உதிரிப்பூக்கள்

0
118
மஹேஷ்

சிங்கப்பூர்-ஜப்பான் ‘தொலை அறுவை சிகிச்சை’ கூட்டுப்பயிற்சி

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையும் இணைந்து இங்கிருந்து 5000 கிமீ தொலைவிலுள்ள ஜப்பானின் நகோயா நகரில் ஓர் அறுவை சிகிச்சை மையத்தில் வயிற்று அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். சோதனைமுறை தொலை அறுவை சிகிச்சையை (telesurgery), சிங்கப்பூரிலுள்ள மருத்துவரின் அசைவுகளை, அகன்ற அலைவரிசை கண்ணாடி இழை இணையவடத் தொடர்பு வழியாக, நகோயாவில் உள்ள இயந்திரக் கரங்களை இயக்கி ஒரு செயற்கை வயிற்றில் அறுவை சிகிச்சைப் பயிற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளிலும் உள்ள சிகிச்சையாளர் குழுவின் மேற்பார்வையுடன் நடந்த இத்தகைய தொலைதூர அறுவைசிகிச்சை, எதிர்காலத்தில் மருத்துவ வசதி குறைவான இடங்களிலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப் பேருதவியாக அமையலாம்.

சிகிச்சைத் தோட்டங்கள்

சிகிச்சைச் தோட்டங்கள் (therapeutic gardens) கவனம் பெற்றுவரும் இக்காலத்தில் சிங்கை தேசியப் பூங்கா கழகம், செம்பவாங், யீஷுன் பகுதிகளில் புதிதாக மூன்று தோட்டங்களை அமைத்துப் பொதுமக்களுக்காகத் திறந்துவிட்டுள்ளது. கண்களுக்குக் குளுமையாகப் பசுஞ்செடிகளும் மெல்லிய நறுமணம் கமழும் செடிவகைகளும் வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் பூச்செடிகளும் அமைந்துள்ள இந்தத் தோட்டங்கள், சக்கரநாற்காலிகளைப் பயன்படுத்துவோரும் சென்று ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது இத்தகைய 13 தோட்டங்கள் தீவு முழுதும் உள்ளன. வருங்காலத்தில் மேலும் பல அமையவுள்ளன.

சிங்போஸ்ட் 165

சிங்கையின் அஞ்சல்துறை நிறுவனமான சிங்போஸ்ட் தனது அஞ்சல் சேவைகளின் 165ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் 5 அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது. இந்த நீண்ட பயணத்தை காலனி மரபுடைமை, முதல் விமான அஞ்சல் வருகை, தளவாடம், தொழில்நுட்பத் துணையுடன் சிறப்பான சேவைகள், நீடித்த நிலைத்தன்மை ஆகிய ஐந்து கருப்பொருள்களில் அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. வாங் வுய் காங் வடிவமைத்த இந்த அஞ்சல்தலைகள் சிங்போஸ்டின் அனைத்து சிறப்பு அம்சங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளன.

மிதக்கும் ஆற்றல் நிலையம்

நிலப்பற்றாக்குறை, சிறு கப்பல்களுக்குத் தேவையான நீர்ம இயற்கை வாயு, மின்சாரத்தில் இயங்கும் குறு, உல்லாசப் படகுகளுக்கான ஆற்றல் தேவை என மூன்று மாங்காய்களை ஒரேகல்லில் வீழ்த்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் எரிசக்திச் சந்தை ஆணையமும் கெப்பல்கார்ப்பும், ஒரு மிதக்கும் ஆற்றல் நிலையத்தை அமைப்பதில் வெற்றிகண்டுள்ளனர். இந்த நிலையத்தில் நீர்ம இயற்கை வாயு சேமிப்புக் கிடங்கு, ஹைட்ரஜன் மின்னுற்பத்தி, அடுக்கப்பட்ட மின்கலங்களில் மின்சக்திச் சேமிப்பு போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. இதன் மூலம் கடலில் இருந்தபடியே படகுகளுக்குத் தேவையான எரிபொருளை நிரப்பவும் (bunkering), மின்னூட்டம் (charging) செய்துகொள்ளவும் இயலும். இதிலுள்ள மின்கல அடுக்குகளில் சுமார் 600 நான்கறை வீடுகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான மின்சக்தியைச் சேமிக்கமுடியும்.