வாசகர் வட்ட ஆண்டு விழா

0
490
ஷாநவாஸ்

மூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு வாசகர் வட்ட ஆண்டு விழா முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் வருகை தந்தார்கள்.

நாஞ்சில் நாடன் அபார நினைவாற்றல் உள்ளவர். இணையத்தின் துணையின்றியே பல நீண்ட விரிவான தகவல்களையும், பட்டியல்களையும் தரக் கூடியவர். மிகவும் யதார்த்தமானவர். நிஜ வாழ்க்கையை சரியாக்கும் பணியில் தளாராது ஈடுபடுபவர். மூன்று நாட்களாக அவருடன் உரையாடியதில் அவ்வப்போது கேட்ட வார்த்தை ஓர் எழுத்தாளனின் பணி மனித குலத்தைத் துண்டாடுவனவற்றை மறுதலிப்பது. அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று என்கிற உண்மையை விட்டு அசையாதிருப்பது. தமிழ் மொழி, சமுக சிந்தனை, கல்வி, இலக்கியம், கலை, பண்பாடு, குடும்பம், உறவுகள், இயற்கை முதலிய பல்வேறு தளங்களில் கூர்மையான பார்வைகளையும், அவதானிப்புகளையும் தன் சிறப்பாகக் கொண்ட நாஞ்சில் நாடன் அவர்களுடன் இருந்த நாட்கள் என்றும் நினைவில் கொள்ளத்தக்கன.

காட்சியும் மீட்சியும்

வாசகர் வட்டம் என்பது தீவிரமான வாசிப்புக்கும் எழுதுவதற்கும் விமரிசனத்தை கறாராக அணுகுவதற்கும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் நாங்கள் கை நிறைய விதைகளை அள்ளிக் கொடுத்துக்கொண்டு வரும் ஒரு அமைப்பாக இருக்கிறோம். 2020ஆம் ஆண்டு தமிழ்மொழி விழாவில் காட்சியும் கவிதையும் என்ற போட்டியை வைத்தோம். குறிப்பாக மாணவர்களுக்கு. மிகுந்த வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக இருந்தது. ஒரு கவிதையின் மையம் என்னவென்பதை அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தோம்.

-எம்.கே.குமார்

“அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே. எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி! என் கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும்” என்றார்.

சென்ற முறை தினமும் முறை வைத்து சந்தித்த கூட்டத்தில் இம்முறை சிலர் வரவில்லை ஆனால் இளையவர்கள் புதியவர்கள் திரண்டு வந்திருந்தனர். சித்ராவும் திரு.ரமேஷும் விமான நிலையத்தில் வரவேற்றது முதல் செவ்வாய் மாலை அவர் திரும்ப வழியனுப்பியது வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டார்கள்.

தமிழ்மொழி, இலக்கியச் செயல்பாடுகள் சார்ந்து சிங்கப்பூரில் பல அமைப்புகள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டு அமைப்புகளின் நகல்கள் அங்கும் உண்டு. அவற்றிலிருந்து மாறுபட்டுச் செயல்படும் அமைப்பாக இருப்பது வாசகர் வட்டம். அதன் மைய அச்சாகச் செயல்படுபவர் எழுத்தாளர் ஷாநவாஸ். தமிழின் நவீன இலக்கியத்தோடு தொடர்புடைய சிந்தனைப் பள்ளிகளைப் பற்றிய அறிமுகங்களைச் சிங்கப்பூர்த் தமிழர்களுக்குள் பரப்பிக்கொண்டிருக்கும் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் சிங்கப்பூர் எழுத்துகளின் தனித்த அடையாளங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

-அ.ராமசாமி

ஒரு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற மூன்று தரப்புகளின் பங்களிப்புகள் தேவை. முதலாவது அந்தக் கூட்டத்தை நடத்தும் அமைப்பு. அது சிறியதாக இருந்தாலும் அதில் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ளும் எண்ணம் இல்லாத ஒரு சில செயல்வீரர்கள் அதில் இருக்க வேண்டும். வருகை மிகக் குறைவாக இருந்தபோதிலும் சரியான நேரத்தில் விழாவை துவக்க வேண்டும். சிறந்த சொற்களை பயன்படுத்தி கேட்போர் கவனத்தை ஈர்க்கும் நேர மேலாண்மையுடன் நிகழ்ச்சிதொகுப்பாளர் அமைய வேண்டும்.

ஒரு மிடறு தடங்கல் இல்லாமல் இந்த ஆண்டுவாசகர் வட்ட ஆண்டுவிழாவை வெற்றிகரமாக நிகழ்ச்சிஒருங்கிணைப்பு செய்தார் திருமதி.இசக்கி செல்வி.சித்ராவின் உழைப்பு நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம்.

வாசகர்வட்ட நிகழ்வுகளுக்கு இளையவர்கள்கலந்துகொள்ளவேண்டும். அவர்கள் கவிதையெல்லாம்கேட்கவேண்டும் என்பது எங்களுக்கு விருப்பமாகஉள்ளது. நாவல், சிறுகதை, கவிதை மற்ற விஷயங்கள்எ ல்லா ம் பேசிக்கொண்டு இருக்கு ம்போதேகவிதைகளோடு இளையவர்களுக்கு உள்ள பங்கு,அவர்கள் ஊக்கமாகப் படிக்கும் விஷயங்கள் எல்லாம்எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. உண்மையிலேயேஇந்த நிகழ்ச்சி பெரிய வெற்றி என்று சொல்வேன்.தக்காளி அறை மீண்டும் நிரம்பி வழிய இருக்கிறது.

2016 டிசம்பரில் சிங்கப்பூர் வாசகர் வட்டத்திற்கு வருகை தந்த கவிஞர், ஓவியர், கலையிலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களுடன் சுமார் மூன்று மணிநேரம் உரையாடினோம். ஏழெட்டுப்பேர் மட்டுமே கலந்துகொண்டதால் நேரடியான, அணுக்கமான உரையாடலாக அமைந்தது.

அமைப்புகளாக அல்லாமல் தனிமனித இலக்கியச் செயல்பாடுகள் தமிழகத்திலும், உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இருப்பதைக் குறிப்பிட்டு அவர்களை இணைக்கும் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கப் பரிந்துரைத்தார் இந்திரன். கம்ப்யூட்டரும், இணையமும் இல்லாத காலங்களில் கடிதத் தொடர்புகள் வழியாகவே இலக்கியவாதிகள் இடையே இருந்த இணைப்பு, இன்று கைக்குள்ளேயே அனைத்தும் வந்தபின் இல்லாமல் போனதற்கு நம்மை நாமே குறுக்கிக்கொண்டதே காரணம் என்ற மையக்கருவைச் சுற்றியே உரையாடல் அமைந்தது.

பேச்சினிடையே அவர் மேற்கோள்காட்ட எடுத்துக்கொண்ட மூன்று குறட்பாக்கள் புதிய வெளிச்சத்தில் துலங்கின.

‘செயத்தக்க அல்ல செயக்கெடும், செயத்தக்க செய்யாமையாலும் கெடும்’ என்ற குறளில் முதலடி சொல்லும் DON’Ts நம் அனைவருக்கும் சிறுபிள்ளையிலிருந்தே குடும்பத்திலும் பள்ளியிலும் போதிக்கப்படுகிறது, ஆனால் அடுத்த அடி சொல்லும் DO’s ஐ நாம் வசதியாக மறந்துவிடுகிறோம். இலக்கியத்திலும் துடிப்பாக செயல்படும் இளைய சக்திகளை பிராந்திய எல்லைகளைத்தாண்டி இணைப்பது அப்படியொரு செயத்தக்க காரியமாக இருப்பதால் அதைச்செய்யாமல் கெட்டுவிடக்கூடாது என்பது பொழிப்புரை.

செவ்வி என்ற வார்த்தைய நேர்காணல் என்ற பொருளில்தான் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ‘மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படுவர்’ என்பதில் உள்ள செவ்வியை மிக நுணுக்கமாக விளக்கினார். பொருத்தமான நேரத்தில், பொருத்தமான முறையில் அணுகிச்செய்வதே செவ்வி என்றார். வழக்கமாக அக்குறளுக்கு அறியப்படும் பொருள், செவ்வியின் புதிய புரிதலுடன் தற்போது மேலும் விரித்துக்கொள்ள ஏதுவாகிவிடுகிறது.

நம் நவீன கவிஞர்கள் பெண்களை எழுத வருகையில் கண்ணால் காண்பதை மட்டுமே எழுதுவதாகக் குறைபட்டுக்கொண்டார். ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ என்று நாம் உணர்ந்து ஈராயிரம் ஆண்டுகள் ஆனபின்னரும், ‘கண்டு’வை விட்டுத் தாண்டவில்லையே நம் நவீன கவிகள் என்ற இந்திரனின் அரங்கம் நியாயமானதே. சாதத் ஹசன் மாண்ட்டோவின் ‘வாசனை’ கதையைக் குறிப்பிட வருகையில் இக்குறள் பொருத்தமாக வந்துவிழுந்தது.

மொழியாக்கத்தைப்பற்றிப் பேச்சு வந்தபோது ‘translators are traitors’ என்பதை மறுத்துப் பேசினார். தங்கத்தைச் செம்பாக மாற்றும் கலைதான் மொழியாக்கம் என்றாலும், ஒரிஜினலில் உள்ளவை அப்படியே நூறு சதம் மொழியாக்கத்தில் வராது என்றாலும் அதையும் தாண்டி மொழியாக்கப்படைப்புகள் காலத்தை வென்று நிற்கிறதே என்று கேட்டார். தங்கம் வாங்க முடியாதவர்கள் செம்பாவது வாங்கவேண்டும் என்று நான் வேறுமாதிரி விளங்கிக்கொண்டேன். மொழியாக்கம் மொழியைப் பெயர்ப்பதல்ல, பண்பாட்டைப் பெயர்ப்பது என்று கூறி சில சுவாரசியமான உதாரணங்களையும் கொடுத்தார். டுரியான், ரொம்புத்தான், மங்குஸ்தான் பழங்களின் பெயர்களை அப்படியே தமிழில் ஆளப் பரிந்துரைத்தார். அதற்கான காரணங்களையும் விளக்கினார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போவதைவிட நம் இலக்கியங்கள் பிரெஞ்சுக்குப்போவது முக்கியம் என்பது இந்திரனின் கருத்து.

சமீபத்தில் 75 வயதைத் தாண்டிய இந்திரன், கலையையும் இலக்கியத்தையும் பயின்று அவற்றுள் இணைப்பை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறையைக் காணவில்லை என்கிறார். தன்னிடமிருந்து ஒளிப்பந்தத்தை வாங்கிக்கொண்டு ஓட ஆட்களைத் தேடுகிறார். லலித்கலா அகடமி, சங்கீத் நாடக் அகடமி, சாகித்ய அகடமி இவற்றுக்குள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின்றி இருப்பதையும் குறைசொன்னார். நவீன ஓவியங்கள் புரியவில்லை என்று பேசுபவர்கள் மரபான ஓவியங்கள் அத்தனையையும் விளங்கிக்கொண்டுவிட்டார்களா என்று ஓர் இடி இடித்தார்.

இலக்கிய விமர்சனத்தைக் குறித்து ஒரு முக்கியமான கோணத்தைத் – ஓரிரு அனுபவங்களுடன் – தொட்டுக்காட்டினார். எவ்வளவு காட்டமாகவும் விமர்சிக்கலாம் ஆனால் அதன் வார்த்தைகள், தொனி ஆகியவை குடும்பத்தில், நண்பர்களில் அல்லது உறவினர்களில் ஒருவர் நம்மிடம் பேசுவதுபோல் இருந்தால் விமர்சிக்கப்படுபவர் ஏற்றுக்கொள்வார் என்பது இந்திரன் கருத்து. வன்மத்துடன் பேசுவதாகத் தோன்றும் பட்சத்தில்தான் அங்கு விமர்சனத்தை விட்டுவிட்டு விமர்சிப்பவர் மேல் கோபம் எழுகிறது. ‘உள் ஆள் Vs வெளி ஆள்’ என்ற வேறுபாடாக இதைக் கோமல் சுவாமிநாதன் குறிப்பிட்டதாகச் சொன்னார். எனக்கும் சரிதான் என்று படுகிறது. குடும்பச்சண்டைகளிலும் கடும் சொற்பிரயோகங்கள், அடிதடிகள் இருப்பினும் அவை உரிமையின்பாற்பட்டவை, மறக்கக்கூடியவை.

செயல்படுவதற்கான ஆர்வமும் உற்சாகமும் பொங்கிக்கொண்டிருப்பதுடன் அதை மற்றவர்களுக்கும் தொற்றச்செய்யும் ஆளுமையான இந்திரனுடன் நான் செலவிட்ட நேரம் மகிழ்ச்சியானது, நினைவில் என்றும் நிற்கக்கூடியது.

-சிவானந்தம் நீலகண்டன்