மருந்தகங்களில் வகைமுறை (scheduling) என்பது சில நச்சுத் தன்மையுள்ள வேதிப் பொருள்களின் அளவீட்டின்படி மருந்துகளைப் பகுப்பாய்ந்து பிரித்து வைக்கப்படும் ஒரு முறை. இதை நச்சளவுத் தரப்பாடு (Poisons Standard) என்றும் கூறுவார்கள். இந்த முறை பொதுமக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வழியை ஒழுங்கு படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இப்படி வறையறுக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்ய முடியாது. பெரும்பாலான மருந்தாளுனர்கள் சந்திக்கக்கூடிய சவால் இது.
மருந்தின் அளவுக்கே மருத்தைக்குறித்த புரிதலும் அவசியம். மருந்துச் சீட்டு எவ்வளவு முக்கியமானது என்பதை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்வேன். ஒரு மாதத்தில் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளை 10 நாட்களில் ஒரு நோயாளி முடித்துவிட்டு வந்தார். அவர் உட்கொண்ட மருந்தின் வீரியத்தைப்பற்றி எச்சரித்து உடனே மருத்துவரைப் பார்க்க அறிவுறுத்தினேன். அவர் என் மருந்தகத்தின் நிரந்தர வாடிக்கையாளர் ஆகிவிட்டார்.
மருந்துகள் எவ்வாறு உடலால் உறிஞ்சப்படுகின்றன, வளர்சிதை மாற்றமடைகின்றன, உடலைப் பாதிக்கின்றன, வெளியேற்றப்படுகின்றன என்பதை அறிந்து நோய்க்கான சரியான மருந்து, சரியான அளவு, சரியான வழியை அறிவுறுத்துகிறேன். மருந்தகத்தில் அதிக விற்பனை நடக்கும் நேரங்களில்கூட அதைச்செய்ய நான் தயங்கியதில்லை. மருந்துகளை விற்பதற்கு அப்பால் நோயாளிகளின் தேவைகள், ஆரோக்கியம் அனைத்திற்கும் மேலாகப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அந்த கவனத்தை ஒருபோதும் நான் இழப்பதில்லை, அதுவே என் தொழிலின் தர்மம்.