுகளாக அமையும். பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவர்களுக்கான தகுதி வாய்ந்த மாணவர்கள் என்பதை நிலையான நன்மதிப்பெண் (consistent performance) பெறுவதையும் பட்டமேற்படிப்புத் தரநிலையையும் கொண்டு அளவிடுகிறோம். ஏற்கெனவே ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்திருந்தாலோ, ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தாலோ அது சிறப்புத்தகுதி. அதுபோக ஜிஆர்ஈ (GRE) தகுதித் தேர்வு அவசியம் எழுதவேண்டும்.

எந்தச் சிக்கலான சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ஒரு மருத்துவருக்கு இன்றியமையாத குணநலன்.

மருத்துவத்துறையில் துறைத்தலைவர், முழுநேரப் பேராசிரியர் என மதிப்புமிக்க பொறுப்புகளை வகித்துள்ளீர்கள், வகிக்கிறீர்கள். உங்களை அடியொற்றி வரநினைக்கும் இளையோர்க்கும் மருத்துவப் படிப்பில் கால்பதிக்க விரும்பும் சிங்கப்பூர் இளையர்களுக்கும் நீங்கள் கூறவிரும்பும் அறிவுரைகள்?
உங்கள் பணிகளுக்கிடையில் எங்களுக்கு நேரத்தை ஒதுக்கி நேர்காணல் அளித்ததற்கு மனமார்ந்த நன்றி!

சிங்கப்பூர் தேசியப் பலகலைக் கழக மருத்துவக் கல்லூரியில் சேரவிரும்பும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். நாங்கள் உங்களின் மதிப்பெண்களை ஆரம்பக்கட்ட வடிகட்டல்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மருத்துவ நுழைவுத்தேர்வில் நேர்முகத்தேர்வுக்குத் தேர்வானபிறகு அதற்குமேல் உங்கள் மதிப்பெண்கள் எடுபடாது. உங்களுக்குச் சேவை மனப்பான்மை இருக்கிறதா என்பதைத் துருவித்துருவிக் கேள்விகள் கேட்டு உறுதிப்படுத்துவோம்.

பெரும்பாலும் மருத்துவர்களின் பிள்ளைகள் எளிதாக மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவதற்கு இது ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். தம் பெற்றோரை அவர்கள் அன்றாடம் கவனித்திருப்பார்கள் என்பதால் ஏன் மருத்துவராக வேண்டும் என்பதில் அவர்களுக்குத் தெளிவான ஒரு கண்ணோட்டம் இருக்கும். மருத்துவப் பின்புலம் இல்லாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே தன்னார்வலர்களாகப் பணிபுரியும் சூழல்களை ஏற்படுத்தித் தரவேண்டும். பிறகு படிப்படியாகப் புகுமுகக் கல்லூரிவரை அவர்களுக்குச் சேவைச் சூழல்களை உருவாக்கிக் கொடுத்தால், அவர்களால் ஒரு மருத்துவ மாணவருக்குத் தேவையான சரியான மனப்பாங்கை அடைய முடியும்.

உடன்பணியாற்றல் (job shadowing) என மருத்துவமனையில் தன்னார்வலராக வேலைசெய்து பார்க்கவேண்டும். சமூகத் தன்னார்வலராக (community volunteer) வேண்டும். அடித்தளத்தில் மக்களோடு மக்களாகப் பழகத் தெரியவேண்டும். அவர்களின் எண்ணவோட்டங்களைப் புரிந்துகொள்ளும் பழக்கம் வேண்டும். மேலும் ஒரேசமயத்தில் பல்வேறு சவால்களைப் பதறாமல் எதிர்கொண்டு சமாளிக்கும் கலையைக் கற்றாக வேண்டும். அதைக் கல்லூரியில் சேர்ந்தபின்கூடக் கற்றுக்கொள்ள முடியும். எந்தச் சிக்கலான சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ஒரு மருத்துவருக்கு இன்றியமையாத குணநலன். அறுவைசிகிச்சைக் கூடத்தில் நோயாளி தன் பெற்றோராகவே இருந்தாலும் ஒரு மருத்துவருக்கு அப்போது அவர் நோயாளி மட்டுமே எனப்பார்க்கும் பக்குவம் வரவேண்டும்.

மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால் உடன்பணியாற்றல், சமூகத் தன்னார்வலம் போன்றவற்றில் கோட்டை விட்டு விடுகிறார்கள். சிறந்த மாணவர் அடைவு (student portfolio) உருவாக்குவது மிகவும் முக்கியம். நேர்முகத் தேர்வில் மாணவர் அடைவு கேட்போம். அதில் படிப்பல்லாத மற்ற செயல்பாடுகளைப் பற்றி மட்டுமே கேட்கப்பட்டிருக்கும். உண்மையில், எங்களுடைய மாணவர்களை மிகுந்த சிரமத்திற்கிடையில்தான் நாங்கள் தேர்வு செய்கிறோம். கல்வியில் சிறந்த, மருத்துவப் படிப்பு படிக்க ஏற்ற மனப்பக்குவத்துடன் கூடிய சிங்கப்பூர இளையர்களுக்கு தேசியப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்புகள் வளமாகவே உள்ளன.

மருத்துவத்துறை ஒரு சேவைத்துறை. இதற்குள் கௌரவத்துக்காகவோ, பெருமைக்காகவோ வரக்கூடாது. நல்ல வருமானம் இருக்கும், செல்வந்தராக வாழலாம் என்றெல்லாம் எண்ணிக்கொண்டும் மருத்துவம் படிக்க வரக்கூடாது. தன்னலமற்ற, இயல்பான சேவை மனப்பாங்குடன் வரவேண்டும்.

மருத்துவத்துறை குறித்த சில கருத்துகளை நம் சமூகத்தினருடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றி!