பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலின் இலக்கிய இடம் என்ன?
– ஒரு விவாதம்

வாசகர்கள் அழகுநிலா, லங்கேஷ், ரமா சுரேஷ், சர்வான், சத்யா, சிவானந்தம் ஆகியோர் ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலை வாசித்துவிட்டு நாவல் குறித்த விவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் நடந்த இணையவழி விவாதத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகளின் சுருக்கம் இங்கே

லங்கேஷ்: பின்தொடரும் நிழலின் குரல் நாவலை இரண்டாம் முறை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் கம்யூனிச சித்தாந்தம் குறித்த தகவல்களும் சிந்தனைகளும் வெவ்வேறு புதிய கோணங்களில் நாவலிலிருந்து எழுகின்றன. கம்யூனிசம் வென்றதா தோற்றதா என்று ஆராய்வதைவிட, ஏகாதிபத்தியத்துக்கு (இம்பீரியலிசம்) இன்றும் சவாலாக நிற்கும் ஒரே மாற்றுச் சித்தாந்தம் என்கிற அளவில் குறிப்பிடத்தக்கது என்றே நினைக்கிறேன். சித்தாந்தத்தால் கவரப்பட்டு தீவிரக் கட்சிச் செயல்பாடுகளில் இறங்குவோர் ஒருகட்டத்தில் தம் அந்தராத்மாவின் குரல்களுடன் கொள்கைகள் முரண்படும் இடங்களைக் கையாள்வதில் பலவிதமாக வெளிப்படுகின்றனர். வீரபத்ரபிள்ளை, அருணாசலம் ஆகிய கதாபாத்திரங்களை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

சிவானந்தம்: கம்யூனிச சித்தாந்த நடைமுறைப்படுத்தலில் உருவாகும் சிக்கல்களுக்கு சமரசம் காணும்போது, எந்த அளவுக்கு மையமான கொள்கைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் விலகலாம் என்பதில் பல தடுமாற்றங்கள், குழப்பங்கள் கதாமாந்தர்களுக்கு நேர்கின்றன. பொதுவான நியாயம், புரட்சிக்கான நியாயம் என இரண்டு நியாயங்கள் உள்ளனவா? சிங்கம் தன் உயிரியல் கடமையைச் செய்ய மானைக் கொல்லுமிடத்தில் ஜீவகாருண்யக் கொள்கைக்கு என்ன பொருள்? சிக்கலான கேள்விகள் தொடர்வது மட்டுமின்றி நடைமுறைக்கும் லட்சியவாதத்துக்கும் இடையிலான முரண்கள், தர்க்க நிலைக்கும் உணர்வு நிலைக்குமான இழுபறிகள் என்று நாவல் முழுக்க ஒருவித இருமையும் நீண்டுசெல்கிறது. அருணாசலத்தின் மனைவி நாகம்மையிடம் சித்தாந்தங்களும் கொள்கைகளும் இல்லை, ஆகவே குழப்பங்களும் இல்லை!

அழகுநிலா

மனிதரிடத்தில் இயல்பாகவே குடிகொண்டிருக்கும் நியாய, நீதி உணர்வுகளுக்கும் ஒரு சித்தாந்தத்தினால் உருவாக்கப்படும் நியாய, நீதி உணர்வுகளுக்கும் இடையிலான ஒரு மோதலாக இந்த நாவலை நான் பார்க்கிறேன். அதைத்தான் லங்கேஷ் அந்தராத்மாவின் குரல்களுக்கும் கொள்கைகளுக்குமான முரண்பாடு என்கிறார் என நினைக்கிறேன். இயேசு உயிர்த்தெழுதலை நீதி உயிர்த்தெழுவதின் குறியீடாக நாவல் பார்க்கிறது. நம்முடைய நீதியுணர்வே நம்மை நிழல்போலப் பின்தொடரும் குரல்.

அழகுநிலா: என்னைப் பொறுத்தவரை பின் தொடரும் நிழலின் குரலாக நான் நாவலில் பார்ப்பது குற்றவுணர்ச்சியைத்தான். தல்ஸ்தோய் – தஸ்தயேவ்ஸ்கி, புகாரின் – அன்னா, கந்தசாமி – அருணாசலம் எனப் பல்வேறு உரையாடல்களின் வழியாகவும் குற்றவுணர்ச்சி மேலிடும் தருணங்களையே நான் பார்க்கிறேன். சிறுவயதில் திராவிடக் கட்சிகளின் பேச்சுகள், தோரணைகள் இவற்றிலிருந்து மாறுபட்டிருந்த ஆரவாரமற்ற, ‘நல்லவர்’களாகவே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். “சிவப்புத்துண்டு ஒருவரை வாழவைக்குமே தவிர கழுத்தை நெரிக்காது” என்பார் எங்கள் ஊரில் ஒருவர். அவர் கட்சியின் அடிமட்டத் தொண்டர்.

அபுனைவின் தன்மைகள் அதிகமுள்ள நாவல் என உணர்ந்தாலும் என் வாசிப்பின் போதாமைகளையும் அதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லவேண்டும்.

இந்த நாவலை முதல்முறை வாசித்தபோது கம்யூனிச சித்தாந்தத்தைச் செயல்படுத்திப் பொன்னுலகை மண்ணுலக்குக் கொணரும் முயற்சியில் செய்யப்பட்ட பாதகங்கள் என் இளவயது மனப்பதிவுகளில் கீறல்களை விட்டுச்சென்றன. அது மறக்கமுடியாத அனுபவம். அபுனைவின் தன்மைகள் அதிகமுள்ள நாவல் என உணர்ந்தாலும் என் வாசிப்பின் போதாமைகளையும் அதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லவேண்டும். பல வரலாற்று ஆளுமைகளைக் குறித்த பின்புலங்களை வாசித்துவிட்டு மீண்டும் இந்த நாவலை வாசிக்கவேண்டும்.

சர்வான்

சர்வான்: நான் வாசித்த ஜெயமோகனின் முதல் நாவல் பின் தொடரும் நிழலின் குரல். ஓரளவுக்கு அரசியல், பொதுவாழ்க்கை குறித்த பிரக்ஞை உருவான வயதில் இந்நாவல் எனக்கு அறிமுகமானது. ஓரிடத்தில்கூட தொய்வின்றி என்னால் வாசிக்கமுடிந்தது, இன்று மறுவாசிப்பிலும் அப்படியே நீடிக்கிறது. கம்யூனிச சித்தாந்தம் எத்தகைய அரசியல் வெற்றிகளை அடைந்துள்ளது எனக் கணக்கிட்டுப் பார்ப்பதைவிட, ‘தோழர்’ என்ற சொல்லுக்கும் தோழர்களின் குரலுக்கும் ஒரு கவனமும் மரியாதையும் உலகெங்கும் நீடித்திருப்பதைக் காணமுடிகிறது. புகாரின் – அன்னா பகுதிகள் என் பிரியத்துக்குரியவை. அவற்றின்மீதான கவர்ச்சியால் அதுகுறித்த பதிவுகளையும் தேடித்தேடிக் கண்டடைகிறேன்.

வீரபத்ரபிள்ளை, கேகேஎம், அருணாசலம், நாராயணன் ஆகிய கதாபாத்திரங்களின் வரிசையில் தீவிர சிந்தனையாளர்களுக்கும் தீவிரச் செயல்பாட்டாளர்களுக்குமான வேறுபாடு, கட்சியில் அவர்களுக்கான தேவை, காலத்தின் தேவை ஆகியவற்றை நான் அவதானிக்கிறேன். தீவிரமாகச் செயல்படுபவர்களுக்கு ஒரு தர்க்க நியாயத்தை அளிப்பதற்கே கொள்கை விளக்கச் சிந்தனையாளர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களுடைய சிந்தனைகளை எல்லாம் செயல்படுத்தினால் முன்னும்பின்னுமாகச் செல்லவேண்டியிருக்கும். அது நடைமுறைக்கு ஒத்துவருவதில்லை. வரலாற்றின் மறுபக்கம் அல்லது வரலாற்றைக் கேள்விகேட்பது என்பதையே நான் பின்தொடரும் நிழலின் குரலாகப் பார்க்கிறேன். கம்யூனிசம் என்பதை எதிர்த்தரப்பின் குரல் என்று நான் பார்க்கிறேன். நிறைய தேடவும் யோசிக்கவும் வைக்கும் இந்த நாவலை அனைவருக்கும் நான் பரிந்துரைப்பேன்.

ரமா சுரேஷ்

ரமா சுரேஷ்: எனக்கு இந்த நாவலில் பிடித்த கதாபாத்திரம் நாகம்மை. அது அப்படியே என் அம்மாயியை நினைவூட்டியது. அவருக்குக் கம்யூனிசம் குறித்தெல்லாம் சுத்தமாக ஏதும் தெரியாது ஆனால் நாய், பூனை, காக்கா, மனிதர் அனைவரின் பசியையும் ஒன்றாகக் கருதி உணவிடும் அவரது தன்மையால் அவரை ஒரு பிறவி கம்யூனிஸ்ட் என்று சொல்லலாம். கம்யூனிசம் என்று ஒட்டுமொத்தமாகச் சொன்னாலும் அதன் முகங்கள் பல்வேறு வகைப்பட்டவை. தேசத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப பழைய முகங்கள் மாறியும் புதிய முகங்கள் தோன்றியும் வந்துள்ளன.

நான் வளர்ந்த தமிழகத்தின் ஒரு குக்கிராமத்திற்கு 1940களிலேயே கம்யூனிசம் வந்துசேர்ந்தது. குடும்பத்தை கவனிப்பதைக் காட்டிலும் அன்றாடம் கம்யூனிசக் கொள்கை, செயல்பாடுகளுக்குள் மூழ்கித்திளைப்பது அந்த எளிய மக்களுக்குப் பெரிதாகத் தோன்றியது என்றால் அந்தக்கனவை, ஆழ்மன வேட்கையை நாம் அவர்களின் இடத்திலிருந்து புரிந்துகொள்ளவேண்டும். வாழ்ந்துகெட்ட காலத்திலும்கூட முதல் தலைமுறை கம்யூனிஸ்ட்களிடம் கொள்கைப்பிடிப்பு குறையவில்லை, கனவுகளும் மாறவில்லை. சோவியத் உடைந்தபிறகும் பொன்னுலகுக்கான புரட்சி சற்றுத் தாமதமாகிறது என்றே கடைசிவரை நம்பினார்கள். அந்த வேட்கையின், நம்பிக்கையின் குரலே இன்றும் நம்மைப் பின்தொடர்கிறது என நினைக்கிறேன்.

வரலாற்றின் மறுபக்கம் அல்லது வரலாற்றைக் கேள்விகேட்பது என்பதையே நான் பின்தொடரும் நிழலின் குரலாகப் பார்க்கிறேன்.

சத்யா: ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை வாசித்து பிரமித்தபிறகு அதேவேகத்தில் எடுத்து வாசித்து நான் அதிருப்தி அடைந்த நாவல் பின்தொடரும் நிழலின் குரல். ஒரு நாவலில் மொழி, கருத்துகளின் தாக்கம் ஆகியவற்றைக்காட்டிலும் அதிலுள்ள சிந்தனை அசலானதா என்பதற்கு நான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலினால் கவரப்பட்ட படைப்பாக இந்த நாவலைப் பார்க்கிறேன். சமயம், இயல்பான மனித உணர்வுகள், அறிவியல் ஆகிய மூன்றையும் பிரதிநிதிக்கும் மூன்று சகோதரர்களின் உரையாடலே அந்த நாவல். பிற கதாபாத்திரங்கள் அந்தப் பெரிய சட்டகத்திற்குள் அமையும் இடைவெளிகளை நிரப்புவார்கள். அந்த நாவல் விட்ட இடத்திலிருந்து செல்வதற்கும் மேலதிகமாகச் சொல்வதற்கும் பின்தொடரும் நிழலின் குரலில் ஏதுமில்லை என்பதே என் விமர்சனம்.

சித்தாந்தவாதியின் இடம் என்ன என்ற கேள்வியை நாவல் எதிர்கொள்ள எத்தனித்துள்ளது மிகவும் முக்கியமானது. ஆனால் அதற்கான ஆழமான விவாதங்களும் பொருத்தமான தரவுகளும் இடம்பெறாமல் தனிப்பட்ட அனுபவங்களைக்கொண்டு முன்னகர முயல்வதாலும் கிட்டத்தட்ட எழுத்தாளரின் நாள்குறிப்புபோல அமைவதாலும் நாவல் விழுந்துவிட்டது. கம்யூனிசத்தை வைத்துச் சித்தாந்தத்தின் இடத்தைப் பேசுவதா அல்லது கம்யூனிசத்தையே பேசுவதா என்று தீர்மானிப்பதிலும் நாவலில் ஒரு குழப்பம் நேர்ந்துவிட்டது.

நடைமுறையில் நம்மைச் சுற்றி நடப்பதை கவனமாகப் பார்க்காமல், கம்யூனிசம் ஒரு தத்துவமாக வாழ்கிறதா வீழ்ந்துவிட்டதா என்றே கற்பனாவாத மிகையுணர்ச்சிகளுடன் பார்க்கும் பார்வையால் எழும் சிக்கலாக நான் இதைப் பார்க்கிறேன். கம்யூனிசத்தில் மட்டும்தான் வன்முறைகள் நிகழ்ந்தனவா? ஜனநாயகத்தின் பெயரில் நடக்கவில்லையா? எல்லோருக்கும் சமவாய்ப்புகளை அளிப்பதில் சித்தாந்தங்களின் அணுகுமுறைகள் என்னென்ன? ஏன் அத்தகைய கேள்விகளை இந்த நாவல் எதிர்கொள்ளவில்லை? இருப்பினும், இந்தத்தளத்தில் அமையும் புனைவுகள் தமிழில் குறைவு என்கிற வகையில் இந்த நாவலுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.

லங்கேஷ்

லங்கேஷ்: கரமசோவ் சகோதரர்கள் வாசிக்காததால் பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் அசல்தன்மை குறித்து என்னால் கருத்துக்கூற இயலவில்லை. ஆனால் சித்தாந்தம் – இந்த நாவலில் கம்யூனிசம் – பலரைக்கவர்ந்து வளர்ச்சி அடைந்து, அதிகாரத்தை எட்டிப்பிடிக்கும்போது அது தன் குறைகளை வெளிக்கொணர்ந்து சரிசெய்ய ஏன் முற்படுவதில்லை என்பது ஒரு முக்கியமான கேள்வி. ட்ராட்ஸ்கி, புகாரின், வீரபத்ரபிள்ளை, அருணாசலம் என தலைமுறை தலைமுறையாக அக்கேள்வி புறந்தள்ளப்படுவது ஏன்? அவசியமான அக்கேள்வியை அழுத்தமாக முன்வைக்கும் ஒரு படைப்பு என்பதால்தான் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.

சத்யா: கேள்வி முக்கியமானதுதான் ஆனால் அந்த விவாதம் கம்யூனிசத்தில் தொடங்கினாலும் மற்ற சித்தாந்தங்களையும் கணக்கிற்கொண்ட விவாதமாக ஒரு நாவலில் விரிவாக அமைந்திருக்கவேண்டும். அப்படி அமையாமற் போய்விட்டது என்பதே என் விமர்சனம். மேலும் கம்யூனிசத்தின் அடிப்படையான சிக்கல் அது தனிப்பட்ட ஒருவரின் உழைப்பு தனிப்பட்ட உடைமையாக மாறுவதைத் தடுக்கிறது என்பதுதான். ‘கடினமாக உழைத்து முன்னேறுவது’ என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். முன்னேறுவது என்பதைப் பொருள், உடைமைகளுடன் பிணைத்துப்பார்த்துப் புரிந்துகொள்கிறோம். அதற்கு இடமில்லை என்றால் ஏன் ஒருவர் கடினமாக உழைக்கவேண்டும்? இதுபோன்ற ஆதாரமான சிக்கல்களைப் பேசுவதையும் நாவல் தவறவிட்டுவிட்டது.

தஸ்தயேவ்ஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்கள்' விட்ட இடத்திலிருந்து செல்வதற்கும் மேலதிகமாகச் சொல்வதற்கும் பின்தொடரும் நிழலின் குரலில் ஏதுமில்லை என்பதே என் விமர்சனம்.

அழகுநிலா: கரமசோவ் சகோதரர்கள் நாவலை நான் வாசித்திருக்கிறேன். அதன் வடிவ உத்தியை மற்றொரு இலக்கியப் பிரதி கையாள்வதில் எந்தச் சிக்கலுமில்லை. உலகத்தின் அனைத்து இலக்கியங்களையும் குறிப்பிட்ட வடிவ உத்திகளுக்குள் அடைத்துவிடலாம். எழுத்தாளரின் நாள்குறிப்புபோல அமைகிறது என்கிற விமர்சனத்திற்கு என் பதில், அது எழுத்தாளரின் நாள்குறிப்பாக மட்டுமின்றி என்னுடைய நாள்குறிப்பாகவும் அமைகிறது என்பதுதான். எழுத்தாளரின் வாழ்க்கைப் பின்புலம் தெரிந்ததால் நாம் அதோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம், தெரியாவிட்டால் என்ன செய்வோம்? ஆகவே அது முக்கியமில்லை. நமக்கு அது என்ன அர்த்தத்தை அளிக்கிறது என்பதே முக்கியம்.

நீதியுணர்வு மற்ற எந்த சித்தாங்களைக் காட்டிலும் கம்யூனிச சமதர்மச் சித்தாந்தத்தின் ஆணிவேர் இல்லையா? அதுவே ஆட்டம் காண்கிறது என்பதால்தான் நாவலில் அது ஆராயப்படுகிறது.

பொன்னுலகைக் கொண்டுவரும் சித்தாந்தம் தோளோடு தோள்நின்ற ஒரு நண்பன் பலிகொடுக்கப்படும்போது எப்படிச் சகித்துக்கொண்டிருக்கத் தயாராகிவிடுகிறது? அந்நிலை உருவாக அழுத்தம்கொடுக்கும் விசைகள் எவை? அந்த இழையைப் பற்றிக்கொண்டுதான் நாவலின் தேடல் நகர்கிறது. ஆகவே அங்கு பரந்த விவாதங்களுக்கான இடமில்லை, மாறாக, அவ்விழையைச் சுற்றிய ஆழமான, ஆத்மார்த்தமான கேள்விகளுக்கு மட்டுமே இடமுண்டு. எதைப்பேசுவது எதைவிடுவது என்பதைக் குறித்த நாவலின் தீர்மானத்தை நான் அப்படித்தான் பார்க்கிறேன். மேலும் தொழிலாளர்களின்மீது படியும் பிரச்சினைகளின் வழியாகப் பொருள்முதல்வாதம் (கேப்பிட்டலிசம்) இன்னொரு மௌனவிவாதமும் நாவலில் தொடர்கிறது என்றும் நினைக்கிறேன்.

மற்ற சித்தாங்களில் அழிவுகள் இல்லையா என்று சத்யா கேட்டார். இருக்கிறது, ஆனால், கடையனுக்கும் கதிமோட்சம் என்பதையே ஆதார நோக்கமாகக்கொண்ட கம்யூனிச சித்தாந்தத்தில் அதை எப்படிச் சகித்துக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியும் என்பதுதான் கேள்வி. அடிப்படை நீதியுணர்வு மற்ற எந்த சித்தாங்களைக் காட்டிலும் கம்யூனிச சமதர்மச் சித்தாந்தத்தின் ஆணிவேர் இல்லையா? அதுவே ஆட்டம் காண்கிறது என்பதால்தான் நாவலில் அது ஆராயப்படுகிறது. அதாவது கம்யூனிசத்தில் கொடுமை நடக்கலாம் என்றால் வேறு சித்தாந்தங்களில் தாராளமாக நடக்கலாம். அதுவே என் பார்வை.

சிவானந்தம்

சிவானந்தம்: வேறு எவரும் பொய்சொல்லலாம் ஆனால் தருமன் பொய்சொல்லலாமா? என்று மகாபாரதத்தில் கேட்கப்படுவதைப்போல கம்யூனிசத்தில் இது நடக்கலாமா என்று அழகுநிலா கேட்டது பொருத்தமான கேள்வி என்று தோன்றுகிறது. “தருக்கம் தார்மீகத்திடம் மட்டுமே தோற்கும்”, “தார்மீகத்தின் பின்னால் தருக்கம் விசுவாசமான நாய்போலப் பின்தொடரும்” போன்ற வரிகளை இந்நாவலில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள்பேசுகின்றன. நீதிவுணர்ச்சியின் குரல், குற்றவுணர்ச்சியின் குரல், எதிர்த்தரப்பின் குரல், நம்பிக்கையின் குரல் என்றெல்லாம் நாம் முதலில் வரையறுத்த அக்குரல்களைப் பொதுமைப்படுத்தி தார்மீகத்தின் குரல் எனலாம். எங்கோ எவரோ செய்த ஒரு பிழைக்கு நான் ஏன் பொறுப்பேற்கவேண்டும் என்ற கேள்விக்கு அதுவே தார்மீக நெறி என்பதே விடை. தான் நம்பிய சித்தாந்தம் அதன் தற்காப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் தார்மீகநெறியைத் துறந்துவிட்டது என்கிற குடைச்சல், அதற்கு தார்மீகப் பொறுப்பேற்கும் அருணாசலத்தை மனப்பிறழ்வுவரை தள்ளுகிறது.

மற்ற சித்தாந்தங்களைக் குறித்தும் நாவல் தன்போக்கில் பேசியிருக்கிறது. ஜனநாயகம், அகிம்சை ஆகியவற்றை ஓர் அத்தியாயம் ஆராய்ந்திருக்கிறது. அதிலும் காந்தியின் அகிம்சை ஒருவகை சுய இம்சையே என்கிற விமர்சனத்தையும் நூல் வைத்துள்ளது. எதிராளி தன் ஆயுதத்தைத் கையில் எடுத்தால்தான் அகிம்சை வேலைசெய்யும். எதிர்த்தரப்பும் ஆயுதத்தைக் கீழேபோட்டுவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடும். துப்பாக்கியின் முனை ஏதோ ஒருதரப்பிலிருந்து நீளவேண்டியிருக்கிறது என்பன போன்ற பார்வைகளும் நாவலில் இருக்கின்றன. அசல் சிந்தனை என்பது எது எனப் பிரித்தறிவது சிலநேரங்களில் கடினம். கரமசோவ் சகோதரர்கள் எழுதப்படுவதற்கு முன்னும் அந்நாவலின் சிந்தனைகள் உலகில் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கரமசோவ் சகோதரர்கள் எழுதப்படுவதற்கு முன்னும் அந்நாவலின் சிந்தனைகள் உலகில் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

சத்யா: சித்தாந்தங்களின் மோதல்களாக நாவலை அமைத்திருந்தால் அது மேலும் சிறப்பாக இருந்திருக்கும். கம்யூனிசத்தைப் பார்ப்பதற்குமுன் பொருள்முதல்வாதத்தையும் சோசலிஷத்தையும் பார்க்கவேண்டும். கல்வி பரவலாகாத, கல்வியைப் பொருளீட்டுவதுடன் இணைத்துப்பார்க்காத காலத்தில் முதலீடு செய்யப்படும் கைப்பொருள் பலமடங்காகத் திரும்பப்போகிறதா, காணாமற் போகப்போகிறதா என்பதை வைத்துத்தான் வளம் நிர்ணயமானது. ஆனால் அதற்கு முதலில் பொருள் தேவையாகிறது. ஆக ஏற்கெனவே பொருளை வைத்திருப்போர்தான் அந்த ஆட்டத்திற்குள் செல்லமுடியும். அது பொருள்முதல்வாதத்தின் ஆட்டம்.
அதைமாற்றி எல்லோருக்கும் சமவாய்ப்புகள் அளிக்கவேண்டும் என்பதே சோசலிஷம். அதாவது எவ்வாறு பொருளை இல்லாமற்செய்வது என்பதே அடிப்படைக்கேள்வி. அதற்கான ஒரு வழிமுறையே கம்யூனிசம். அப்படித்தான் நான் புரிந்துவைத்திருக்கிறேன். இந்த விரிவான சட்டகத்திற்குள் புனைவு அமைந்தால் அது எத்தகைய வாய்ப்புகளை அளிக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். அதற்கு நெருக்கமான களத்திற்குள் நுழைந்தும் அவ்வாய்ப்புகள் பின் தொடரும் நிழலின் குரலில் தவறவிடப்பட்டுவிட்டன

சில இடங்களில் இவ்வளவு சொற்கள் தேவையா என்கிற எண்ணம் எழாமலில்லை ஆனால் அதுவொரு ஓட்டம். வேகமாக ஓடும்போது நிறுத்தி நிறுத்தி ஓடமுடியாது.

சர்வான்: தன்னுடைய குரல் அறத்தின் குரல் என்று நம்பும் ஒருவரின் எழுச்சியும் வீழ்ச்சியும் நம் அக்கறைக்கு உரியவையே. கம்யூனிசம் பிற சித்தாங்களைக் காட்டிலும் அன்றாட வாழ்வில் அதிகத் தாக்கம் செலுத்த முற்பட்டது, மிக எளிய வடிவில் விளக்கப்பட்டது, சோவியத் உடைந்தபிறகு எழுதப்பட்டது போன்றவையும் இந்த நாவலில் கம்யூனிசத்தின் வீழ்ச்சி விவாதிக்கப்படுவதற்கான காரணங்களாக இருக்கலாம்.

பொதுநன்மைக்கான கோட்பாடுகளுக்கும் தனிமனித அனுபவங்கள், நெறிகளுக்குமான உரசல்களே காலகாலமாக முக்கியப் பிரச்சினையாக நீடிக்கிறது என்று நினைக்கிறேன். அதுவே செவ்விலக்கியங்களிலும் பிரதிபலிக்கிறது. அந்த உரசல்களைப் பேசுவது கருத்தளவில் முக்கியம் என்றால் அதிலுள்ள அனுபவங்களைப் பேசுவதும் அதற்கிணையான முக்கியத்துவம் கொண்டதே என்பது என் பார்வை. காலத்தின் சாட்சியாக ஒலிக்கும் அக்குரல்கள் பதிவுசெய்யப்படுவது வரலாற்றுக்கு அவசியம். அத்தகைய ஒரு குரலாகவே நான் பின் தொடரும் நிழலின் குரலைப் பார்க்கிறேன். அந்த அளவில் அது தன் கடமையைச் சரியாகவே செய்துள்ளது என்றும் நம்புகிறேன்.

லங்கேஷ்: கம்யூனிசத்தை மதத்தோடு ஒப்பிட்டும் இந்த நாவலில் சில விசாரணைகள் நடந்துள்ளன. எல்லாப் பசுவும் பசுதான் என்றாலும் மதத்திற்கு ஒரு காமதேனு வேண்டியிருக்கிறது, எல்லா மரங்களும் ஒன்றுதான் என்றாலும் ஒரு கற்பகவிருட்சம் வேண்டியிருக்கிறது. அதைப்போலக் கம்யூனிச காமதேனுக்கள் கற்பகவிருட்சங்களைக் குறித்த ஒரு விமர்சனம் இந்த நாவலில் ஓர் உரையாடலாக வருகிறது. ஆகவே தேவையான அளவுக்கு இதர சித்தாந்தங்களைத் தொட்டுக்கொண்டு ஆற்றொழுக்காக ஓடும் நாவல் என்பேன். சில இடங்களில் இவ்வளவு சொற்கள் தேவையா என்கிற எண்ணம் எழாமலில்லை ஆனால் அதுவொரு ஓட்டம். வேகமாக ஓடும்போது நிறுத்தி நிறுத்தி ஓடமுடியாது.

சத்யா: சர்வானும் அழகுநிலாவும் முன்வைத்த கருத்துகளிலிருந்து எனக்கு ஒன்று தோன்றுகிறது. பொன்னுலகம் என்னும் ஒரு பெருங்கனவின் அழிவு என்பதை மையப்படுத்திய நாவல்தான் இது என்றால் அந்தவகையில் நல்ல நாவல்தான். ஏனெனில் அதைப்போன்ற கனவுகள் சிதறிய அனுபவங்கள் பலருக்கும் இருக்கக்கூடும், அவற்றைப் புரிந்துகொள்ள நாவல் உதவக்கூடும். ஆனால் அதையும் தாண்டிப் பயணித்திருக்கலாம். விரிவான விவாதங்கள், கதைக்குள் கதை போன்ற விஷயங்கள் எல்லாம் ஜெயமோகனுக்குப் புதிதல்ல, அதில் அவர் விற்பன்னர். ‘விஷ்ணுபுரம்’, வெண்முரசு வரிசை நூல்களில் ‘கிராதம்’ ஆகியவை அதுவாக விரிந்து அதுவாகச் சுருங்கும் அம்சங்களுடனான அற்புதமான ஆக்கங்கள். ஆகவே அவரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பது நியாயமானதுதான் என்பது என் கருத்து.

சிவானந்தம்: நாவலில் குறிப்பாக எனக்கு இரண்டு குறைகள் தென்பட்டன; முதலாவது, விவசாயிகளையும் பிற தொழிலாளர்களைப் போலவே கம்யூனிசம் கருதியது பிழை ஏனெனில் மண்ணுக்கும் மனிதருக்குமான உறவு இயந்திரத்துக்கும் மனிதருக்குமான உறவைப்போன்றது அல்ல என்பது நாவலின் விளக்கம். ஆனால் விவசாயிகள் ஒருபக்கம் நிலவுடைமையாளராகவும் மற்றொருபக்கம் தொழிலாளராகவும் இருக்கிறார் என்பதே முக்கியமான சிக்கல் என்பது என் பார்வை.

ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும் அதிகார உச்சியில் இருந்து ஒலித்த குரலையும் இணைத்துக் காட்டியுள்ள நாவல்.

முதலாளி X தொழிலாளி என்னும் இருமைக்குள் இயங்கக் கம்யூனிசத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை, ஆனால் இரண்டும் கலந்த ஒருவரை ‘குட்டி பூர்ஷ்வா’ என அடையாளப்படுத்தி அழிக்கமுற்படுவதைத் தவிர வேறுவழி காணப்படவில்லை அல்லது செயல்படுத்தப்படவில்லை. இரண்டாவது, அனைவரையும் ஒரேமாதிரி ஏழையாக வைக்க கம்யூனிசத்தில் வழியிருக்கிறது ஆனால் அனைவரையும் ஒரேமாதிரி பணக்காரராக வைக்க வழியிருக்கிறதா என்னும் கேள்வி. கம்யூனிசம் விரிவாகப் பேசப்பட்ட ஒரு நாவலில் இவ்விரு புள்ளிகளும் தொடப்படாமல் போய்விட்டன.

சர்வான்: நாம் இந்தியாவில் நேரில்கண்ட, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்த, கம்யூனிசத்தின் குரலையும் சோவியத்தில் அதிகார உச்சியில் இருந்து ஒலித்த கம்யூனிசத்தின் குரலையும் இணைத்துக் காட்டியுள்ள நாவல் என்கிற அளவிலும் இந்த நாவலுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.