சிங்கைத்தமிழர்களின் மனதில் சங்கத்தமிழ்

விஷ்ணு வர்த்தினி
பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்பது எல்லாவற்றிற்கும் பொருந்துவதில்லை. பழையனவற்றை காலத்தைக் கடந்து பாதுகாக்கும் கடப்பாடும் அவசியமாக உள்ளது. அவ்வகையில், காலத்தால் நிறைவுற்றிருந்தாலும், பல அரிய செய்திகளுக்கும் நிகழ்வுகளுக்கும் மீளுயிர் அளிக்கிறது “சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்” நூல். 1999ல் கலைஞர் மு.கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்த சமயத்தில் சிங்கப்பூருக்கு வந்துசென்ற மூன்று நாள் பயணத்தின் தகவல்களையும் செய்தித்திரட்டுகளையும் இந்நூல் தொகுத்துள்ளது. ஒரு வரலாற்று நூலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள இது இளையருக்கு ஒரு வளமாக அமையலாம்.

ஒவ்வொரு நூலும் ஏதோ ஒரு தேடலுக்கு விடையாகிறது. இந்நூல் என்னுள் எழுப்பிய கேள்வி: How are legacies made? Legacy என்பது காலத்தைத் தாண்டி நிற்கக்கூடியது, தலைமுறைகளைக் கடந்து கடத்தப்படக் கூடியது. ஒரு தனிமனிதரின் அடையாளத்தில் பங்கு வகிப்பன: எண்ணம், சொல், செயல். இச்செயல்பாடுகளின் வாழ்நாளானது அத்தனிமனிதரின் வாழ்நாளுக்குப் பின்னும் அறியப்படுவதே, Legacy ஆகின்றது. அத்தகைய legacyகள், சகாப்த மரபுகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? இரு தத்துவரீதியிலான விளக்கங்கள் என் மனதில் நிற்பவை. ஒன்று, being-for-others, இன்னொன்று,

being-toward-death. நமது அடையாளம் நாம் உருவாக்குவதே அன்று, மாறாக பிறர் நம் கதைகளைக் கூறும் வகையே நமது அடையாளத்தை நிர்ணயிக்கின்றது என்பது ஓர் எண்ணப்போக்கு. பிறரின் தேவை அறிந்தே நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும் என கூறுவது being-for-others. Being-toward-death என்பது நாளைக்கே இறந்துபோகும்படியாக வாழ்வது என்று சொல்லலாம். அப்படியெனில் இறப்பை அரவணைத்துக்கொண்டு நமது நம்பிக்கைகள், நெறிகள் இவற்றுக்கு முழுக்க முழுக்க நேர்மையாக இருந்து வாழ்வதாகும். இவ்விரு முறைகளிலும் கலைஞர் எவ்வாறு ஒரு legacy-ஐ உருவாக்கினார், அதனை சிங்கையில் விட்டுச்சென்றுள்ளார் என்பதற்கு இப்புத்தகம் பல ஆதாரங்களைக் காட்டுகிறது.


தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன் தமது சிறப்புரையில் மலாயாவில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்ட பயணத்தையும், அதில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முதலியோர் ஆற்றிய சீரிய பங்கினையும் விரிவாக விளக்கி கலைஞரின் பயணத்துக்குமுன் இருந்த வரலாற்றுச் சூழலைக் காட்டுகிறார். மலாயாவில் ஏறத்தாழ 18ஆம் நூற்றாண்டிலிருந்து வசித்து வந்த புலம்பெயர் தமிழர்களின் அன்றைய ஆக தலையாய தேவையாக இருந்தது, சமூக ஒற்றுமையும் தீயப்பழக்கங்களிலிருந்து மீட்டெடுத்தலுமே. பிடுங்கி நடப்பட்ட மரங்களாக இருந்த அவர்கள், புது மண்ணுக்குப் பரிச்சயப்பட சிரமப்படனர். அதற்கேற்ப அவர்களுக்கு உரமாய் அமைந்தது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கோ.சாரங்கபாணி ஆகியோர் எடுத்தியம்பிய பகுத்தறிவு கருத்துக்கள். இம்மண்ணுக்குரியவர்களாக தமிழ்ச் சமூகத்தினர் வேரூன்றுவதற்கு அவர்கள் வகைசெய்தார். பின்னர் 21ஆம் நூற்றாண்டின் விளிம்பில், 1999ல் சிங்கப்பூரிலுள்ள தமிழர் சமூகம் பல வகைகளில் மேம்பட்டிருந்தது. ஆனால், ஓர் அரசியல் தலைவராக கலைஞர் மொழியுணர்வை வலியுறுத்தியதிலிருந்து புலப்படுவது, தமிழ்மொழியும் அடையாளத் தேடலுமே நம் சமூகத்தின் அப்போதைய தேவையாக இருந்திருக்கவேண்டும். தொழில்ரீதியான அதிவேக மாற்றம், மேற்கத்திய பண்பாட்டு அலைகள் முதலியன அச்சமயம் சிங்கப்பூரில் தமிழ்ப் பயன்பாட்டினை அச்சுறுத்தி வந்தன. இத்தேவைக்கு கலைஞர் இட்ட உரமாக நான் கருதுவது, சிங்கப்பூர் உள்ளரங்கில் அவர் ஆற்றிய இலக்கிய சொற்பொழிவு.


கலைஞர் ஒரு பேச்சாளர், எழுத்தாளர், படைப்பாளராக லட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்தவர். அவற்றையும் தாண்டி, அவர் தலைவர் என்று அறியப்படுபவர். பேச்சுலகில் பேச்சாளரின் வெற்றி என்பது கேட்பவருக்கு இவர் நம்மிடம் பேசுகிறார் என்ற உணர்வு வரவேண்டும்; ஒரு தலைவனின் வெற்றி என்பது இவர் நமக்காகப் பேசுகின்றார் என்ற உணர்வு எழவேண்டும். அப்படிபட்ட உணர்வை கலைஞர் எப்படி ஏற்படுத்தினார் என்பதை அந்த இலக்கிய சொற்பொழிவிலே காண முடிந்தது. அக்காட்சிகள் கண்முன் தோன்றும்படி அச்சொற்பொழிவு தொகுக்கப்பட்டுள்ளது. எங்கே எல்லாம் கரவொலியும் சிரிப்பொலியும் இருந்ததோ அவையும் குறிப்பிடப்பட்டிருந்தன.


ஒரு தருணத்தில், மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் ‘தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என அச்சிடப்பட்டிருந்ததை கலைஞர் கவனிக்கிறார். அச்சொற்றொடரைக் குறிப்பிட்டு, “கருணாநிதி என்பதுதான் எனக்குச் சொந்தமானது. மற்ற சொற்கள் எல்லாம் உங்களுக்குச் சொந்தமானவை–நீங்கள் வழங்கியது,” என்கிறார் கலைஞர். அச்சமயம் இன்னும் பிறந்திராத நான், இச்சொற்பொழிவை எழுத்தில் மட்டுமே கண்டாலும், கலைஞர் எவ்வாறு கேட்போருக்கும் தமக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வந்தார் என்பதை உணர்ந்தேன். தமது அண்மைய தமிழ் முரசு நேர்காணலில் திருவாட்டி கனிமொழி கருணாநிதி கூறியதுபோல, எல்லோரிடத்திலும் ஓர் உணர்வுபூர்வ தொடர்பினை ஏற்படுத்துவதில் கலைஞர் வல்லவராக இருந்துள்ளார். அவரின் சிங்கப்பூர் பயணத்தின் ஒரு முக்கிய நோக்கமானது, சிங்கப்பூர்-தமிழ்நாட்டின் இடையே கலாசார தொடர்பை வலுப்படுத்துவதாக இருந்தது. அதற்கான அடிப்படை முதலீடு, இங்குள்ள புலம்பெயர் தமிழர்களுடன் உருவாக்கிக்கொள்ளும் உணர்வுபூர்வமான, ஆழமான தொடர்பே. அச்சொற்பொழிவு நெடுக பலவகையான தகவல்களை வெவ்வேறு இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டியும், அவற்றை நவீன சூழலுக்கேற்ப விளக்கியும் தமிழ்மொழியின் நயத்தை புலப்படுத்திச் சென்றார் கலைஞர்.


அவரின் பிற சிங்கப்பூர் நேர்காணல்களிலும் தமிழ்மொழிக்கான வலியுறுத்தல் தொடர்ந்தது. தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, அது ‘பெரிய அறிவிப்பில்லை; அதனை செம்மொழியாக ஆக்குவதும் வளர்ப்பதும் தமிழரின் கைகளிலேதான் உள்ளது’ என்று கலைஞர் பதிலளித்திருந்தார். இன்னும் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளும் நிறுவப்படவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டிருந்தார். அப்போதைய தமிழ் முரசு தலையங்கத்தில் திரு வை.திருநாவுக்கரசு கூறியதைப்0 போல, ஒரு பண்பாட்டு ஆலமரத்தின் கிளைகளாக புலம்பெயர் தமிழர்கள் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறோம்; அவரவர் நாட்டில் ஆழ வேரூன்றினாலும் கிளைகளில் தமிழ்மொழியைத் தாங்கவேண்டும், அதில் தமிழ் பெருக வேண்டும் என நினைவூட்டுவதற்கு மழைபோல வந்து சென்றார் கலைஞர். இவ்வாறு சிங்கையில் புலம்பெயர் தமிழர்களுக்குத் தேவையறிந்து உரையாற்றிய அவர் இங்கு விட்டுச்சென்ற legacy மகத்தானது.


‘எனக்கு சாப்பிடுவது போன்றது எழுத்து’ என்று கலைஞர் தமது தமிழ் முரசு நேர்காணலில் கூறியது என் மனதைக் கவர்ந்த ஒரு வாசகம். சொல், செயல் அளவில் மட்டுமின்றி, எண்ணத்திலும் தமிழுணர்வு கொண்டிருந்தவர் கலைஞர். சங்கத்தமிழ் என்றாலே நினைவுக்கு வருவது கலைஞர்தான். உள்ளூர் சிங்கப்பூர் கவிஞர்கள் அவரைப் பற்றி இயற்றிய இரங்கல் கவிதைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கலைஞரின் தமிழ் கலையியல் ஈடுபாட்டையே அவரின் அடையாளத்தின் முகப்பாக அப்படைப்புகள் கருதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள தமிழர்களின் மனதில் அவர் நீங்கா இடம்பிடித்துள்ளதற்கும் அக்கவிதைகள் முக்கிய சான்று. Being-toward-death என்ற வகையில் கடைசி நாள்கள் வரை அவரின் தமிழ்ப் பங்களிப்புகள் நீடித்தன.


இந்நூல் கலைஞரின் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறிய பகுதியைக் காட்டினாலும், மிக தெளிவாக கலைஞரின் குணாதிசியங்களையும் செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ள துணைபுரிகிறது. இன்னும் பல இளையர்களை இந்நூல் சென்றடையவேண்டும், ‘how are legacies made’ என்பதைத் தாண்டி, ‘how do I leave a legacy’ எனும் கேள்விக்கு அது வித்தாகும் என்பது எனது நம்பிக்கை.
[email protected]