பிறமொழிச் சிந்தனை

நித்திஷ் செந்தூர்

அண்மையில் ஓர் உணவக உரையாடலில் இடம்பெற்ற சொற்றொடர் என் கவனத்தை ஈர்த்தது. ‘எனது பையன் தவில நல்லா விளையாடுவான்’ என்றார் ஒருவர். செவியுறும்போது தவறு பெரிதும் இல்லை எனத் தோன்றலாம். கருத்துப் பிழை இல்லை. ஆனால் அது ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் உரைக்கப்பட்ட வாக்கியம். ‘எனது பையன் தவில நல்லா வாசிப்பான்’ என்பதுதான் சரி.

‘Playing’ என்பதை இடம், பொருள், ஏவலை வைத்து தமிழில் சிந்திக்க வேண்டும். இங்கு விளையாடுதல் என்ற பொருளில் வாக்கியம் கூறப்படவில்லை. மாறாக, வாசித்தல் என்ற அர்த்ததோடு கூறப்படுகிறது. தமிழில் பயலும் சொற்களின் பொருளை உணர்ந்து அதனைப் பயன்படுத்தும்போது, இதுபோன்ற பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் எனச் சொல்லும் போக்கு பரவலாக உள்ளது. உள்ளூரிலும் மலேசியாவிலும் இந்தச் சொல்லாடலை அதிகமானோர் பயன்படுத்துவதைக் கேட்கலாம். ஆங்கிலச் சிந்தனையில் தோய்ந்த மனம் ஏற்படுத்தியுள்ள மரபுப் பிழை இது. காலைக்கொரு வணக்கம், மாலைக்கொரு வணக்கம், இரவுக்கொரு வணக்கம் என்பது வழக்கமில்லை. வணக்கத்திற்கு முன் எந்தச் சொல்லையும் சேர்க்கும் மரபு தமிழில் இல்லை என்கின்றனர் தமிழ்மொழிப் புலமையாளர்கள்.

‘வீட்டைவிட்டு வெளியாயிட்டேன்’. ‘I am out of the house’ என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு. உள்ளூர்ச் சூழலில் இது பரவலாகப் புழங்கப்படுகிறது. கிளம்பிவிட்டேன், புறப்பட்டுவிட்டேன் ஆகிய சொற்கள் இருக்கும்போது ‘வெளியாயிட்டேன்’ தேவையில்லை. ஆனாலும் நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு இவ்வட்டாரத் தமிழின் அடையாளங்களுள் ஒன்றாக இப்பயன்பாடு ஆகிவிட்டது. ‘தொலைக்காட்சியைத் திற’ எனக் கூறப்படும் வாக்கிய கதியின் காரணமும் அதேதான்.

‘பேட்டரி செத்து போச்சு’. பலர் அடிக்கடி இதனைச் சொல்வதைச் செவிமடுத்துள்ளேன். நேரடி மொழிபெயர்ப்பின் தாக்கத்தை நன்கு உணரலாம். ‘Battery has died’ என்பதை ‘மின்கலன் செயலிழந்துவிட்டது’ எனத் தூயத் தமிழில் சொல்லலாம் அல்லது ‘பேட்டரி முடிந்துவிட்டது’, ‘பேட்டரி தீர்ந்துவிட்டது’ எனப் பேச்சுவழக்கில் பிழையின்றிக் கூறலாம். தமிழில் சிந்தித்து உரையாடும்போது, இதுபோன்ற நூதனச் சொற்றொடர்களைச் செவியுற இயலாது. வாக்கியங்களும் சிரிப்பொலியை மூட்டாது. இதையெல்லாம் கேட்கும்போது உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் அரங்கேறிய நகைசுவைச் சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன.

அன்று உயர்நிலை ஒன்றாம் வகுப்புக்கான வாய்மொழித் தேர்வு. ஒரு தலைப்பையொட்டி ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்கவேண்டும். ‘ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை நீங்கள் எப்படிக் கடைப்பிடிப்பீர்கள்’ என்பது தான் கேள்வி. மாணவன் ஒருவன் ‘காலையில் எழுந்து மைலோவில் சிறிதளவு நீரைக் கலக்கிக் குடிப்பேன்’ என்பதற்குப் பதிலாக ‘காலையில் எழுந்து மைலோவில் சிறுநீரைக் கலக்கிக் குடிப்பேன்’ என்றான். அதுவும் அழுத்தந்திருத்தமாகக் கூறினான். அதிர்ந்து போனார் ஆசிரியர்.

அவரது ‘குபீர்’ சிரிப்பு வகுப்பறை வரை கேட்டது. தேர்வு முடிந்த பின்னர், உரத்த சிரிப்பிற்கான காரணத்தைக் கூறினார். வயிறு குலுங்கச் சிரித்தோம். பாவம், அதைக் கூறிய மாணவனுக்கு என்ன தவறு என்று இறுதி வரை புரியவில்லை. தமிழ்ப் புழக்கம் சொற்பமாக இருக்கும் குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவன். அவன் ‘little water’ என்பதை தான் ‘சிறுநீர்’ எனக் கூறியுள்ளான். ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் பேசும்போது, ஏற்படும் விபரீதத்திற்கு இது ஒரு சான்று. சொல்லவரும் பொருள் முற்றிலும் மாறுபடுவதோடு சிரிப்பு வெடியையும் கிளப்பிவிடுகிறது.

வாய்மொழித் தேர்வைக் காட்டிலும் கட்டுரையில் இடம்பெற்ற ‘அதிசயங்கள்’ அதிகம். ‘அன்று பூனையும் நாயுமாகப் பெய்ந்தது’. ‘Raining cats and dogs’ என்னும் ஆங்கிலப் பழமொழியின் நேரடி மொழிபெயர்ப்பு. ‘அடைமழை’, ‘கனமழை’ எனச் சொற்சிக்கனத்துடன் தமிழ்ப் பதங்கள் இருக்க, ஆங்கிலச் சிந்தனையே மாணவர்களிடையே ஆட்கொண்டுள்ளது. மொழிவளம் மாணவர்களிடையே நன்றாக இருக்கும்போது, இதுபோன்ற சிக்கல்கள் எழாது.

ஒருகாலத்தில் நாவில் நன்கு பயின்ற நல்ல வார்த்தைகள் இன்று பிறமொழித் தாக்கத்தால் மருவியுள்ளன. ‘நோன்பு துறப்பு’ என்பதைப் பலர் இன்று ‘நோன்பு திறப்பு’ எனக் கூறுகின்றனர். நீண்ட நேரம் நோன்பு நோற்று அதனை விடுவதை ‘நோன்பு துறப்பு’ என்ற பதம் நுட்பமாய் எடுத்துரைக்கிறது. பொருள் பொதிந்த ஒன்றாகவும் இருக்கிறது. மலாய்மொழியில் ‘Buka Puasa’ என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாக ‘நோன்பு திறப்பு’ உள்ளது. ‘நோன்பு திறப்பு’ என்பது நோன்பிற்குள் நுழைவதாகப் பொருள் தரும். கூறவரும் அர்த்தமும் எதிர்மறையாக அமைந்துவிடுகிறது.

மூத்த சகோதரி, இளைய சகோதரன் என எழுதும் போக்கு அண்மை காலமாகப் பரவலாய்க் காணப்படுகிறது. ஆங்கிலச் சிந்தனையில் ஊறி போனதன் விளைவு இது. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை ஆகிய உறவுமுறைச் சொற்கள் தமிழில் சிக்கனமாக இருக்க, இரண்டிரண்டு சொற்களுக்கான தேவையில்லை. படிப்பவர்களுக்கு மனச்சோர்வை அவை ஏற்படுத்திவிடுகின்றன. ‘தமிழின் இயல்பான பயன்பாட்டில் சிக்கனம் இருக்கிறது. இயல்பைவிட்டு விலகும்போதுதான் ஊளைச்சதை போட்டு எழுத்து வீங்கிவிடுகிறது’ என்கிறார் இதழியல் துறையில் பழுத்த அனுபவம் பெற்ற அரவிந்தன். அவர் இளையவரா அல்லது மூத்தவரா என்ற மயக்கம் இருக்கும்போது, சகோதரன், சகோதரி ஆகிய சொற்கள் நமக்குத் துணையாக இருக்கும்.

மூத்த சகோதரி, இளைய சகோதரன் என எழுதும் போக்கு அண்மை காலமாகப் பரவலாய்க் காணப்படுகிறது. ஆங்கிலச் சிந்தனையில் ஊறி போனதன் விளைவு இது.

பல்லினச் சூழலில் வாழும் நமக்கு ஆங்கிலப் புழக்கமும் பிறமொழித் தாக்கமும் அதிகம். ஆங்கிலத்தையோ பிறமொழியையோ அடிப்படையாகக் கொண்டு தமிழில் சிந்திக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. அருவிக்குப் பதிலாக நீர்வீழ்ச்சி, கருநாகத்திற்குப் பதிலாக இராஜநாகம் முதலியவை சில உதாரணங்கள். எப்படித் தமிழில் செல்வது என நெருக்கடி வரும்போது, ஆங்கிலமே அறியாத தமிழர் எப்படிக் கூறுவார் என்று நினைத்துப் பார்த்தாலே விடை கிடைத்துவிடும். பிறமொழிச் சிந்தனையில் ஊறிப்போன மனத்திற்குத் தமிழ் ஊக்கமருத்து தேவை. தமிழ் ஊட்டம் பெறப்பெற பிறமொழிச் சிந்தனை விலகத்தொடங்கும்.