மழையோ வெயிலோ, குறித்த நேரத்தில் குறித்த பொருள்-ஜாய்ஸ் கிங்ஸ்லி

நிறுவனங்களுக்கான பயிற்சிகளும் பட்டறைகளும் நடத்தும் Creating ‘A’ Class Corporates LLP என்னும் நிறுவனத்தை உருவாக்கியபோது அதில் பரிசுக்கூடைகள், பூங்கொத்துகளை வடிவமைத்து விற்கும் ஒரு பிரிவையும் தொடங்கினேன். நிகழ்ச்சி, கருப்பொருள், பாலினம், வயது, செலவினம் ஆகியவற்றுக்கேற்ப எங்கள் வடிவமைப்பு அமைவதால் ஒவ்வொரு பரிசுக்கூடையும் இன்னொன்றைப்போல இராமல் தனித்துவத்துடன் இருக்கும்.

ஜாய்ஸ் கிங்ஸ்லி
பரிசுக்கூடைகள் வடிவமைப்பு, விற்பனையாளர்

வாடிக்கையாளர் தேவைகளை நுணுக்கமாகக் குறித்துக்கொண்டு திருப்தி ஏற்படும்வரை மீண்டும் மீண்டும் வடிவமைப்பை மாற்றியமைப்போம். குறித்த நேரத்திற்குக் கொண்டுசேர்ப்பது ஆகமுக்கியம். ஒரு தீபாவளிக்கு முந்தைய கடைசி வாரஇறுதி. கொண்டுசேர்க்க வேண்டிய பரிசுக்கூடைகள் நிறைய இருந்தன. ஒரு வாடிக்கையாளருக்கு இந்திய இனிப்புகள் அடங்கிய பரிசுக்கூடையை மாலை ஐந்து மணிக்குக் கொண்டுசேர்க்கவேண்டும். புதுச்சுவை மாறாமல் இருக்கவேண்டும் என்பதால் முன்கூட்டியே பொதியாக்கம் செய்துவைக்க முடியாது. ஆகவே நான்கு மணிக்குத் தயார்செய்துவிட்டு வழக்கமான சேர்ப்பனையாளரை அழைத்தால் அவர்களிடம் ஒரு வாகனம்கூட இல்லை. தீபாவளி, மழை எல்லாமும் சேர்ந்து சூழலைச் சிக்கலாக்கிவிட்டது. முந்தைய இரவு முழுதும் கண்விழித்துப் பரிசுக்கூடைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததால் களைத்துச் சோர்வாக இருந்தபோதும் நானே நேரடியாகக் கொண்டுசென்று சேர்ப்பித்தேன்.

இத்தொழில் வாடிக்கையாளர்களின் வாழ்வின் முக்கியத் தருணங்களுடன் தொடர்புகொண்டிருப்பதால் குறித்த பொருள், குறித்த நேரத்தில் வந்துவிடும் என்னும் நம்பிக்கையைத் தலையை அடமானம் வைத்தேனும் காப்பாற்றுவது அவசியம். அதுவே என் தொழிலின் தர்மம்.