சாப்பாட்டுக் கடையில் முருக தரிசனம்!


இலட்சுமணன் ராஜா

அன்று ஞாயிற்றுக்கிழமை. எனக்கு விடுமுறை தினங்களில் அதிகாலை எழுந்திருப்பதில் ஆனந்தம். அவ்வாறு எழுந்தாலே விடுமுறை நாளை முழுவதுமாக அனுபவித்த திருப்தி கிடைக்கும். மேலும், வெளியே நடைப்பயிற்சி செய்யும்போதோ, சந்தைக்குச் சென்று பொருள்கள் வாங்கும்போதும் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. எனது மனைவியும் குழந்தைகளும் எனக்கு நேரேதிர். அவர்களின் விடுமுறை தினங்கள் காலை 10 மணிக்குத்தான் தொடங்கும்.

அந்த ஞாயிறும் வழக்கம்போலக் காலையிலேயே எழுந்து ‘ஒலி 96.8’ இல் 6 மணி தேசிய கீதத்தைக் கேட்டுக்கொண்டே வீட்டை விட்டு இறங்கினேன். வீட்டின் அருகாமையில் உள்ள புக்கிட் பாஞ்சாங் பூங்காவில் இயற்கையை ரசித்தவாறே நடப்பது வழக்கம். காலையின் குளிர்ந்த காற்றை நன்கு உள்ளிழுத்துப் பறவைகளின் சத்தத்தோடு மரம் செடிகளின் பசுமையைக் காணும்போது எனது கிராமத்தின் மண்வாசனையை உணர்வது போன்ற ஓர் இன்பம்.

பின்பு பாங் சுவா குளத்து நீரின் மேல் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடந்துகொண்டே துள்ளி குதிக்கும் மீன்களையும் ஒன்றையொன்று விரட்டி நீந்திச் செல்லும் ஆமைகளையும் பார்ப்பது அலாதியானது. அவ்வாறு பார்க்கும்போது பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது கடிக்கும் மீன்களின் ஞாபகம் வந்து அந்த உணர்வில் சிரித்து சிலிர்க்கத் தவறுவதில்லை.

அதே உற்சாக மனநிலையோடு பக்கத்தில் உள்ள உணவுக் கடையில் இரண்டு வடைகளைச் சட்னியுடன் வாங்கி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நான் சாப்பாட்டுக் கடையில் அடிக்கடி சந்திக்கும் அந்தத் தாத்தா தனது பேரனோடு வந்தார். அவர் சீனர், ஆனாலும் தமிழ் உணவுகளை ரசித்து ருசித்துச் சாப்பிடுவார்.

அந்தச் சாப்பாட்டுக் கடையில் முருகன், குமார் என இருவர் வேலை செய்கிறார்கள். அடிக்கடி நான் அங்குச் செல்வதால் அவர்களுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. கடின உழைப்பாளிகள். சன்னமான சத்தத்தில் வானொலி கேட்டுக்கொண்டு காலையிலேயே சுறுசுறுப்பாக வேலையைத் தொடங்கிவிடுவார்கள்.

அந்தத் தாத்தா தனது பேரனோடு வந்தார். அவர் சீனர், ஆனாலும் தமிழ் உணவுகளை ரசித்து ருசித்துச் சாப்பிடுவார்.

மாதத்திற்கு ஒருநாள் மட்டுமே கடைக்கு விடுமுறை விடுவார்கள். கேட்டால்… “அண்ணே, நம்ம கடைய நம்பி தினம் வரும் வாடிக்கையாளர்கள் நிறைய இருக்கிறார்கள், நாம் அடைத்துவிட்டால் அவர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவார்கள். நமக்கும் வருமானம் முக்கியம்லாண்ணே” என்பார்கள். ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை அவர்களிடம் அடிக்கடி பேசியதில் அறிவேன்.

முருகன் தனக்கு மூன்று தங்கைகள் என்றும் அப்பா அவன் சிறுவனாக இருந்தபோதே இறந்துவிட்டார் என்றும் அவர்கள் இருந்த வீட்டை விற்றுக் கிடைத்த பணத்தின் உதவியுடன் சிங்கப்பூர் வந்ததாகவும் கண்கலங்கிக் கூறியிருக்கிறான். பல சமயங்களில் சீன, மலாய் வாடிக்கையாளர்களுக்கு அரைகுறை ஆங்கிலத்தில் உணவு குறித்து அவன் விளக்குவது எனக்கு வேடிக்கையாக இருக்கும். அவன் தன்னம்பிக்கையைக் குறித்துப் பெருமையாகவும் இருக்கும்.

சீனத் தாத்தாவுடன் வந்த பேரன் இரண்டு இருக்கைகள் தள்ளி உள்ள மேசையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு நான்கைந்து வயது இருக்கும். தாத்தா உணவு வாங்குவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார். திடீரென அந்தச் சிறுவன் நாற்காலிகளை நகற்றி உணவு மேசையின்கீழ் அமர்ந்து எதையோ தேடிக்கொண்டிருந்தான்.

முருகனிடம் தன் பேரன் ஒரு வெள்ளி நாணயம் ஒன்றைத் தவற விட்டுவிட்டதாகவும் அது எங்கோ உருண்டோடிவிட்டது எனவும் ஆங்கிலத்தில் கூறினார்

நாற்காலிகள் நகரும் சத்தம் கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். சத்தம் கேட்டுத் திரும்பிய தாத்தாவும் அவனருகில் வந்து ஏதோ சீன மொழியில் உரையாடினார். பின்பு சாப்பாடு வாங்கும்போது முருகனிடம் தன் பேரன் ஒரு வெள்ளி நாணயம் ஒன்றைத் தவற விட்டுவிட்டதாகவும் அது எங்கோ உருண்டோடிவிட்டது எனவும் ஆங்கிலத்தில் கூறினார்.

அதனைக்கேட்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த பலரும் அவரவர் மேசைக்கு அடியில் தேடத் தொடங்கினோம். எல்லாரும் தேடுவதைப் பார்த்த அந்தச் சிறுவன் பயத்துடன் கண்கலங்கி நின்றான். நானும் அனைத்தையும் கவனித்துக்கொண்டே தேடினேன். உருண்டுபோன அந்த நாணயத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடையில் உணவு விற்பனை செய்துகொண்டிருந்த முருகன், வெளியே வந்து எங்களுடன் தேடுவது மாதிரி தேடி, தனது கால்சராய்ப் பையிலிருந்து ஓர் ஒருவெள்ளி நாணயத்தை எடுத்துக்கொண்டான். பின்பு கண்டுபிடித்தமாதிரி அந்த நாணயத்தைச் சிறுவனிடம் சிரித்துக்கொண்டே கொடுத்து, “ஃபீலிங் ஆ , டேக் இட் ஈஸி” என்று சொல்லிக் கொடுத்தான். சிறுவனின் முகத்தில் புன்னகை.

முருகன் எனதருகில் வந்து, “அண்ணே, நான் அரைகுறை இங்லீஷ்ல சொன்னது அந்தப் பையனுக்கு புரிஞ்சுதான்னு தெரியல.. நீங்க கொஞ்சம் நல்லா எடுத்து சொல்லுங்கண்ணே” என்றான். நான் அவனைத் தட்டிக்கொடுத்து, “தேவையில்லப்பா” என்று கூறும்போது எனக்குள் ஏதோ உடைந்த மாதிரி இருந்தது.

அப்போது எனது கைபேசி சிணுங்க அம்மா ஊரிலிருந்து பேசினார். அவரும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். “எப்பா.. உன்னைய இன்னிக்குக் கோவிலுக்குப் போகச் சொன்னனே.. காலையிலேயே போய்ட்டு வந்துருங்கப்பா” என்றார். நான், “ஆமாம்மா… காலையிலயே முருகனை பாத்துட்டேன்.. இங்கதான் இருக்கேன்” என்றேன்.
ஒலியில், “அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு” என ஏசுதாஸ் குழைந்துகொண்டிருந்தார்.