பசார் மலாம் என்னும் ஃபீனிக்ஸ் பறவை

சிவானந்தம் நீலகண்டன்

சிங்கப்பூர், மலேசியாவில் ‘பசார் மலாம்’ (pasar malam) என்பது இரவுச் சந்தை. ‘பசார் பகி’ (pasar pagi) என்னும் காலைச் சந்தையும் உண்டு, ஆனால் அது ஈரச்சந்தை (wet market) என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. ஒருவகையில், சமைக்க வேண்டிய பொருள்களுக்கு காலைச் சந்தை, சமைத்த பொருள்களுக்கு இரவுச் சந்தை எனலாம். ஆயினும் இன்றைய சிங்கப்பூர் பசார் மலாமில் உணவைத் தாண்டியும் பல்வேறு பொருள்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் களைகட்டுகின்றன.

சிங்கப்பூரின் இரவுச் சந்தைகள் 1950களில் ஜாலான் காயூ, செம்பவாங், கெப்பல் துறைமுகப் பகுதிகளை ஒட்டி அமைந்தன. பிரிட்டிஷ் கடற்படைத் தளங்களில் வாராந்திரச் சம்பளம் என்பதால் சம்பளத் தேதியை அனுசரித்து இச்சந்தைகள் முளைத்தன. சுதந்திரச் சிங்கப்பூரில் சுதந்திரமாகச் செயல்பட்டுவந்த பசார் மலாம்களுக்கு விரைவிலேயே ஒரு சோதனை வந்தது.

அப்போதெல்லாம் சாலையோரங்களில், திறந்தவெளிக் கடைகள் பரப்பப்பட்டு உணவும், இதரபொருட்களும் விற்பனை நடக்கும் சந்தையாகப் பசார் மலாம் இருந்தது. சுகாதாரமற்ற உணவால் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்தன. மேலும் சாலையோரக் கடைகள் என்பதால் கூட்டம்கூடியதும் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பசார் மலாமால் ஒருபக்கம் மக்களுக்கு நன்மை, இன்னொருபக்கம் இடைஞ்சல். அந்நிலையில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் நெரிசலைக் கட்டுப்படுத்தவும் சந்தைகளில் உணவுக்கடை வைப்போர் உரிமம் பெறுதல், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சந்தை அமைத்தல் எனச் சில கட்டுப்பாடுகளை 1966இல் அரசு கொணர்ந்தது.

புதிய கட்டுப்பாடுகளுக்குப் பின்னும் இரைச்சல், நெரிசல், சுகாதாரப் பிரச்சனைகள் தொடர்ந்ததால் 1970களில் மெல்லமெல்ல இரவுச் சந்தைகளுக்கான அனுமதி குறைக்கப்பட்டு 1978இல் கடைசிப் பசார் மலாமும் மூடப்பட்டதுடன் சிங்கப்பூரில் பசார் மலாம்கள் தடை செய்யப்பட்டன. ஐந்தாண்டுகள் கழித்து 1983இல் செந்தோசாவில் மட்டும் சுற்றுப்பயணிகளைக் கவரும் ஓர் அம்சமாகப் பசார் மலாம் செயல்பட அனுமதிக்கப்பட்டது. மக்கள் மீண்டும் இரவுச் சந்தைகளைக் குடியிருப்புப் பேட்டைகளுக்குக் கொண்டுவர விரும்புவதைப் பல உறுப்பினர்கள் 80களின் பிற்பாதியில் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தனர்.

ஒருவழியாக 1990களின் தொடக்கத்தில், பசார் மலாமில் உணவு மட்டும் வேண்டாம் பிற பொருட்கள் விற்கலாம் எனத் தொடங்கி, பிறகு, அங்கேயே உணவு தயாரிப்பது வேண்டாம் ஆனால் பொட்டலமிடப்பட்ட உணவுகள் விற்கலாம் என நிலைமை சற்று நெகிழ்ந்தது. ஆனால் சுடச்சுட உணவு தயாரிக்கப்படாவிட்டால் அது பசார் மலாமாகவே இல்லை என்று மக்கள் ஆதரவு சுண்டியதும், தேசியச் சுற்றுப்புற அமைப்பின் (NEA) அனுமதி பெறவேண்டிய நிபந்தனையுடன், இரவுச் சந்தைக்கு உணவுக்கடைகள் திரும்பின. இரவுச் சந்தைகளும் பழையபடி களைகட்டின.

பசார் மலாமில் உணவுக்கடை அமைக்க வேண்டுமென்றால் அக்கடையில் உணவைக் கையாளுபவர்கள் உணவுச் சுகாதாரம் குறித்து NEA வழங்கும் பயிற்சியைப் பெற்று, தேர்வில் தேறி, பதிவுசெய்துகொள்ள வேண்டும். மேலும், சமைக்கத் தேவையான சுத்தமான தண்ணீர் இணைப்பு, வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள், உணவை அடுக்கிவைக்கும் காட்சிப்பெட்டிகள் எனக் கடைகளில் அவசியம் இருக்கவேண்டிய வசதிகளும் பட்டியலிடப்பட்டு அவ்வப்போது அதிகாரிகளால் சோதனையிடப்படுகின்றன.

சுற்றுப்புற அமைப்பு தவிர நகர மன்றம், குடிமைத் தற்காப்புப் படை எனப் பல்வேறு அமைப்புகளிடம் நெரிசல், தீப்பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்காக அனுமதி பெறவேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளால்தான் பசார் மலாமின் நன்மைகளைக் காத்துக்கொள்ளும் அதேவேளையில் இடைஞ்சல்களைக் குறைக்கமுடிந்துள்ளது.

அவ்வப்போது முளைக்கும் இரவுச் சந்தைகளால் வியாபாராம் குறைகிறது என அப்பகுதியில் நிரந்தரமாகக் கடை நடத்துவோரும், வசதியான குளுகுளுக் கடைகள் இரவுச் சந்தைகளின் பாரம்பரிய மவுசைத் தொடர்ந்து குன்றச்செய்கின்றன என இரவுச் சந்தை நடத்துவோரும் சொல்லிவருகின்றனர். இரண்டிலும் உண்மை உண்டு.

பசார் மலாமின் வரலாற்றைப் பார்த்தால் நகரமயமாக்கம், உலகமயமாக்கம் அனைத்திற்கும் ஈடுகொடுத்தது மட்டுமின்றிக் கட்டுப்பாடுகள், தடைகள், பொருளாதாரச் சுணக்கங்கள், பெருந்தொற்றுகள் எனப் பல்வேறு பெருஞ்சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு, சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாகத் திகழ்வதைக் காணமுடிகிறது. அவ்வரலாறு தொடரும் என்று நம்பலாம்.

பசார் மலாம் என்னும் பண்பாட்டு மெல்லிழை

முனைவர் எச்.முகம்மது சலீம்

சிங்கப்பூர்ப் பண்பாட்டின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று அவ்வப்போது முளைத்து மறையும் ‘பசார் மலாம்’ இரவுச் சந்தைகள். பல பதிற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு செயல்பட்டு வந்துள்ள பசார் மலாம், தீவெங்கும் குடியிருப்புப் பேட்டைகளில் அவ்வப்போது குறுவணிகர்கள், பெண் சிறுதொழில் முனைவர்கள், சிற்றுணவு, கலைப்பொருள் விற்பனையாளர்கள் ஆகியோரின் பொருட்களைக் குறுகிய நாட்களில் சந்தைப்படுத்தும் ஏற்பாடு.

மாலை வேளைகளில் குடும்பமாக இரவுச்சந்தைக்குச் சென்றுவருவது ஒருவகை பொழுதுபோக்கு மட்டுமல்ல; பல்லின, பலமொழி பேசும் மக்கள் ஓரிடத்தில் கூடிக்கலந்து உண்டு களிக்கும் சூழலை இரவுச்சந்தை உருவாக்குகிறது. இரவுச் சந்தைகளுக்கென்றே தனித்துவமான பொருட்களான மலாய் குவே, சீனர்களின் டம்ப்லிங், இந்திய வடை, பக்கோடா, விதவிதமான சிற்றுண்டிகள், பாரம்பரிய உடைகள், கைவினைப் பொருட்கள், ‘பபுள்’ தேநீர், சுற்றுப்பயணிகளுக்கான நினைவுப்பரிசுகள் என்று பலவும் ஓரிடத்தில் கிடைப்பது இரவுச் சந்தையின் தனித்துவம்.

கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தொடர்ச்சி அறுபட்டுப்போன இரவுச்சந்தைகள் அதிக வாடகை போன்ற காரணங்களால் மீண்டும் பழைய நிலைக்குவரத் தடுமாறுகின்றன. குளிரூட்டப்பட்ட பேரங்காடிகளும், வீட்டிலிருந்தே வேண்டிய பொருட்களைத் தருவிக்கும் வசதிகளும் பாயும் அசுரப் பாய்ச்சலில், சிங்கப்பூரின் பண்பாட்டு மெல்லிழைகளில் ஒன்றான பசார் மலாம் காலப்போக்கில் அடிபட்டுப் போகுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

து து குவே: தேங்காய்த் திருவலோடு கருப்பட்டி சூரணம்

பொன்.சுந்தரராசு

ஜூச்சியாட், காத்தோங், கேலாங், தோ பாயோ, அலெக்ஸாண்டிரா முதலிய பகுதிகளில் நடைபெற்ற பசார் மலாம் பற்றி நான் நன்கறிவேன். மாதமொருமுறை வீடமைப்புப் பேட்டைகளில் தொடர்ந்தாற்போல் சுமார் ஒருவாரம் இடம்பெறும்.

ஹூவாட் குவே, சீ குவே, சூன் குவே, து து குவே, நோங்யாக் குவே, சொங் கு காவ், மீ ச்சாங் குவே, பீ ஹுவே போன்ற சீனப் பலகாரங்களும் மரவள்ளிக்கிழங்கை அரைத்துச் செய்த குவே உபி காயு பலகார வகைகள், கறி பஃப், ஜிம்போ ஜிம்போ, குவே டா டா, குவே கெசும்பி முதலிய மலாயர் பலகாரங்களுடன் பலவகை ஐஸ் கிரீமும் தாராளமாகக் கிடைக்கும். அவித்த நிலக்கடலை, சோளக்கதிர், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வகைகளும் விற்பனைக்கு இருக்கும். எனக்கு தேங்காய்த் திருவலோடு கருப்பட்டி கலந்த சூரணத்தை நடுவில் வைத்து நீராவியில் வேக வைத்த து து குவே மிகவும் பிடிக்கும்.

பலரும் காகித உறையில் பலகாரங்களை வாங்கிச் சுவைத்தபடி செல்வார்கள். பாத்திரங்கள், தரை விரிப்புகள், வாளிகள், மேசை விரிப்புகள், சன்னல் திரைகள் என வீட்டுக்குத் தேவையான பொருள்களோடு, டீ சட்டைகள், அரைக்கால் சிலுவார், சிறுவர் ஆடைகள், தலையணை, கட்டில் விரிப்புகள் முதலியனவும் கிடைக்கும். அலெக்ஸாண்டிரா பகுதியில் நடைபெற்ற இரவுச்சந்தைக்கு 1972வாக்கில் அப்போது புகழ்பெற்று விளங்கிய நடிகை விஜயகுமாரி வந்திருந்தாராம். அவரைச் சுற்றிப் பெரும் கூட்டம் கூடிவிட்டது என்று என் தங்கை தேவி நினைவுகூர்ந்தார்.

இரவுநேர இளைப்பாறல் திருவிழா

ச.மோகனப்ரியா

ஓடிக்கொண்டிருக்கும் உலகநகர வாழ்க்கையில் திருவிழா போலக் கொண்டாடப்படும் இரவுச் சந்தையைத் தீநுண்மி சில காலம் இல்லாமல் ஆக்கியது. சிங்கப்பூரில் தொற்று பரவாத 2019ஆம் ஆண்டு வரை ஆங்காங்கே கண்டு, ரசித்து, உண்டு வந்த பசார் மலாம் சந்தைகள் நினைவில் நிற்கின்றன.

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் முதல், செருப்பு, வீட்டு உபயோகப்பொருட்கள், பூச்செடிகள், சுவையான உணவு வகைகள் என சிங்கப்பூரின் நிறத்தை அவை பிரதிபலித்தன. புகழ்பெற்ற ‘து து குவே’, மீன் துவையலைக் காரத்துடன் தென்னை இலையில் வைத்துக் கரியடுப்பில் சுட்டுக் கொடுக்கும் ‘ஓட்டா’, பல்வேறு பொறித்த உணவுகள், குளிர்பானங்கள், ஐஸ் கச்சாங் போன்றவற்றிற்காகவே குடும்பத்தோடு அங்கே சென்றிருக்கிறேன். அவை என்றும் பசுமையான நினைவுகளாக து து குவேவின் தேங்காய்ப்பூ இனிப்பாய் என் நினைவில் என்றென்றும் தித்திக்கும்.

சிங்கப்பூர் வந்த இத்தனை ஆண்டுகளில் எனக்கு மிகப் பிடித்தமான திருவிழா நிகழ்வாக பசார் மலாம் சந்தைப்பகுதியைச் சொல்லலாம். குழந்தைகளுக்காகவே பசார் மலாம் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிறு விளையாட்டுப்பகுதி, பெரியவர்களையும் இழுத்துச் சென்றுவிடும். மாலை வேளைகளில் மழலைகளோடு மழலைகளாக எல்லா இன மக்களும் வந்து, சுவைத்து, விளையாடி, களித்து இளைப்பாறிச் செல்லும் நிலாக்காலமாக அவை அமைந்திருந்தன.

எஞ்சிய பொருள்களுக்கு விஞ்சிய கூட்டம்

யூசுஃப் ரஜீத்

மாலையில் விழித்துக்கொள்ளும் ஓர் இரவுச்சந்தையான பசார் மலாம், ஓரிடத்தில் நிலையாகக் கடைவைத்து வியாபாரம் செய்ய வசதியில்லாத பலருக்குக் கைகொடுக்கிறது. உட்லண்ட்ஸ், தெம்பினிஸ், கேலாங், சுவா சூ காங், பொங்கோல், கரையோரப் பூங்கா, பேருந்து, தொடர்வண்டி நிலையங்களின் அருகில் உள்ள காலி இடங்கள் எனப் பல இடங்கள் மக்களின் ஆதரவைப் பொறுத்து இச்சந்தைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும். மாலை அரும்பி, முன்னிரவில் ஒளிர்ந்து, பின்னிரவில் உறங்கிவிடும் சந்தை இது.

உள்ளூரில் விரும்பப்படும் உணவுகளைச் சுற்றுப்பயணிகளுக்கு அறிமுகம் செய்தல், காய்கறிகள் பழங்கள், மலிவுவிலை ஆடைகள், புத்தகங்கள், இசை காணொளி வட்டுகள் என்று இந்த வியாபாரம் விரிகிறது. கலைப்பொருட்கள், ஓவியர்களின் கைவண்ணம், பின்னல் வேலைகள், அரிதான புராதனப் பொருள்கள்கூட இங்கு சில சமயம் கிடைப்பதுண்டு. சில பொருள்களின் அருமை விற்பவருக்கே தெரியாது, வாங்குபவருக்குத்தான் தெரியும்.

கேலாங் செராயில் மிகப்பெரிய அளவில் நடக்கும் ரமலான் சந்தை, இந்தியாவிலிருந்து ஆபரணங்கள், உடைகளை இங்கு கொண்டுவந்து ‘எக்ஸ்போ’வில் சந்தைப்படுத்துவது போன்ற உத்திகளும் இந்தப் பசார் மலாம் இரவுச்சந்தையின் இன்னொரு முகமே. இந்தச் சந்தையில் வியாபாரத்தை முடிக்கும் நேரத்தில் மிஞ்சிப்போன சரக்கை மிக மலிவாக விற்பார்கள். இதற்காகவே ஒரு கூட்டம் எதிர்பார்த்திருப்பதும் உண்டு. அதனால் கேலாங் ஹரிராயா சந்தையின் கடைசி நாளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போவதும் உண்டு.

இரவுச் சந்தைகளில் உறவாடலும் வணிகமும்

பாண்டியன் முனுசாமி

எனக்கு சிங்கப்பூர் பசார் மலாம் அனுபவம் குறைவு என்பதால் மலேசிய அனுபவத்தைக்கொண்டு சொல்கிறேன். மலேசியாவில் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் இயல்பாகக் காணப்படும் சிறுதொழில் வணிகம் ‘பசார் மலாம்’ எனப்படும் இரவுச் சந்தைகள். பகலில் வேலையின் காரணமாக அன்றாடப் பொருட்களைக் கடைகளுக்கோ சந்தைகளுக்கோ சென்று வாங்க வாய்ப்பில்லாதவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர்க் குடியிருப்பாளர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டவை இரவுச் சந்தைகள்.

இங்கே கிடைக்காத பொருட்களே இல்லை. குறிப்பாக, காய்கறி, பலகாரங்கள், துணிமணிகள் முதற்கொண்டு மின்னியல் பொருட்கள்வரை கிடைக்கும். வேலையின் களைப்பில் சமையல் செய்ய சிரமப்படுபவர்களுக்கு இச்சந்தைகள் உணவுச் சொர்க்கமாக அமையும். இரவுச் சந்தையின் இன்னுமொரு முக்கிய அம்சமாக அமைவது சமூக ஊடாட்டங்கள். வெகுநாட்கள் பார்க்காத நண்பர்களை இங்கே எந்தத் திட்டமிடல்களும் இல்லாமல் இயல்பாகச் சந்தித்து அளவளாவலாம். பல்வேறு காரணங்களுக்காக இரவுச் சந்தைகள் பெரும்பாலான மக்களுக்கு இன்றியமையாத ஒன்றே.

வணிகத்தில் சீனர்களுடன் போட்டியிடச் சவால்களை எதிர்நோக்கும் இந்தியர்களுக்கு இரவுச் சந்தைகள் நல்ல வாய்ப்பாக அமைகின்றன. காய்கறி, பலகார விற்பனைகளை இந்தியர்கள் அதிகம் செய்கிறார்கள். இவற்றுள் பலர் பின்நாளில் வெற்றிகரமான முழுநேர வணிகர்களாக உருவெடுத்ததும் உண்டு.

கொண்டாட்டக் கணங்களைக் கொணரும் சந்தை

முனைவர் ராஜி சீனிவாசன்

கேலாங் செராய் வட்டாரத்தில் அமைக்கப்படும் பசார் மலாம் சந்தைக் கூடாராங்கள், வண்ண ஒளியூட்டு, வண்ண உடைகளுடன் மக்கள் நடமாட்டம் என அனைவரையும் ஈர்க்கின்றன. பெருந்தொற்றுக்கு முன்பு இந்தச் சந்தைகளில் உயர்தர உயர்விலைக் கம்பளங்கள், சொகுசு இருக்கைகள், மேல்விரிப்புகள், வீட்டு அலங்காரப் பொருள்கள் போன்றவை வியாபாரம் ஆகிக் கொண்டிருந்தன. தொற்றுக்குப்பிறகு பசார் மலாம் சந்தைகள் மீண்டும் தொடங்கினாலும் நான் கண்டவரையில் அதிகமாக வியாபாரமாவது சமைத்த உணவுப் பொருட்களே. முன்பு 600 வெள்ளிக்கு விற்கப்பட்ட கம்பளம் தற்போது 50 வெள்ளி குறைவாக இருந்தாலும் மக்கள் வாங்க யோசிக்கிறார்கள். வாடகை அதிகமாகி இருப்பதால் பெரிதாக விலையைக் குறைக்க இயலவில்லை என்கின்றனர் வியாபாரிகள்.

போன முறை பார்த்ததை விட பல மடங்கு அதிக உணவுக் கடைகள் தற்போது உள்ளன. ஆனால் Whiskdom, Kakak Chicken, Krumbz N Kraves போன்ற கடைகள் வந்து பாரம்பரிய நாசி லெமாக், அசாம் லாக்சா, நாசி கந்தார் கடைகளின் வியாபாரத்தைப் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. ‘அசல் வடை’ (Original Vadai) கடை ஒன்றும் இடையே சமாளித்துக்கொண்டிருக்கிறது. எது எப்படியானாலும் கொண்டாட்ட உணர்வு பெருந்தொற்றுக்குப்பின் அதிகரித்துள்ளது என்பேன். மகிழ்வாகக் கூடிப்பேசிக் கழிக்கும் வாழ்வின் ஒவ்வொரு கணமும் பொருளுள்ளது என்னும் உணர்வை, அதிகம் செலவழிக்க யோசிப்பவர்களும்கூட இந்தச் சந்தைகளில் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

அமைதியான சந்தை, அதிகமான விலை

முகமது ரஃபி

நான் சிறுவனாக இருந்தபோது கேலாங்கில் பசார் பாரு கட்டடத்தில் ஈரச்சந்தை, உணவங்காடி அவற்றோடு பசார் மலாம் கடைகளும் நிறைந்திருக்கும். பெருநாளன்று கூட்டம் அலைமோதும். விட்டுவிட்டால் கூட்டத்தில் தொலைந்துபோகக்கூடும் எனப் பெற்றோர் என் கையை மிகவும் இறுக்கிப் பிடித்திருப்பார்கள். இசை ஒருபக்கம் விற்பனையாளர்களின் கூவிவிற்கும் குரல்கள் மறுபக்கம் எனக் கலவையான ஒலிச்சிதறல்களின் ஊடாகக் கிடைத்த இளவயது அனுபவம் மறக்கவியலாது. தற்போது ஒலிக்கலவையும் கூட்டமும் ஒப்பீட்டளவில் குறைவே. வீடமைப்புப் பேட்டையின் பல்வேறு பகுதிகளிலும் சந்தைகள் இடம்பெறத் தொடங்கிவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

கடந்த மாதம் நோன்பு மாதம். கம்போங் கிளாம், கேலாங் இருபகுதிகளின் பசார் மலாம் சந்தைகளுக்கும் சென்றிருந்தேன். இருபதாண்டுகளுக்கு முந்தைய என் சந்தை நினைவுகளோடு ஒப்பிடும்போது எவ்வளவோ மாற்றங்கள். பொதுவான அம்சங்களாக இரு சந்தைகளிலும் நான் கண்டவை புதுப்புதுக் கடைகள், புதுப்புது அணுகுமுறைகள், கண்கவர் அலங்காரங்கள், அவற்றோடு அதிக விலை. சுத்தமும் முறையான வடிவமைப்புகளும் அதிகரித்திருப்பினும் கொண்டாட்ட உணர்வு முன்னைக்காட்டிலும் குன்றியிருந்ததாகவே உணர்ந்தேன்.

சங்ககால அல்லங்காடியும் சமகாலப் பசார் மலாமும்

ஷாநவாஸ்

பெரிய நகரங்களில் அந்தியில் நடைபெற்ற அங்காடியை “அல்லங்காடி” என்றும், பகலில் நடைபெற்ற அங்காடியை “நாளங்காடி” என்றும் குறிப்பிட்ட பதிவுகள் சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சியில் இடம்பெற்றுள்ளன. நாளங்காடி என்பவை, பகல் நேரக் கடைகள். அல்லங்காடி, இரவு நேரக் கடைகள். அல் என்றால் இரவு. அல்லும் பகலும் என்ற இரட்டைச் சொற்களை நினைத்துப் பாருங்கள்.

எந்நேரமும் கடைகள் திறந்திருப்பதால், மக்கள் இயக்கம் தொடர்ந்து இருப்பதால், மதுரையைத் தூங்கா நகரம் என்றும் அழைப்பது உண்டு. அடையா நெடுங்கதவம் எனச் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பு உண்டு. பொருநராற்றுப்படையிலும் இரவு நேரங்களில் செயல்படும் அல்லங்காடிகளைப் பற்றிய குறிப்புகள் உண்டு. இரவு நேரக்கடைகளில் விற்கப்படும் பொருட்களை அடையாளம் கண்டுகொள்வதற்காவே, பொருட்களின் உருவத்தைக் கொடியில் வரைந்து அதை அல்லங்காடிகளின் மேற்கூரைகளில் பறக்க விடுவார்கள். அவற்றை தூரத்தில் இருந்தே நுகர்வோர் இரவு நேரத்திலும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடுவர்.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பட்டினப்பாலை, காவிரிப்பூம்பட்டனம் எனப்படும் கடலோரப் பூம்புகார் நகரத்தில் பட்டினப்பாக்கம், மரூவூர்ப்பாக்கம் என இரு பிரிவுகளைக் கொண்டு ஒரே சீராக அமைக்கப்பட்ட தெருக்கள், உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், பசுமையான வயல் வெளிகள், மீன்கள் துள்ளிக் குதிக்கும் நீர்நிலைகள், இரவு நேரத்திலும் அரபு நாடுகளில் இருந்து மரக்கலங்களில் (கப்பல்) வந்து இறங்கி நகரத் தெருக்களில் ஒடும் புரவிகளின் (குதிரை) குளம்படிச் சத்தம், பல வகையான தொழில் செய்யும் மனிதர்கள், வரிசையாகக் கடைகளைக் கொண்ட நாளங்காடிகள், இரவில் திறந்திருக்கும் அல்லங்காடிகள் எனப் பூம்புகார் நகரத்தின் எழிலை விவரிக்கிறது.

சீன இனப் பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளில் இரவுச் சந்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாகக் கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன. புலம்பெயர் சீனச் சமூகங்களிலும் உலகளவில் பரவியுள்ள அனைத்து சைனா டவுன்களிலும் உள்ளன. அங்காடிக் கடைகளில் கிடைக்காத உணவு வகைகளை அல்லங்காடிக் கடைகளில் உணவுப் பிரியர்கள் தேடுவதற்கு முக்கியமான காரணம் அதன் சுவை மட்டுமல்ல, பிரத்யேகமான தயாரிப்பு முறைகள், வட்டாரத் தனித்துவமிக்க வகைகள் எனலாம்.

அந்திக் கடைகளில் அண்மைக் காலங்களில் கோலோச்சும் உணவு வகைகள் பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் அல்லது மாற்றத்தினூடே அதைத் தொடரச் செய்தல் என்னும் அணுகுமுறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

நான் பசார் மலாம் செல்லும்போது தவறவிடாத உணவுகள்:

சுருள் ஐஸ்கிரீம்

பதமாக வருவதற்கு முன்னே சுருட்டும் கலை தெரிந்தவர்களை அந்திக் கடைகளில் வேலைக்கு வைத்துள்ளார்களார்கள் என்பதற்கு இந்த ஐஸ்கிரீமே சாட்சி. இதில் ஒருசிலரே தேர்ந்த வித்தைக்காரர்களாக இருப்பார்கள். பேப்பர் சுருள் ஐஸ்கிரீம் பசார் மலாமுக்குச் சிறுவர்களை இழுக்கும் உத்தி.

மரவள்ளிக் கிழங்கு பாண்டான்

மரவள்ளிக் கிழங்கு பாண்டான் இலை சாறு சேர்த்த மரவள்ளிக் கிழங்கு பணியாரம். அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்ட இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் மக்களின் உணவுச் சங்கிலியை சமனப்படுத்திய பணியார வகை.

ராம்லி பர்கர்

இதைப் பசார் மாலாமின் நட்சத்திர உணவு என்று சொல்லலாம். மெக்டொனால்ட், பர்கர் கிங்கில் கிடைக்காத மாட்டுக்கறி, கோழி கலவையில் மெல்லிய இழை ஆம்லெட் சுற்றித் தருவார்கள். பெரும்பாலும் ராம்லி பர்கர் எல்லா அந்திக் கடைகளிலும் கிடைக்கும்.

முர்த்தபாக் மானிஷ்

மடிக்கப்பட்ட பேன்கேக்கான முர்த்தபாக் மானிஷை அப்பம் பாலிக் என்றும் அழைப்பார்கள். இது தென்கிழக்காசியாவில் அப்பம் சுடும் பாத்திரத்தில் தயாரிக்கப்படும் பேன்கேக். இந்த பேன்கேக்கிற்கான கலவையில், மாவு, தேங்காய்ப்பால், தண்ணீர், சீனி, முட்டை, பேக்கிங் சோடா, பாலிக்கினுள் நொறுக்கிய வேர்க்கடலையுடன் சீனி, காய்ந்த தேங்காய்தூள், சோள விழுது ஆகியவை கலந்திருக்கும்.

சுர்ரோஸ்

வெளியே மொறுமொறுப்பும் உள்ளே கொழகொழப்பும் கொண்ட ஸ்பானிஷ் உணவு. ஆனால் உள்ளூர்க் கலவையான குலாமலாக்காவை உள்ளே வைத்துப் பொறித்து எடுப்பார்கள். சன்னி சைட் முட்டை அல்லது சில்லி கிராப் கலவையில் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.

தே முட்டை

ஐந்து வகை சீன மசலாவில் தேயிலை சேர்த்து ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டைகளை அவித்துக் கொண்டிருப்பார்கள். பாதி வெந்த நிலையில் வெளியே உள்ள திரவம் உள்ளே ஊடுருவி ஓட்டை நாம் பிரித்தெடுக்கும்போது பல டிசைன்களில் முட்டை காட்சியளிக்கும் அவிச்ச மசாலா தே முட்டை சாப்பிடும்போது முட்டை வாசம் இருக்காது.

செண்டோல்

இந்தோனேசிய வரவு. தேங்காய்ப் பால், அரிசி மாவு, பண்டான் இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட புழு போன்ற பச்சை நிற ஜெல்லி, அரைக்கப்பட்ட ஐஸ்கட்டி, பனை வெல்லம் ஆகியவையே இந்தப் பதார்த்தத்தில் வழக்கமாகச் சேர்க்கப்படும் பொருட்கள். இது கிட்டத்தட்ட ஜிகிர்தண்டாதான், ஆனால் பசும்பால் கட்டிக்கு பதில் தேங்காய்ப் பால்.