கவிதை காண் காதை

0
142

மந்தையில் ஒருவர்

கணேஷ் பாபு

‘ஜுரோங் ஈஸ்ட்’ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது அந்தி வானம் காவி நிறத்தில் ஊறியிருந்தது. குணா கிருஷ்ணன் அங்கேதான் வரச்சொல்லியிருந்தார். இதற்கு முன் எத்தனையோ முறை அவர் அழைத்தபோதெல்லாம் அவரைச் சந்திக்க மனம் வரவில்லை. காரணம், அவரைச் சந்திக்கும்போதெல்லாம் வயிறு எரியத் துவங்கும். அது போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்க்கலாமே என்று நினைத்தாலும், மீண்டும் மீண்டும் செல்பேசியில் அழைத்து நினைவூட்டியபடியே இருப்பார். வேண்டாவெறுப்பாகத்தான் அவரைச் சந்திக்க வேண்டியிருக்கும். உரையாடலின் துவக்கத்திலேயே சீண்ட ஆரம்பித்துவிடுவார்.

“இன்னும் வேலைலதான் இருக்கீங்களா?”

“ஆமாம் குணா”

“சரிதான். உங்களுக்கெல்லாம் எத்தனை தடவ சொல்லிட்டே இருக்கிறது? வேலைய உதறிட்டு வீட்டுல ஜாலியா இருக்கமாட்டாம விடிஞ்சவுடனே வெள்ளைக்காரன மாதிரி சட்டைய டக் இன் பண்ணிட்டு ஆபிசுக்குப் போயிர வேண்டியது. நடுராத்திரி வீட்டுக்குத் திரும்பும்போதுதான் டக் இன் பண்ணுற சட்டைய வெளிய எடுக்குறது. இதுக்கிடைல மெஷின் மாதிரி வேலை பாக்குறது. கொஞ்சம் காபி, கொஞ்சம் சாப்பாடு, நிறைய ஏக்கம். இந்த வட்டத்துல இருந்து வெளிய வரவே மாட்டீங்களா. உங்களயெல்லாம் நுண்ணுணர்வு இருக்குறவருன்னு நெனச்சது தப்பா போச்சு”, என்பார்.

மெஷின் மாதிரி வேலை பாக்குறது. கொஞ்சம் காபி, கொஞ்சம் சாப்பாடு, நிறைய ஏக்கம். இந்த வட்டத்துல இருந்து வெளிய வரவே மாட்டீங்களா.

“உங்கள மாதிரி எல்லாராலயும் இருக்க முடியுமா குணா”.

“முயற்சி பண்ணுய்யா. வேல இல்லாம வீட்டுல இருந்து பாரு. அந்த சுகமே தனி. மனுஷன்னா சும்மா இருக்கணும்யா. காலைலயும் சாயங்காலமும் இந்த எம்.ஆர்.டி கூட்டத்தில நிக்கக்கூட இடமில்லாம கசங்கிப் போய் வேலை செஞ்சு,மேனேஜரு சிரிச்சா சிரிச்சு, அழுதா அழுது, என்னய்யா வேலை அது. யோசிச்சுப் பார்த்தா எவ்வளவு அபத்தமான வாழ்க்கை தெரியுமா இது”?

“என்ன செய்ய, வாழ்க்கை அப்படித்தான இருக்கு”

“நீ இப்படி இருந்துட்டு வாழ்க்கை மேல பழியப் போடாத”.

குணா வேலையில் இல்லை. நாடாறு மாதம், காடாறு மாதம் என்பது போல, சில மாதங்கள் வேலையில் இருப்பார், சில மாதங்கள் அவராகவே ஏதாவது காரணத்தை உருவாக்கிக் கொண்டு வேலையை உதறிவிட்டு வீட்டில் இருப்பார். பிறகு எப்போதாவது தோன்றினால் மீண்டும் ஏதாவது வேலையில் சேர்ந்துகொள்வார். அவர் எதற்காக வேலையை உதறுகிறார்,மீண்டும் யாரைப் பிடித்து எப்படி வேலையில் சேர்ந்து கொள்கிறார் என்பதைப் பிறரால் கணிக்கவே முடியாது. அவரது வழிகளும், உபாயங்களும் தனித்துவமானவை. சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுவிட்டாலும் வேலையில்லாமல் எப்படி வாழ்க்கையை ஓட்டுகிறார் என்பதை நினைக்க நினைக்கப் புதிராகத்தான் இருக்கும்.

பேசிக்கொண்டிருக்கும்போதே காபி வந்துவிடும். காபிக் கோப்பையைக் கையில் எடுத்துக் கொள்வார். எந்த ஒரு சிறு நிகழ்வையும் தன்னுடைய வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கவும் அதேசமயம் எதிராளியின் வாழ்க்கை முறையை நக்கலடிக்கவும் பயன்படுத்திக்கொள்வார்.

“இப்ப இந்தக் காபிய எடுத்துக்க. இதக் கூட பொறுமையா துளித்துளியா குடிக்க நீங்கள்ளாம் கத்துக்கல. வேலைக்கிடையில அவசர அவசரமா குடிக்கறது, இல்லன்னா, கம்யூட்டரப் பார்த்துக்கிட்டே குடிக்குறது. காபி குடிக்கறத ஒரு தியானம் மாதிரி செய்யணும்யா. காபி குடிக்கும்போது அதுக்காகத்தான் பொறந்தோம்ங்கற மாதிரி நெனச்சுக்குட்டு குடிக்கணும்யா. இருள் பிரியாத விடிகாலைல காபிக் கோப்பையக் கையில ஏந்திக்கிட்டு பொழுது விடிய விடிய வானத்தோட நிறம் மெல்ல மெல்ல மாறி வர்றதைப் பாத்திருக்கையா? அதெல்லாம் நீ பாத்திருக்க மாட்ட. இருட்டுக்குள்ளேயே வேலைக்குக் கிளம்பி இருட்டியதும் வீட்டுக்குத் திரும்பும் நவீன வேலைமுறையின் பிரதிநிதிதான நீயெல்லாம்” என்பார்.

அவர் சொல்லச் சொல்ல வயிறு எரியும். அதற்குப் பிறகு சில நாட்களுக்கு காபியே குடிக்கத் தோன்றாது. காபிக் கோப்பையைக் கையில் வைத்தபடியே, “ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், ஏன், ஏன், ஏன்” என்று யோசிக்கத் துவங்கியதெல்லாம் அதற்குப் பிறகுதான்.

உழைக்கவே என்ற சொல்லின் ஈற்றில் உள்ள ஏகாரத்தை சுமப்பதுதான் சற்று கடினமாக உள்ளது.

குணா ஏன் இப்படி இருக்கிறார்? அவரது மூளைக்குள் இந்த விசித்திர ரசாயனம் எப்போது, எப்படி ஊறத் துவங்கியது? வேலையில்லாமல் இருப்பது என்பதை பலராலும் யோசிக்கவே முடியாத வாழ்க்கைச் சூழலில், இவர் மட்டும் எப்படி, சட்டையை மாற்றுவது போல வேலையை மாற்றுகிறார். எப்படி இத்தனை மாதங்கள் வேலையில்லாமல் இருக்கிறார். ஏன் இப்படி அதிரடியானவராக மாறிவிட்டார்? ஏன் எவரோடும் இணக்கமாக இருக்க முடியவில்லை என்று அவரை நினைத்தால் பல பதிலற்ற கேள்விகள் மனதில் வரிசை கட்டும். எங்கள் நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்தார். அதுதான் ஆக அதிகமாக அவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய காலம் என்பார். ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த வேலையையும் விட்டுவிட்டார்.

“நல்லாத்தான போயிட்டிருந்தது, எதுக்காக வேலைய விட்டீங்க குணா” என்று கேட்டேன்.

“ஒருத்தனோட சண்டபோட்டுட்டேன். அவன் மூஞ்சிய தெனமும் எதுக்குப் பாக்கணும். அதனாலதான்” என்றார்.

அவரது துறையில் பணிபுரியும் சக ஊழியர் எவருடனாவது சண்டை போட்டு விட்டார் போலிருக்கிறது. நிறுவனத்தின் தலைவர் கிறிஸ் என்பவர், ஊழியர்களின் எந்தவொரு பிணக்கையும் சமசரம் செய்து வைத்து, மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்லவர். “கிறிஸ் கிட்ட பேசியிருக்கலாமே. அவர் உங்களுக்கு உதவி இருப்பாரே” என்றேன்.

“சண்ட போட்டதே அவனோடதான்” என்றார்.

“சரிதான், சரியான சண்டி ராஜனா இருக்கீங்களே” என்றால், “அடப் போய்யா, மானத்த விட்டுட்டு வேலைல தொத்திக்கிட்டு இருந்து என்ன பிரயோஜனம்” என்பார்.

நாம் எவற்றையெல்லாம் மதிப்பு மிகுந்தது என்று தலைக்கு மேலே சுமந்து கொண்டிருக்கிறோமோ அவற்றையெல்லாம் தனது காலுக்குக் கீழே போட்டு மிதிப்பவர் குணா.

நாம் எவற்றையெல்லாம் மதிப்பு மிகுந்தது என்று தலைக்கு மேலே சுமந்து கொண்டிருக்கிறோமோ அவற்றையெல்லாம் தனது காலுக்குக் கீழே போட்டு மிதிப்பவர் குணா.

இந்த முறை என்ன சொல்லி வெறுப்பேற்றப்போகிறார் என்று நினைத்தபடியே அவருக்காகக் காத்திருந்தேன். ‘ஜுரோங் ஈஸ்ட்’நூலகத்துக்கு அருகில் இருக்கும் ஒரு காபிக் கடையில் அமர்ந்திருந்தார். கடைசியாக அவரைப் பார்த்து இரண்டு வருடங்கள் இருக்கும். அதற்குள்ளாக பெருமளவு ஆள் மாறிப் போயிருந்தார். தலையில் முழுக்க நரை. உடலோ முற்றிலும் தளர்ந்து போயிருந்தது. தாடி வளர்த்திருந்தார். குரலில் முன்பிருந்த எழுச்சி இல்லை.

“என்ன குணா, என்னப் பாக்குறதுக்காக எதுக்காக மாறு வேஷம் போட்டுட்டு வரணும்” என்று கேட்டேன்.

“நீ சொன்னமாதிரியே இதெல்லாம் மாறு வேஷமா இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா, இதுதான்யா இப்ப என் வாழ்க்கையோட நிஜம்” என்றார். குரலில் முன்னறியாத வேதனை விரவியிருந்தது.

காபி கோப்பையை ஏந்திய அவரது கை நடுங்கியது. நான் அதைக் கவனித்ததும், “மிதமிஞ்சிக் குடிக்க ஆரம்பிச்சுடேன்யா. உங்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு தெரியல்ல. பொண்டாட்டி ஊருக்குப் போனவ திரும்ப வரவேயில்லயா. பிள்ளைகளையும் அவளே வச்சுக்கிட்டா.”

“என்ன சொல்றீங்க குணா” என்றேன்.

“ஒரு மாதிரி கலாட்டா பண்ணிட்டே வாழ்க்கைய கழிச்சிட்டேன். யாருக்கும் அடங்கியிருக்க முடியல. நம்மள மீறி என்ன நடந்திரும்னு ஒரு மெதப்புலயே காலத்த ஓட்டிட்டேன். சுயநலமா இருந்திட்டேன். பொண்டாட்டி பிள்ளைங்க கூடயும் மேலோட்டமாத்தான் இருந்திருக்கேன் போல. எங்கயும் ஒட்ட முடியல. எங்கூடவும் அவங்களால ஒட்டியிருக்க முடியல. அவங்க சொன்ன எதையுமே நான் காதில போட்டுக்கல. சகிக்க முடியாம கிளம்பிப் போயிட்டாங்க. ஆனா, நான் இப்படியே இருக்க மாட்டேன்யா.. என்ன மெல்ல மெல்ல மாத்திக்கப் போறேன். தொடர்ச்சியா வேலைக்குப் போய் என்னாலயும் இந்த உலகத்தோட ஒட்டியிருக்க முடியும்னு அவளுக்குக் காட்டப்போறேன். சம்பாத்தியம்தான் புருஷ லட்சணம்னா, அந்த லட்சணத்தோட சகல கோணத்தையும் அவளுக்குக் காட்டப்போறேன். வேலையில்லாம இருந்து என்னோட எதிர்ப்புணர்வ உலகத்துக்கு இதுவரை காட்டினேன். இனி என் குடும்பத்துக்காக வேலையக் கட்டிக்கிட்டு அழப்போறேன். அதப் பாத்தாவது அவ திரும்பி வந்தாப் போதும்யா. வேலைங்கறது நம்மளக் காட்டிலும் நம்மளச் சுத்தியிருக்கறவங்களுக்கு ஒரு அடையாளமா மாறிப் போச்சுய்யா. சமூக அமைப்பும் அதத்தான விரும்புது.”

“ஆக, இதுவரைக்கும் வேலைக்குப் போகாம சமூகத்துக்கு உங்க எதிர்ப்ப பதிவு செஞ்சாச்சு. இப்ப வேலைக்குப் போய் குடும்பத்துக்கு உங்களோட எதிர்ப்ப பதிவு செய்யப் போறீங்க.” என்று கேட்டேன்.

யவனிகா ஸ்ரீராம்

“கையிருப்பும் காலியாகிக்கிட்டே போகுதுய்யா. இதுவரைக்கும் எப்படியோ கையில இருந்தத வச்சு ஓட்டியாச்சு. இனிமேலும் இப்படியே ஓட்ட முடியாதுய்யா. அதுக்காகவாவது வேலைக்குப் போயே ஆகணும்” என்றார்.

இதற்கு முன்னர் அவர் சொன்னதெல்லாம் உண்மையான காரணம் அல்ல. இதுதான் மெய்யான காரணம் என்று தோன்றியது.

“சார்லி சாப்ளினோட மாடர்ன் டைம்ஸ் படத்துல வர்ற ஆட்டு மந்தை மாதிரி விடிஞ்சா மந்தை மந்தையா வேலைக்குக் கிளம்புற கும்பல்னு நக்கலடிச்சீங்க. இப்ப நீங்களும் அந்த மந்தைல ஒருத்தரா மாறிட்டீங்களே குணா” என்றேன்.

“அத இப்ப ஏன்யா நினைவு படுத்துற” என்றார் குணா.

குணாவையும் அந்த மந்தையில் ஒருவராகப் பார்க்கப் போகிறோம் என்பதை நினைக்கையில் சந்தோசமாக இருந்தது. சங்கடமாகவும் இருந்தது.

யவனிகா ஸ்ரீராமின் இந்தக் கவிதைதான் அப்போது நினைவுக்கு வந்தது.

உலகம் இசக்கியை உழைக்கவே வைக்கிறது

முட்டாளும் விறகு உடைப்பவனுமாகிய இசக்கி
ஒரு மோசமான அதிகாலையில் இனி ஒருபோதும்
தான் உழைப்பதில்லை எனச்சொல்லி ஆவேசத்துடன்
கோடாரியை விட்டெரிந்தான்
அகன்றுபோன தன் கால்களுக்கிடையில்
தலை கவிழ்ந்து முகம்புதைத்து உறங்கும்
அவனுக்கு எப்படித் தெரியும்
இந்த அருமையான அதிகாலையில்
உலகம் முழுவதும் அதே முடிவை எடுத்திருப்பதுபற்றி
முதல் பத்துநாள் அவரவர் கையிருப்பை
தின்று தீர்ப்பது என முடிவாயிற்று
அடுத்த பத்துநாள் அதிகம் இருந்தவரிடமிருந்து
கோரியும் பிடுங்கியும் தின்னும்படி நேர்ந்தது
கடைசி பத்துநாள் மிச்சமீதி அனைத்தையும்
வழித்து வாயில் போட்டுக்கொள்ள
தலைதூக்கிய இசக்கிக்குப் பசி கண்ணை மருட்டியது
எங்கும் உணவில்லை
பரிதாபமாய் கோடாரியைத் தூக்கி
தோளில் போட்டுக்கொண்டு இசக்கி தனது
வளைந்த கால்களால் நகரத் தொடங்கினான்
ஆனால்
அவனுக்கு எப்படித் தெரியாமல் போகும்
இந்த அருமையான அதிகாலையில்
உலகம் முழுவதும் இதே முடிவை எடுத்திருப்பதுபற்றி.

உலகம் இசக்கியை மட்டுமல்ல, குணாவையும், இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் என்னையும், இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களையும் உழைக்கவே வைக்கிறது. “உழைக்கவே” என்ற சொல்லின் ஈற்றில் உள்ள ஏகாரத்தைச் சுமப்பதுதான் சற்று கடினமாக உள்ளது.