திரைநேரக் குறைப்பு தீர்வாகுமா?

சிவானந்தம் நீலகண்டன்

இணைய விளையாட்டில் மூழ்கிக்கிடக்கும் பதின்மவயதுப் பிள்ளைகளின் பெற்றோர், தம் பிள்ளைகளை மின்னிலக்கத் திரைகளிலிருந்து விடுபடச்செய்யும் மாமருந்து ஒன்றை அயராது தேடுகின்றனர். ஒருகட்டத்தில் தேடிச்சலித்து, முழுமையான திரைவிடுபடல் இனி சாத்தியமில்லை என அறியும்போது, திரைநேரத்தையாவது படிப்படியாகக் குறைக்கலாம் என நினைக்கின்றனர். அதன்மூலம் மோசமான தாக்கங்களை மட்டுப்படுத்தலாம் என்கிற சமரசத்துக்கு வந்துசேர்கின்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது சரியான அணுகுமுறையாகத் தோன்றினாலும் நடைமுறையில் பெரிதாகப் பலன் கிட்டுவதில்லை. ஏன்?

விளையாட்டுத்தனமாகத் தொடங்கும் விளையாட்டுகள் விரைவில் பிள்ளைகளை அடிமைப்படுத்திவிடுவதுதான் காரணம். மூளை வளர்ச்சிபெற்றுவரும் பதின்ம வயதுகளில், பள்ளியிலும் வீட்டிலும் சமூகத்திலும் அவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் நேரம் செலவிட்டுக் கற்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன, ஆனால் அந்தக் காலகட்டத்தில் பெரிதாகச் சாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதற்கு நேரெதிராக, ஒரு கணினி விளையாட்டின் விதிகளையும் சூட்சுமங்களையும் சில வாரங்களில் கற்றுக்கொண்டுவிடலாம். சில மாதங்களில் விற்பன்னராகிவிடலாம். கைமேல் பலன். காத்திருந்து பலனடைவதை நம் மூளை ஏனோ விரும்புவதில்லை!

ஓர் இணைய விளையாட்டின் படிநிலைகள் சிலவற்றைத்தாண்டி, ஒரு குறிப்பிடத்தக்க ‘சாதனை’யாளராக, அவ்வுலகில் உலவத் தொடங்கிவிட்டப் பிள்ளைகளிடம் திரைநேரக் குறைப்பு அறவே எடுபடாது. அவர்கள் அவ்வுலகில் கஷ்டப்பட்டு ஈட்டிய பெயரையும் பொருளையும் – ஆம், அங்குமட்டும் செல்லுபடியாகும் ஒரு பணம் அனேகமாக எல்லா விளையாட்டிலும் உண்டு – தக்கவைக்கவும் தொடர்ந்து முன்னிலை வகிக்கவும் பிள்ளைகள் அன்றாடம் பலமணி நேரம் ‘உழைக்க’ வேண்டியிருக்கும். அப்போது இடையில் புகுந்து வலுக்கட்டாயமாக நேரத்தைக் குறைத்தால், அவர்களை அவ்விழப்பு ஆவேசம் கொண்டவர்களாக ஆக்கிவிடும்.

ஒருமாதம் கணினி விளையாட்டுக்குத் தடைவிதித்த தந்தையைக் கத்தியால் குத்திவிட்டான் பாசிர் ரிஸ் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு 14 வயதுப் பையன். தந்தை மருத்துவமனையில் இறந்துபோனார். பையனுக்குக் கடந்த 5 ஆண்டு தடுப்புக்காவல் விதிக்கப்பட்டது (2022) நினைவிருக்கலாம். திரைநேரக் குறைப்பை வல்லந்தமாகச் செய்யமுயன்றதில் ஒரு குடும்பமே அழிந்தது. அவ்வாறு நடப்பது அரிதானது என்றாலும் பெற்றோருக்கு எதிரான ஒரு மனநிலையைப் பிள்ளைகளிடம் திரைநேரக்குறைப்பு உருவாக்குகிறது என்பதுதான் அடிப்படையான சிக்கல். அவ்வெதிர்ப்பு மனநிலை பல்வேறு விதங்களில் வெளிப்படும்.

“படிப்பில் மதிப்பெண் கூடுமென்றுதானே திரைநேரத்தைக் குறைத்தீர்கள், அப்படி ஏதும் கூடவில்லையே” என்று காட்டுவதற்கு வேண்டுமென்றே படிக்காமல் இருப்பார்கள். அடிக்கடி உடல்நிலை சரியில்லை என வகுப்புக்கு மட்டம் போடுவார்கள், சமயங்களில் தேர்வுக்கும். வெளியே குடும்பத்துடன் செல்லவோ வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் வரமாட்டார்கள். ஒருவகையில், கணினி விளையாட்டில் அவர்கள் பெற்றுகொண்டிருந்த ‘வெற்றி’களைத் திரைநேரக் குறைப்பிற்குப் பிறகு பெற்றோர் எதிர்ப்பில் பெறத்தொடங்கிவிடுவர். அந்நிலை மிகவும் மோசமானது, தவிர்க்கப்படவேண்டியது. சரி, என்னதான் செய்வது?

பெற்றோருக்கு எதிரான ஒரு மனநிலையைப் பிள்ளைகளிடம் திரைநேரக்குறைப்பு உருவாக்குகிறது என்பதுதான் அடிப்படையான சிக்கல். அவ்வெதிர்ப்பு மனநிலை பல்வேறு விதங்களில் வெளிப்படும்

நான் ஆராய்ந்ததிலும் அனுபவத்தில் கண்டதிலும் உளவியலாளர்கள் சிலர் பரிந்துரைக்கும் ‘திருத்துவதற்கு முன்னால் அரவணைப்பு’ (connection before correction) என்னும் அணுகுமுறை நல்ல பலன்களை அளிக்கிறது. முதலில், ஐந்து பத்து நிமிடம் ஒரு விஷயத்தை உரையாடுவதற்கு – அறிவுரை சொல்வதற்கு அல்ல – நம் பிள்ளைகளைப் பழக்கவேண்டும். அதன்மூலம் அவர்கள் எந்த ஏக்கத்தை, குறைபாட்டை ஈடுகட்டக் கணினி விளையாட்டில் மூழ்குகின்றனர் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்தப் புள்ளியில் இருந்துதான் உண்மையான தீர்வு தொடங்கவியலும்.

பிள்ளைகள் நிஜவாழ்க்கையில் ஒருவித நிறைவையும் ஆதரவையும் அடைவர் என்றால் அவர்கள் கணினி விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொண்டு போவதற்கான சாத்தியங்கள் அதிகம், அடிமைப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எவ்வாறு அரவணைப்பது என்பதில் அவரவர் குடும்பச் சூழலுக்கு ஏற்ற உத்திகளைப் பெற்றோர்தான் புத்தாக்கத்துடன் கண்டறியவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்குமேல் கணினி விளையாட்டுகளில் ஈடுபடும் பதின்மவயது பிள்ளைகளின் பெற்றோர் உடனே யோசித்துச் செயல்படத் தொடங்குவது நல்லது.

தொடக்கநிலையில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் முடிந்தவரை கணினி விளையாட்டுகள், கைபேசிப் பயன்பாடு ஆகியவற்றைத் தவிர்க்கச் செய்வது சாலச் சிறந்தது. பரவாயில்லை இருக்கட்டும் என்று லேசாகத் தொடங்குவதுதான் பிறகு தும்பைவிட்டு வாலைப்பிடித்த கதையாக ஆகிறது. அமெரிக்காவில் பெற்றோர் சேர்ந்து ‘எட்டாம் வகுப்புவரை காத்திருப்போம்’ (Wait until 8th) என்னும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். சக மாணவர்கள் கைபேசி வைத்திருப்பதால்தான் சகவழுத்தம் (peer pressure) உண்டாகிறது. மாணவர்கள் அனைவரின் பெற்றோரும் சேர்ந்து முடிவெடுத்தால் அந்தச் சிக்கலைத் திறம்படச் சமாளிக்கலாம் என்பதே அவ்வியக்கத்தின் அணுகுமுறை. சிங்கப்பூரிலும் அப்படி ஓர் இயக்கத்தைப் பெற்றோர் தொடங்கவேண்டும்.