
‘நாணயம்’ என்று சொன்னவுடன் பணம், காசுதான் பலருக்கு நினைவில் வரும். அதுதான் இன்று மக்களிடையே பிரபலமாகிப்போன அர்த்தமும் கூட. ஆனால், இன் நூல் குறிப்பிடும் ‘நாணயம்’, சொல்தவறாமை, உண்மை, நேர்மை போன்ற உயர் பண்புகளைக் குறிப்பதை இதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வாசகர்கள் உணர்ந்து கொள்ளலாம். பணம் என்னும் நாணயம் மனிதனுக்குத் தேவைதான். அதனைக்காட்டிலும் அந்த பணத்தை பொருளாக விற்கும்போது வாக்குமாறாத நேர்மைத் திறன் மிகமிக அவசியம் என்பதை உலகின் மிக அதிக பணம் புழங்கும் சந்தையில் ஈடுபடும் சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர்கள் நிரூபணம் செய்துள்ளார்கள்.
1997இலும் 2008இலும் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காலத்தில் அலெக்ஸாண்டிரா கடைத் தொகுதி ஐந்தாம் தளத்தில் நானும் நண்பன் அப்துல் காரிஸும் நாணயமாற்றுத் தொழிலில் இருந்தோம் அப்போது சிங்கப்பூர் நாணயமாற்றுத் தொழில் சந்தித்த சவால்கள் ஏராளம். அப்போதுதான் நாணய மாற்றுத் தொழிலிலும், சமூகத்தில் உயர் பண்பாளராக வெற்றிகரமான தொழில் முனைவராக இருந்த திரு.முஸ்தபா அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
உலக வர்த்தகத்தில் ஏற்படும் விளைவுகளை கவனப்படுத்திக்கொண்டு செயல்படும் கெட்டிக்காரர்கள் நிறைந்தது சிங்கப்பூர் நாணயமாற்றுக் கடைகள். முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த குறுகிய கால ஊக வணிகர். உலகெங்கிலும் உள்ள நிதிச் சந்தைகளில் தைரியமான சாகசங்களுக்கு பெயர் பெற்றவர். தென்கிழக்காசியாவில் அவரால் ஏற்பட்ட பாதிப்புகளும், நாணயமாற்று வணிகம் எதிர்கொண்ட சவால்களும் அதிகம். இதைப் பற்றி திரு.முஸ்தபா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் தவறாக குறிப்பிட்ட ஆண்டைத் திருத்தினார்கள். இவ்வளவு துல்லியமான நினைவை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. சிங்கப்பூர் நாணயமாற்று வர்த்தகம் குறித்து அவர்களை எழுதுமாறு கேட்டேன்.
மாதம் ஒருமுறை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் அவர்களிடம் பதிவு செய்த வாய்மொழிப் பதிவுகளை குறிப்பாக எடுத்துக்கொண்டு அவர்களையே திருத்தம் செய்யச் சொன்னேன். மேலும் தகவல்களைச் சேர்த்து திருத்தம் செய்து கொடுத்தார். நாணயம் என்பது நாணயமாற்றுத் தொழிலில் எவ்வளவு முக்கியம் என்பதில் ஆரம்பித்து அவர்களுடைய அனுபவத்தில் ஏன் நாணயமாற்று வியாபாரிகள் பெருமதிப்புத் தாள்களுக்கு கூடுதல் தொகையையும், சிறு மதிப்புத் தாள்களுக்கு குறைந்த விலையையும் நிர்ணயம் செய்கிறார்கள்? குறிப்பாக நாணயமாற்றுத் தொழிலில் தமிழ் முஸ்லிம்கள் பெருமளவு ஈடுபாடு கொள்ள காரணங்கள் என்ன? “நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு” என்னும் நூலை எழுதிய அ.இராமநாதன் செட்டியார் கூற்றுப்படி 1838க்கு முன் சிங்கப்பூருக்கு வந்த நகரத்தார்கள் தங்களுக்குரிய கொடுத்து வாங்கும் தொழிலை மார்க்கெட் ஸ்திரீட்டில் மிகச்சிறப்பாக நடத்தி வந்தபோது அங்கு தமிழ் முஸ்லிம்களின் நாணய மாற்று வியாபாரம் நிலை கொண்டதின் பிண்ணனி என்ன? எத்தனையோ பொருளாதார நெருக்கடியிலும் சிங்கப்பூர் வெள்ளி முதல் நிலையில் தொடர்ந்து இருப்பதன் காரணம்; கள்ளநோட்டுப் புழக்கத்தில் அமெரிக்க டாலர்களை கையாளும் திறன் பெற்ற சிங்கப்பூர் நாணய மாற்று வியாபாரிகள்; ஹாவ்லா தொழிலை சட்ட பூர்வமாகக் கையாள சிங்கப்பூரில் உள்ள வங்கி நடைமுறைகளின் கட்டுப்பாடுகள் என பல செய்திகளைக் கூறினார்.
கவிஞர் வைரமுத்துவுடன் பயணம் செய்த போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய செய்தியைப் பதிவு செய்தபோது, கவிஞர் சென்னை இல்லத்தை தொடர்பு கொண்டு அவர் நலமாக இருக்கும் செய்தியை தெரிவிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் கூறும்போது நெகிழ்ந்து விட்டார்கள். தன் ஊழியர் கொள்ளை சம்பவத்தில் சுடப்பட்டு இறந்தவுடன் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் முடித்துக்கொள்ளாமல் தொடர்ந்து அந்த குடும்பத்திற்கு அவர்கள் உதவி வருவதற்கு நானே சாட்சியாக உள்ளேன்.
நாணயமாற்றுத் தொழிலில் உள்ள சில சங்கேத மொழிகளை பதிவு செய்ய நானே தயங்கியபோது உண்மைகளை உரத்துச் சொல்வதற்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை என்றார். நாணயமாற்று வணிகத்தில் பெரும்பாலும் Forex Trading அடிப்படையில் வர்த்தக உத்திகள் மற்ற நாடுகளைப் போலவே சிங்கப்பூரிலும் நடைமுறையில் உள்ளன. நாணயமாற்று வணிகர்களின் (Currency Traders) வர்த்தக உத்திகள், சந்தை நுணுக்கங்கள், மற்றும் பொருளாதார தகவல்களின் மீதான தாக்கத்தை அறிந்துகொள்ள காத்லீன் ப்ரூக்ஸ் எழுதிய “Currency Trading for Dummies” என்ற நூல் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆரம்ப நிலை என்று சொல்வதை விட இதைத் தாண்டித்தான் இந்த வியாபரத்தில் நுழைய வேண்டும்.
இந்த நூலை நான் தொகுக்க ஆரம்பிக்கும்போது திரு.முஸ்தபா அவர்களிடம் எப்படி அவ்வளவு துல்லியமாக விலை நிர்ணயம் செய்கிறீர்கள் என்று கேட்டேன். சில நேரங்களில் forex நிர்ணயித்து கணிணியில் தெரியும் மதிப்பை விட அதிகமாகவோ குறைவாகவோ விலை நிர்ணயிப்பார்கள். அந்நிய செலாவணிச் சந்தை என்பது பங்குச் சந்தைகளை விட மிகவும் சிக்கலானது. அந்நியச் செலாவணி விகிதத்தைக் கணிப்பது ஒரு முழுப் பொருளாதாரத்தின் செயல்திறனைக் கணிப்பதாகும். பரிவர்த்தனை விகிதங்களில் கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் அதற்கு உள்ளன. எதிர்காலத்திற்கான விலை எதிர்பார்ப்புகள் இதில் முக்கியமானது. எந்தவொரு நிதிச் சந்தையிலும் சமீபத்திய விலை அவ்வப்போதைய சந்தை விலையை பிரதிபலிக்காது. ஆனால் முந்தைய சந்தை பிரதிபலிக்கும் என்றும் அதை வைத்துத்தான் யூகத்தின் அடிப்படையில் நிணயிப்பதாக சொல்வார்கள்.
அந்தந்த நாடுகளின் பணவீக்கம் அல்லது வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து பணச்சந்தையில் புழங்கிக் கொண்டிருக்கும்போது இலகுவாகக் கணிக்க முடிவதாகச் சொன்னார்கள். நானும் சில காலம் இந்த நாணயமாற்று வியாபாரத்தில் இருந்ததால் வேறு நாட்டு பணத்தாள்களை வாங்கி வைத்து விற்போம் என்ற நிலையில் அந்தந்த நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு வாங்கி வைப்பேன்.
ஒரு நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையும் அதன் நாணயத்தின் மதிப்புக்கு முக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியல் குழப்பங்கள் நிலவும் வேளையில் புதிய அரசாங்கம் பதவியேற்றால் தற்போதைய அரசாங்கத்தின் வாக்குறுதி வீணாகிவிடும் அபாயம் உள்ளது. எதிர்கால அரசாங்கம் அதன் அதிகாரத்தை நிறுவுவதற்கான ஒரு வழியாக அதன் சொந்த நாணயத்தை வெளியிட முடிவு செய்துவிட்டால் நாம் வாங்கி வைத்த பணத்தாள்களின் மதிப்பு உடனே குறைய வாய்ப்புள்ளது. இந்தk காரணத்திற்காக ஒரு நாடு புவிசார் அரசியல் கொந்தளிப்பால் பாதிக்கப்படும்போதெல்லாம் நாணயமதிப்பு திடீரென வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதில் கவனமாக இருக்கவேண்டும். அதேபோல் இந்த ஊக வணிகம் நிறைய வணிகர்களை கீழேயும் தள்ளி வீழ்த்தியுள்ளது.
பொருளாதார சம்பவங்கள், அரசியல் நிலவரம், சந்தைச் செய்திகள் இவற்றிலெல்லாம் பல அனுபவங்கள் பெற்றவர்கள் சிங்கப்பூர் நாணயமாற்று வியாபாரத்தில் இருந்தாலும், வென்றவர்களும் தோற்றவர்களும் சம தளத்தில் நிற்கும் சிங்கப்பூர் நாணயமாற்றுத் தொழில். திரு.முஸ்தபா அவர்களின் தன்னிலையான கருத்துக்கள் பலருக்கு உதவும் என்றால் அது இந்த நூலின் மிகப் பெரிய வெற்றி.
உலகெங்கிலும், நாணயங்கள் பல்வேறு காரணங்களுக்காகவும் வெவ்வேறு வழிகளிலும் வர்த்தகம் செய்யப்படுகின்றன. பொதுவாக வர்த்தகம் செய்யப்படும் பல முக்கிய நாணயங்களில் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டு ஆகியவை அடங்கும். அமெரிக்க டாலர் எப்போதுமே மற்ற நாணயங்களின் மேலாதிக்கத்திற்கு பெயர் பெற்றது, இது உலகளாவிய பரிவர்த்தனைகளில் அதிகம் புழங்கப்படும் நாணயம். இதைப்பற்றி தன்னுடைய கணிப்பாக சில குறிப்புக்களை திரு.முஸ்தபா அவர்கள் கூறிய குறிப்புக்கள் கூகுளில் தேடிச் சென்றாலும் வாசித்த நூல்களிலும் தகவல்கள் கிடைக்காதவை.
இன்றைக்கு பச்சை என்ன விலை என்று காய்கறி வாங்குவது போல் கேட்பவர்களுக்கு அதே பாணியில் சிங்கப்பூர் வெள்ளிக்கு பச்சை (டாலர்) நாணய மாற்று வீதத்தை கணக்கில்கொண்டு பதில் வரும். நாணயமாற்று வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட நாணயத்தின் ஒரு யூனிட் மற்றொரு நாணயத்திற்கு வர்த்தகம் செய்யப்படும் வீதமாகும். பொதுவாக சந்தை மாற்று விகிதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது, அவை முதலீட்டு வங்கிகள், ஹெட்ஜ் நிதிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வர்த்தகம் செய்யப்படும் உலகளாவிய நிதிச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களைக்கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றன. சந்தை விகிதங்களில் மாற்றங்கள் நிமிடங்களில், மணிநேரம் அல்லது தினசரி சிறிய அல்லது பெரிய அதிகரிக்கும் மாற்றங்களுடன் நிகழலாம்.
அந்நிய செலாவணி சந்தையில், மாற்று விகிதங்கள் ஒரு நாட்டின் நாணய சுருக்கத்தை பயன்படுத்தி மேற்கோள் காட்டப்படுகின்றன. நிலையானதாக இல்லாமல் மிதந்து கொண்டே இருக்கும் நாணயத்தை தொடுவது ஆபத்துதான் ஆனாலும் அதில் லாபமும் நஷ்டமும் மாறிமாறி வரும். 1930க்கு முன்பு தங்க பரிமாற்றத் தரநிலை எனப்படும் உலக அமைப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு, சர்வதேச மாற்று விகிதங்கள் தங்கத் தரத்தால் நிர்ணயிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்டன. இந்த முறையின் மூலம் நாடுகள் தங்கள் நாணயத்தை தங்க ஆதரவு நாணயங்களுடன் – குறிப்பாக அமெரிக்க டாலர்கள் மற்றும் பிரிட்டிஷ் பவுண்டுகளுடன் – ஆதரிக்க முடிந்தது. சர்வதேச நாணய நிதியம் (IMF) 1970கள் வரை நிலையான நாணயமாற்று விகிதங்களை நிலைநிறுத்துவதற்குப் பொறுப்பாக இருந்தது, அப்போது தங்க வளங்களின் அளவு குறைந்து வந்ததால் தங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு தரத்தையும் அமெரிக்கா கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, சர்வதேச நாணய அமைப்பு அமெரிக்க டாலரை ரிசர்வ் கரன்சியாக அடிப்படையாகக் கொள்ளத் தொடங்கியது. ஏனெனில் அமெரிக்க டாலரால் சர்வதேச வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்வகிக்கும் ஒரு விரிவான அமைப்பின் வளர்ச்சியின் மூலம் வலுவான சர்வதேச வர்த்தகத்தை அடைய முடிந்தது. மற்ற பல நாடுகள் அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மாற்று விகிதங்கள் தற்போது ஒரு நாட்டின் அரசாங்கம் அல்லது மத்திய வங்கியின் பொருளாதார நடவடிக்கைகளின் செல்வாக்கைக் கொண்ட நிர்வகிக்கப்படும் மிதக்கும் மாற்று விகித அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நூலில் இப்படிப்பட்ட சிக்கலான நடைமுறைகளுக்குத் திரு.முஸ்தபா அவர்கள் தன் அனுபவத்தால் சுலபமான பதிலை பதிவு செய்திருக்கிறார்கள் .
சில்க் ஏர் விமான விபத்து, 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று நிகழ்ந்தது, இது சிங்கப்பூர் விமான சேவையைச் சார்ந்த SilkAir Flight 185, இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் வழியில் மூஸி ஆற்றில் விழுந்தது. திரு.முஸ்தபா அவர்களின் கிரவுன் நாணய மாற்று நிறுவனத்தில் பணி புரிந்த எப்போதும் சிரித்த முகத்துடன் பேசும் நண்பர் மாலிக் அந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவர். அவரைப்பற்றிய நினைவுகளை பல நாட்கள் என்னால் மறக்க இயலவில்லை, அந்த விபத்தில் இறந்த 46 சிங்கப்பூரர்களில் போனி ஹிக்ஸ் என்ற எழுத்தாளரும் ஒருவர். Excuse Me, Are You a Model? என்ற நூலின் ஆசிரியர். திரு.முஸ்தபா அவர்களிடம் இந்த விபத்து பற்றி நினைவுபடுத்தியபோது அது அவர்களின் வாழ்வில் மறக்க இயலாத தகவலாக விரிந்தது.
நாணய மாற்று வணிகத்தில் ஹவாலா முறை ஆரம்பித்த முறை சுவரஸ்யமானது. 1900களில் புலம்பெயர் சீனர்கள் பணத்தாள்களை தங்கள் ஊருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். பணத்தாளை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை முதலில் அனுப்பிவிட்டு அது சென்று சேர்ந்ததை உறுதி செய்து கொண்டு மறு பாதியை அனுப்பி வைத்தார்கள். அப்போதுள்ள தபால் பட்டுவாடா நடைமுறையில் பாதி கிழிக்கப்பட்ட பல நோட்டுகள் சென்று சேராமலே போயிருக்கின்றன. கிழிக்கப்பட்டு சென்று சேர்ந்த பணத்தாள்களை இணைப்பதில் ஏற்பட்ட பல சிக்கல்களால் ஏற்பட்ட புகாரில் சீன வங்கிகள் சில சிறப்பு சட்டங்களை இயற்றின.
1821 முதல் 1913 வரை ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை சுமார் 37 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து மூவாயிரம் வரை இருந்ததாக பதிவுகள் இருக்கின்றன. தங்களுடைய ஊருக்குப் பணம் அனுப்ப வேலை முடிந்து திரும்பும் நண்பர்கள், உறவினர்கள் அல்லது முகவர்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். பெரும்பாலும் முகவர்கள் 10 சதவீத கமிஷன் வசூல் செய்துள்ளார்கள். இதில் சில முகவர்கள் அனுப்பும் பணத்திற்குப் பெறுமதியான பொருட்களை வாங்கிச்சென்று சீனாவில் விற்று அதற்கு ஈடான தொகையைக் கொடுத்திருக்கிறார்கள். முகவர்கள் ஏற்படுத்திக்கொண்ட வலைப்பின்னலில் இலவச போக்குவரத்து, இலவச தங்கும் விடுதிகள் போன்றவை ஹவாலா பணம் கை மாறுவதில் 1900களிலேயே ஏற்பட்டு விட்டது. சிங்கப்பூரில் புகழ் பெற்ற EU YAN SANG என்ற மருந்துக் கம்பெனி 1920இல் சிங்கப்பூர் பணத்தைப் பெற்றுக்கொண்டு கொடுக்கும் ரசீது சீனாவில் மதிப்புமிக்க பணமாக விளங்கியுள்ளது. சிங்கப்பூரில் கேம்பியர் மற்றும் மிளகு அறுவடை செய்யும் சீனக் கூலிகள் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்கள். தாங்கள் அனுப்பிய பணம் ஊர் போய்ச் சேர்ந்த விபரத்தைக் கடிதம் மூலம் தெரிவிக்க தெருவோரத்தில் கடிதம் எழுதிக் கொடுக்கும் நபர்கள் அவர்களுக்கு உதவினார்கள். ஒரு கடிதத்திற்கு 3லிருந்து 6 காசுவரை கூலியாகக் கொடுத்தார்கள். ஒரு நாளைக்கு 40லிருந்து 50 கடிதங்கள் வரை எழுதும் தெருவோரக் கடிதம் எழுதுவோர் நகரெங்கும் நிறைந்திருந்தார்கள். இப்படி ஆரம்பித்த ஹவாலா பணம் அனுப்பும் முறையை சிங்கப்பூர் நாணய வாரியம் ஒழுங்குபடுத்திய தகவல்கள் வாசகர்கள் இது வரை மற்ற நூல்களில் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாணய பரிவர்த்தனையில் ஏற்பட்ட அனுபவத்தை பதிவு செய்யும் நூல்.


